FF-213-அருளாளர்கள் உலகம் 6/?

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

அருளாளர்கள் உலகம் 6/?

அறிவிற்கு விருந்து—213

03.08.2016—புதன்

‘அருளாளர்களை நினைவு கூர்வது’ என்பது என்ன?

குருவணக்கத்தில் அருளாளர்களை நினைவுகூர்கிறோம். குருவணக்கத்தில் மட்டும் அருளாளர்களை நினைவுகூர்வது என்பதில்லாமல் எவ்வப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் அருளாளர்களை நினைவு கூறலாம். அவர்களை, அவர்களின் பெயர்களால் மட்டுமே நினைத்துக் கொள்வது அவர்களை நினைவு கூர்வதாகாது,

அருளாளர்களின் உன்னதத்தை அறிந்திருக்க வேண்டும்.
அருளாளர்கள் கூறும் அறநெறிகளை ஆராய்ந்து மதித்து நடக்க வேண்டும்.
அருளாளர்களின் செயல்களையும், குணங்களையும் அறிந்து
ஆச்சரியப்பட்டு, மதித்து ரசித்து, போற்றி,
அதுபோல் நாமும் உயர வேண்டும் என்கின்ற அருள்வேட்கையோடு
அவர்களை நினைவு கூறவேண்டும்.

அறிஞர் திருமூலர் ‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்கிறார். குருவினுடைய திருநாமத்தைச் சொல்வது எவ்வாறு அறிவிற்கு தெளிவினை ஏற்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
குரு பயிற்றுவித்த பயிற்சிகளை முனைப்புடன் (WITH DETERMINATION) செய்வதோடு,
குருவினுடைய செயல்களை, குணங்களை, அவர் வாழ்ந்த வாழ்க்கை முறை, அவர் இறை
உணர்வு பெற்ற வரலாறு ஆகியவற்றை நினைந்து மதித்து ரசித்து போற்றி வர வர
குருவினுடைய பெயரே சாதகனுக்கு மந்திரமாகிவிடுகின்றது.

குருவின் பெயரே மந்திரமாகிவிடுகின்றதா சீடனுக்கு!?

ஆம்! எப்படி? இல்லாவிடில் சீடனுக்கு குருவை தரிசித்த பிறகு ஏற்பட வேண்டிய தெளிவுகளை நான்காகப் பிரித்துக் கூறி, அவற்றில் இரண்டாவதாக இடம் பெறுவது ‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்று கூறியிருப்பாரா அறிஞர் திருமூலர்? மந்திரம் என்பது என்ன? மந்திரத்தை ஓதி வரும்போது எதற்காக அந்த மந்திரம் ஏற்படுத்தப்பட்டதோ அந்த பயனை நாளடைவில் மந்திரத்தை ஓதுபவர் பெறக்கூடும். அதுபோல ஆன்மீகத்தில் உயர்ந்து வரும் ஆன்மீக சாதகனுக்கு குருவினுடைய பெயரே மந்திரம் போலாகி, குருவினுடைய பெயரைச் சொல்வதிலே மனதிற்கும் அமைதியும், ஒருவித ஆனந்தமும் கிட்டும்.

‘வேதாத்திரி மகரிஷி’ என்று சொல்லும் போதே மனதிற்கு அமைதியும், ஆனந்தமும் ஏற்படுவதனை ஆன்மீக சாதகர்கள் கண்கூடாக பார்க்கின்றனர். பகவான் ராமகிருஷ்ணர் ‘யாருக்கு கடவுள் நாமத்தைக் கேட்கும்போதே கண்களில் நீர் வருகின்றதோ அவருக்கு அதுதான் கடைசி பிறவி’ என்று கூறுவதுபோல்,
ஐயப்படாது அகத்தை உணர்ந்து

‘குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா. ’

என்று குரு ஸ்லோகம் கூறுவது போல் இறைவனாகிய வேதாத்திரி மகரிஷியின் நாமத்தை சொல்லும்போதே கண்களிலே நீர் வருவதும் அதுபோல்தானே!

அதுபோன்றே ‘அருளாளர்கள்’ என்கின்ற போது ‘அருள்’ மற்றும் ‘அருளாளர்கள்’ என்கின்ற சொற்களுக்கு, ஆராய்ந்து மகிழ்ந்து என்னென்ன விளக்கம் அறிவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ அவை வந்து முன்னே நின்று மனதிற்கு இன்பத்தை கொடுக்கின்றது. எனவே அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை தானாகவே படித்தும், சத்சங்கத்தின் வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். இன்னார் என்றுமட்டுமல்லாது, பொதுவாக எல்லா அருளாளர்களின் செயல்களையும், குணங்களையும் அடிக்கடி நினைந்து வரவேண்டும்.

எதற்காக இயற்கை/இறை குருவின்(அருளாளர்கள்)-சேர்க்கையை நடத்தி வைக்கின்றது?

விலங்கினத்திலிருந்து பல்லாயிரம் பிறவிகள் எடுத்து வந்துள்ள மனிதனிடம் கருத்தொடராகக் கொண்டு வந்துள்ள அறமில்லாத/அறத்திற்கு ஒவ்வாத விலங்கினப் பண்பு மறையவில்லை. ஆறாம் அறிவாக இயற்கை/இறை தன்மாற்றமாகி வந்துள்ளதே, அது மனித வடிவில் தன்னை உணர்ந்து கொள்வதற்காகத்தான். இவ்வாறு சொல்வது சுத்த அத்வைதம். துவைதத்தில் சொல்வதென்றால் மானுடப்பிறவியினை அரிதான பிறவி என்று அவ்வைத்தாய் கூறுவதற்கிணங்க, உயிர்களிலே மனிதனுக்கு மட்டும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு, பாக்கியம் இறைஉணர்வு பெறுவது என்பது.

விலங்கினத்திலேயே இயற்கை/இறை தன்னை உணர்ந்து கொண்டிருக்கலாமே!

மனிதனிடம் மனிதம் வெளிப்பட வேண்டும். அது எப்போது சாத்தியம்? இறைஉணர்வு பெறும் அறநெறிப் பாதையில் வாழும்போதுதான் மனிதம் வெளிப்படும். அறநெறிப்பாதையில்தான் மனிதம் வெளிப்படுத்தக்கூடிய கூடிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று நெறிகளும் பின்பற்றப்படும். அவ்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாக அமையும். விலங்கினப்பண்பை அப்படியே வைத்துக் கொண்டு, அன்பும் கருணையுமில்லாமல், எவ்வாறு இறை உணர்வு பெறமுடியும்? விலங்கினப்பண்பு நீங்காமல் இறைஉணர்வு பெறமுடியும் என்றால், இயற்கை/இறை ஆறாம் அறிவுடைய மனிதனாக தன்மாற்றம் அடைந்திருக்க வேண்டாமே! விலங்கினத்திலேயே இயற்கை/இறை தன்னை உணர்ந்து கொண்டிருக்கலாமே!

எனவே மனிதன், மனித-வாழ்வின் நெறிகளான ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கடைபிடிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணமான விலங்கினப்பண்பான பிறர்வளம் பறித்தல் என்பதனை செயலிழக்கச் செய்ய வேண்டும். அதாவது விலங்கினப்பண்பிலிருந்து மனிதப்பண்பிற்கு உயரவேண்டும். இதுதான் பண்பில் ஏற்றம் பெறுவது என்பது; பண்பேற்றம் என்பது. இந்த பண்பேற்றத்தைப் பெறுவதற்காகத்தான் அறியாமையை நீக்கும் குருவின்-சேர்க்கை இயற்கையால்/இறையால் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

புலன்களால் ‘ஒன்றுமில்லாது எனக் கருதப்படுகின்ற இறை வெளி, இயல்பூக்க நியதியால்தான் இப்போது நாம் காணும் பிரம்மாண்டமான பிரபஞ்சமாகவும், பல லட்சம் உயிரினங்களாகவும், அதில் உன்னதமான மனித இனமாகவும் தன்மாற்றமாகியுள்ளது. எனவே மனிதகுல பண்பேற்றத்திற்கும். அதே இயல்பான ஊக்கத்தன்மையாகிய இயல்பூக்க நியதி இங்கேயும் பெறும் பங்கு வகிக்கின்றது.

ஏன் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை எனப்படுகின்றது?

மனிதகுலம் உருவ மாற்றம் பெற்றதிலேயே இயற்கையின்/இறையின் தன்மாற்றம் முடிந்துவிட்டதா என்ன? இல்லை. இல்லை என்பதால்தான் ஒர் அறிஞர் ‘பரிணாமம் இன்னும் பூர்த்தியாக வில்லை’ என்றார். மற்றொரு அறிஞரோ ‘எது எதுவாக இருந்தாலும், அது அதுவாக இல்லையே அதுதான் மனம்’ என்பதனை மனிதகுலத்தின் மீது கொண்ட கருணையால் மனிதகுலத்திற்குத் தெரிவிக்க, தனது ஆதங்கத்தை புதிராக வெளிப்படுத்தியுள்ளார்.

தன்மாற்றத்தில் உருவம் மட்டும் மாறுவதோடு, அதற்குரிய குணங்களும் மாற்றம் பெறவேண்டும். அப்போதுதான் அந்த தன்மாற்றம் முழுமை அடைந்தது எனலாம். எனவே மனிதகுல தன்மாற்றத்தில் அழகுமிக்க உருவமாக மனிதன் மாற்றம் அடைந்திருந்தும், குணத்தில் இன்னமும் முழுமையாக மாற்றம் அடையவில்லை என்பதால்
‘பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை’ என்று ஒரு அருளாளரும்,  மற்றொரு அருளாளர் ‘இறையே மனமாக இருந்தாலும், மனம் இறையாகவில்லையே’ என   மனிதகுலத்தை விழித்தெழச் செய்ய, தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்ககிறார்.

இந்நிலையில், உயிர் எடுத்த மனித உருவத்திற்கேற்ப, பண்பில் ஏற்றம் பெற ஒரு சிறந்த வழியினை மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

குருவின் சேர்க்கையில் இயல்பூக்க நியதியின் பங்கு:

மகரிஷி அவர்களின் குரு-சீடர் சேர்க்கையில் இயல்பூக்க நியதியின் பங்கு பற்றிக் கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.

குருவின் சேர்க்கை(15-08-1984)

எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்;
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.

                        . . . வேதாத்திரிஷி மகரிஷி அவர்கள்.

பாடலின் உட்பொருளைக் காண்பது சிறப்பு. இரண்டு உண்மைகளைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
ஒன்று ‘நினைப்பவரின் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்’ என்பது.
மற்றொன்று ‘பிறவிப்பயனை நல்கும்.’ என்பது.
இரண்டாவது உண்மையின் விளக்கம் மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்தன்று(14-08-2016) சிறப்பு விருந்தாக படைக்கப்பட இருக்கின்றது என்பதனை இத்தருணத்தில் அன்புடன் தெரிவிக்கப்படுகின்றது. அந்த விருந்து சிறப்பாக அமைந்திட உங்களின் அருட்தாகத்தை மௌன ஊடகமான எண்ணத்தின் வாயிலாகத் தெரிவிக்கவும்.

நினைப்பவரின் ஆற்றல் ‘அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்’

இப்போது முதல் உண்மையான ‘அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்’ என்பதற்கு வருவோம். மாற்றம் என்பது என்ன? மாற்றம் (change) என்பது
இதுவரை இருந்து வந்தது வேறுபட்டு அமைவது.
ஒன்று நீங்கி மற்றொன்று வருவதும் மாற்றமாகும்.
மாறி அமையும் நிலை. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாகும்.

பொதுவாக மாறுவது என்பது நல்ல நிலையையினையும் ஏற்படுத்தலாம். அல்லது, அறியாமையால், அலட்சியத்தால் அவ்வைத்தாயின் அறிவுரையான ‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதனைக் கருத்தில் கொள்ளாமலோ, தெரிந்து அலட்சியப்படுத்தியோ போனால்’ அதனால் வரும் அந்த மாற்றம் கெட்டதாகவும் இருக்கலாம். இங்கே அவ்வைத்தாயின் அறிவுரையின்படி சேரிடம் அறிந்து குருவுடன் சேர்ந்ததால், இப்போதுள்ள நிலையிலிருந்து மிகுந்த நல்ல நிலைக்கு மாறுதல் ஏற்படுவது பற்றி ஆராய இருக்கிறோம்.
மனித குணத்தைப் பற்றி சிந்தித்து வருவதால், மாற்றம் என்பது மனித குணத்தில் கருமையத் தொடராகக் கொண்டுவந்துள்ள விலங்கினப்பண்பும் கலந்துவிட்டபடியால், விலங்கினப்பண்பு நீங்கி மனிதனுக்கே உரிய பண்பிற்கு முழுவதுமாக ஏற்றம் பெறுவதாகும்.

அந்த நல்ல மாற்றம் அறிவினிலும் உடலினிலும் ஏற்படும் என்கிறார். பண்பேற்றம் என்பது அறிவைச் சார்ந்தது என்பதால் அறிவினில் மாற்றம் ஏற்படுவது என்பது சரி. உடலினிலும் மாற்றங்காணும்* என்கிறாரே! அது என்ன? அது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றா? உடலில் மாற்றம் ஏற்படுவது என்பது தானாக நடக்கின்றது. அதாவது குணத்திற்கேற்ப உடலும், அதில் முக்கிய அங்கம் வகிக்கும் முகமும் மாறும். அதனால் தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

பண்பேற்றத்திற்கு அறிவில் மாற்றம் ஏற்படுவதற்கான எளிமையான ஒரே வழியினைக் கூறுகிறார். அது என்ன?

‘எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைப்பது’ என்பதுதான் அது.

அவ்வாறு ஒன்றைப்பற்றி அடிக்கடி நினைத்து வந்தால் அப்பொருளின் தன்மையாய் நினைப்பவரது ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றங் காணும் என்று உறுதி மொழி அளிக்கிறார். பண்பேற்றம் பெறுவது என்பது ஒரு சிரத்தையுடன் செய்யும் அரியகலை. பண்பேற்றத்தை வேறு எவ்வாறு பெறமுடியும்? ‘மனம் எதனை நினைக்கின்றதோ அதுவாக மாறக் கூடியது’ என்று வேறு அருளாளர்களும் கூறி இருக்கின்றனர். இந்த மாறுகின்ற இயல்பினை பெருமையாகவே கருதுகிறார் மகரிஷி அவர்கள். நல்ல பண்பு மாற்றம் ஏற்படுவதனை பெருமை எனக்கூறி அது இயல்பூக்க நியதியால் நடக்கின்றது என்கிறார், பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் இயல்பூக்க நியதி என்கிறார் என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(07-08-2016-ஞாயிறு) அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:

click here.

அல்லது

நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல

click here

http://www.prosperspiritually.com/contact-us/

நன்றி,
வாழ்க வளமுடன்