FFC – 203-இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்! … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

FFC –  203

03-07-2016-ஞாயிறு

NEW-3-FFC-203-SUB TITLE

 

வாழ்க வளமுடன்.

“அன்றாட வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள்” என்று மகரிஷி அவர்கள் அன்புடனும், கருணையுடனும், அக்கறையுடனும் விடுத்திருக்கும் அழைப்பினை அழுத்தமாக நினைவில் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

அறிந்து அனுபவிப்பது . . .?

‘வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள்’ என்பதால் வாழ்க்கையை அறியாமலேயே மனித குலம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. என்று பொருளாகின்றது. அதாவது வாழ்க்கையை அனுபவிப்பதில் இரண்டு உள்ளதாகத் தெரிகின்றது. ஒன்று வாழ்க்கையை அறிந்து அனுபவிப்பது. மற்றொன்று அறியாமல் வாழ்க்கையை அனுபவிப்பது.

இதில் எது சிறந்ததாக இருக்கும்? வாழ்க்கையை அறிந்து அனுபவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். வாழ்கை என்று பொதுவாக ஒட்டுமொத்தமாக சொல்லாமல் ‘அன்றாட வாழ்க்கை’ என்று கூறியுள்ளதனையும் கவனிக்க வேண்டும். எப்போதும், நொடிக்கு நொடி வாழ்க்கையை விழிப்போடு அனுபவிக்க முடியும்/வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கூறுகிறார்.

அறிந்து அனுபவித்தல் என்றால் என்ன? ‘அனுபவித்தல்’ என்று சொல்லாமல், ‘அறிந்து அனுபவித்தல்’ என்கிறார். சிந்திப்போம். விடை பெறுவோம்.

உணவு அருந்துகிறோம். ஆனால் எதற்காக உணவு அருந்துகிறோம் எனத் தெரியாமலா உணவு அருந்தப்படுகின்றது. பசியைத் தீர்ப்பதற்காகவும், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறவும் உணவு அருந்துகிறோம் எனத் தெரிந்துதான் உணவு அருந்தப்படுகின்றது. உடல் ஆரோக்கியம் இருந்தால், மனிதன் விரும்பினாலும் விரம்பாவிட்டாலும் பசி உணர்வு வந்துவிடும். உடனே உணவைத் தேடி அருந்துகிறான். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். உட்கொள்கின்ற உணவின் பெயர் தெரியாமலா உணவை உண்கிறான்.

உண்கின்ற உணவின் பெயர் தெரியாமல் ஒரு நாள் உண்ணலாம்,
ஒரு வாரம் உண்ணலாம்,
ஒரு மாதம் உண்ணலாம்,
ஒரு வருடம் உண்ணலாம்.
ஆயுள் முழுவதுமாகவா உணவின் பெயரைத் தெரியாமலா உண்டுகொண்டிருக்கிறான்?

பசி தீர்வதற்கு உணவின் பெயர் தெரிய வேண்டுமென்பதில்லைதான், என்றிருந்தாலும் உண்ணும் உணவு பசியை மட்டுமே தீர்க்க உதவுவதில்லை. உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்களைப் பெறுவதற்காகவும் பலவகையான உணவு உட்கொள்ளப்படுகின்றது. இருந்தாலும் உயிர் வாழ்வதற்காக உணவு உண்பதால் உண்பதற்காகவே மனிதன் வாழப் பிறக்கவில்லை என்பது மனிதன் அறிந்ததுதானே? உணவு உண்பதற்காக பிறப்பதுதான் வாழ்க்கை எனில் உண்பதற்காக ஒரு பிறவி போதாதா? பல்லாயிரம் பிறவிகள் தேவைப்படுகின்றதா? அப்படியே உணவு உட்கொள்வதற்காக மட்டும்தான் பிறவியின் நோக்கம் எனில் கூடவே மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் துன்பங்களை அல்லவா அனுபவித்து மரணம் சம்பவிக்கும் போது உணவை மறந்து உணவைத்துறந்து, உடலைத் துறந்துவிடுகிறான்.
எத்தனையோ பிறவிகள் பிறப்பது,
உணவு உட்கொள்வது,
இறப்பது – —————– இந்த நிகழ்வுகள் மாத்திரம் தான் நடைபெற்றுக் கொண்டிருப்பதென்பது சரியாக இருக்குமா இயற்கையின்/இறையின் தன்மாற்ற-ஆட்சியில் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டாமா?

