ஆன்ம அலங்காரம்1/3

                                                                            ஆன்ம அலங்காரம்1/3  -08-11-2014                               

 

                                                                                                                                     நாள் – 08-11-2014

             இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள் ஆன்ம ‘அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகா் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள்.  அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?

     அலங்கரி என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகிற்கு,

 ü  பொருத்தமான குணம்,

ü  தகுதியான தன்மை.

ü  ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

      அலங்காரத்தில் முடி அலங்காரம் ஆடை அலங்காரம், நகை அலங்கராம் இவ்வாறாக பல்வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.

  • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால். மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
  • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
  • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,,
  • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
  • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும்,. தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,.

 அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

      அசலில் அழகில்லை(originally) என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

 சுருங்கச் சொல்வதென்றால்,

  • மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
  • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
  • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது,
  • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
  • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
  • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது அறியாமைதானே!

                   இதற்கெல்லாம் காரணம்

  • ஆன்மா கண்களுக்குத் தெரியாதது.
  • அல்லது ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.

      ஆன்மா(கருமையம்) தெய்வீக நீதி மன்றம் என்கின்ற விஞ்ஞானத்தை மறந்து அறியாமையில் இருக்கின்றான் மனிதன். ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) அலங்காரம் செய்து கொள்ளவதில்லை.

   அப்படியே ஆன்மாதான் தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாததும் காரணம்.

    அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடைகிறான் மனிதன். ஆனால் அதே தெய்வம், தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்தில் நீதி மன்றமாக இருக்கும் ஆன்மாவைச் சுத்தமாகவும் நீதி வழுவா நிலையில் வைத்திருக்க அலங்காரம் செய்து பார்த்து பேரின்பமடைய அவனுக்குத் தெரியவில்லை.

     கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது?  மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. மனம் அரூபா–ரூபம். உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக்குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக்குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

அதனால்தான் திருவள்ளுவர்

                                     ” ஐயப் படா அது அகத்து உணர்வானைத்

                                    தெய்வத்தோடு ஒப்பக்கொளல்”           . . . . .என்கிறார்

     பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும்.   இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற் சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

    ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அதனை அரூபம் என்று சொல்ல முடியாது. ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அது இருக்கின்றது. ஆகவே ஆன்மாவை அரூபா—ரூபம் எனக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு காற்று கண்களுக்குத் தெரியவில்லை.   காற்று கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் காற்றை இல்லை எனக் கூறமுடியாது. காற்று அரூபா-ரூப நிலையில் உள்ளது காற்று இருக்கின்றது என்பதனை தோலின் மூலம் உணரமுடிகின்றது.

      அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் (registered cases) அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

 

சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .