இறை அருள் பெற…….4 / ?

வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு
FFC – 32

03-12-2014

எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எவ்வாறு எண்ணம் இயற்கையின் சிகரமாகும்? இயற்கை வேறு, இறை வேறு அல்ல. இறையின் மறு விஞ்ஞானப் பெயர்தான் இயற்கை. எண்ணமே இயற்கையின் சிகரம் என்கின்ற போது எண்ணமே இறை என்றுதானே பொருள். எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகும் என்கின்ற வினாவிற்கானப் பதிலைப் பார்ப்போம்.

இயற்கையின் ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆரம்ப நிலை வெளி. அந்த வெளியைத்தான் இறைவெளி என்கின்றனர் மெய்ஞானிகள். இறைவெளியின் நான்கு தரங்களாவன: வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம். நான்கு தரங்களில் மூன்றாவதாக பேரறிவு இருந்தாலும் சுத்த அத்வைதிகள் அறிவே தெய்வம் என்கின்றனர். ஏன்? மீண்டும் வினா எழுந்துள்ளது.

இறைவெளி வற்றாயிருப்பாகவும், பேராற்றலாகவும், இருந்தாலும், பேரறிவு மட்டும் அதற்கு இல்லையானால் அது ஒன்றுமில்லாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இறை வெளி தன்னிருக்கத்தால், துகள்களாகி பஞ்ச பூதங்களாகி பின்னர் பலகோடி நட்சத்திரங்களாகி அதில் நாம் வாழும் பூமியைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமும் உருவாகியிருக்க முடியாது. அறிவு இல்லை என்றால் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது? எனவே பிரதானமாக உள்ளது அறிவுதான்.

ஆயிரம் நபர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்க எத்தனை மேற்பார்வையாளர்கள் தேவையிருக்கின்றது?. அத்துனை மேற்பார்வையாளர்களுடைய அறிவுதானே கண்காணிக்கின்றது. அதுபோல் இத்துனைப் பெரிய பிரபஞ்சமாகி கோடானுகோடி உயிரினங்களாகி இறுதியில் மனித அறிவாக பரிணமிக்கின்றது என்றால் அதற்கு யார் காரணம்? இது மூன்றாவது வினாவாகிவிட்டது. பேரறிவு தான் காரணம் என்பது விடை.

அந்த பேரறிவுதான் இப்போது நீங்களுமாகி அடியேனுமாகி சிந்திக்கின்றது. ஆகவே அறிவே இயற்கையின் ஆதிநிலையில், இறைவெளியில் அறிவாக இருந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எது எண்ணுகின்றது? அறிவின் பணிகள் என்னென்ன? எண்ணுவது, உணர்வது, ஒழுங்கு படுத்துவது ஆகியவைகளாகும். ஆகவே எண்ணக்கூடிய அறிவை, இயற்கை, கொண்டுள்ளதால் எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது. மலையின் உச்சியைச் சிகரம் என்போம். சிகரம் என்கின்ற சொல்லிற்கு சிறப்பு, உன்னதம் என்றும் பொருளுண்டு. ஆகவே எண்ணமே இயற்கையின் சிகரம் என்பது சரியே என்கின்ற முடிவிற்கு வருகிறோம். .இறையும் இயற்கையும் ஒன்றே என்பதால் எண்ணம் இயற்கையின் சிகரமாக இருப்பது போன்று இறையின் சிகரமும் மனிதனிடம் உள்ள அறிவாகிய இறையேதான் எண்ணுகின்றது என்று பொருளாகின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதன் ஏன் இறை அருள் பெறமுடியாமல் துன்பப்பட வேண்டியுள்ளது? மனிதன் எண்ணுகிறான் என்றால் அவனுள் இருக்கின்ற பின்னப்பட்ட(Fractioned) இறையே தான் எண்ணுகின்றது. பின்னர் என்ன குறைவு மனிதனுக்கு? சில சுத்த அத்வைதிகள் பொருள். மெய்ப்பொருள் என்றுப் பிரித்துக் கூறுவதுபோல். அறிவாகிய இறையையும் மனித அறிவையும் வித்தியாசப்படுத்துவதற்காக கலங்கமிலாப் பேரறிவை சுத்த அறிவு என்கின்றனர். அப்படியானால் மனித அறிவு அசுத்தமாகிவிட்டது என்று பொருளாகின்றது. அதாவது பின்னப்பட்ட சுத்த அறிவுடன் கலங்கங்கள் சேர்ந்து விட்டன என்றாகின்றது. பேரறிவு கலங்கமில்லாதது. அது மனித அறிவாக வரும்போது அதனுடன் பரிணாமக் கசடுகளும் சோ்ந்து வந்துவிட்டன. இங்கே இறை அருளைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள வாசகம் இந்த இணைய தளத்தின் வாயில் பக்கத்தை(Homepage) அலங்கரித்து இருந்தாலும் அதனை மீண்டும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

”நல்ல பயனுள்ள அறச் செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ, அவரைச் சுற்றிலும், நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும். அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக.” என்று இறைஅருள் பெறுவது பற்றி அருளியுள்ளார் ரிஷிகளில் பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். வெட்டவெளியாகியப் பிரம்மத்தை வெளிச்சமாக்கி விட்டார் பிரம்ம ரிஷி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இக்காலப் பிரம்ம ரிஷியின் அருட் கூற்றைக் கூர்ந்து நோக்குவோம். யாருக்கு இறையருள் கிடைக்கும் என்கின்ற வினாவை எழுப்பிச் சிந்திப்போம்.

