வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் – 1/5

FFC–97

வயிற்றுப்பசி

                                                                                 

 05-07-2015–ஞாயிறு

hunger and thirst for knowledge

 

 இந்த தலைப்பில் ஏற்கனவே சிந்தித்து இருந்தாலும், இன்னும் ஆழ்ந்து சிந்திக்கவே மீண்டும் இத்தலைப்பைஎடுத்துக் கொண்டுள்ளோம். ‘வயிற்றுப்பசியும்அறிவுப்பசியும்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனை முதலில் அறிந்து கொண்டு பிறகு சிந்தனைக்குள் செல்வோம். அனைவரும் அறிந்த துன்பஉணர்வான வயிற்றுப்பசியுடன், அறிவுப்பசி என்கின்ற துன்ப உணா்வினை (ஆன்மதாகம்) புதிதாகக் கண்டுபிடித்து ஏன்ஒப்பிடுகிறோம்? காரணம், தெரியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள, தெரிந்த ஒன்றுடன்தான் இணைத்து ஆறாம்அறிவு புரிந்து கொள்ள முயற்சி செய்யும்.   அறிவுப்பசி என்கின்ற வார்த்தை  புதிதல்ல. அருட்பிராகச வள்ளலார் அவர்கள் கூறும்  “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்கின்ற  மந்திரத்தில் உள்ள ‘பசித்திரு’ என்பதுதான் நாம் கூறும் அறிவுப்பசியாகும்.

சிந்தனைமலர்கள், சிந்தனைவிருந்து என்று பொதுவாக சொல்லப்படுகின்றது. ஆனால், நாம் இதனை அறிவிற்கு விருந்து என்றுதான் மொழிகிறோம்.  அப்படியானால் அறிவிற்கும் பசிஉண்டு, அதனைத் தீர்ப்பதற்கு  விருந்து  படைக்க விரும்புகிறோம் என்றாகிறது.

காலங்காலமாக பிறவிகள் தோறும் சேர்ந்து அதிகமாகி உள்ள அந்தக் கொள்ளைப் பசியினை அறிந்து, அதனை விரைவில் போக்க சாதாரண உணவுமட்டும் போதாது என்றுகருதி  அறிவிற்கு விருந்தாக அளிக்கவிரும்பி, ‘அறிவிற்குவிருந்து’ என்று மொழிகிறோம்.

எனவேதான் முதல் அறிவின் அறிவியலாளரான நமதுதந்தைக்கும் மேலான அருட்தந்தை அவர்கள் இந்த உலக சமுதாயத்திற்கு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்புறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார், இந்த அழைப்பினை  எந்த நாள் விடுத்தார் எனத் தெரியவில்லை.  ஏனெனில் சிலகவிகளில் கவியின் தலைப்பிலேயே  நாள் குறிப்பிட்டிருக்கும்.   இந்தக்கவியில் நாள் ஏதும் குறிப்பிடவில்லை.

அழைப்பை எவ்வாறு விடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்வோம்.  பசிதெரியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் அறிவைத்தட்டி எழுப்பி, இந்த மனிதகுலம் உய்ய வேண்டுமே என்று எண்ணி, “தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்” என்று அன்புடனும், உரிமையுடனும், அக்கறையுடனும் வினவுகிறார்.

anbargale vaareer-THAI

 பல்லாயிரம் பிறவிகளாக அறிவுப்பசியில்லாமல் அறிவு மந்தமாக இருந்து வருவதால் தின்றுதிரிந்துஉறங்கவாபிறந்தோம்?” என்று அன்புடன் அழைக்கிறார்.    விலங்குகள் உயிர்வாழ்வதற்கு உண்பது, உணவுதேடுவதற்காகத் திரிவது, இரவு வந்தவுடன் உறங்குவது ஆகியவைகளை மட்டுமே தான் அன்றாடம் செய்து வருகின்றன. ‘திரிவது’ என்றால் நோக்கம் ஏதுமில்லாது அலைவதாகும்.  விலங்குகள் எதற்காக திரிகின்றன? அவற்றிற்கு  நோக்கம் ஏதும் கிடையாது?  உணவு ஒன்றிற்காக மட்டுமே அலையும்.