எண்ண – ஊடகத்தை பயன்படுத்துவோம்:

பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்று என்று அறிவிற்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதை, அதாவது இயற்கை/இறை ஒரு நோக்கத்தை வைத்துத்தான் மனிதனென்ற தன்மாற்றத்தை நடத்திக் கொண்டது; கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து அறிவு வாழ்க்கையை நடத்த வேண்டாமா?! அவ்வாறு அறிந்து வாழ்க்கையை அனுபவித்தால் இன்பமே மிகும். இந்த உண்மையின் அடிப்படையில்தான் வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க இன்பமே என்பதால் ‘வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க என அழைத்திருக்கிறார் நம்மை எல்லாம்.’ இன்னமும் அழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்.

எனவே அவருடன் இணைந்த நாமெல்லாம், அவர் விடுத்துள்ள  அருள் அழைப்பிற்கு மேலும் மேலும்  வலிமை சேர்க்க நம்முடைய எண்ண ஊடகத்தை புற ஊடகமாகவும், அக ஊடகமாகவும் பயன்படுத்துவோம். இதற்கு பொருட் செலவில்லை. எனவே எல்லோராலும் பொருட் செலவின்றி நம்முடைய அக ஊடகத்தை பயன்படுத்த முடியும் அன்றோ! அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ‘வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்’ என்கின்ற மந்திரம். இந்த மந்திரத்தை தேவைப்படும்போது. மற்றவர்கள் அறிய, புற ஊடகமாகவும் பயன்படுத்தலாம். அநேக நேரங்களில் அக ஊடகமாகவும் (வெளியே தெரியாமலும், மௌனமாகவே இருந்து கொண்டு, நல்லவை ஏற்பட  எண்ண அலைகளைப் பரப்பலாம்) பயன்படுத்தலாம். இதனை யாருமே அறியமுடியாதெனினும் எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பது இயற்கையின்/இறையின் நீதி என்பதால், மௌன ஊடகத்தினால் அனுப்பப்படும் செய்திகள் மக்கள் மனதில் ஊடுருவி உரிய காலத்தில் அதற்கான நல்விளைவை ஏற்படுத்துமன்றோ! ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்கின்ற பரிணாமத்தின் கோட்பாட்டை நினைவில் கொள்வோம்.

அருளாளர்கள் யார்?

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுதான் எல்லா அருளாளர்களின் ஆதங்கங்களும். அருளாளர்கள் யார்? எல்லா மக்களுமே இயற்கையின்/இறையின் அம்சமாக இருந்தாலும், இறை அருளை வேண்டுகிறவர்கள் மட்டுமே,
 பிறவியின் நோக்கத்தை அறிந்து,
 அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில்,
 வாழ்வின் எதார்த்தத்தை அறிந்து இன்ப வாழ்வு வாழ்ந்து,
 வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.

அவர்களின் வெற்றி அனுபவங்கள் வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக இருந்து வருகின்றது. ஆனால் நடைமுறையில் பார்த்தோமேயானால், மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வெகு சிலரே அருளாளா்களின் அறவுரைகளை ஏற்று, முயன்று பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இந்நிலையினை மாற்றுவதற்காக வேதாத்திரியத்தை தோற்றுவித்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறியும்போது ஆறுதலும் நம்பிக்கையும் தருவதால் மனம் பூரிப்படைகின்றது.

வெற்றி வாழ்க்கையில், அருளாளர்கள், தான் அடைந்த இன்பத்தை, தாம் எந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த மனித சமுதாயமும் அனுபவிக்க வேண்டும் என்கின்ற பரந்த ஆதங்கமுடைய எண்ணங்களை எண்ணியவர்கள் அவர்கள்.

அதனால்தான் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று அறிஞர் திருமூலரும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!’ என தாயுமான சுவாமிகளும் விரும்பியுள்ளனர். இந்த அருளாளர்கள் காட்டிய அருள் வழியே சென்று வெற்றி பெற்ற வேதாத்திரி மகரிஷி அவர்களும் ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்கின்ற வாழ்த்து மந்திரத்தையும் அந்த மந்திரத்தின் பயன் விரைவில் ஏற்படுவதற்கு அடிப்படிடையான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மற்றொரு மந்திரத்தையும் வான் காந்தத்தில் பரவவிடச் செய்துள்ளார்

சாட்சாத் குருவே பிரம்மம்:

குரு என்பவர் யார்? யாரால் அறியாமையை நீக்க முடியுமோ அவரே குரு? அறிவை(பேரறிவாகிய இறையை) அறியாத அறிவு, அதாவது தன்னையே அறியாத மனிதஅறிவு அறியாமையில் இருப்பதாகத்தானே பொருள் கொள்ள முடியும். எனவே அறிவை அறிய விளக்கங்களையும், வழிகளையும் கூறுபவரே குருவாக இருக்க முடியும். அதனால்தான் குருவணக்கத்தில் மற்ற எல்லா அருளாளர்களை நினைவு கூறும்போது அவர்களை அறிவில் அறிவாய் நிலைத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்வாம்’ என்கின்ற வரையறையுடன்தான் கூறுகிறார். எனவே பிரம்மம் என்கின்ற அறிவை அறிந்தவரே பிரம்மத்தை உணர்த்த முடியும். அப்படிப்பட்டவரே குரு. எப்போது பிரம்மத்தை அறிய முடியும்? பிரம்மமாகவே ஆனவர்தான் பிரம்மத்தை அறிந்திருக்க முடியும். எனவே குவைப்பற்றி கூறுகின்ற சமஸ்கிருத ஸ்லோகம் சாட்சாத் குருவே பிரம்மம் என்கின்றது.

குரு ஸ்லோகம்

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
குருர் தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

அருளாளர்களின் எண்ணங்கள்(எண்ணியது, எண்ணுவது) மறைந்து விடுவதில்லை:

அருளாளர்கள் பூதவுடலை உதிர்த்த பின்னரும், அவர்களின் ஆதங்க–எண்ணங்கள் எங்கும் மறைந்துவிடுவதில்லை. அவர்கள் பூதஉடலை உதிர்த்த பிறகும் அவை நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்படி? எவ்வாறு? இல்லை என்றால் தொடர்ந்து வாழையடி வாழையாக திருக்கூட்ட மரபினில் அருளாளர்கள்(அவதாரங்கள்) உதிக்கின்றனர் என்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது தொடர் நிகழ்ச்சியல்லாவா? இது முடிவில்லா தெய்வீகத் தொடர் ஓட்டம் – Never ending Divine Relay Race).
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிஞர் திருமூலர் சொன்னதை இன்றும் நாம் மதித்து, ரசித்து நினைவு கூர்கிறோம் என்றால் அது எவ்வாறு சாத்தியமாகின்றது? திருமூலா் மந்திரங்களை பாடல்களாக அருளிச்சென்றார். அதனால் அதனைக் கண்டு இப்போது பயன் பெற முடிகின்றது என்பது மட்டுமில்லை, பல அருளாளர்கள் திருவள்ளுவர், திருமூலர் போன்று எழுதி விட்டுச் செல்லாமல் போனாலும் அவர்களுடைய ஆதங்களும் வான் காந்தத்தில் பதிந்தே உள்ளன என்பதனை நினைவில் கொள்வது வான்காந்த அறிவியல் அறிதலின் பயனாகும். அதனால்தான் மகரிஷி அவர்கள் எட்டு வரிகளைக் கொண்ட குருவணக்கப்பாடலில் முதல் ஆறு வரிகளில், தாயுமாமனவர், திருவள்ளுவர், திருமூலர் மற்றும் இராமலிங்கர் ஆகிய நான்கு அருளாளர்களின் திருநாமத்தைக் நினைவு கூர்ந்து விட்டு கடைசி இரண்டு வரிகளில்

“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்.”

என்று கூறி எல்லா அருளாளர்களையும் நினைந்து வணங்குகிறார். இது வெறும் சம்பிரதாயம் அல்லவே!.

