FFC – 118-இறை அருள் பெற…….

 

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

இறை அருள் பெற…….

FFC – 118

13-09-2015–ஞாயிறு

 

கடந்த இரண்டு அறிவிற்கு விருந்தில் இறை அருள் பெறுவது பற்றி சிந்தித்து வருகிறோம். நுண்மான் நுழைபுலன் மற்றும் பரிணாமத்தில் அறத்தின் தோற்றம் பற்றியும் சிந்தித்து வருகிறோம். இன்று மனத்தூய்மை பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

நிறுவனங்களில் பல ஊழியா்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்குப் பிறருடைய புகழை தன்னுடையதாக்கிக் கொள்ளும் எண்ணம் எங்கிருந்து வந்தது? பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்து வந்தது. கொலை செய்வதுதான் விலங்கினப் பண்பு என்பது கிடையாது. பிறருக்குரியதைத் தான் அபகரிப்பது கூட பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்துதான் வந்துள்ளது, மகரிஷி அவர்கள் காந்த தத்துவம் என்கின்ற நூலில், மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியின் எட்டு வரிகளைில் முதல் மூன்று வரிகளைக் கவனிப்போம்.

FFC-118-பொருள் புகழ்

 

என்கிறார் மகரிஷி அவர்கள்.

பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவைகளைக் கவர்ந்து கொள்ளும் ஆசை பெருகியதற்கானக் காரணம் மனிதருக்குள் பிறவி தோறும் சேர்ந்து, சேர்ந்து மூட்டையாக வந்திருக்கின்ற, சஞ்சித வினைகளாக வந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மைதான் என்கிறார். ஆகவே இறை அருள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்வோம்.

பொதுவாக எதற்காக இறைவழிபாடு செய்யப்படுகின்றது?

இறைவன் தனக்குத் தேவையானவைகளைக் கொடுக்கிறான் என்பதற்காக, நன்றி உணர்வாக இறைவழிபாடு செய்யப்படுகின்றது. இறைவனிடம் வேண்டுதல் வைத்து இறைவழிபாடு நடத்தப்படுகின்றது. வேண்டுதல் நிறைவேறும்போது காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.

ஆனால் இணக்கத்துடன் கூடிய இறைவழிபாடு நடப்பதில்லை.

இணக்கத்துடன் என்றால் யாரிடம் இணக்கம் வேண்டும்? இறையுடன் இணக்கம் வேண்டும். அன்பும் கருணையுமான இறையுடன் இணக்கம் என்பது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அன்பும் கருணையுமாக இருக்க வேண்டும்.  அதுவேதான் பேரிறைக்கு(இறைக்கு) இணக்கமான வழிபாடாகும் என்பதனைச் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டும்.
பக்திமான்கள் இறையிடம் அருளை வேண்டுகின்றனர். மற்றவர்கள் அருளைத்தவிர மற்றவைகளை வேண்டுகின்றனா்? அருள் என்றால் இறைவனின் கருணை என்று பொருள். கருணை என்றால் சிலைவடிவிலே இறையை வணங்கும் பக்திமான்கள் இறைவனின் நேரிடைத் தரிசனத்திற்காக இறை அருளை வேண்டுகின்றனா்.
அருள் என்றால் உயிர்களுக்கு இரங்கும் பண்பு என்று பொருள். துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல இறைவனின் அருள் என்று பொருள். அருள் என்பது இறைவன் கருணையுடன் தருதல். எப்போது இறைவன் தருவான்? “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்றிருக்கும் போது, மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவினைத் தருவான். செயல் இல்லாமல் விளைவு இல்லை. ஆகவே மனிதனின் நல்ல செயல்களுக்கு உடனேயும் அல்லது காலத்தாலும் விளைவைத் தருவான். இறையாகிய பிற உயிர்களிடம் ஒருவன் அன்பும் கருணையுமில்லாத போது, இவனுக்கு எவ்வாறு இறையிடமிருந்து, இவனுடைய செயல்களுக்கான விளைவுகளாக அன்பும் கருணையும்(அருள்) வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்? இங்கே மகரிஷி அவா்களின் வினாவினைக் கவனிப்போம்.

 

FFC-118-சொல்லெங்கே செயலெங்கே

என வினவுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எப்போது நல்ல செயல்கள் மனிதனிடமிருந்து வெளிப்படும்? மனிதனின் அறிவு பரிணாமக் கசடுகளுடன் இருக்கும் வரை முழுவதுமாக நல்லசெயல்கள் வெளிவராது. தங்கம் என்றால் எப்போதுமே பிரகாசிக்க வேண்டும். சில நேரங்களில் பிராகசிப்பது, சில நேரங்களில் மங்கலாக இருப்பது என்றிருக்காது. அதுபோல் எப்போதும் மனிதனிடமிருந்து நல்ல செயல்கள் வெளிவரவேண்டும். இது இயலாத காரியம் என நினைத்தால்(practically/ideally impossible), தீய செயல்கள் செய்தால் தீய விளைவுகள் துன்பமாகவும் வரும். ஏற்கனவே ஊழின் காரணமாக துன்பங்களை அனுபவிப்பவா்களாவது இதனைக் கருத்தில் கொண்டு விழிப்போடு செயல்படுவார்களேயானால், அப்போது அவா்களுக்கு இறை அருள் வாயில் (ஞானம் பெறுவதற்கான) திறந்து விட்டது என்று பொருள்.

இறையே மனித அறிவாக வந்தபோது அதனுடன் பரிணாமத்தால் வந்த விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பரித்துண்ணல் என்கின்ற ஒரு கசடு, பல கசடுகளாக மாறியுள்ளது. எனவே தான் ஸ்கந்த குரு கவசத்தில் அதனை இயற்றிய மகான் “காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்” என அருளியுள்ளார்.

பரிணாமக் கசடுகளான தன்முனைப்பு, தான், தனது என்கின்ற மாயக்கருத்து, அதனால் உருவான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை. வஞ்சம் ஆகியக் கசடுகள் மனிதனிடம் உருவாகிவிட்டன. இதனால் பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை ஆகிய ஐந்து பழிச் செயல்கள் உருவாகிவிட்டன. பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி புண்ணாகிய மனம் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? இறையையே தன்னுடைய அறிவாக மனிதன் வைத்துக் கொண்டு இறை அருள் இல்லாமல் இறைக்காப்பு இல்லாமல் ஏன் துன்பப்படவேண்டும்? ஆகவே மனிதன் தன்னுடைய பரிணாமக் கசடுகளை நீக்கி அறிவை முழுமைப்படுத்த வேண்டும்(to perfect the consciousness). அடுத்த விருந்தில் (16-09-2015-புதன்) அறஉணர்வே இறை உணர்வு என்பதனை அறிய இருக்கிறோம்.