வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் — 5/5

FFC — 101

அ.வி .—101

 மனவளக்கலை அறிவுப்பசிக்கு விருந்து (சென்ற விருந்தின் தொடர்ச்சி)

                                                  19-07-2015—ஞாயிறு

FFC-62vethathiri_mararishi

முதல்அறிவின் – அறிவியலாளர்

The First Scientist of Consciousness

சென்ற விருந்தில்,

1)   ஆன்மீக சிகரத்தின் ஏணியில், மூன்றாம் படியிலிருந்து ஏறி ஐந்தாம் படியான ஆனந்தமய கோசமான ஆன்மீகத்தின் உச்சத்தை அடைவதற்கு அறிவுப்பசியின்மை,தடையாக உள்ளது என்றும்,

2)   மேலும் மகரிஷி அவர்கள்  அடைந்த பேரின்பப் படிகள் அறிவுப்பசியினைத் தூண்டும் மருந்தாக உள்ளதையும்,

3)   அவர்அடைந்தப் பேரின்பப்படிகள் வரிசை வழிகாட்டுதலாக இருப்பதையும் அறிந்தோம்.

 இன்று மனவளக்கலை எவ்வாறெல்லாம் விருந்தாக அமைந்துள்ளது எனப்பார்ப்போம். மனிதன், மனதினுடைய வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் இன்பமாக வாழமுடியும் என்றிருப்பதால், அதற்காக ஒரு கலையை உருவாக்கி மனவளம் எனப் பெயரிட்டு வழங்கி வருகிறார் மனதை அறிந்த அறிவின்-அறிவியலைத் தந்த அருட்தந்தை அவர்கள். மண்வளம் இருந்தால்தான் அதில் விளையும் பயிர்கள் நன்கு விளைந்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். அதுபோல் மனித மனங்கள் வளமாக இருந்தால்தான் மனித மனங்களில் மனிதம், ஊற்றுப் பெருக்கெடுத்து அதிகமாக வளரும்.

இப்பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வெப்பம், காற்று, குளிர் ஆகியவற்றின் நிலை சரியாக இருக்க வேண்டும். இதனை தட்ப வெப்பம்(climate), என்பர். சீதோஷ்ணம் என்றும் சொல்வதுண்டு.

எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கும் இப்பிரபஞ்சத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால் தான், இயற்கை அன்னை, இப்பூமியைத் தேர்ந்தெடுத்து உயிர்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. உயிர்கள் உருவாவதற்கு தட்ப வெட்ப சூழல் சரியாக இருந்ததுபோல், எல்லா உயிர்களும் துன்பங்கள் இல்லாமல் வாழ்வதற்கும் சூழல் தேவைப்படுகின்றது. அச்சூழலாகிய அன்பும், கருணையும் கொண்ட மனிதம் நிலவவேண்டும். அந்நிலையினை மனிதமனமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியப் பொறுப்பினை, இயற்கை மனிதனின் ஆறாம் அறிவிடம் தந்துவிட்டது. மனிதனிடம் மனிதம் மலரவேண்டும். மனமிருந்தால் மார்க்க முண்டு.

இதனைக் கருத்தில் கொண்டுதான், இறையே அறிவாகவும், மனமாகவும் உள்ளதால் மனதின் வளத்தை வளர்க்க, பெருக்க அறிவைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள அறிவின்–அறிவியலை உருவாக்கியுள்ளார் முதல் அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எனவேதான் அறிவின் இருப்பிடம் அறிந்தால் இன்புறலாம் என்கிறார் அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ‘அறிந்தது சிவம்(அறிவை) மலர்ந்தது அன்பு’ என்றுள்ளதால், ,அறிவின் இருப்பிடம் அறியும்போது மனித மனம், மனிதம் மலரக்கூடிய வளமாக மாறும்.

ஆகவே மனவளக்கலை, சிந்தனையைத் தூண்டி அதனால் எழும் எல்லா வினாக்களுக்கும் அறிவுப்பூர்வமான விடைகளை விருந்தாக அளிக்கின்றது.

1)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

2)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது

3)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது,

4)   துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

5)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

6)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது எனநினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரத்தையும், திறன்களையும் கூறுகின்றது.