அந்த ஆதங்கள், எண்ண வடிவில் வான் காந்தத்தில் இடம் பெற்று பதிந்து, செயலுக்கு வருவதற்கு தயாராக எப்போதும் காத்துக் கொண்டு, மனிதகுலத்தின் அந்த அந்த காலகட்டத்தின் தன்மாற்ற நிகழ்வின்/பரிணாம வளர்ச்சியின் பரிபக்குவநிலை அதிகரித்து வரும்போது அது அருளாளர்களின் அவதரித்தலை ஏற்படுத்துகின்றது. இது மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘Fraction demands Totality supplies’ என்பதாகும்.

இருபதாம் நூற்றாண்டின்–அருளாளரின் அழைப்பு:

யார் இந்த இருபதாம் நூற்றாண்டின் அருளாளர்? அவர் தான் 1911 இல் அவதரித்த நம்முடைய குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான திருமூலர் உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று விரும்பியுள்ளார். அவ்வாறே திருமூலரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்களும் உலக-நல-அக்கறையாளர்கள்-வரிசையில் இடம் பெற்றிருக்கிறார். எப்படி? உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால், தன்னை உலக நலத்திற்காகத் தொண்டாற்ற அர்பணித்துக் கொண்டார் மகரிஷி அவர்கள். உலக நலத் தொண்டராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் மகரிஷி அவர்கள். இத்தகைய அருளாளார்தான், ‘தான் பெற்ற இன்ப அனுபவத்தை இவ்வுலக மக்களும் அனுபவிக்க வேண்டும்’ என எண்ணி , கவி வடிவில் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்புக் கவி(1970)

அன்பர்களே வாரீர்!
அறிவின் இருப்பிடம்
அறிந்து இன்பமுற,
அன்பர்களே வாரீர்!
இன்ப நிலையதை
அறிந்திடலாம் இன்று.

‘தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?’
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
இன்றேனும், விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்
அன்பர்களே வாரீர்!                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 

மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி:

 

தன்னுடைய அழைப்பில் ‘வாழ்க்கையை அறிந்தனுபவிக்க’ என்கிறார் மகரிஷி அவர்கள். வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வாருங்கள் என்று கூறி அழைக்கும்போதே அவர் அழைப்பில் உறுதியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறு அழைப்பது அவர் அழைப்பிற்கு சிகரத்தை சூட்டுகின்றது. அப்படியானால் ‘அறிந்தனுபவிப்பது’ என்பது என்ன?
யாரும் அவர்களாக விரும்பிப் பிறப்பதில்லை. பிறந்துவிட்டோம். இது இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்று. வாழ்ந்தே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம் வந்துவிட்டது. உலகியல் வாழ்க்கையில் இன்னாதவைகள் இருப்பினும் இனியதையேத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று பழம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில் ஒரு பெரியார் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மைதானே அவர் கூற்று?!

பிறப்பு இயற்கையின் நிகழ்வாக இருந்தாலும், வாழ்வில் இன்பமாக வாழ்வது என்பது வாழப்பிறந்தவரின் உரிமையும், சுதந்திரமும் ஆகும். அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பு. அத்தகைய திறமையையும் வல்லமையையும் உடையது ஆறாம் அறிவு. ‘தன்கையே தனக்குதவி’ என்பதுபோல் ஆறாம் அறிவே அதற்கு உற்ற துணையாகவே இருக்கும். பிறப்பு இயற்கையின் நிகழ்வு என்பதால், அந்த நிகழ்வின் இனிமை கெடாமல் வாழக்கற்றுக் கொண்டு வாழ்ந்தால் இயற்கையும்/இறையும் மனிதன் இன்பமாக வாழ்வதற்கு பெரும் துணையாகவே இருக்கும்.

எதற்காக ஆறாம் அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும்?

உற்ற துணையாக இருக்கும் அந்த ஆறாம் அறிவின் இருப்பிடம் எது என்று அறியவேண்டியக் கடமையும், நிர்பந்தமும் ஒவ்வொரு ஆறாம் அறிவிற்கும் உள்ளது என்பதனை ஆறாம் அறிவு அறிய வேண்டும். அதாவது தன்னைப்பற்றியே தானே அறிந்து கொள்ள வேண்டும் அறிவு.

