இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 2/2

வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 2/2 

FFC –  204

 06-07-2016-புதன்

‘உண்மையான நான்’ (Real ‘I’) அறிவிற்கு(மனிதனுக்கு) தெரிவதில்லை!

சுய விலாசம் அறிய வேண்டும்:

மனிதன் ‘தன்னை தவறாக அடையாளம்’ கொண்டிருக்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாமலா வாழ்கிறான் என ஐயம் எழலாம்! அதாவது தான் யார் எனத் தெரியாமலா மனிதன் வாழ்கிறான் என்று நினைக்கலாம்! மனிதன், தன்னை மனிதன் என்றும், மேலும் தன் பெயரை வைத்தும், இன்னாரின் மகன் என்றும், தற்காலிக மற்றும் நிரந்தர முகவரியை(present and permanent address) வைத்தும் அடையாளம் கொள்கிறான். பொதுவாக தன்னை மனிதர்கள் எல்லோரும் கொள்ளும் இந்த அடையாளம் அல்ல இங்கே நாம் கூறும் அடையாளம்! அறிவின் இருப்பிடம் அறிந்து தன்னை அடையாளம் கொள்ள வேண்டும். தன்னுடைய சுய விலாசம் தெரிய வேண்டும். சுய விலாசம் மனிதகுலத்திற்கே ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதனை அறிவதற்காக, அறிவின் இருப்பிடத்தைக் காண்பிக்க மகரிஷி அவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? ஆம் தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை.

தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும், சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும், வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையே துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முரணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி, அச்சம், திருடு, கொலை, கற்பழிப்பு, சினம், கவலை, பயம் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையானத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

தவறான அடையாளத்தால் தவறாகத்தானே வாழ முடியும்?!

தவறான அடையாளத்தால் தவறுதானே நடக்க முடியும்! அவனுடைய உண்மையான நான் தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையானத் துன்பங்களை அனுபவிக்கிறான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாகவே அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தில் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

வாழ்க்கையில் என்ன வேண்டும்?
எதில் வெற்றி பெற வேண்டும்?
வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும்.
பேரின்பமே வேண்டும்.
துன்பம் வந்தாலும் அதனைத் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும்.
ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும்.
துன்பம் தேவையில்லை. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும்.

‘நான் யார்-வினா எழுதலே’ தவறான அடையாளம் கொண்டிருத்தலை உறுதிப் படுத்துகின்றது:

நான் யார் என்கின்ற வினா எழும்போதே இதுவரை தவறான அடையாளத்தில் இருப்பது உறுதியாகின்றது. சரியான அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே இதுவரை தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவி்ல்லை என்றாகின்றது.

தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே? இயற்கைக்கு முரணாக வாழ்ந்தால் விளைவு துன்பமே. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

தவறான அடையாளம் எது?

தேகாபிமானமே (body consciousness) தவறான அடையாளமாகும். அதாவது

தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்கிறான் மனிதன்.
உடல் உண்மையான நானல்ல (It is not real I). .
உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிரிந்த பிறகும்,

உயிருடன் இருந்த போது சொல்வது போல் உடல், “நான்- நான்” என்று சொல்லிக் கொண்டிருக்கலாமே! அப்படிச் சொல்வதில்லையே!. எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

உடலை “நான்” என்கின்ற போது அது தன் முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து விடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

எப்போது தன்முனைப்பற்ற நானாக(Egoless I) மாறுவது?

தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation), இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

“அவனில் தான் நீ, உன்னில் அவன்
  அவன் யார்? நீ யார்? பிரிவேது?
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி ”

எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என அறிந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு, மனித இணப்பரிணாமத்தில் கொண்டுவந்துள்ள பரிணாமக்கசடுகளால்(விலங்கினப் பண்பு) குறைகள் உள்ளதாக இருக்கின்றது. குறை உடையது எவ்வாறு நிறைவுடையதாகும்? அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என்று பொருள் பற்று கொண்டு புலன்களின் வலையில்(trap) சிக்கிக் கொள்கிறான். வேடன் விரித்த வலையில் சிக்கிய விலங்கிற்கு எவ்வாறு நிம்மதி இருக்காதோ, அதேபோன்று, புலன்வலையில் சிக்கி சிறைப்பட்டவனுக்கு எவ்வாறு நிம்மதி இருக்க முடியும்? கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக திருவள்ளுவர் கூறுவதனை நினைவு கூர்வோம்.

பொறி*வாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.               குறள் எண் 6

(*பொறி=Trap).
பொறி என்பதற்கு கருவி என்றாலும்பொருள்  புலன்கருவிகளை அளவோடும், முறையோடும் பயன்படுத்தவில்லையானால், கருவியாகச் செயல்பட்ட புலன், அறிவை தனது வலையில் சிக்கவைக்கும்(trap) கருவியாகி அறிவை அடிமையாக்கிக் கொள்ளும். இந்த நிலையில்தான் மனிதர்கள் பழக்கமாகி துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   எலிப்பொறி என்றால் என்ன? எலியைப்பிடிப்பதற்கு எலிப்பொறி பயன்படுத்தப்படுகின்றது. அதுபோல புலன்கள் அறிவை தன்வசப்படுத்தும்-அகப்படுத்தும் கருவியாகிவிடக் கூடாது. இந்நிலையில்தான் மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். அதாவது நல்விளக்கம் பழக்கத்திடம் தோற்றுவிடுகின்றது. மனிதனிடம் உள்ள தீமை ‘பழக்கம்’ என்கிறார் மானுடவியலாளரும் நாம் போற்றி போற்றி வணங்கும் குருதேவருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனிதனிடம் உள்ள தீமை என்பது பற்றி வேறோரு சமயம் விரிவாக சிந்திப்போம் அன்பர்களே!

புலன்களின் வலையில்(sense-traps) சிக்குண்ட மனிதனுக்கு மீண்டு வருகின்ற பாக்கியம் உள்ளது:

வேடன் விரித்த வலையில் சிக்கிய விலங்கிற்கு மடிய வேண்டிய துர்பாக்கியம் உள்ளது. ஆனால் புலன்வலையில் சிக்குண்ட மனிதனுக்கு புலன்கள் வலையிலிருந்து மீண்டு வரமுடிகின்ற பாக்கியம் நிச்சயம் உள்ளது.

இந்த பாக்கியத்தைக் கண்டுபிடித்த,
பிறஉணர்வை தன்னுணர்வுபோல் மதித்து இரக்கம் கொண்டு உதவி செய்வது அறம் எனக்கூறியுள்ள,
அறவியல் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
மனிதகுல மாந்தர்கள் அவதியுறுவதை தன்னுணர்வாக கருதி, கருணையோடு, உறுதியாக, தான்
அனுபவித்ததுபோல், ‘அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற இன்றேனும் எழுச்சி பெற்று வாருங்கள்’
என்று ஆதங்கத்துடன் அழைக்கிறார் கருணாமூர்த்தியான,
அன்பும், கருணையும் என்ன என்பதனை இரண்டொழுக்கப் பண்பாக உணர்த்திய,
நம் வாழ்க்கையில் அரிதினும் அரிதினுமாக கிடைத்தற்கரிய அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ( காண்க – பிறவிக்கடல் நீந்தலாம்… ஞானக்களஞ்சியம் கவி எண் 1743)

புலன் வலையிலிருந்து மீண்டு வருவதைத்தான் ஆங்கில ஆன்மீக நூல்கள் ‘Liberation’ என்கின்ற புனித சொல்லால் அழைக்கின்றன.

எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். “பிரக்ஞானம் பிரம்மம்” என்று “அறிவே தெய்வம்” என்கின்றது வேதம்.

