வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்1/2

FFC 7

03-11-2014

மலரை நாடி தேனீக்கள் வரும். ஏன்? மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் வருகின்றன.. மலர்களில் பல உள்ளன. அதில் பாரிஜாத மலரும் ஒன்று தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன்? இது ஒரு வார்த்தை ஜாலமா? அல்லது உண்மையில் வேதாத்திரியம் பாரிஜாத மலர் தானா? ஆம். பாரிஜாத மலர்தான். எவ்வாறு வேதாத்திரியம் பாரிஜாத மலரின் தன்மையாக உள்ளது என்பதனை அறிந்து கொண்டு பயன் பெறுவோமே. பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தரும் என்று சொல்லப்படுவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்? சிந்திப்போம்.
மனிதன் தனக்கு வேண்டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்புவது அல்லது விரும்ப வேண்டியது என்ன? நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைவான செல்வம், உயர்ந்த புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இந்த நான்கிற்கும் மேலாக, மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா? உண்டு.
இந்த வாழ்க்கை எதற்காக மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ, அந்த காரணத்தை அறிந்து
அதனை அடைய வேண்டும்.
இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவுதான் தன்னை அறிய வேண்டி மனித அறிவாக தன்மாற்றமடைந்துள்ளது. [The premordial state of Nature, the Consciousness, Almighty the God itself has transformed into human consciousness]
கடலிலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி, நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி, கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்,
பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு,
மீண்டும் பேரறிவுடன் கலந்து,
தன்னை அறிந்து கொண்டு,
தன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அதற்கு.
அதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே, இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,
அப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;
புலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து, மயக்கம் கொண்டு,
அளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து
ஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பப்பதிவுகளைத் தன்
ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,
அவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான், தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்;க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.

…… நாளைத் தொடரும்