215-அருளாளர்கள் உலகம் 8/9

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

அருளாளர்கள் உலகம் 8/9

அறிவிற்கு விருந்து—215

10.08.2016—புதன்

Swamiji

‘Entelechy’ என்பதற்கு அகராதியில் உள்ள பொருள் என்ன?

புலனறிவிற்கு ஒன்றுமில்லாததுபோல் கருதப்படுகின்ற வெளி இன்று நாம் காணும் பிரபஞ்சம் மற்றும் மனிதன் மட்டும் எல்லா உயிரினங்களுமாகவும் ஆகி ஆட்சியின்றி ஆளுமை புரிவது எவ்வாறு வெளிக்கு சாத்தியமாகியது என்பது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கலாம். உண்மை நிகழ்ச்சி ஒன்று ஆறாம் அறிவிற்கு புரிகின்ற வரை ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆரம்ப காலத்தில் இருக்கும் கடைசி வரை அந்த ஆச்சரியமும் பிரமிப்பும் தொடராது. அப்படி தொடர்ந்தால் அறிவு புரிந்து கொண்டிருக்கின்ற நிலையிலேதான் இருக்கின்றது என்று பொருள். புரிந்துவிட்டதாகாது. ஐயமின்றி புரிந்த கொள்ளவில்லை என்பது பொருள். அதற்கு என்ன செய்ய வேண்டும் இப்போது? தெளிந்த புரிதலை, மகரிஷி அவர்களின் வாயிலாக நமக்கு ஏற்படுத்துவதற்காகத்தான் இயற்கை/இறை ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளதனை மகரிஷி அவர்களுக்கு தெரிவித்துள்ளது.

Entelechy’ என்கின்ற வார்த்தையின் பொருளை English – Tamil அகராதியில் இருந்து அறிவோம். ‘Entelechy’ என்பதற்கு
பொருளின் நிறைநிலை என்றும்
பொருண்மை என்றும் பொருள் கூறப்படுகின்றது.

பொருண்மை என்றால் பொருளின் உண்மையான நிலை என்றும் பொருளின் தன்மை என்றும் பொருள். ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பொருளின் நிறைநிலை’ என்கின்ற பொருள் இருப்பது, இறைவெளியின் தன்மையினைப் பற்றிக்கூறுவதற்கு பொருத்தமானதுதானே!

இப்போது ‘Entelechy’ என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள் காண்போம்:
‘Entelechy’= 1) Realisation
2) the becoming or being actual of what was potential
3) developed perfection
4) what gives perfection

‘Entelechy’ என்கின்ற வார்த்தையின் பொருளை வைத்துக் கொண்டு வெளியைப் பற்றி சிந்தித்து ஒரிரு வார்த்தைகளை வெளிக் கொணர்வோம். பொருள் தெரியாத மற்ற ஆங்கில வார்த்தைகளுக்கு அகராதியில் பொருள் தேடுவது போன்று அல்ல ‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடுவது. ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆன்மீகத்தோடு தொடர்புடைய வார்த்தையாக உள்ளது. இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் இவ்வார்த்தையை பயன்படுத்த முடியாதது போன்று உள்ளது.

வெளியில் என்ன இருப்பாக இருந்ததோ/இருக்கின்றதோ அதுதான் வந்துள்ளது/வருகின்றது.

வெளியின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும் முன்னேற்றமடைந்த முழுமை காணப்படுகின்றது.
முழுமையைக் கொடுக்கக் கூடிய தன்மை/ஆற்றல் வெளியில் இருக்கின்றது.

மேலும் ‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கான பொருளை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இறைவெளி எவ்வாறு ஐந்து பௌதீகப் பொருட்களாகவும், மற்றும் ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிரினமாகவும் வந்துள்ள தன்மாற்றச் சரித்திரத்தை ஒவ்வொரு நிலையாக ஐயமின்றி விளங்கிக் கொள்ள முடியும். முடிவில் ஆரம்பத்தில் இறைவெளியின் தன்மாற்ற சரித்திரத்தில் அறியும்போது இருந்த பிரமிப்பும் நீங்கும். பின்னர் இயற்கை/இறை எதற்காக உயிரினப்பரிணாமத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு வரும்போது மகரிஷி அவர்கள் ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது பற்றி தெரிவிக்க வைத்தது?

‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் குருபூர்ணிமா தினத்திலிருந்து(19-07-2016) ஏழு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். பண்பேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே இறை-உணர்-ஆன்மீகம் அமைந்துள்ளதால், பண்பேற்றம் பெறுவது என்பது இயல்பூக்கத்தினால் சாத்தியம் என்று அறிந்து கொண்டோம்.
இயக்கமாக வருகின்றபோது, இறைவெளியின்
‘தன்மாற்றத்தில் ஏற்படும் உருவமாற்றத்திற்குரிய குணச்சிறப்பினை சேர்க்கும் இரண்டாவது திறனான இயல்பூக்கம்’ என்பது
ஆதிமனிதன் தோன்றுவதற்கு முன்னர் இறைவெளியில் இயல்பாகவே இருந்த ஊக்கம்(வெளியிலிருந்து வராது) ஒவ்வொரு தன்மாற்றத்திலும் செயல்பட்டு வந்தது.
ஆனால் மனிதனாக தன்மாற்றம் பெற்று மனிதகுலம் வளர்ச்சி பெற்று வருகின்றநிலையில், குறிப்பாக தற்போதுள்ள சூழலில், பண்பேற்றம் பெற (இந்த) ஊக்கத்தை அக்கறையோடு மனிதன் எடுத்துக் கொள்ள, இறை அதற்கான விளைவைக் கொடுக்கத் தயாராக உள்ளது என்பதனை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும்.

அருளாளர்களின் அறிவாற்றலுடன் இணைந்திருத்தல் அவசியம்:

பண்பேற்றம் பெற அவ்வைத்தாய் கூறுவதுபோல் அருளாளர்களோடு(நல்லார்) இணைந்திருத்தல் அவசியமாகின்றது. அவ்வைத்தாய் தனது மூதூரையில் கூறுவதனை நினைவு கூர்வோம்.

moodhurai-ovvaiyar

பாடலின் பொருளை இன்று அறிவதுபோல் அன்று, இளமையில் அறிந்திருக்கமாட்டோம்:

மூதுரை என்கின்ற தலைப்பில் அவ்வைத்தாய் அருளியுள்ளதைக் கவனிப்போம். மூதுரை என்று ஏன் தலைப்பைக் கொடுத்துள்ளாள் அவ்வைத்தாய்? மூதுரை என்பது உயர்வழக்குச் சொல். காலம் காலமாக வழங்கி வருவதும். எடுத்துக்காட்டாக கூறப்படுகின்ற பெரியோர்கள் வாக்கு என்று பொருள். இப்பாடலை பள்ளியில் படித்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த வயதில் அறிகின்ற அளவிற்கு இப்பாடல் கூறும் பொருளை அறிந்திருக்கமாட்டோம் அன்று. அதற்கு சிறுவயதினைக் காரணம் கூறஇயலாது. ஆனால் இப்போது இந்த வயதில் அறிவதை அன்றே ஒழுக்கவியல் பாடமாக அறிந்திருக்க வேண்டும். என்றோ பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட நிலையில், இன்று இப்பாடல் தெரிவிக்கும் பொருளின் மகத்துவத்தை அறிய வேண்டிய அவசியம் வந்துள்ளது. பண்பேற்றத்தின் அவசியத்தை என்றோ அவ்வைத்தாய் கூறியும் சமுதாயம் அதனை செயல்படுத்தவில்லை. இப்போது இயற்கையின் இறையின் மனிதஇன தன்மாற்றத்தில் பண்பேற்றப் படலம் வேதாத்திரியத்தின் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து மகிழவேண்டும்.

திருவாழ்க்கை அமைய:

பொதுவாக நன்று என்பது நன்மையை அளிப்பது. ‘நன்று’ என பாடலில் நான்கு முறை கூறப்பட்டிருக்கின்றது. அந்த நன்று என்பது மனிதனுக்கு என்ன நன்மையை அளிக்கவிருக்கின்றன? முதலில் நான்கு வகையில் தீயதை தடுக்கின்றன என அவ்வைத்தாய் கூறுகின்றாள். அது என்ன என்று அறிவோம்.

மூதுரை

“தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே – தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீதே.”

. . . அவ்வையார்.

தீயவரை திருவற்றவர் எனக் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். திரு என்றால் மேன்மைக்கான சிறப்பு என்று பொருள். ஆகவே மனிதவாழ்க்கை திருவாழ்வாக அமைய திருவுடைய நல்லோர்களின் இணைப்பு மிக மிக அவசியமாகின்றது.

நல்லோர் இணைப்பு வேறு என்ன நன்மைகளைத் தரும்?

‘நல்லோருடன் இணைப்பு பெறுவது தீயவைகளை தடுக்கின்றது என்பது பொதுவான நன்மையாக இருந்தாலும், இதற்கு மேலாக குறிப்பாக வேறு என்ன நன்மைகளைத் தரும் நல்லோருடன் இணங்கி இருப்பது’ என்கின்ற மனிதனின் வினாவிற்கு பதிலளிக்கிறார் அவ்வைத்தாய். தீயவை நீங்கிவிட்டாலோ அல்லது தீயவை நெருங்கவிடாமல் விழிப்புணர்வுடன் இருந்தாலோ விளைவாக வருவது இனிதாகத்தானே இருக்க வேண்டும். துன்பம் நீங்கினால் இன்பம் தானே! இனிது என்பது அறிவினரோடு சேர்ந்திருத்தலும், அவர்களை கனவிலும் நனவிலும் காண்பதுதான் என்கிறார் அவ்வையார்.

அவ்வை கூறும் அந்த அறிவினர் யார்?

இங்கே அவ்வை கூறும் அந்த அறிவினர் யாராக இருக்க முடியும்? அறிவின் இருப்பிடம் அறிந்து இன்புற்று இருப்பவர்கள்தான் அறிவை அறிந்த அந்த அறிவினர். அவர்களே அருளாளர்களாவார்கள். யார் அருளாளர்? அருளாளர் என்பவர் அருளைப் பெற்று, அருளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்கின்றனர் ஆன்றோர்கள். எனவே அருளாளர்களைத் துணைகொள்ளாமல், திருவருள் பெறுவது எளிதல்ல. உதாரணமாக வெளியே(Eternal Space) தெய்வம் என்றும் அறிவே தெய்வம் என்றும் துணிந்துரைக்கிறார் மகரிஷி அவர்கள். இதனை தகவலாக(information) ஏற்றுக் கொண்டு சுயமாக சிந்தித்து உறுதிப்படுத்துகிறோம். இதற்கு முன்னர் ‘நாம் வணங்கும் தெய்வம் ஏன் புலன்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது? தெய்வம் எவ்வாறு இருக்கின்றது? ‘எது தெய்வம்?’ ‘யார் தெய்வம்?’ என்கின்ற வினாக்கள் நம்மிடம் எழவில்லையே! அருளாளர் அவ்வையார் அன்று கூறிய அறிவினரைச் சேர்தல் இனியதாகவும்,  அவரைக் கனவிலும், நனவிலும் காண்பது அதனைவிட இனிதாகவும் இருக்கும் என்பது இப்போது இருபதாம் நூற்றாண்டிலிருந்து மனவளக்கலைஞர்களிடம் நடந்து வருகின்றதல்லவா? காரணம் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் அவரது மாணவர்களுக்கும் இடையே ஆறாம் அறிவின் மேம்பாடு சம்பந்தமான பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதே ஆகும்.

எண்ணெய், திரி இருந்தும் விளக்கு எரியாமல் இருந்ததே!

எண்ணெய் மற்றும் திரி இருந்தால் மட்டுமே விளக்கு எரியாது. விளக்கு எரிவதற்கு தீ வெண்டும். அந்த தீ எங்கிருந்து வரவேண்டும்? அருளாளர்-குருவிடமிருந்துதான் வரவேண்டும். மகரிஷி அவர்களின் தரிசனம் கிடைத்த பிறகுதானே எரியாமல் இருந்த நமது சிந்தனை விளக்கு ஏற்றப்பட்டு. அது சுடர்விட்டு எரிய. அவர் கூறியுள்ள இயற்கையியல்/இறையியல் நமக்கு துணை செய்ய ஆரம்பித்துள்ளது. பல வினாக்கள் எழுந்து, விடைகளும் தெரிவிக்கப்பட்டு தெளிவாகி வருகின்றது. இதற்கு முன்னர் இந்த சிந்தனை விளக்கு நம்மிடையே எரியாமல்தானே இருந்து வந்துள்ளது. இதனைத்தான் ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்கின்ற ஆன்றோரின் அனுபவமொழி தெரிவிக்கின்றது.

மகரிஷி அவர்களின் மூன்று தாரக மந்திரங்கள்:

சுத்த அத்வைத உண்மையின்படி அருளாளர்கள் என்பவர்கள் திருவள்ளுவர் கூறுவதுபோன்று தெய்வநிலையை ஐயமற உணர்ந்து தெய்வத்திற்கு சமமாக வணங்கப்படுபவர்கள். எனவே தெய்வம் அரூப நிலையில் தான் நேரிடையாக அறிவுறுத்த வேண்டியதை, அருளாளர்கள்-குருமார்கள் வழியாக கூறுவதைவிட வேறு எந்த வழியில் கூறமுடியும்? அருளாளர்களாக இருந்தாலும், குருமார்களாக இருந்தாலும் அவர்கள் கூறுவது அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி உறுதிபடுத்திய பிறகு, அவ்வாறே நடந்து மாற்றம் பெறலாமே! அந்த மாற்றம் தான் நிலைத்திருக்குமன்றோ! இல்லை எனில் சிந்திக்காமல் சொல்வதனை அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த மாற்றம் நிலைப்பது என்பது தொடரும் என்பது ஐயமே. புரிந்ததுபோல் இருந்து புரியாததுபோல் ஆகிவிடும். சிந்தித்து ஆன்றோர்கள் கூறும் உண்மையினை தானே கண்டுபிடிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதனை நம் குருதேவர் கூறும் மூன்று தாரக மந்திரங்களான ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்’ (Information, Confirmation, Transformation) உறுதி படுத்துகின்றன.

தாரகமந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்றிருக்கும்போது தாராக மந்திரம் என்று சொல்வதன் நோக்கம் என்ன? மந்திரம் என்றால் ஒன்றை அடைவதற்காக பயன்படுத்துவது. தாரகமந்திரம் என்கின்றபோது, அது மிக மிக ஆதாரமானதாகவும், உள்ளத்தில் என்றும் நீங்காமல் நிற்கும்படியாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கும். நம் குருதேவர் அவர்கள் வழக்கமாக சொல்வது–  “You doubt what I say. Don’t accept as it is.” மேலும் மகரிஷி அவர்கள் ‘எனக்கு கேள்விகள் கேட்டால் பிடிக்கும்’ என்பார். மகரிஷி அவர்கள் ‘There won’t be any foolish questions. There may be foolish answers’ என்பார். ஏன் இவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அதாவது ஒவ்வொரு ஆன்மாவையும் சுயமாகச் சிந்திக்க வைக்கவே இவ்வாறு கூறுகிறார். இப்படிக் கூறுவது உண்மையும் கூட. கேள்வி எழுகின்றது எனில் அறிவு அதனை அறிய ஆர்வம் கொள்கின்றது என்று பொருள். அந்த ஆர்வத்தின் காரணமாக விளங்கிக் கொள்ள கேள்வி எழுகின்றது. அதாவது சிந்திக்கின்றது அறிவு என்று பொருள். ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகள் எழவேண்டும்.

மகரிஷி அவர்களின் சீடர்களும் அவர்களின் வம்சாவளியும் . . . .

‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என நினைந்ததால்(வினவியாதால்) ‘ஏன் என உணர்ந்தோம்’ என பன்மையில் நம்மையெல்லாம் அவருடன் சேர்த்தே பாடலில் இயம்புகிறார். நமது சார்பாக மகரிஷி அவர்கள் கேட்டுவிட்டார். எனவே மகரிஷி அவர்களை தரிசனம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் அவர்களது வம்சாவளியும் தன்னை அறிந்தே தீர்வார்கள் என்பது திண்ணம்.

 ‘தன்னை அறியும்’ படலம் நடந்துகொண்டிருக்கின்றது:

‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என நினைந்ததால்(வினவியாதால்) ‘ஏன் என உணர்ந்தோம்’ என பன்மையில் நம்மையெல்லாம் அவருடன் சேர்த்தே பாடலில் இயம்புவது இயற்கையின்/இறையின் நிகழ்ச்சிகளில் எதனைத் தெரிவிக்கின்றது? இயற்கையின்/இறையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கியமானதான ‘அறிவு தன்னையறிதல் – ஸ்ரீ ரமணமகரிஷி அன்பர்களை நீ யார் எனக் கண்டுபிடி’ என்று ஆசீர்வதித்தது செயலுக்கு வந்து கொண்டிருக்கின்ற படலம் நடந்து கொண்டிருக்கின்றது என அறிய மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றது. நம் பரிபக்குவ நிலையை இவ்வாறாக வாய்மொழியாகத் தெரிவித்தால்தானே இயற்கை/இறை அடுத்தது என்னென்ன தெரிவிக்க வேண்டுமோ அதனை தெரிவித்துக் கொண்டே இருக்கும். ‘Fraction demands Totality supplies’ என்பதற்கு இதுவன்றோ பொருள். ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதால் மனிதஇன தன்மாற்றம்/பரிணாமம், இன்னமும் ‘பண்பில் முழுவதுமாக ஏற்றம் பெறாமல் இருப்பது’ முடிவுக்கு வரும். அகம் எண்ண வேண்டும். இறைவனேதான் அகமாக உள்ளான். எனவே இதுபோன்று நல்லவற்றை எண்ணினால் அகம் எண்ணினால் குறைவுடைய மனித மனமும் ஏற்றம் பெற்று இறைமனத்துடனும் நெருங்கி வந்து இணைந்து ஒன்றாகிவிடும்.

அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே என்று அறிந்திருந்தாலும்….

நமக்கு சுத்த அத்வைத உண்மை தெரிந்திருக்கின்றது. என்றாலும், அதனை அவ்வப்போது அறிவு மறந்து விடுகின்றது, எனவே சுத்த அத்வைத உண்மையின்படி அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே என்று அறிந்திருந்தாலும்,

அன்றாட வாழ்வில் துவைத நிலையில் இருந்து செயல்கள் புரிவதால்,
‘அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே’ என்கின்ற உண்மை நினைவில் இல்லாமல்
போவது என்பது,
சுத்த அத்வைத உண்மை தனக்குப் புரிந்துவிட்டது என அறிவு நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல
என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.
எனவே அருளாளர்கள்-குருமார்கள் மனித வடிவில் இருப்பதால் சாதாரண மனிதர்களாகவே
கொள்ளப்படுகின்றனர்.
ஆகவே அவர்கள் கூறும் அறிவுரையில் ஐயங்கள் ஏற்படுகின்றன.
ஐயங்கள் தீர்வதற்கு முயற்சி செய்வதில்லை அறிவு.
அவர்களின் அறநெறி தாங்கிய அறிவுரைகளை சமுதாயம் ரசிப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை.
அப்படியானால் எவ்வாறு பண்பில் உயரமுடியும்?
அருளாளர்கள்-குருமார்கள் மனிதவடிவில் இருந்தாலும் அவர்கள் சாட்சாத் பரப்பிரம்மமே தான்.

அருளாளர்களை எவ்வாறு நினைவு கூர்வது?

இந்த வினாவிற்கு விடை தேடும் முன்னர் அருளாளர்களை எதற்காக நினைவுகூர்தல் வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் எத்தனையோ துறைகள் உள்ளன. அவரவர்கள் விருப்பம் போல் அத்துறையில் ஈடுபடுவர். ஆனால் மனிதகுலத்திற்கே பொதுவானத் துறை ஒன்று உள்ளதென்றால் அது அருள்துறை. தங்களுக்கு பிடித்தமான துறையில் யார் இருந்தாலும் மனிதனாகப் பிறந்த அவர்களுக்கும் பொதுவான துறை அருள் துறையாகும்.

இதனை அறிந்தேதான், நாம் அருள்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்கு முன்னதாக பிறந்த அருளாளர்-ஆசான்களிடம் இருந்து
அருளையும், வழிகாட்டுதலையும்,
அருள்துறையின் புனிதத்தை புரிந்துகொள்ளும் தெளிவினையும் பெற்று,
அருளாளர்-ஆசான்கள் கூறும் நெறியான வழிகளை பின்பற்றி வாழ்க்கையை நடத்த வேண்டும்.

உத்தமனாய் இரு:

இவ்வாறு விரும்பி அன்போடு உரைப்பது யார்? அவ்வைத்தாய் ஆத்திச்சூடியில் உத்தமனாய் இரு (102) என்று அன்போடு அறிவுறுத்துகிறார். அதற்கான வழியாக “சான்றோர் இனத்திரு(ஆ.சூ.எண்.44)” என்றும் “பெரியாரைத் துணைக்கொள்(ஆ.சூ.எண்.82)” என்றும் கூறியுள்ளாள். திருவள்ளுவரும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ மற்றும் ‘சிற்றினம் சேராமை’ என்கின்ற அதிகாரத்தையும் வைத்துள்ளார். அருட்தாய் மற்றும் திருவள்ளுவரின் அறிவுறுத்தலுக்கிணங்க அருளாளர்களைத் துணை கொள்ள வேண்டும். அருளாளர்களைத் துணை கொள்ளுதல் என்றால், அவர்கள் கூறும் அறிவுரைகளுக்கு இணக்கமாக வாழ்தலே ஆகும். இவ்விதத்திலே அருளாளர்களின் ஆசிகள் இயல்பாகவே நமக்கு வந்து சேர்வதுடன், காப்பாகவும் அமையும். ஆத்திச் சூடி யார் சொன்னது என்றால் அவ்வையார் என்போம். சரிதான். அவ்வையார் வடிவில் இறையே சொன்னது என்று சொன்னால் என்ன? அதுதானே சுத்த அத்வைதம். ஒருவேளை அவ்வையார் சொன்னது இறை(வன்) சொன்னதாகவில்லையைா? அவ்வையார் என்கின்ற மனிதரா சொன்னது? யார் சொன்னால் என்ன? நம்மிடம் சுயமாய்ச் சிந்திக்கின்ற அறிவிருக்கும்போது சிந்தித்துப் பார்த்து எடுத்துக் கொண்டு அவற்றைப் பயிலலாமே!. இந்த நிலை இல்லாமையால்தான், இயற்கை/இறை சாதனையே அறநெறி என்றும், இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக தனது ஆதங்கத்தை தெரிவித்து சாதனையே அறநெறி(21-12-1961) என்கின்ற பாடலை இயற்றியுள்ளது.

அருளாளர்களை எவ்வாறு நினைவு கூர்வது பற்றி சிந்தித்து வருகிறோம். அருள் துறையில் நம்மை எல்லாம் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளச் செய்த நேரிடையான அருளாளரும், நம்முடைய குருதேவருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு அருளாளர்களைத் துணை கொண்டார் என்பதனை அறிவோம். அதற்கு அவர் நமக்காக அருளிய குருவணக்கம் பாடலையே எடுத்துக் கொண்டு அடுத்த அறிவிற்கு விருந்தில்(11-08-2016—வியாழன்)ஆராய்வோம்.

வாழ்கஅறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.


 அறிவிப்பு

10-08-2016-புதன்

வணக்கம். வாழ்க வளமுடன்.

காலம் கருதி இன்றையை அறிவிற்கு விருந்து இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகின்றது. இதன் நிறைவுப்பகுதி வழக்கம்போல் அடுத்த ஞாயிறன்று இடம் பெறவேண்டும். ஆனால் அன்று 14-08-2016—(ஞாயிறு) மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினம் வருவதால், ‘பிறவிப்பயன் என்கின்ற தலைப்பில் சிறப்பு அறிவிற்கு விருந்து படைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை(11-08-2016) அன்று வழக்கமாக இடம் பெறும் சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சிக்குப் பதிலாக ‘அருளாளர் உலகம்’ நிறைவுப்பகுதி நாளையே இடம் பெறும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. நாளை சத்சங்கத்தில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்
www.prosperspiritually.com