இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

FFC – 73

 

12-04-2015—ஞாயிறு

சென்ற அறிவிற்கு விருந்துகளில் (FFC 69-72)
ஏகாந்தம் இனிது,
ஆதியைத் தொழுதல்,
அறிவினரைச் சேர்தல் இனிது ஆகியவைகளை ஆராய்ந்து வருகிறோம்.

அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது எவ்வாறு இனிதாக இருக்க முடியும் என்றும், அந்த வரிசையில் அவ்வையார் பாடலான ‘அரிது எது?’ என்கின்ற பாடல் வழியாக அவ்வையாரின் ‘இனியது எது’ என்பதனை உறுதி படுத்தினோம்.

அடுத்ததாக திருமூலரின் ‘குரு அருளே திருவருள்’ என்கின்ற பாடலின் வாயிலாகவும் அவ்வையாரின் ‘அறிவினரைச் சேர்தல் இனிது’ என்கின்ற கூற்று எவ்வாறு சரி எனப்பார்த்தோம்.

இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அறிய இருக்கிறோம். பிறவிப்பயனை எய்துவது இனிதினினும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15அவ்வையார், திருமூலர், நம் குருதேவர் ஆகிய மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத ஜீவநதிகளான கவிகளை அருளியதால்தான் இன்று நம்முடைய அறிவும், இனிவரும் சமுதாயத்தின் அறிவும் அந்நதியில் குளித்து மனத்தூய்மைப் பெற்று புத்துணர்வு பெற முடிகின்றது.

முதலில் இயல்பூக்கம் என்கின்ற வார்த்தைக்கு பொதுவான விளக்கம் காண்போம். ‘இயல்பு’, ‘ஊக்கம்’ ஆகிய இரு சொற்கள் சேர்ந்ததுதான் ‘இயல்பூக்கம்’ என்கின்ற சொல். இயல்பு என்றால் என்ன? இயல்பு என்றால் பண்பு, தன்மை என்று பொருள். ஊக்கம் என்றால் என்ன? ஊக்கம் என்றால் உற்சாகமான தூண்டுதல், ஆதரவு, inducement, தன்முயற்சி, motivation என்று பொருள். இயல்பு, ஊக்கம் ஆகிய இரண்டு சொற்களும் சேரும்போது இயல்பூக்கம் என்பது ஏற்கனவே உள்ள பண்பு தூண்டப்பெற்று மாறுதல் அடைவது என்று பொருள்.

இறைநிலையின் திறங்களில் இயல்பூக்கம் என்பது இரண்டாவதாக உள்ளதால், அக்கோணத்தில் இயல்பூக்கத்திற்கு விளக்கம் காண்போம். ‘தன்மாற்றம்’ என்கின்ற இறைநிலையின் முதல் திறனால், இறைநிலையே வெவ்வெறு தோற்றங்களாக மாற்றங்கள் அடைந்தாலும், அவை உருமாற்றமடைந்து வெவ்வேறாக இருப்பதற்கு காரணம் அவற்றின் குணங்களே. ஒவ்வொன்றும் பெறும் குணங்களுக்கேற்ப இயக்கச் சிறப்பு அமைகின்றது. இதுவே இயல்பூக்கமாகும்.

இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பிலும், குணநலங்களில் மாற்றங்கள் ஏற்படும். காந்த ஆற்றல் இடத்திற்கேற்ப எழுச்சி பெற்று இயக்கங்களாகவும், விளைவுகளாகவும் வருவதுதான் இயல்பூக்கமாகும்.
இறைவெளியின் இயல்பூக்கமேதான், உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை உருவாவதற்கு காரணமாக உள்ளது. முதலில் தோன்றிய தாவர உயிரினம் தன்னுடைய இயல்பூக்கத்தால், பல தாவரப் பிறவிகளை மலரச் செய்தது. இதனால் வித்துக்களை தாவர இனம் பெருக்கிக் கொண்டது. வித்துக்களில் இருந்த இயல்பூக்கம்தான் இரண்டாவது அறிவுடைய சீவனான புழுக்களாக மாறியது.

புழுவிலிருந்து மேலும் இயல்பூக்கத்தைக் கொண்டு தனது சிறப்பால் வண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன என எண்ணிலடங்காப் பிறவிகளை ஏற்படுத்திக் கொண்டது இறைநிலை/இயற்கை. இந்தப் பிரபஞ்சத்தில் ஐந்தறிவிற்குப் பிறகு, இறுதியாக வந்த உயிரினம் தான் மனிதன்.

இப்போது இக்கவியை ஒட்டி ‘இயல்பூக்கம்’ என்பதற்குப் பொருள் காண்போம்.

“அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும் – இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்”
அறிவினிலும், உடலினிலும் ஏற்படும் மாற்றங்கள் எதனால் நடக்கின்றன?

எந்த ஒரு பொருளையோ, எச்செயலையோ, எக்குணத்தையோ, எவ்வுயிரையோ ஒருவர் அடிக்கடி நினைந்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் உடலினிலும், அறிவினிலும் மாற்றமடையும் என்கிறார். மேலும் இதனை ஒரு பெருமை என்றுக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இது இறைநிலையின் இயல்பூக்க நியதியாகவும் கூறுகிறார். உண்மைதானே! இயல்பூக்க நியதியால்தான் ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினத் தன்மாற்றம் நடைபெற்றது. ஓரறிவிலிருந்து ஐந்தறிவு தன்மாற்றத்தில் மனிதனுக்குப் பங்கு இல்லை. ஏனெனில் – ஆறாம் அறிவு (மனிதன்) அப்போது தோன்றவில்லை. ஆனால் இறைநிலையின் ஆறாம் அறிவு, மனித உருவினிலே தன்மாற்றம் அடைந்ததே தவிர அவனது குணநலன்களில் முழுவதுமாக மாற்றம் அடையவில்லை. தன்னிலை உணர்ந்தவர்களைத் தவிர, இன்னமும் முந்தைய இனமான விலங்கினப் பண்பு, மனிதனிடம் அவ்வப்போது சூழ்நிலை காரணமாக வெளிப்படுகின்றது. இதனை ஓர் அறிஞர்,

“பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார்.

ஆகவே மனிதன் பண்பேற்றம் பெறுவதற்கு அவன் தான் செயல்புரிய வேண்டும். அந்த செயலினால் வருகின்ற விளைவு இயல்பூக்க நியதிப்படி நடக்கின்றது.

இறைவெளியின் இயல்பு, ஊக்கம் பெறுவது இயல்பூக்கம். விலங்கினம், அதற்கடுத்து தற்போதுள்ள நிலை வரை வந்துள்ள மனித இனப்பண்போடு இயல்பூக்க நியதியின் பணி முடிந்துவிட்டதாக ஆகிவிடுமா? இயல்பூக்க நியதி என்ன செய்து கொண்டிருக்கின்றது? அது ஓய்வு எடுத்துக் கொண்டதா? இறைவெளிக்கு ஏது ஓய்வு? அப்படியிருக்கும்போது இறைவெளியின் தன்மையைான இயல்பூக்கத்திற்கும் ஓய்வு இருக்க முடியாது.

மனிதகுலம் தற்போதுள்ள வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை என்பது பெரும்பாலும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருத்தலாகும். அந்நிலை மாறுவதற்கு மனிதப்பண்பு ஏற்றம் (பண்பேற்றம்) பெற வேண்டும். அந்த பண்பேற்றம் பரிணாமத்தின்/தன்மாற்றத்தின் இறுதி கட்டம் தானே. இறுதி கட்டம் முடியாத வரை பரிணாமம் எவ்வாறு பூர்த்தியானதாகிவிடும்? உயரினப் பரிணாமத்தில் ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை பரிணாமம் பூா்த்தியாகிவிட்டது என்பது போல் ஆறாம் அறிவின் உயிரினப் பரிணாமம் பூர்த்தியாகிவிட்டது எனச் சொல்ல முடியுமா? ஐயறிவு உயிரினத்திற்கு வேண்டிய, ஐந்து வகை உணா்வுகளை உணா்வதற்கான ஐந்து புலன்கள் உருவாகிவிட்டன. இதற்கு மேல் ஐயறிவு சீவன்கள் அடைய வேண்டிய பரிணாம பூர்த்தி ஏதுமில்லை. ஆனால் மனித குலம் மனிதனுக்கான பண்பில் ஏற்றம் பெற வேண்டுமல்லவா? இதனைக் கருத்தில் கொண்டு தான்

“பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார் அந்த அறிஞர்.

இதுவரை இறை வெளியின் இயல்பூக்கம் பற்றி ஆராய்ந்தோம். பரிணாமம் ஏன் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்று அறிஞா் சொல்வது, எவ்வாறு சரி ஆராய்ந்து ஒப்புக் கொண்டோம். மனித குணநலங்களில் ஏற்றம் ஏற்படும் வரை, ஆறாம் அறிவு உயிரினப் பரிணாமத்தில் பூர்த்தியாகவில்லை என்பதால், இயல்பூக்கத்தின் பணி தொடர வேண்டும். ஆகவே மனிதகுலம் பண்பேற்றம் பெற்று வாழ்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழி என்ன என்பதனை அடுத்த விருந்தில் அறிவோம். தொடரும் 15-04-2015