அறிவுத் திருக்கோயில்(நேற்றையத் தொடர்ச்சி)

29-10-2014

(Temple of Consciousness)

ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று காலை விருந்தில் பார்த்தோம். அப்டியானால் ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.. அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிதல் அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களுக்கு. அப்போதுதான் இன்றையச் சிந்தனையான அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும். உயிர் என்பது ஆற்றல். எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர். உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.

அதனை ஆன்மா என்றும் சொல்வதும் உண்டு. உயிரினம் என்பதற்கு சாட்சி உணர்வு. உணர்வதற்கு வேண்டியது அறிவு. அறிவு இல்லாமல் உணரமுடியாது. ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது. அறிவு எங்கிருக்கின்றது? உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு. உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்;டால் உணர்வு இல்லை. ஆகவே உயிர் வெளியேறும்;;;;;;;போது அறிவும் வெளியேறிவிடுகின்றது. இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.

அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை. இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற self made mechanism – ஐ ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக அறிவு உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை புலன்கள் வழியாக வெளியே புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity) உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது. அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.

 உயிர் இயக்கமில்லாது உயிராகவும் இருக்க முடியும். அல்லது உயிர் படர்க்கை எய்தி மனமாகவும் இயங்கலாம். அப்போதுதான் எண்ணங்கள் வருகின்றன மனதிற்கு. மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்கது வரும் போது மனம் அலைகின்றது என்று பொருள். ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம் அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.
ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால் என்றால் வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பி செலுத்துதல் வேண்டும். அதற்குத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி மனதை உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமான கொண்டுள்ளனர். சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்பொழுது உள்ளன.

ஆலயத்தில் சிலைவணக்கம் செய்தாலும் அவர்களும் அறிவைத்தான் வணங்குகின்றனர். இதனைக் கூறும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியைினை உற்று நோக்குவோம்.

கருத்தும் கடவுளும்(16.12.1953)
கடவுனை வணங்கும் போது,
கருத்தினை உற்றுப்பார் நீ.
கடவுளாய்க் கருத்து நிற்கும்
காட்சியைக் காண்பாய் ஆங்கே! ….. வேதாத்திரி மகரிஷி.

சிலை வடிவத்தில் கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கின்றார் மகரிஷி அவர்கள். சிலையைக் கண்கள் பார்க்கும் போது அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார். யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவே தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள்.அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார், ”ஒன்றே குலம். ஒருவனே தெய்வம்“ என்கின்ற திருமூலர் வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.

சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது. அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் சமுதாயத்தில்.

அதற்கு

1) பிறர்க்கு துன்பம் இழைக்காதிருத்தல்,
2) துன்பத்திலிருந்து நலம் பெற முடிந்த வரை உதவி செய்தல் ஆகிய இரண்டு ஒழுக்க நெறிகள் அவசியம்.

இந்த இரண்டு நெறிகளும் வளரவும், நிலைக்கவும் ஒவ்வொருவரின் முயற்சியாக இருக்க வேண்டும்.

 

************