7)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

8)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

9)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

10)  ஓழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

11)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

12)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

13)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

14)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

15)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

16)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

17)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

18)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

19)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

20)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

   இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infinite—எல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும். எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்ற திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று

     ‘என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

     அறிவே-தெய்வமாக இருப்பதால், அறிவை – தெய்வத்தை பயன்படுத்திக் கொள்வது என்பது ஆறாம் அறிவிடம் தான் உள்ளது. அறிவிற்கு மந்தம் நீங்கி அறிவில் தெளிவும், கூர்மையும் இருக்க வேண்டும். அறிவு சிந்திக்க வேண்டும்.

   சிந்தனை என்கின்ற உணவின் அவசியத்தையும், சிறப்பையும் கருதி சிந்தனை அறிவிற்கு விருந்து என அழைக்கப்படுகின்றது, அறிவுப்பசிக்கான உணவு சிந்தனையே. சிந்தனை செய்ய எந்த ஆராய்சிக் கூடமோ, கருவியோ அவசியமில்லை. உயிருள்ள, மனமுள்ள, அதாவது அறிவுள்ள மனிதன் சிந்திக்கலாம். அறிஞர்கள் தானாகவே சிந்திப்பர். சிலர் அறிஞர்களின் தூண்டுதலால் சிந்திப்பர். நாளடைவில் அந்த சிலரும் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவர். சிந்திப்பது அரிய கலை. சிந்திக்கப் பழக வேண்டும். சிறந்த சிந்தனை

 • அறிவிற்கு உயர்வை அளிக்கும்.

வாழ்க்கையில் தெளிவினை உண்டாக்கும்.

சிந்தனை இருளைப் போக்கி வாழ்வில் விளக்கேற்றும்.

• சிந்தனைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

சிந்தனை அறிவிற்குச் செல்வமாகும்.

சிந்தனை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கச் செய்யும்.

      சுவாசிப்பதை யாரும் விரும்பிச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கின்றது. அதுபோல் சிந்தனை செய்வது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாகிவிட்டால் மூச்சு விடுவது போல் சிந்தனையும் இயல்பாகிவிடும்.   அதற்கு ஒரு உதாரணம் வேதாத்திரி மகரிஷிகளாவார் மகரிஷி அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது தனக்கு நாளடைவில் பழக்கமாகி விட்டது என்கிறார் தனது வாழ்க்கை விளக்கத்தில். சிந்தனை   சுகம் தரும். சிந்தனை எவ்வாறு சுகம் தரும்? சிந்தனை தரும் சுகம்தான் பேரின்பம் என்பது. மகரிஷி அவர்கள் ‘பேரின்பம்’ என்பது என்ன என்றும் கூறும் அவா் இயற்றிய நூலின் வரிகளை நாம் நினைவு கூர்ந்து மகிழ்ந்து எப்போதும் நினைவில் கொள்வோம்.

   மகரிஷி அவர்கள் இயற்றி ‘LOGICAL SOLUTIONS FOR PROBLEMS OF HUMANITY’ என்கின்ற நூலில், மூன்றாவது அத்தியாயமான

Topic – 3 — PROBLEM NO. : 3

‘IGNORANCE OF HUMAN PHYSICAL AND PSYCHIC FUNCTIONS AND VALUES; NATURE OF PAIN AND PLAEASURE, THEIR TRUE CAUSES, NATURE OF THE MIND AND ITS MYSTIC AS WELL AS PERIPHERAL CAPABILITIES’ இல்

30   ஆம் பக்கத்தில்  இரண்டாவது பத்தியின்  கடைசி நான்கு வரிகளாவன:-

Rarely, when the mental wave expands and merges with the Gravity to realize its own functions in every thing and everywhere, it is felt as culmination of pleasure and satisfaction—that is ecstasy.

–    Bhagavan Vethathri Maharishi.