அதே வார்த்தையான ‘திரிதல்’  என்பதனை பயன்படுத்தி மனிதனின் அறிவுநிலையதனை சுட்டிக்காட்டி, அறிவின் மந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்கு “தின்றுதிரிந்துஉறங்கவாபிறந்தோம்?” எனவினவுகிறார். அவ்வாறு வினவுவதோடு இல்லாமல் தின்று “திரிந்து உறங்கவா பிறந்தோம் என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்” என்கிறார்.  ‘ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியதால் ‘நாம் யார்?’ என உணர்ந்து கொண்டோம் என்று, நாம் அந்த நிலை எய்துவதற்கு முன்னரே நேர்மறை எண்ணத்துடன், நம்மையும் அவருடன் சேர்த்துக் கொண்டு ‘நாம் யார் என அறிந்து கொண்டோம்’ என்று பன்மையில் கூறுகிறார். எனவே அவரது விருப்பப்படி மனவளக்கலைஞர்கள் அனைவரும் தான் யார் என அறிந்தவர்கள்/அறியப்போகிறவர்களாகின்றனர்.

 வயிற்றுப்பசியாகிய துன்பத்தை போக்கி, இன்பத்தைஅனுபவிப்பதுபோல், அறிவுப்பசியினைப் போக்கிக் கொண்டால் இன்பநிலைக்கு மேலான பேரின்பத்தை அனுபவிக்கலாம் என்கிறார் அறிவின் அறிவியலைத்தந்துள்ள முதலாம் அறிவின் அறிவியலாளரும் உலகமக்களுக்கெல்லாம் திருவருள் பெற  அருளைத் தருகின்ற அருட்தந்தை அவர்கள்.

இதுவரை அறிவிற்கு பசி இருப்பது அறிவிற்கே தெரியவில்லை. அது எப்படியிருக்கும் என்பது தெரியாததால் தெரிந்த வயிற்றுப்பசியுடன் ஒப்பிட்டுப் பார்த்து தெரியாத அறிவுப்பசியை தெளிவாக விளங்கிக் கொள்ளவே இந்த தலைப்பை இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்டுள்ளோம். வாழ்கவளமுடன்.  இப்போது தலைப்பிற்குள் செல்வோம்.

‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  வினைச் சொல்லாக, பசி(hungry) என்பது உணவு உண்ண வேண்டும் என்கின்ற உணர்வு ஏற்படுதலாகும். பெயர்ச்சொல்லாக உணவு உண்ணத்தூண்டும் உணர்வு (hunger). என்பதாகும்.  பசி என்பது அறிவிற்கு உடலளவில் ஏற்படும் ஒரு துன்பஉணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. எனக்கு பசியாக உள்ளது(I am hungry) என்போம்.  அல்லது வயிறு பசிக்கின்றது என்போம்.  உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்பஉணர்வு.  அந்தப்பசிக்கு “வயிற்றுப்பசி” எனப் பெயர் வைத்துள்ளோம்.

பசி என்கின்ற துன்ப உணர்வு ஏற்படும்போது, அதனைப்போக்கிக் கொள்ள உணவின் மீது நாட்டம் எழுகின்றது.  தேவையை பூா்த்தி செய்து கொள்ள உணவின் மீது ஆர்வம் எழுகின்றது.  ஒன்றின் மீது விருப்பமும், ஆசையும் அதிகமாக இருக்கும் போது, அதனைத் தெரிவிக்கும்போது ‘பசி’ என்கின்ற சொல் ‘அதிக நாட்டம்’, ‘மிகுந்த விருப்பம்’ என்கின்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது,

வயிற்றுப்பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணிக்கப்பட்டு சக்கையை பிரித்து எடுத்து, உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழுவித தாதுக்களாகி, பிறகு எந்தெந்த உடல்உறுப்புகளுக்குப் போய்ச் சேரவேண்டுமோ அங்குபோய்ச் சேரும்.   சக்கை மலமாக வெளியேறும்.   உணவு உட்கொள்வதில், அளவு(Limit) மீறி அதிகமாகிவிட்டாலோ, முறை(Method) மாற்றப்பட்டாலோ அஜீரணம் ஏற்படும்.

