இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/?

வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

 
அ.வி. 196

  08-06-2016 – புதன்

 

FFC-196-SUB TITLE

சென்ற விருந்தில் கருமையம் ஒரு surveillance camera என்றும் அது மனிதனின் முத்தொழில்களையும் தப்பாது பதிவு செய்து, அதற்குரிய விளைவை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும் தெய்வீக நீதிமன்றம், என்றும் இறையைப்பற்றி சுருக்கமான விளக்கத்தையும் அறிந்து கொண்டோம்.
இப்போது ‘நீதி’ என்பது என்ன என்று அறிவோம். நீதி என்பது,
1) காரணங்களைக் கூறி நடுநிலையோடு வழங்கும் முடிவு,
2) எது சரி, எது தவறு என்கின்ற ஒழுங்கைக் கூறுவது.
3) ஒன்றை நெறிப்படுத்துதலையும் குறிக்கும்.

அதாவது நெறிபடுத்துதல் என்பது மனித ஒழுக்கத்திற்காக மேற்கொள்கின்ற முறை.
நீதி என்பது என்ன என்று இப்போது அறிந்து கொண்டோம். இறை என்பது என்ன என்று நமக்குத் தெரியும். பேரறிவே இறை; ஒழுங்காற்றலே இறை. ‘இவ்விரண்டு சொற்களின் பொருளைக் கொண்டு இறைநீதி என்பதனை மனிதன் எவ்வாறு சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் விளங்கிக் கொள்ளலாம் என்றால்: …
இறைநீதி என்பது, காரணங்களோடு, நடுநிலையோடு இருந்து, எது சரி, எது தவறு என்று ஒழுங்குடன் முடிவெடுக்கின்ற, ஒழுங்கை நெறிப்படுத்தும் திறனாகும்.
இறை, தன்னுடைய பூரணத்தால்,
பஞ்சபூதங்களாகி, ஓரறிவிலிருந்து ஐயறிவு உயிரினங்களாகி, கடைசியாக ஆறாம் அறிவுடைய மனிதனாகியுள்ளது. இம்மூன்றையும் இறை எவ்வாறு ஆளுகை செய்ய முடியும்?
ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அலுவலகங்களில் ஒரு புதிய பதவி ஏற்படுத்தப்படும் போது அப்பதவிக்கான கடமையும், பொறுப்பும் (duties and responsibilities) என்ன என்று வரையறுக்கப்படும். அதாவது, அந்தப் பதவியில் அமர்த்தப்படுபவர், தான் செய்ய வேண்டிய கடமையைச் சீராகச் செய்வதற்கு, அவருக்கு அதிகாரமும் இருந்தால்தான், அந்த அதிகாரி திறம்பட, பொறுப்புடன் பணியாற்ற முடியும் என்பதால் அதிகாரமும் வழங்கப்படும்.
மனித சமுதாயத்தை ஆட்சி செய்ய முறையான ஆட்சியை (conventional Governance) சமுதாயம் அமைத்துக் கொள்வதுபோல், இறைக்கு, அம்மாதிரியான ஆட்சி ஏதும் இல்லை. காரணம் இறைவன் அரூபி. உருவமற்றவன். இருந்தாலும் இறை ஆட்சியை நடத்த வேண்டுமல்லவா?. இப்போது, மகரிஷி அவர்கள் பேரின்பக் களிப்பில் இயற்றிய பாடலின் 48 வரிகளில் இறைவனை ‘ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன்’ என்று குறிப்பிடும் வரியினை மட்டும் நினைவு கூர்வோம். (மீதமுள்ள வரிகளை அன்பர்களே வாசித்து இன்புறவும்.)
பேரின்பக் களிப்பு (1984)
“சின்னஞ்சிறு சிறுசெல்கள் சேர்ந்திணைந்து ஒத்துழைத்து,
சிந்தனைக்கு எட்டாச்செயல்கள் சிறப்புடலில் நிகழ்த்துவன;
முன்னம் ஒருதுளியான மூலவிந்து நாதத்தால்,
முழுமையாய் எனதுஉடல் முற்றறிவன் திருவருளால்,
சூட்சுமமாய்க் குறுகிநின்று தொடங்கியது தன்வளர்ச்சி;
சொல்லறிய மறைபொருளாய்த் தொடர்ந்து வரும் வினைக்கேற்ப*,
ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்
அன்னை கருப்பைவிடுத்து, அடைந்து விட்டேன் மண்ணுலகை! …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

*வினைக்கேற்ப—கூர்தலறத்தின் – செயலுக்கு(வினை) ஏற்ற விளைவைத்தரும் பரிபாலனத்தின்படி)

இறை தானாகவே தன்மாற்றமாகியுள்ள
அண்ட சராசரங்களையும் நெறி தவறாது இயக்கிக் கொண்டும்,
உயிரினங்களில் உயிராக, அறிவாக இருந்து இயக்கியும், ஆளவும் செய்கின்றது. இதற்குத் தேவையான அதிகாரத்தை யார் அளிப்பது? யாரும் அளிக்க முடியாது? எல்லாம்வல்ல அதனிடமுள்ள இயல்பானத் தன்மையே தான் அந்த அதிகாரம், இறைநீதி என்பதே அது. எந்த ஒரு செயலுக்கும் (action) ஏற்ற (appropriate) விளைவினைத் (result) தரும் வல்லமை உடையது.
இதனை இயற்கை நீதி (Law of Nature) என்றும் சொல்கிறோம்.
செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருகின்ற செயல் விளைவுத் தத்துவம் என்றும் கூறுகிறோம்.

ஆதிநிலைப் பொருளான மெய்ப்பொருளுக்கு வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்கின்ற நான்கு தன்மைகளையும், தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கூறுகின்றது திருவேதாத்திரியம். இந்த ஏழு சொற்களில் ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் இறைநீதியை/இயற்கை நீதியை/செயல்விளைவுத் தத்துவத்தை குறிக்கின்றது. ‘கூர்தலறம்’ என்கின்ற இச்சொல் தமிழ் மொழியில் ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்போல் தெரியவில்லை. புதிதாக, திருவேதாத்திரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொல். ‘கூர்தலறம்’ என்பதனை ஆங்கிலத்தில் ‘cause and effect’ என்கின்றது திருவேதாத்திரியம். அதாவது விளைவிற்குக்(effect) காரணம்(cause) இருக்கின்றது என்று கூறும் நியதியை ‘cause and effect’ எனக் கூறாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்?
கூர்தலறம் என்றால் என்ன? இறைநீதியை திருவேதாத்திரியம் ‘கூர்தலறம்’ என்பதால் அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொள்வோம். ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் தனித்த ஒரே சொல் அல்ல. அதில் ‘கூர்தல்’ மற்றும் ‘அறம்’ என்கின்ற இரு சொற்கள் உள்ளன. ஆகவே ‘கூர்தலறம்’ என்றால் என்ன என்று அறிந்து கொள்ள ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லில் உள்ள இருசொற்களான கூர்தல் மற்றும் அறம் என்கின்ற இரு சொற்களின் பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘கூர்தல்’ என்கின்ற சொல்லை நம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். ‘கூர்’ என்றால் — ஊசி, கத்தி போன்ற கருவியில் குத்தும் அல்லது வெட்டும் முனையாகும். கூர் என்கின்ற சொல்லுக்கு மேலும் சில பொருளைக் காண்போம். அதுதான் நம் சிந்தனைக்கு உதவ இருக்கின்ற பொருளாக இருக்கும்.
கூர் என்றால், வைத்தல், செலுத்துதல், கொள்ளுதல் என்பது பொருள். உதாரணங்கள்:– அன்பு கூர்ந்து– இறைவன் நம்மீது கருணை கூர்ந்தார்.
கூர்தல் என்றால் ‘கூர்’–‘கூர்ந்து’ என்கின்ற சொல்லின் பெயர்ச் சொல் வடிவம் கூர்தல்(noun form). கூர்ந்து என்றால் முழுக்கவனத்தையும் செலுத்துவது மற்றும் ‘உற்று’ ‘keenly’, ‘intently’, என்று பொருள். கூர்ந்து என்கின்ற சொல் ‘கவனி’, ‘பார்’, ‘நோக்கு’, ‘கேள்’ ஆகிய வினைச் சொல்லுடன் சோ்த்துச் சொல்லப்படுவது.
கூர்ந்து கவனி, கூர்ந்துப் பார், கூர்ந்து நோக்கு. கூர்ந்து கேள்.
ஆகவே கூர்தல் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம். ‘நினைவு கொள்வோம்’ என்பதனை சில இடங்களில் ’நினைவு கூர்தல்’ என்கிறோம். ஏன்? ‘நினைவு கொள்வோம்’, ‘நினைவு கூர்தல்’ என்கின்ற இரண்டுமே ‘நினைப்பது’ என்கின்ற வினையைக் குறித்தாலும், இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. நினைவு கொள்வோம் என்பது ஏதோ நினைவிற்கு கொண்டு வருதல் (Just to remember) என்றாகின்றது. ஆனால் ‘நினைவு கூர்தல்’ என்பதில் கூர்தல் என்கின்ற சொல் சேர்ந்துள்ளதால் அச்சொல்லிற்கானப் பொருள் ‘நினைவு’ என்கின்ற வினைக்குச் சிறப்பைக் கூட்டுகின்றது.
திருவேதாத்திரியத்தின் குருவணக்கம் என்கின்ற கவியின் இறுதியில்
“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
அதனை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூா்வாம்”
என்று முடிக்கிறார் மகரிஷி அவர்கள். நினைவு கொள்வோம் என்று முடித்திருக்கலாம். ஆனால் நினைவு கூர்வோம்(கூர்வாம்) என்று முடித்துள்ளார். இவ்வாறு அவர் முடித்துள்ளது, கூர்தல் என்கின்ற சொல்லின் சிறப்பைக்கருதியே. அவரின் அருட்கவித்துவத்தில் அந்த சொல் எழுத்துவடிவில் மலா்ந்து சிறப்புப் பெருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அருளாளர்களை நினைப்பது என்பது ‘Just to remember’ என ஆகி விடக்கூடாது என்று கருதிதான், அருளாளர்களை மரியாதையுடனும், மிகச்சிறப்புடனும் கூர்ந்து நினைவு கொள்ள வேண்டும் என்பதால்தான், ‘கூர்தல்’ என்கின்ற சொல்லால் அந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும், பயனையும் எடுத்துக் கூறுகின்றது.
அறம் என்பது என்ன? ‘கூர்தல்’ என்றால் முழுக்கவனத்தையும், உன்னிப்பாக செலுத்துவது என்று பொருளாகின்றது. கூர்தலறத்தில் உள்ள கூர்தல் என்கின்ற சொல்லிற்கான சிறப்பான பொருளை அறிந்து கொண்டோம். கூர்தலறம் என்கின்ற சொல்லின் மறுபாதியான அறம் என்கின்ற சொல்லின் பொருளையும் அறிந்து கொண்டு கூர்தலறம் என்கின்ற புதிய தமிழ்ச்சொல்லிற்கான புனித அர்த்தத்தை அறிந்து கொள்வோம். இறைவனை அறிய வேண்டுமெனில் அவன் புனிதத்தையெல்லாம் முதலில் அறிய வேண்டுமல்லவா? அப்போதுதான் இறைவன் மீது முழுக்கவனமும், நாட்டமும், ஆர்வமும், இணைப்பும்-பிணைப்பும், அன்பும் ஏற்படும்.
அறம் என்பது என்ன? அறம் என்பதற்கு பொதுவான பொருள் என்ன? குடும்ப வாழ்வும், பொது வாழ்வும் சீராக இயங்க வேண்டுமானால் ஒருவா் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகளே(ethical codes). இறையின் மூன்றுத் திறன்களைக் குறிக்கும் சொற்களில் தன்மாற்றம், இயல்பூக்கம், கூா்தலறம் ஆகியவற்றில் மூன்றாவதாக கூர்தலறத்தைக் குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.
1) ஆதிநிலையாகிய மெய்ப்பொருளே – வெட்ட வெளியே – இறைவெளியே, தன்னிறுக்கத்தால் நொறுங்கி, தானே மாற்றம் அடைந்ததால் அதனைத் ‘தன்மாற்றம்’ என்றும்,
2) ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயரினங்களாக பரிணமிக்க வைத்த தனது தனது ஊக்கஇயல்பை ‘இயல்பூக்கம்’ என்றும், குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.
ஆதிநிலையின் முதல்இரண்டு திறன்களான தன்மாற்றம் மற்றும் இயல்பூக்கம் மட்டுமே இருந்து, கூர்தலறலம் என்பது இல்லாது இருந்து, துகள்களாகி, பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி, ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினங்களாகியிருந்தால், இறை எவ்வாறு ஆட்சி நடத்த முடியும்? மூன்றாவது திறனான/தன்மையான கூர்தலறம் இல்லாதிருந்தால் ஆட்சியின்றி ஆளுகின்ற இறையின் ஆட்சி-without conventional Governance (பேரின்பக்களிப்பு – 1984 கவி எண் 1647 வரி எண் 11) எவ்வாறு இருந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்ப்போம். இறை ஆட்சியே நடந்திருக்கமா? நீதியில்லாமல் எவ்வாறு ஆட்சி செய்ய முடியும்? அடுத்த விருந்தில் கூர்தலறம் என்கின்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டக் காரணத்தையும், கூர்தலறத்தின் நெடிய பயணத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள பயணத்தை மூன்றாகப் பிரித்தும், தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தொடரும் . 12-06-2016–ஞாயிறு