‘இந்த ஆங்கில நூல்தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ என தலைப்பு வழங்கப்பட்டு, மூன்றாவது அத்தியாயமான ‘மூன்றாம் சிக்கல்’ என்பதனை

                           அத்தியாயம் — 3 — மூன்றாம் சிக்கல்

‘மனித உடலும் மனமும் சார்ந்த செயல்களையும் மதிப்புகளையும் அறியாமை: இன்ப துன்பத்தின் இயல்பு; அவற்றிற்கான உண்மைக் காரணங்கள்; மனதின் தன்மையும் அதன் அகநிலை மற்றும் புறநிலை செயல் வல்லமைகளும்.’ எனத்தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் பக்கம் 23 இல் ‘ecstasy கான மொழியாக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

   இறைநிலையான மனஅலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக்காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே பேரின்பம்’ ஆகும்.

–     பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   எப்போது இந்நிலை கிட்டும்? அறிவு மந்தமாக இருந்தால் கிட்டாது. அறிவிற்கு ‘தேடுதலாகிய பசி’ ஏற்படும்போதுதான் இந்நிலை கிட்டும். அதாவது அறிவு ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் காரணகாரியம் அறியவேண்டும். எந்த ஒரு வாழ்க்கை நிகழ்ச்சியையும், ஆராய்ச்சி இல்லாமல் விட்டுவிடக் கூடாது. அரிய சிந்தனைகள் மனதில் மலர்ந்து அதனை வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு பொருத்திப்பார்த்து சரியென அறியும் போது அது பேரின்பமாக இருக்கும். எனவே அறிவிற்கு பசியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஆங்கிலப்புத்தகத்தில் பக்கம் 31 இல் முதல் பத்தியில் மகரிஷி அவர்கள் கூறுவதனையும் கவனிக்க வேண்டும்.

 It is not an easy task to try and explain the intricate functions and relationship between the bio-magnetic genetic centre, the brain cells and the mental wave, hampered by the restrictions of colloquial language. If one can understand these divine mystic phenomena through intuition cultivated by psychic practice and dedication, it is great fortune and achievement of lifelong satisfaction. Although such a deep comprehension is not possible for everyone, a general understanding would enable one to live with a new awareness of one’s evolutionary history and respect for self and all other living beings.”

–    Bhagavan Vethathri Maharishi.

   மேலே கூறப்பட்ட ஆங்கிலப்பகுதியின் தமிழாக்கம் ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ என்கின்ற நூலில் பக்கம் 24 இல் முதல் பத்தியில் பின் வருமாறு உள்ளது.

   “சீவகாந்தக் கருமையும், மூளையின் செல்கள், மனஅலை இவற்றிற்கு இடையேயுள்ள மறை புதிரான தொடர்புகளையும் செயல்பாடுகளையும் பேச்சு வழக்கில் உள்ள சொற்களால் விளக்க முற்படுவது கடினமான வேலையாகும். ஒருவர் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டு உளம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டால் கிடைக்கும் உள்ளுணர்வு மூலம் இவ்விதமான ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்ள முடியும்.   இது அவருக்கு வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும்.   இம்மாதிரியான ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான ஆற்றலைப்பெறுவது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும், ஒருவரின் பொதுவான அறிவு அவரின் பரிணாம வரலாற்றைப் புதிய விழிப்புணர்வோடு அறியச் செய்து, தன்னையும் மதித்து பிற உயிரினங்களையும் மதித்து வாழ வழி வகுக்கும்.

                        ….. பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

“தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டு உளம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டால் கிடைக்கும் உள்ளுணர்வு மூலம் கிடைப்பது வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும் என்கிறார். தவம் என்பது உளம் சார்ந்த பயிற்சி. அப்படியிருக்க தவம்” என்று நேரிடையாகச் சொல்லாமல் உளம் சார்ந்த பயிற்சிகள் என்று பன்மையில் கூறுகிறார். வேறு என்ன உளம் சார்ந்த பயிற்சிகள் உள்ளன?

   தன்னை எப்போதும் சோதித்துக் கொண்டே இருக்கக் கூடிய இரண்டொழுக்கப்பயிற்சியின் விரிவாகிய ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டேனா?’ என்கின்ற சோதனை.