தேர்வில் வரவிருக்கின்ற வினாவை, முன்னரேத் தெரிந்து கொண்ட மாணவன் நிலை !

இது ஒரு புதிய உவமானம்; வேதாத்திரிய இறையியலின் கருத்தியல் பற்றிய சிறப்பைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு. வேதாத்திரிய இறையியலின் அகநோக்குப் பயிற்சியின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?

அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel – meditation-end reault of practical examination) கருத்தியலாகத் தெரிந்து கொண்டதை, அதாவது ‘ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically by himself). தேர்வு எழுத இருக்கும் மாணவருக்கு தேர்வில் என்ன கேட்கப்படும் என முன்னரே, யூகத்தால் தெரிந்து விட்டால் மாணவன் விடைகளை ஐயமின்றி தெரிந்து கொண்டு தேர்வை சிறப்பாக எதிர்கொள்வான்.
அதே போன்று அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே கருத்தியலாக அறிந்திருப்பது பெரும் உதவியாக இருக்கும்.

இறையைக் காண்பித்து விட்டாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

ஆம்!!! காண்பித்துவிட்டார்!!!

1911 ப் பிறகு சாதாரண மனிதனுக்கும், கடவுளைத் தரிசிக்கின்ற பாக்கியம் – அன்றாட வாழ்க்கையில் கடவுளைப் பார்த்துக் கொண்டே இருக்கின்ற பாக்கியத்தை இயற்கை/இறை கருணையோடு அருளிவிட்டது. எனவே அந்த வகையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையை மனிதகுலத்திற்குக் காண்பித்துவிட்டார். இறை அரூபமாக இருக்கும் போது எவ்வாறு மகரிஷி அவர்கள் அரூபமாக உள்ள இறையைக் காண்பிக்க முடிந்தது/முடிகின்றது? பொதுவாக அரூபமாக உள்ளதை காண்பிக்க முடியாதது என்பது உண்மைதான்.

‘இறை இல்லை’ என மறுக்க முடியாது இறைமீது பக்தி கொண்டவர்களால். அதேசமயம் ‘இறை அரூபமாக உள்ளது’ என்று கூறும்போதே அது இருப்பது ஏற்றுக் கொள்ளப்படுவதாகிவிடுகின்றது. எப்படி ஆறாம்அறிவு அரூபமாக இருந்தாலும், ஆறாம்அறிவு ‘தான் இருக்கிறேன்’ என்பதில் உறுதியாக உள்ளதோ, அதுபோல் இறை அரூபமாக இருந்தாலும், அது இருக்கின்றது என்பதும் உறுதி. அரூபமாகிய பேரறிவாகிய இறையேதான் மனித அறிவாக இயங்குகின்றது. எப்படி ஆறாம் அறிவு (மனிதஅறிவு) தன்னுடைய மற்ற உறுப்புகளைக் காட்ட முடிவது போல், தன்னைக் காட்ட முடியாதபோதும், தான் இருப்பதனை உறுதி படுத்துகின்றதோ, அதுபோல் மனிதஅறிவு அரூபமாகிய இறையை புலன்களால் காணமுடியாதபோதும், அது இருப்பதனை உறுதிபடுத்த முடிகின்றது.

இப்போது, அரூபமாகிய இறையைப்பற்றிய சிந்தனை மனித அறிவிற்கு எட்டிவிட்டதால்,

இறை இருப்பதை உறுதிபடுத்துவதும்(Existance Of God),
இறை எவ்வாறு இருக்கின்றது(How God exists?) என்பதும்,
இறை எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றதும்(How God functions?)

என்பது பற்றி அறிவதனை இரண்டு விதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ஒன்று கருத்தியலாக(by theoretically-ie. theoretical understanding)
மற்றொன்று செய்முறையாக (by practical understanding-practically realising)

எனவே வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதுவரை காணமுடியாமல் (புலன்களால்) இருந்துவந்த இறையைக் காண்பித்துவிட்டார். இதுவே theoretical understanding of God. இம்முறையில் முதலில் இறையைப் பற்றிய புரிதலில் முழுமையான வெற்றி பெற்றிடல் வேண்டும்.(pass in theory examination as in an examination system in educational institution). இது முதல் நிலை.
இரண்டாம் நிலை–
பிறகு, கல்வி நிறுவனங்களிலே செய்முறைத் தேர்விலும் மாணவன் தேர்ச்சி பெறுவதைப் போன்று இறை உணர்க் கலையாகிய மனவளக்கலையிலும் செய்முறைத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, அரூபமாகிய இறைவைணக் காண்பது நிறைவேற வேண்டும்(self Realisation). இதுதான் மனவளக்கலையில் முழுமையாகத் தேர்ச்சி அடைவதாகும்.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையை கருத்தாகக் காண்பித்து விட்டார். இறையை செயல் முறையில் காண்பதற்கு பயிற்சிகளையும் தந்துவிட்டார். அவரது பொறுப்பை உணர்ந்து கடமையை நிறைவேற்றிவிட்டார். எனவே இறை உணர் ஆன்மீக சாதகர்கள் கருத்தியலோடு இறையைக் காண்பதோடு நின்று விடாமல் செயல்முறையில் இறையைக் காணவேண்டியது பொறுப்பாகின்றது. வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

எனவே அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது, இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரே கருத்தியலாகத் தெளிவாகி பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலம் வந்துவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்தின் தோற்றமே.

அறிவு, ‘தான் ஆன்மா’ என சரியாக, கருத்தியலாக ஐயமின்றி உறுதிபடுத்திக் கொண்டால், அகநோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது(Enlightenment) எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.
மனிதனின் சரியான அடையாளம் என்பது ‘நான் உடலல்ல, ஆன்மா- I am not the body. I am Aathma’ என்பதே ஆகும். இந்த சரியான அடையாளம்தான்

உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.
போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.

இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று நாற்பது கோடி. இந்த எழுநூற்று நாற்பது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும்

“உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்” ……..  என்கிறார் மகாகவி பாரதியார்.

பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும். மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர். இந்த மெய்விளக்கத்திற்கான(உண்மையான விளக்கம் என்று பொருள் கொண்டாலும் சரி) வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலோடு இன்றைய விருந்தை நிறைவு செய்கிறோம். அதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது“ என்பதாகும்.

மெய்விளக்கம்

நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
  நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
  உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகி்ன்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
  என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்
  வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்

                           ……வேதாத்திரி மகரிஷி அவர்கள்

இப்பாடலுக்கான விளக்கத்தை விரிவாக மற்றொரு விருந்தாக வைத்துக் கொள்வோம்.

தான் என்றும் அழியா த ஆன்மா என தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? சுயமாய் சிந்தித்து பார்க்கலாமே!

எல்லா அருளாளர்களின் துணையுடனும்,
இம்மனிதகுலம் உய்வதற்காக உதித்த விடிவெள்ளியாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின்
அருளாசியுடனும்,
அவர்களின் சூக்கும உடலுடன் இணைந்து,
உலகில் விரைவில் உலக அமைதி பூத்துக் குலுங்க,
உலக அமைதி கன்றுகளை/நாற்றுகளை நட்டு(பயிற்சிகள் செய்தல்),
நீர் உற்றி(சுயமாய்ச் சிந்தித்து), உரம் இட்டு(அருளாளர்களுடன் சத்சங்க இணைப்பு கொண்டு)   வளர்ப்போம்.
பூக்கட்டும் விரைவில் உலகெங்கிலும் நன்னிதி-மணம் வீசும் அமைதிப் பூ பூ பூ!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம். ,

வாழ்க வேதாத்திரியம்.                 வளர்க வேதாத்திரியம். 

 வாழ்க அறிவுச் செல்வம்                                                            வளர்க அறிவுச் செல்வம்.