அறச்செயல்கள் இருக்க வேண்டும். அறச் செயல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மிகக் கவனமாகக் கூறுகிறார் இக்காலப் பிரம்ம ரிஷி. அறம் என்றாலே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டதுதான் அறம் என்பது இக்காலப் பிரம்ம ரிஷியின் அறத்திற்கான வரையறை. அப்படி இருக்கும்போது அறம் என்பது நல்ல பயனுள்ளதைத்தானேக் கொடுக்கும்! இருப்பினும் நல்ல பயனுள்ள அறச்செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள்.

இரண்டாவதாக அதற்கேற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவா்கள். எண்ணம்தான் எல்லா செயல்களுக்கும் வித்து. எனவே நல்லபயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்கள் எண்ணுபவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் என்கிறார். அருட் பேராற்றல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ”லும்” என்று சேர்த்து அருட்பேராற்றலும் என்று கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இது இறை அருளில்லையா? இத்தகைய தன்மையுடைய அருளைத் தவிர வேறு என்ன இறைஅருள் வேண்டும் மனிதனுக்கு? என்னவெல்லாம் தருகின்றது இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள்.

 முதலில் காப்பளிக்கிறது நுண்ணலையாகிய அருட்பேராற்றல். தோன்றாத்துணையாகவும் இருக்கலாம் ஒரு சிலருக்கு. வேறு சிலருக்கு அது கேளா ஒலி போல் தோன்றியத் துணையாகவும் இருக்கலாம்.
 அடுத்ததாக வெற்றியளிக்கிறது.
 அடுத்ததாக மகிழ்ச்சியளிக்கின்றது.
 அதற்கும் அடுத்ததாக நிறைவை அளிக்கின்றது.
 அதற்கும் மேலாக இந்த அனுபவத்தால் இன்புறச் செய்கின்றது.

வேறு என்ன வேண்டும் இறை அருளினால்? மனிதப் பிறவியின் பயன் இறையுணர்வு பெருதலாயிற்றே. அதனை இந்த இறை அருள் தரவில்லையே என ஐயம் உள்ளதா? ஏன் இறையுணர்வைத் தரவில்லை இந்த இறை அருள்? இறையுணர்வு என்பது என்ன? இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள் கூறும் இறையுணர்விற்கான வரையறையை நினைவில் கொண்டு வந்தால் இந்த ஐயம் தீர்ந்துவிடும்.

” அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறையுணர்வு” என்கிறாரே நம் பிரம்ம ரிஷி அவர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறையருளில் அவர் கூறும் இறையுணர்வு கிடைக்க வில்லையா? நல்ல பயனுள்ள அறச்செயல்கள் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.

சரி. உலகியல் வாழ்க்கைக்கு என்ன தரும் இந்த இறையருள் என ஐயம் உள்ளதா? இந்த ஐந்தையும் வைத்து உலகியல் வாழ்க்கை நடத்த முடியாதா? செல்வம் அளிக்கவில்லையே இவர் கூறும் இறை அருள் என்று நினைக்கீறீர்களா! உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியதை இந்த இறை அருள் தரவில்லையே என நினைக்க வேண்டாம். காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகளெல்லாம் உலகியல் வாழ்க்கைக்குத் தேவைதானே. செல்வம் ஈட்ட வேண்டுமானால் உழைக்க வேண்டும். அங்கே இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள் வெற்றியைத் தருவதால் நிறைசெல்வம் வந்துவிடுகின்றது. பிரம்ம ரிஷி அவர்கள் கூறுவது போல், உலகியல் வாழ்க்கையில் கடைசிவரை, ஓயாது, இன்னும் இன்னும் வேண்டும் என பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்தில் புகுந்தழுந்தி புண்ணாக்கிவிட்ட மனதிற்கு நிறைவைத் தந்து மனதை ஆற்றுமே நல்ல பயனுள்ளச் செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களுக்கான விளைவுகளும். ஆகவே இந்த விளைவு இறை அருள் கொடுத்ததில்லையா? நிறைமனமும் இறைமனமும் ஒன்றுதானே! நிறைமனமே இறைமனம்.

….நாளைத் தொடர்வோம்.

Posted in: