அயரா விழிப்புணர்வு – 7 / 7

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

அயரா விழிப்புணர்வு – 7 / 7FFC – 40

24-12-2014—புதன்

(Constant Awareness)

வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் வள்ளலாரின் அருளைப் பெற்றதை நமக்குத் தெரிவிக்க அருளியுள்ள பாடலுடன் அயரா விழிப்பு நிலைச் சிந்தனையை நிறைவு செய்வோம்.

வள்ளலார் அருள்(05-12-1986)

என்றுஎன்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்

எதிர்நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ

அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே

அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு.

இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்

எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே

நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்

          நல்லறிஞர் பலர்எனக்கு நட்பை அளிக்கின்றார். ……அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்

         அருட்சோதி இராமலிங்க வள்ளலார், தேடி வந்து கூடுவாஞ்சேரியை அடைந்து, தன்னுடைய ஆன்மாவை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்க வைத்துக் கொண்டு 1953 லிருந்து பத்து ஆண்டுகள் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். அப்போது மகரிஷி அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயமாக இருந்தன என அருட்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். இராமலிங்க வள்ளலார், அவர் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தனது உடலை ஆட்கொண்டு முடித்தார் என எண்ணுவதாக அருட்தந்தை அவர்கள் தன்னுடைய வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் கூறுகிறார்,

இந்த நிகழ்வு நடந்து முடிந்து சுமார் 33 வருடங்கள் கழித்து மேலே கூறிய கவியினை அருட்தந்தை அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ளார். 1981 ஆம் வருடம் எழுதிய “எனது வாழ்க்கை விளக்கம்” எனும் நூலில் இராமலிங்க வள்ளலார் தனக்கு அருட்பாலித்த நிகழ்ச்சியினையும் அதனால் தான் அடைந்த அருட்பயனைக் கூறியுள்ளார். இருப்பினும் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிகழ்ச்சியினைக் கவிதையாக்கி நமக்குத் தெரிவதற்காக அருளியுள்ளார். காரணம் என்ன? அன்பா்களின் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

வேதாத்திரிஷி நமக்கெல்லாம் தந்தை என்றால் (அருட்தந்தை) வள்ளலார் நமக்கெல்லாம் தாத்தா தானே? அருட்தாத்தாதானே! எனவே அருட்தாத்தா – திரு அருட் பிரகாச வள்ளலார் 30-01-1874 அன்று வெள்ளியன்று இரவு 12 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இப்போது நினைகூர்வது பெரும் பயன் அளிக்கும்.

“இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்து திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அக்கங்கு இருப்போம். திருத்திடுவோம். அஞ்ச வேண்டாம்” என்பதே அன்று திருவாய் மலர்ந்தது.

 

ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளாரும் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும், வேறு பல மகான்கள் கூறியதும்? ஆகவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடலில் மானசீக நான்கு குருமார்களின் பெயர்களை மட்டும் கூறாமல், மிகவும் அறிவுக்கூர்மை உடைய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிகவும் நன்றியுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், நாமும் ஐயமின்றி உணரவேண்டும் என்கின்ற அருட்கொடையுணர்வுடனும் இது வரை அறிவையறிந்த அறிஞா்களின் அறிவாற்றல்கள் துணை செய்யுமாறு வேண்டுகின்றார். இதுதானே உண்மை !

உடலளவில் அடையாளம் கொண்டு ”அந்த மகான் சொன்னார். இந்த மகான் சொன்னார்” என்று சொல்வதைத் தவிர்த்து பேரறிவேதான் அந்த மகான் வடிவிலும், இந்தமகான் வடிவிலும் கூறியிருக்கின்றது என்று அறிந்துணரப்படவேண்டியதே ஆன்மீக உண்மை! மனிதகுலப் பரிணாமத்தில், அறிஞர்களின் அவ்வப்போது தோற்றம் என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம்(Unending Divine Relay Race)

எனவே அருட்தாத்தா வள்ளலார் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என் ஆணித்தரமாக மொழிந்துள்ளதை எப்போது நினைவில் கொள்வோம். நாம் திருந்துவதற்காகப் பிறந்துள்ளோம். எனவே “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்கின்ற வள்ளாரின் அருட்செய்திற்கிணங்க திருந்திடுவோம் அதி விரைவில். வள்ளாலாரின் ஆன்மாவின் ஏக்கத்தையும், சமுதாய நல அக்கறையையும் கவனிக்க வேண்டும். ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும்?

 இறை வெட்டவெளியாக அறிவாக உள்ளது என்று அறிந்து விட்டு வேறு எந்த உருவக் கடவுள் வந்து நமக்கு நேரிடையாக நற்கதியை அடையச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? கடவுள் மீது நம்பி்க்கைக் கொண்டவா்களாக இருந்துதான் நாம் இந்த இறையின் உண்மைநிலையை அறிந்து கொண்டோம். அப்படியானால் மகான்கள் கூறுவது போல் அறநெறி வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தயக்கம்? எது குறுக்கீடாக உள்ளது? சிந்தனை செய்வோம்.

”எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் குரு உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்” என்கின்ற வேதாத்திரி மகரிஷியின் உறுதி மொழியினை

சிரமேற்கொண்டு செயல்கள் ஆற்றுவோம்.

திட்டமிடுவோம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவதற்கு.

இயல்பூக்க நியதியைத் தரமாற்றத்திற்குப் பயன்படுத்துவோம்.

தடங்கல்களைச் சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்.

விரைவில் இறையின் அருளுக்குப் பாத்திரமாகி, இறைஉணர்வு பெற்று நாமும் சுகம் அடைந்து மற்றவா்களுக்கும், சமுதாயத்திற்கும் பேருதவியாக இருப்போம். ‘சாதனைதான் அறநெறி’ என்று அருளியுள்ள அருட்தந்தையின் கவியுடன் சிந்தனையை நிறைவு செய்வோம்.

சாதனையே அறநெறி(21-12-1961)
அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள்
அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
அறம் பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.

இவ்வுலகம் உய்ய, உலக மக்களைத் திருத்தி அறம் மலர திருவுளம் கொண்ட இது வரை வந்துள்ள அனைத்து மகான்களின் அறிவாற்றலின் துணை கொண்டு அறிவுத் தொண்டு செய்து மகிழ்வோம். அதற்கு நமக்கெல்லாம் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று அருளிய அருட்பிராகாச வள்ளலாரின் அருள் துணை செய்யட்டும்.

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு