‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’-1/?

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

FFC – 195

 
05-06-2016-ஞாயிறு

FFC-195-SUB title-5-6-16

வாழ்க வளமுடன்!

இன்றைய அறிவிற்கு விருந்தாக ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வரியச் சிந்தனைக்கு நம் குருதேவர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாள—அறிவாளிகளும் துணைபுரிவதற்கு, நாம் அவா்களை வணங்கி நினைவு கூர்வோம். *பரிபாலனம் என்பதற்கு ‘ஆளுகை’ (rule, governance), ‘அருளுதல்’ என்பது பொருள்.

முதலில் ஏன் இந்த தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதனை ஆராய்ந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம். மனித மனம் எப்போதுமே ஆதாயத்தை தேடும் இயல்புடையது(Human mind is so calculative). ஆகவே இந்த தலைப்பின் சிந்தனையால் நாம் பெறப்போகும் ஆதாயம் என்ன என்று தெரிந்து கொண்டால் இச்சிந்தனையின் மீது ஆர்வமும், பொறுப்பும் மிகும்.

என்றும் அழியாத ஆன்மா எடுக்கின்ற பிறவிகளை எண்ணிக்கையால் குறிப்பிட முடியாது என்பதால், எடுத்தபிறவிகளை, பெருங்கடலோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். அந்தப் பெருங்கடலை நீந்துவதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்கிறார். ஏன்? பிறவியில் இன்பம் மட்டுமே அனுபவிப்பதாக இருந்தால், பிறவி எடுத்துக் கொண்டே இருக்கலாமே என எண்ணலாம். அவ்வாறுதான் இல்லையே!

இன்பம் மட்டுமே இருக்கும் பட்சத்திலும், அந்த நிலை எப்போதுமே நீடிக்குமா என்றால் அதற்கு என்ன உத்திரவாதம்? யார் உத்திரவாதம் அளிப்பது? உத்திரவாதம் என்பது கருமையப் பதிவுகளைப் பொருத்துதான் இருக்கும். இப்போது, கருமையப் பதிவும், தற்போதைய நேரமும்(அதற்கேற்றார்போல் வானில் கோள்களின் சஞ்சரிக்கும் நிலை கருமையப்பதிவுகளுக்கு உகந்ததாக) நன்றாக உள்ளது என்பதால் இன்பமாக இருக்கலாம். கருமையத் தீயப்பதிவு ஆதிக்கத்திற்கு வரும் காலத்தில், அதாவது பொதுவாகச் சொல்லப்படும் மனிதனின் கெட்டநேரத்தில் தீய விளைவுகளே வரும்.

ஆகையால் எவ்வாறு பணம் எதிர்காலத்தில் தேவையிருக்கின்றதோ தேவையில்லையோ, தேவை வந்தால் செலவழிப்பதற்குச் சேமிக்கின்றோமோ, அதுபோல் புண்ணியத்தையும்(நற்செயல்கள் புரிவதனை) எப்போதும் செயலில் சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அதாவது ஒரு வேளை எதிர்காலத்தில் தீயப்பதிவுகள் வருவதாக இருந்தால், இது வரை செய்து வந்த புண்ணியப்பதிவுகளால், வருகின்ற தீயவினைப்பதிவுகளின் விளைவை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. அதாவது இப்போது நம்நேரம் நல்லதாக உள்ளது என்பதற்காக, நல்ல நேரத்திற்கு காரணமாக இருந்த ஒழுக்கத்தை மறந்து விடாமல் தொடர்ந்து ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.

பிறவி என்பது ஆன்மாவிற்கு பிணியாகும். எனவே பிறவிப் பெருங்கடலை நீந்தியவர்கள், பிறவி என்பது ஆன்மாவிற்கான பிணியாகக் கருதி, அதனை பிறவிப்பிணி என்கின்றனர். மீண்டும் பிறவா வரத்தினை இறைவனிடம் வேண்டுகின்றனர் பக்தியில் சிறந்து விளங்கியவர்கள். பிறக்கும்போது பிணியோடு பிறப்பது என்பது பிறவிப்பிணியிலிருந்து வேறுபட்டது. பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறப்பது. கருமையத் தூய்மையின்மையால்தான் ஆன்மாவிற்கு பிறப்பே உண்டாகின்றது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் செல்வந்தராக இருந்து, தெளிவு பெற்று, தன்னிலை அறிந்து “காதருந்த ஊசியும் கடைவழிக்கே வாராது காண்” என்ற எதார்த்தத்தை எடுத்துச்சொன்ன பட்டினத்தார் அவர்கள். ஒருவர் பிறக்கும் போதே பிணியுடன் பிறப்பதும் கருமையத் தூய்மையின்மையால்தான்.

பிறவியை பெருங்கடல் என்று கூறி அதனை நீந்திக் கடப்பதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்று கூறிய அன்றும், 2047 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றும் எல்லோராலும் வாழ்க்கையை சிரமின்றியும், துன்பமின்றியும் வாழ முடியவில்லையே!

இன்று, இந்த 2047 ஆண்டுகளில் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகிக் கொண்டுதான் வருகின்றது. அன்று வாழ்ந்த திருவள்ளுவர் இன்று உயிர்த்தெழுந்து வந்தால். ‘133 values வேண்டும் என்று கருதி ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் சென்ற பிறகும், செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் அல்லவா மக்கள் எல்லோரும் இருக்கின்றனா்’ எனக்கண்ணீர் விடுவார்.

ஞானிகள் தோன்றுவது என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம் என்பதாலும், திருவள்ளுவரின் அறிவாற்றல் கண்ணீர் விட்டதால்தானோ, வேதாத்திரி என்கின்ற தன் சீடரைக் கொண்டு எழுதியதுதான் திருவேதாத்திரியத்தி்ன் 1854 பாடல்களோ?!

விஞ்ஞானம் வளர்ந்து வருகின்றது என்றாலும், அதனை நோ்வழியில் பயன்படுத்தும் பண்பாடு வளராமையால், இரண்டு உலகப் போரினைச் சந்தித்துவிட்டது உலகம். இன்னும் பல தொடர் சிக்கல்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டுதான் வருகின்றது. மனிதகுலம் தனது பூர்வீகச்சொத்தான இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதுபோல், அதே பூர்வீகச்சொத்தின் முதன்மையானதான அமைதியை அனுபவிக்கத் தெரியாமல், இழந்து, தவித்துக் கொண்டு வருகின்றது. இங்கே தனிமனிதனும் துன்பப்படுகிறான்; அதன் ஒட்டு மொத்த விளைவாக சமுதாயத்திலும் துன்பமே நிலவிவருகின்றது. சமுதாயச் சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம் இயற்கை/இறை நீதியை மதிக்காமையும், விளைவாக, நீதியை மீறினால் தண்டனை உண்டு என்கின்ற பயம் இல்லாமையும் தான் . இது எப்படி இருக்கின்றது என்பதனை இப்போது கவனிப்போம்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும் குழந்தை, ஊட்டுகின்ற உணவைச் சாப்பிட அடம் பிடிக்கும். அக்குழந்தைகளை உண்ணவைப்பதற்கு பல யுக்திகளைக் கையாள்வர் அன்னையர்கள். அதில் ஒன்று குழந்தையைப் போலியாக அச்சமூட்டி உணவை உண்ணவைப்பது. அச்சமூட்டுவது அன்னையர்களின் நோக்கமன்று. ‘இரண்டு கண்ணன்(இரண்டு கண்கள் இருப்பதால் அவ்வாறு சொல்லப்படுகின்றது) வருகிறான். சாப்பிடவில்லை என்றால் உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று கூறி அச்சமூட்டி உணவைச் சாப்பிடச் செய்வர். உண்மையில் எல்லோருமே இரண்டு கண்ணன்கள்தான். தந்தையே இரண்டு கண்ணன்தான். அச்சமூட்டும் தாயும் இரண்டு கண்கள் உடையவளே.