தான் யார் என அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு
1) எங்கிருந்து புறப்பட்டோம்?
2) எதற்காக இந்த பிறவிப் பயணம்?
3) இதுவரை எத்தனை முறை இப்பிறவிப் பயணத்தை
மேற்கொண்டிருக்கிறோம்?
4) அதற்கான காரணம் என்ன? காரணங்கள் ஒன்றா, பலவா?
5) முடிவாக எங்கு செல்லப் போகிறோம்?
6) முடிவாகச் சென்ற பிறகு நம் நிலை என்ன?
7) இதற்கிடையில் எவ்வாறு துன்பமில்லாமல் வாழ்வது?

போன்ற வினாக்களுக்கான விடைகளை, ‘அந்த அறிஞர் சொன்னார், இந்த அறிஞரும் இதையேச் சொல்கிறார்’ என்று அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதே சமயம், அவ்வறிஞர்களின் கண்டுபிடிப்புகளை மதித்து, ரசித்து, வழிகாட்டியாகக் கொண்டு, சுயமாக அறிவுப்பூர்வமாக சிந்தித்து, அக்கண்டுபிடிப்புகளை நமதாக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கையை ‘அறிந்து அனுபவிப்பது’ என்பது. மகரிஷி அவர்கள் இறை வணக்கம் பாடலில்

இறைவணக்கம்

 எல்லாம் வல்ல தெய்வமது;
எங்கும் உள்ளது நீக்கமற;
சொல்லால் மட்டும் நம்பாதே;
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!

என்று அருளி, ஆச்சரியக் குறியுடன் அந்த வரியை நிறைவு செய்திருக்கிறார் மகரிஷி அவர்கள். சிறுவர்களிடம், பெற்றோரும் சரி ஆசிரியப் பெருமக்களும் சரி ‘நன்றாகப் புரிந்து கொண்டு படி’ என்றுதானே அறிவுரை . வழங்குகின்றனர். ஏன்? ஒன்றை ஐயமின்றி விளங்கிக் கொண்டால் அது மறக்கவே மறக்காது. குறிப்பாக ஆன்மீக உண்மைகள்/கண்டுபிடிப்புகள்(தத்துவங்கள் என்பது சொல் வழக்கில் இருந்து மறைந்துவிடவேண்டும்) முன்னதாக கூறியவர் கருத்தை(இதுவரை) அப்படியே சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் அக்கருத்து கேட்டவரிடம் நிலைக்காமல் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் கேட்ட ஆன்மீக உண்மைகளை தகவல்களாக ஏற்றுக் கொண்டு. அதனை உறுதிபடுத்திக் கொண்டே பின்பற்றி வரவேண்டும். அப்போதுதான் அந்த உண்மை நம்முடைய கண்டுபிடிப்பாகி ஆன்மீகச் சாதகரின் தரத்தை(transformation) உயர்த்தும். எனவேதான் மகரிஷி அவர்கள் ‘Information. Confirmation, Transformation’ என்கின்ற அன்பு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

அறிவு தன்னை தவறாக அடையாளம் காண்கின்றது:

ஆறாம் அறிவு தன்னை யார் என அறியாத நிலையில் மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். செயலில் தவறு ஒன்று நேர்ந்தால் அப்போது அதன் விளைவு துன்பமாகத்தானே இருக்கும் என்பது ஆறாம் அறிவிற்குத் தெரியாதா என்ன?! இக்கேள்விகளையெல்லாம் எழுப்புவது அறிவு அல்லது எழுந்தது அறிவினிடத்தில். எனவே இந்த ‘அறிவு யார்’, அதன் இருப்பிடம் என்ன என்று அறியவேண்டும். எனவே அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்பமுறலாம் என்பதனைக் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள் மனிதகுலத்திற்கு 1970 ஆம் ஆண்டில் ‘இன்றேனும், விரைந்து எழுச்சிபெற்று உய்வீர்’ என அழைப்பு விடுத்துள்ளார். கிட்டத்தட்ட நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

அறிவு தான் யார் என்று அறியாதபோது அது தவறான அடையாளமாகத்தானே இருக்கும். தவறான அடையாளத்திற்கான ஏற்ற நினைப்பையும், செயல்கைளையும் கொண்ட வாழ்க்கையில் துன்பம் தானே எஞ்சி நிற்கும்? எனவே வரும் அறிவிற்கு விருந்தில் (06-07-2016-புதன்) தவறான அடையாளத்தால் வரும் துன்பங்களைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்