ஞானத்திற்குரிய இலட்சணங்களில் முதன்மையானதான “இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும்” என்பதனை சின்ன வயதுக்குழந்தைகளுக்குக்கூட அறிவுறுத்துவதற்காக ‘பாடுபாப்பா’ என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள்  உணவு உண்பதில் அளவு வேண்டும் என எச்சரிக்கும்  பாட்டினை நினைவு கூர்வோம்.  ஏனெனில் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதாலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்கின்ற எதார்த்தத்தைக் கூறும் பழமொழி அறிவுறுத்துவதாலும் சின்ன வயதுக்குழந்தைகளுக்குக் கூட அளவைக் குறிப்பிடுகிறார்.  தேவையில்லாமல் அதிகம் சாப்பிட்டால் சுகத்தைக் கெடுப்பதை அறிந்திடுவோம்  என்றும் கூறுகிறார்.

paadu paappa  மேலும் வயிற்றுப்பசிக்கு அளவு மீறிய  உணவும், முறைமாறிய உணவும் அறிவுப்பசிக்கு தடையாக இருக்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் சின்ன வயதுக்குழந்தை வயதை கடந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்.  உணவே உடலாகவும், எண்ணமாகவும் மாறுவதால் சாத்வீக உணவு உட்கொள்வது யோகிகளுக்கு அவசியம். உணவைப் பற்றி யோகிகளுக்கு மகரிஷி அவர்கள் கூறுவது பற்றி அவரது கவியின் வழியாகவே அறிந்து இன்புறுவோம்.

 UNNum UNavu

 hunger

மேலும் உண்ட உணவு ஏழுவித தாதுக்களாகி உடலாய் மாறும் விந்தையை செய்வது தெய்வம் என்பதனையும் சின்ன வயதுக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறார் அதே பாடலில்.  பாடல் பின்வருமாறு:

paadu paappa_vunavai

உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு.  சாதாரண உணவும் பசியினைப்போக்கும்.  விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பலவகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில் உணவு செயற்கையாக ருசியைக் கூட்டி தயாரிக்கப்படும். சாதாரண உணவுதான் பெரும்பாலோருக்கு கிடைக்கின்றது.  அதுவும்கிடைக்காமல்,   மனித சமுதாயத்தின் ஒருபகுதியினர் செயற்கையாக்கப்பட்ட வறுமையில் வாடுகின்றனர் என்பது நாகரீகம் வளர்ந்துள்ள சமுதாயத்தில்  பெறும் கவலைக்குரியதாக உள்ளது.

விருந்து ஒருசிலருக்குத் தான் எப்போதாவது கிடைக்கின்றது.  சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால்தான் நாக்கு, உணவுக்குழாய்க்குள் உணவைத்தள்ளும் என்பது உண்மைதான்.  இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு.  ருசிக்காக உணவுஇல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது. ருசியைச் செயற்கையாக அதிமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

எனவே வயிற்றுப்பசிக்கு சாதாரண உணவே போதுமானது. ஆனால் அது சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். விருந்து கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் தினந்தோறும் விருந்து உண்ண முடியாது.  சலிப்பு ஏற்படும்.  விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவு தானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும்.  உணவு உண்பதில் “அளவும்”(limit)“முறையும்”(limit) அவசியம்.

இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.  இது வரை இத்தலைப்பு தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் அறிந்தோம்.  பசி என்பது என்ன என்றும் அறிந்து கொண்டோம். அடுத்த விருந்தில் இச் சிந்தனையின் முக்கியப் பகுதியான அறிவுப்பசி பற்றியும் மனவளக்கலை அறிவுப்பசியைத் தூண்டி அதுவே விருந்தாகவும் இருப்பது பற்றி அறிந்து கொள்வோம்.  வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. தொடரும் 08-07-2015.