குழந்தை ஏன் இரண்டு கண்ணனுக்கு பயப்படவேண்டும்? குழந்தை இதனை அறியாதது என்பதால், இரண்டு கண்ணன் என்று ஏதோ ஒன்றைக் கூறி அச்சமூட்டி உணவை உண்ண வைக்கின்றனர். (பின்னாளில் உண்மை தெரிந்த பிறகு அக்குழந்தை இரண்டு கண்ணனுக்குப் பயப்படுவதில்லை). ‘இரண்டு கண்ணன் வந்து பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று குழந்தையை போலியாக அச்சமூட்டுவது போலன்று ‘மனிதனின் நல்வாழ்விற்கு மனத்தூய்மையும், ஆன்ம தூய்மையும்(கருமையத்தூய்மை) அவசியம்’ என்று ஆன்மீக நூல்கள் அறிவுறுத்துவது. ஆன்மீகப் பெரியவர்கள் நம்மை ஏன் அச்சுறுத்த வேண்டும்? இருக்கின்ற உண்மையைக் கூறுகின்றனர். அது பொய்யாக அச்சமூட்டுவது போல் தெரியும். அதனால்தான் எவ்வளவோ அருளாளர்கள் அறிவுரைகள் கூறியும், அறநூல்கள் எழுதியும்கூட மனிதன் மனத்தூய்மையிலும் கருமையத்தூய்மையிலும் அக்கறை செலுத்துவது இல்லை.

ஆகவே இரண்டு கண்ணன் இருப்பது உண்மைபோல் கருமையம் இருப்பதும் உண்மை. கருமையம் பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா(surveillance camera) போன்றது. அது மனிதனுடைய எல்லாச்செயல்களையும் நொடிநேரம் கூட தவறாமல் பதிவு செய்து கொண்டே வந்து, தக்க தருணம் வரும்போது விளைவுகளை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ தந்து கொண்டிருக்கின்றது என்பது உண்மையிலும் உண்மை.

ஆகவே
தனி மனித துன்பத்திற்கான காரணத்தை அறிந்து,
துன்பங்களாக வருகின்ற பாதையை (உண்மையை) அறிந்தால்
இனிமேலாவது துன்பங்கள் வாராதவாறு செயல்கள் புரியவும்,
ஏற்கனவே குறைந்த பட்சம் ஏழ் பிறவிகளில் – தலைமுறைகளில் செய்த செயல்களின் விளைவாக வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெறவும்,
புனர்ஜென்ம வாழ்க்கையை (புதியமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்) வாழ்வதற்கு,
மன தைரியத்தையும், திண்மையையும் பெற சங்கல்பம் செய்து கொள்வோம்.

முதலில் தலைப்பிலுள்ள வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

1) இறை
2) நீதிபரிபாலனம்
3) கருமையம்
4) பாலங்கள்

இறை என்பது என்ன? முதலில் இறை என்பது என்ன என்று அறிந்து கொள்வோம். ஏற்கனவே இறையைப்பற்றி விரிவாக அறிந்திருந்தாலும் இப்போது மீண்டும், இறைக்கான சுருக்கமான விளக்கத்தை அறிந்து கொள்வோம். பஞ்சபூதங்களுக்கு மூலமான துகள்கள் தோன்றா முன்னர் இருந்த ஆதிநிலை ஆற்றல்(வெளி) எங்கும் எதிலும் இறைந்து கிடப்பதால் இறை என்கின்ற காரணப் பெயரால் அழைக்கப்படுகின்றது. ஆகவேதான் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் எனப்படுகின்றான். ‘நீக்கமற’ என்றால் ஓர் இடம் கூட விடாமல்; எங்கும் என்று பொருள்(everywhere, omnipresent).

இந்த ஆற்றல் அறிவாகவும் உள்ளது. அறிவு இல்லாத எந்தப் பொருளும் இல்லை. அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு உள்ளது. கேட்பதற்கே நம்ப முடியாமல் இருக்கலாம். இந்த ஐயம் நம் மகரிஷி அவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றது. பிறகு இறை, ஐயத்தைத் தெளிவாக்கியதை, நமக்காக உள்ளம் கசிந்து கூறும் பாடல் வரிகளை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றால் அது உயிரினங்களில் தானே இருக்கும் என நினைக்கலாம். ஆம் அறிவு உயிரினங்களில் இருக்கின்றது என்பது உண்மைதான். எனினும்

“உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்”

என்று நம்குருதேவர் உள்ளம் கசிந்து கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றிருந்தால் அதற்கு உணர்ச்சி உண்டு. அதற்கு மேலும் மனிதனிடம் சிந்திக்கின்றது. அவ்வாறு அறிவிற்கு இலக்கணம் வகுத்துள்ள மனிதனுக்கு, உயிரற்ற சடப்போருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது ஐயத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும்தானே!

அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற மனிதகுலத்தை அன்பு கூர்ந்து அழைக்கும் நம் குருதேவருக்கும் இது ஆரம்பத்தில் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றது. மகரிஷி அவர்கள் சிந்தனை மூச்சுடையவர் — இடைவிடாத் தொடர் சிந்தனையாளர் என்பதால், பேரறிவே ஒரு புண்ணிய நாளில் “தூணிலும், துரும்பிலும் இருப்பதாக உங்களால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பேரறிவாகிய நான், உயிரினங்களாவதற்கு (உணர்ச்சிக்கும்) முன்னர், உயிரற்ற சடப்பொருட்களிலும் நான் இருந்தால்தானே உங்களின் பறைசாற்றுதல் உண்மையாக இருக்க முடியும் என்று விளக்கி, உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் நான் ஒழுங்காற்றலாய் இருந்து கொண்டு முறைபடுத்திக் கொண்டிருக்கின்றேனே” என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

In the Year 1984 AD(கி.பி) i.e. 73 AVM(வே.ம.பி.)(1984-1911=73AVM), Almighty Himself have declared to whole humanity through Shri Vethathri Maharishi that — “ I am present and working as order of Function in non-living beings also”

உயிரினம் என்பது என்ன? முதல் உயிரினம் உயிரற்ற சடப்பொருட்களான பஞ்சபூதங்களின் கூட்டுக்கலவையினால் உருவாகியது. பஞ்சபூதக்கூட்டுக் கலவையால் உருவாகிய உயிரையும், அறிவையும் கொண்ட உயிரினத்திற்கு உயிரும், அறிவும் எங்கிருந்து வந்தன? உயிரினத்திற்கு உடலும், உயிரும் உண்டு. உடல் பஞ்சபூதக்கூட்டுக்கலவையினால் வந்தது என்றால் புலன்களுக்குப் புலப்படாத உயிர் எங்கிருந்து வந்தது? பஞ்சபூதங்களைத் தவிர உயிர் என்று தனியாக உள்ளதா? அப்படியில்லையே! உயிரற்ற சடப்பொருளான பஞ்சபூதங்களில் இருந்துதான் வந்துள்ளது உயிர். பஞ்சபூதங்களில் முதலில் உருவாகிய, புலன்களுக்குப் புலப்படாத விண் அந்த பஞ்சபூதக் கூட்டுக்கலவையில் தனித்து ஓடுவதே உயிர். அதனால் தான் உயிர் புலன்களுக்குத் தெரிவதில்லை.

உணரக்கூடிய உயிர் வந்து விட்டாலே அறிவும் அங்கு இருக்கும். ஆகவே உயிரும் அறிவும் சடப்பொருளாக இருந்த விண்ணிலிருந்துதான் வந்துள்ளன. ஆகவே சடப்பொருட்களில் அறிவு இருக்கின்றது. விண்ணில் மட்டுமே இல்லை அறிவு; மற்ற நான்கு பூதங்களிலும் உள்ளது அறிவு. பஞ்சபூதக்கூட்டுச் சேர்க்கையாலானது சடப்பொருள். தன் கூட்டுச்சேர்க்கையான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனராக (the Great Director of all directors) அறிவு, ஒழுங்காற்றல் பணியை நடத்திக் கொண்டிருக்கின்றது. அடுத்த விருந்தில் இறைநீதி என்பது என்ன, இறைஆற்றலின் மூன்றாவது திறனான ஒன்றிற்கு ஏன் கூர்தலறம் எனப் பெயரிட்டுள்ளார் நம் குருதேவர் என்பதனையும் அறிவோம்.
தொடரும்  புதன் 08-06-2016-ஞாயிறு

வாழ்க அறிவுச்செல்வம்                                      வளர்க அறிவுச் செல்வம்