அறிவிற்கு விருந்து

வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

lotus

அ.வி.260

22-10-2017-ஞாயிறு

அறிவிற்கு விருந்து1/2

குறள் 491-421

அறிவுடைமை:

இன்று அறிவுடைமை(அறிவு+உடைமை, உடமை=செல்வம்) பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கிப் பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால் அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகக் கருதி, அறிவை அறிவுச் செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.

அறிவைப்பற்றிக் கூற வேண்டியதை எல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.

அறிவுடையார் எல்லாம் உடையவர்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”

வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார். வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார். அறிவு வளமில்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.

அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

ஒரு “மனிதனை எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன? முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வ வளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று, பிறகு துன்பமிலா இன்பவாழ்வு வாழ்பவரை, எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை, எல்லாம் உடையவர் என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?

FFC-260-22-10-17-அறிவிற்கு-வி-பாரதியார்-பாடல்

பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான்

அறவழியில் செல்வம் ஈட்ட முடியும்,

துன்பமிலா இன்ப வாழ்வு வாழ முடியும்,

பெரு வாழ்வு வாழமுடியும்.

பாரதியார் கூறும் நல்லறிவு வேண்டும்:

இயற்கைக்கு வேறு வழியில்லை:

இயற்கைக்கு/இறைக்கு நேரிடையாகவே மனிதனாக தன்மாற்றம் அடைய வேறு வழியில்லை. காரணம் ‘தன் தன்மாற்ற நிகழ்வுகளான’ அழுத்தும், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உணர்ந்த பிறகுதான் அவற்றிற்கு காரணமான மூலம் எது, அவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்ற தான் யார் என அறிய வேண்டியிருப்பதால் ஓரறிவு சீவ இனத்திலிருந்து ஐந்தறிவு சீவஇனங்களாக தன்மாற்றம் அடைந்து பிறகு மனிதனாக(ஆதி) தன்மாற்றம் அடைந்துள்ளது. வேறு வழியில்லாமல் பேரறிவு, விலங்கினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்து கடைசியாகத்தான், மனித இனமாக வந்ததால், அறிவுடன் சேர்ந்து விட்ட விலங்கினப் பண்பான பரிணாமக் கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings) நீக்கினால்தான் திருவள்ளுவர் கூறும் அறிவிற்கான வரையறையை(definition of consciousness) தனிமனித அறிவு எய்த முடியும்.

மனிதனும் ஆனந்தமய கோசமும்:

விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்று மனிதன் ஐந்து கோசங்களில் ஆனந்தமய கோசத்தை அனுபவிப்பது. விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை; அவசியமும் இல்லை. ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டிற்கு மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதிமுக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும். விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வரமுடியும்.

ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும் நாய்? உருட்டிக் கொண்டே இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன. கோசம் என்றால் ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.

அறிவு சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்:

ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனாப் பள்ளியில் (School of Thought) சேர்ந்து பண்பேற்றக் கல்வி படிக்க வேண்டும். அப்படியென்று ஒரு தனி பள்ளி உள்ளதா? உள்ளது. அதுதான் அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதும் தான் அந்த சிந்தனாப் பள்ளி.

மேலும் அறிவினருடன் சேர்ந்து இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின், திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் இறுதியுமான இரண்டையும் பெற்றால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள்.

அறிவிற்கு பசி வேண்டும்:

இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும், அறிவும் வளரனும் — திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும் ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்குச் மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம் எல்லோரும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்தி அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.

அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்த வித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.

ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சமே இராது. அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம். அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும். அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்?

அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

1) அறிவு எதனை அறிவதற்காக இந்தப் பிறவி எடுத்ததோ அதுபற்றிய உண்மை விளக்கங்கள்,
2) தன்னுடைய பூா்வீகம் பற்றிய உண்மைகள்,
3) வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தம் புரிதல்,
4) துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகள்,
5) அதற்கு மேலும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்தல்
6) பேரின்பத்தில் திளைத்தல்,
7) சமுதாய அக்கறை ஏற்படுதல்,
8) சலிப்பில்லா பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்,
9) சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது
போன்ற அறிபூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

அவ்வையார் கூறும் அந்த அறிவினர் யார்? அடுத்த அறிவிற்கு விருந்து நிகிழ்வில்(25-10-2017–புதன்) அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.