FFC – 164-வினா விடை – 13

வினா விடை – 13

FFC – 164

17-02-2016—புதன்


சிந்திக்க வினாக்கள்-130

(03-12-2015 – வியாழன்)

 அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

விடை:–

    மோதல்(clash), பிரதிபலித்தல் (Reflection), சிதறுதல் (Refraction) ஊடுருவுதல்(penetration), ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் (Inter-action) என்கின்ற ஐந்து வகைகளான  அலை இயக்கப் பண்புகள் அலைகளுக்கு உள்ளதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.


சிந்திக்க வினாக்கள்-131

(07-12-2015 – திங்கள்)

குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

விடை:–

    உறவு என்பது என்ன?  எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் தனித்து வாழ முடியாது.  சமுதாயத்தில் பிறருடைய உதவியால்தான் வாழ முடியும்.  அங்கேதான் உறவு வருகின்றது. முதல் உறவு தாய்,  இரண்டாவது உறவு தந்தை.  மூன்றாவது உறவுகள் பாட்டி தாத்தா. நான்காவது உறவுகள் சகோதர-சகோதரிகள்., பிறகு சுற்றம்.  இவ்வாறு உறவுகள் இன்றி யாரும் பிறப்பதில்லை.  அடுத்தது நண்பர்கள்.  நண்பர்களும் உறவுகள் வரிசையில்தான் வருகின்றனர். சமுதாயமும் உறவைத் தருகின்றது. வாழ்க்கைவள உயர்வுப் படிகளான ஐந்தில்  நட்பு  நலத்தையும் ஒன்றாக வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். எனவே எல்லோரிடமும் நட்புநலம் பேணுதல் வேண்டும்.

    ‘மாதா, பிதா, குரு தெய்வம்’  என்று தமிழ் மொழி கூறியிருந்தாலும், தாய் மகன் உறவு, தந்தை மகன் உறவு போல் பெரும்பாலோர்க்கு குரு சீடர் உறவு ஏற்படுவதில்லை.  தாய், தந்தை உறவு பிறப்பால் இயல்பாகவே ஏற்படுகின்றது.   பாட்டி, தாத்தா உறவு இரத்தத் தொடர்பால் இயல்பாகவே  ஏற்படுகின்றது. குருவின் உறவு இரத்தத் தொடர்பால் ஏற்படுவதில்லை. வருங்காலத்தில் குருவின் தொடர்பு இரத்தத் தொடர்பால் ஏற்படும். அதாவது தாய், தந்தையே தன் மகன், மகள் ஆகியவர்களுக்கு குருவாக அமைவர் மனவளக்கலை குடும்பத்தில்.   மாதா பிதா உறவிற்கு பிறகு குருவினுடைய உறவை தேடிப்பிடித்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே எளிதில் குரு-உறவை கண்டுபிடிக்க முடிவதில்லை. குரு எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். சீடன் எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். அவ்வாறு இருக்கும்போது இவ்வுலகில் எங்கெங்கு போய் குருவைத்  தேடுவது?

     பெரும்பாலும் சீடனுக்கு குருவை தேடிக் கண்டுபிடிக்கும் சிரமத்தை  இயற்கை/இறை கொடுப்பதில்லை.  சீடனுக்கு எந்த பிறவியில் பரிபக்குவ நிலை வருகின்றதோ, அந்தப்பிறவியிலும்,  எந்த  வயதில் பரிபக்குவ நேரம் வருகின்றதோ அப்போது குருசீடர் உறவை ஏற்படுத்தி வைக்கின்றது இயற்கை/இறை.   தகுதி வந்த பிறகுதான் குருவினுடைய தரிசனம் கிட்டுகின்றது. இவ்வாறாக மிகுந்த சிரமத்திற்குப் பிறகுதான், அதாவது தீயவினைப்பதிவுகள் ஒரளவிற்கு தீர்ந்த பிறகு, மீதமுள்ள தீய வினைப்பதிவுகளை போக்கிக் கொண்டு இப்பிறவியிலேயே இயற்கையின் ஆதிநிலையை/இறையை உணர்வதற்காகவே தெய்வத்தின் உறவை ஏற்படுத்தி வைக்க குருவின் உறவு கிடைக்கின்றது.

    எதற்காக குருவினுடைய உறவினை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர்கள்? பல கோடி ஆண்டுகளாக (இறைவெளியிலிருந்து பின்னப்பட்ட நாளிலிருந்து  அறிவு), பலலட்சம் பிறவிகளாக (ஆதிமனிதனிலிருந்து) மறந்துவிட்ட தன்மூல உறவாகிய தெய்வத்தின் உறவை மீட்டுத் தருவதற்காக  குருவினுடைய உறவை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர். மாதா, பிதா, குரு தெய்வம் என்பதில் மாதாவையும், பிதாவையும் அறிந்து கொள்கின்ற மனிதனுக்கு மூன்றாமவராகிய குருவை அறிந்து கொள்வது, அநேகமாக/பெரும்பாலும், பெரும்பாலோருக்கு முடிவதில்லை. அந்நிலை இருக்கும்போது, வேதாத்திரி மகரிஷியின் தரிசனம் கிடைத்து அந்த மகாபுருஷரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்களே என்பதனை இத்தருணத்தில் நாம் அனைவரும் பதிவு செய்ய விரும்புகிறோம். கருமையப்பதிவுகளுக்கேற்ப, இயற்கையின் கருணையால்/இறைஅருளால் அப்படி கிடைத்தால், குரு கிடைத்ததும் குருவிற்கும் சீடருக்கும் இடையே கெட்டியான உறவு/பிணைப்பு (thick Bonding) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன்? இதனை அறிஞர் திருமூலரின் அனுபவத்திலிருந்து அறியலாம். திருமூலர் அனுபவித்ததை அறிந்து கொண்டு அந்த யுக்தியினை இறையுணர்வு பெறுவதற்குப் பயன்படுத்தி வெற்றி பெறுவோம்.

thelivu_guruvin

மனிதனுக்கு ஏன் உறவுகள் அவசியமாகின்றது?  தாயின் உறவு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.  பெற்றவளாயிற்றே அவள்.   தாய், குழந்தைக்கு பால் கொடுத்து, அன்னம் ஊட்டி சீராட்டி வளர்க்கிறாள்.  தந்தையின் உறவும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றது.  தந்தையும் குழந்தையின் வளர்ப்பில் பங்கு கொள்கிறார். பொருள் ஈட்டி அந்த பொருளைக் கொண்டு மனைவியையும் குழந்தையையும் வளர்க்கின்றார்.  இதனையும் தாண்டி மற்ற உறவுகளும் அவசியமாகின்றது.  மனிதன் தனக்கு தேவையானவற்றைத் தானே செய்து கொள்ள முடியாது. சமுதாயத்திலிருந்துதான் பெற வேண்டியுள்ளது.

   விலங்குகளிடம் உறவு என்பது கிடையாது.  விலங்கினங்களில்,  குட்டிகளுக்கு(offsprings) சில நாட்கள் தாயின்  அரவணைப்பு அவசியமாகின்றது.  உதாரணத்திற்கு பறவையை எடுத்துக் கொண்டால் இறக்கை முளைத்து குஞ்சு பறக்கும் வரைதான் அதற்கு தாயின் அரவணைப்பாகிய உறவு அவசியமாகின்றது,  பிறகு தாயின் அரவணைப்பு தேவையில்லை, எனவே அங்கே உறவு ஏற்படுவதில்லை. பெட்டைக்கோழி சில நாட்கள் வரை தன் குஞ்சுகளை தன்னுடன் வைத்துக் கொள்கின்றது.  குஞ்சுகளுக்கு  உணவை தனது அலகால் எடுத்துக் கொடுத்து அது சாப்பிட இது வேடிக்கைப் பார்த்து மகிழ்கின்றது. இவ்வாறாக குஞ்சுகளுக்கு  பலம் கிடைக்கும் வரை தாய்க்கோழி பராமரிக்கின்றது. பிறகு தானே உணவு தேட ஆரம்பித்ததும், கோழி அவற்றை விரட்டி  விடுகின்றது. சில நேரங்களில் தாய்க்கோழி உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடைய  வளர்ந்த பிள்ளைகள்(குஞ்சுகள்) உணவை உண்ண வந்தால் முன்பு உணவை எடுத்து தனது பிள்ளைகளுக்கு  காட்டிய அதே பெட்டைக் கோழி இப்போது கொத்தி விரட்டியடிக்கும்.  ஆகவே விலங்கினங்களுக்கு தன்னுடைய offsprings வளா்கின்ற வரைதான் தாய் உறவு தேவையிருக்கின்றது,

    ஆனால் மனிதனுக்கு மட்டும், சுற்றம், நட்பு மற்றும் சமுதாயம் என்கின்ற மூன்று நிலைகளிலும், உறவு, பிறந்ததிலிருந்து கடைசிவரை எப்போதும் அவசியமாகின்றது. இறந்த பிறகும் அவன் உடல் அடக்கம் செய்யும் வரை உறவு தேவைப்படுகின்றது. அந்த உடலைதூக்கிச் செல்வதற்கு நான்கு பேராகிலும் தேவை.  இதனை யாரும் மறுப்பதிற்கில்லைஇந்த உறவு என்ன செய்கின்றது. துக்கத்தில் பங்கு கொள்கின்றது. ஆறுதல் கூறுகின்றது. உடலால், பொருளால், சில சமயங்களில் அறிவாலும் உதவி செய்கின்றது.  மொத்தத்தில் உறவினால் மனிதன் பயன் பெறுகிறான். ஆனால் இந்த உறவுகளெல்லாம் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான உறவோடு உறவு வைத்துக்கொள்ளவே இப்பிறவி கிடைத்துள்ளது.  தொடரும். 

 அடுத்த அறிவிற்கு விருந்தில் (21-02-2016 ஞாயிறு) உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க வழி என்ன என்றும் அறிய இருக்கிறோம்.  வாழ்க வளமுடன்.