வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்

31-10-2014

எண்: அ.வி.கா. 001-2-5

’பசி’ என்பதனை எல்லோரும் அறிவர். பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியாக இருக்கிறேன்.( I am hungry) என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு. அந்தப் பசிக்கு ”வயிற்றுப் பசி” எனப் பெயர் வைத்துள்ளோம்.

வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும். இதனை செய்வது யார்? நாமா?
வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை. பிறகு உணவு கூழாகி, ரசமாகி, ஏழுவித தாதுக்களாகி, பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு எது எது போய்ச் சேர வேண்டுமோ அதனைச் செய்வது யார்? நாமா? இல்லையே! இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது எனச் சொல்ல மாட்டோம். ஆனால் இதனைச் செய்வது இயற்கை. இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது, இது கருத்து என்றும் சொல்ல முடியாது. இது உண்மைச் சம்பவம். எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை. இந்த விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள் இந்த இயற்கையை இறை என்றனர். இயற்கைகையை இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்? காரணப் பெயராக இறை என்கின்றனர். இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை என்று கூறுகின்றனர்.
மீண்டும் வயிற்றுப் பசிக்கு வருவோம். உணவில் சாதாரண உணவும் உண்டு. விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில் உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்பபடும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கு சாதாரண உணவுதான் கிடைக்கின்றது. இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.

விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவுக்குழாய்க்குள் உணவைத் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியைச் செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து சிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்து உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே? தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில் ”அளவும்” (limit) முறையும் (method) அவசியம். இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.
இன்று காலை விருந்தில் வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம். தலைப்பு வயிற்றுப் பசி என இருந்தாலும், மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

  1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
  2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
  3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

நானை விருந்திற்குக் கூடுவோம். அப்போது அறிவுப்பசியைப் பற்றிச் சிந்திப்போம்.. வாழ்க வளமுடன்.

………………… தொடரும் நாளை