   அடுத்த உளம் சார்ந்த பயிற்சி, மூச்சு போல், இடைவிடாத அர்ப்பணிப்போடு கூடிய சிந்தனை–மூச்சுமாகும். ஆழ்ந்த சிந்தனையே இறையிடம் பேசுவதுதானே!! ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்வது வாழ்நாள் முழுவதும் திருப்தி அளிக்கக் கூடிய மேன்மையான நற்பேறும் சாதனையுமாகும் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இத்தகைய திறன் இருந்ததால்தான் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த சின்னம்மாள், வரதப்ப முதலியார் தம்பதிகளுக்கு கி.பி. 14-08-1911 இல் பிறந்த குழந்தையை பின்னாளில் வேதாத்திரி மகரிஷியாக்கியது இயற்கை/இறை. அதுபோல் பலரை மகானாக்கும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது இயற்கையில். இது காலத்தின் கட்டாயம் இயற்கைக்கு.

ஆன்மீகச் செயல்களை புரிந்து கொள்வது என்பது   வாழ்நாள் முழுவதும்

1)   திருப்தி அளிக்கக்கூடியது,

2)   மேன்மையானது,

3)   நற்பேறானது,

4)   சாதனையானது என நான்கு பலன்கள் ஒன்று சேர்ந்தது என்று கூறுகிறார்.

சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் வாழ்நாள் சாதனையும், வாழ்நாள் முழுவதும் இத்தகைய பலன்கிடைக்கக் கூடிய செயல் ஒன்றே ஒன்றுதான். அதுதான்

ஆன்மீக வாழ்வின் அவசியத்தை உணர்ந்து,

வாழப்பிறந்த மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டு பிடித்து

   மகரிஷி அவர்களைப் போல் படிப்படியாக பேரின்பப் படிகளில் ஏறி வெற்றி பெறுதலாகும்.

   ‘ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான ஆற்றலைப் பெறுவது’ என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். எனினும்  “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று நம் எல்லோரையும் வாழ்த்தியும் வாழ்த்திக் கொண்டேயும் இருக்கிறார் என்பதனை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

   அனைவருக்கும் சாத்தியம் இல்லை என்பவர்களில் நாம் இல்லாமல், சாத்தியமாகும் ஒரு சிலரில் நாமாகவும் இருப்போம் என உறுதியாக நிற்போம். ஏனெனில் அன்றாடம் ‘மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்’ என்கின்ற சங்கல்பம் இயற்றி வருகிறோம். ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’ என்கின்ற வரிசையில் நிற்போம். மெய்ஞ்ஞானத்தில் வெற்றி பெற்று இந்த சமுதாயத்திற்கு ஒளிவிளக்காக திகழ்வோம்.

இத்தகைய ஆன்மீகச் சார்பான செயல்களைப் புரிந்து கொள்ளும் திறனை கைவல்யமாக்க அறிவிற்கு மிகுந்த அறிவுப்பசி இருக்க வேண்டும். அறிவுப்பசியின் முக்கியத்தை உணர்த்துவதற்காகவே இங்கு மகரிஷியின் கூற்று நினைவுப் படுத்தப்படுகின்றது,

    சிந்திக்க ஆரம்பித்து ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு முடிவில் விடை அனுபவரீதியாக காணவேண்டும். அதாவது தன்னை உணர்தலாகும்.

“தன்னை உணராத படிப்பு எதுவாயினும் பொருளற்றதே, தன்னை உணர, தன்னைத்தான் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே சித்த வித்தை. தன்னையறிவதே ஞானோதயம்—கைவல்லியம்!!” என்கிறார் தான் அருளிய சித்த வேதம்–மோட்ச சூத்திரத்தில் சித்த சமாஜ நிறுவகர் சுவாமி சிவானந்த பரமஹம்சர். அறிவுப்பசிக்கு இறையே இரை—விருந்து என்கின்ற புரிதலுடன் இன்றைய சிந்தனை விருந்தை முடித்துக் கொள்வோம். இணையதள சத்சங்கம், அறிவுப்பசியை மேலும், மேலும் தூண்டவும், நல்விருந்தாகவும் அமைய எல்லா குருமார்களின் அருளும், திருவருளும், அன்பர்களின் ஆன்மீக தாகமும் துணை நிற்குமாக.

அடுத்த விருந்திற்கு 22-07-2015 புதனன்று கூடுவோம்.

 

thanks_for_quenching_my_thirst_for_knowledge