வயிற்றுப்பசியும்அறிவுப்பசியும் — 3/5

FFC–99

அறிவுப்பசிஏற்படமருந்து (சென்றவிருந்தின்தொடர்ச்சி)

12-07-2015—ஞாயிறு

arumarundhu-virundhu

     சென்ற விருந்தில் அறிவு மந்தமாக உள்ளதால் அறிவிற்கு அறிவுப்பசி ஏற்படவில்லை என்று அறிந்து கொண்டோம். இன்றைய விருந்தில் அறிவிற்கு பசி இல்லையென்றால் பசியை உண்டாக்குவதற்கு மருந்து எது என்று அறிய இருக்கிறோம்.

அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை தயாரித்துள்ள மருந்தும், விருந்தும் தான் திருவேதாத்திரியம். தனக்கு எது பிரியமோ அதனை அறிவு அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கு இன்பம். இந்த இன்பநிலை அறிவிற்கு இல்லாததைத்தான் அறிவிற்கு அறிவுப்பசி இல்லை என்கிறோம். அறிவிற்கு அறிவுப்பசி இல்லாமைக்குக் காரணம் அறிவு அன்னமய கோசத்திலும், அதனை ஒட்டிய மனோமயகோசத்திலும் எண்ணமிட்டுக் கொண்டிருத்தலேயாகும்.

அறிவுப்பசிக்கு தேவையான இரை இறையேயாகும். பொதுவாக பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு உணவு தேவை. உணவைத்தான் மற்றொரு சொல்லால் ‘இரை’ என்கிறோம். இறையே எல்லாமாக இருப்பதால், எல்லாவற்றிலும் ஒன்றாகிய இரையும் இறையே. எல்லாமாகியுள்ள இறை, எல்லா உயிரினங்களாகவும் ஆகிய பிறகு, உயிரினங்களுக்குத் தேவையான உணவாகவும் அதுவாகத்தானே ஆகமுடியும்.

எப்படி சிலந்தி தன் எச்சிலைக் கொண்டே வலை பின்னிக் கொண்டு அதில் வசிக்கின்றதோ, அதேபோல் இறைவனும் தானே பஞ்சபூதங்களாகி, பஞ்சபூதங்கள் உடலாகி பிறகு உடலிலே இறையே உயிராகி, வசிக்கின்றான் அதனால்தான் இறைவன் உடலுக்குள்ளே வசிப்பதால், ஆங்கிலத்தில் ‘Indweller’ என்கின்ற பெயரும் உண்டு. இறை தன்னையே உயிரினங்களாக்கிக்கொண்டது. பிறகு அவற்றிற்கான உணவை வேறு எங்கிருந்து ஏற்பாடு செய்யும்? ‘ஒன்றே பலவாகிய’ அரும்பெருமையைக் கொண்டதாலும், ‘எல்லாமே ஒன்றே’ என்கின்ற தொகுத்தறியப்படும் பொருளானதால், இறையே இரையாகவும் உள்ளது. அத்வைத விஞ்ஞானத்தை ரசித்து மகிழவே இந்த விளக்கம்.

ஆகவே அறிவுப்பசிக்கு இரை இறையே. இறைப்பசி இருப்பதற்கான அடையாளம் ‘நான் யார்?’ என்கின்ற வினா அறிவிற்கு எழுதலாகும்.

அவ்வினாவிற்கான விடை அறிவிற்கு தெளிவாகி வரும்போது வாழ்வின் நோக்கம் அறிவிற்கே புரிந்து வருதலாகும். பிறகு ஏற்கனவே அறிவு மேற்கொண்டு வரும் ‘இறையைத் தேடும் பயிற்சியில்’ (இறை வேட்பு) முன்பு இருந்ததைவிட ஈடுபாட்டினை அதிகமாக்கிடல் வேண்டும்.

தனக்குப் பிரியமானதை அறியாமல், அதற்கு வழியும் தெரியாமல், பிரியமில்லாததை அறிவதிலேயே காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு மனித உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி. அறிவிற்கு தன்னை அறிவதில் ஆசை வந்துவிட்டால் தன்னை முழுமையாக அறிகின்ற வரை அதற்கு ஓய்வு என்பதே இல்லை. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” என பாரதியார் கூறியதுபோல் அறிவு புலன்களுக்கு அடிமையாகியுள்ளதை அறிந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திரம்/விடுதலை(Liberation) பெறவேண்டும் என்கின்ற ஏக்கம் மனித அறிவிற்கு ஏற்பட வேண்டும். அறிவு, என்று தன்னை உணா்கின்றதோ, அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழுவிருந்து. வயிற்றுப் பசியினைத் தீர்க்கும் உணவு, ஒரு நாள், நிச்சயமாக அழியக்கூடிய உடல், வளர்வதற்கும், உடலைப் பராமரிப்பதற்கும், உடலை இயக்குவதற்கும் உதவுகின்றது, வயிற்றுப் பசிக்கான உணவு அதிகமானால் அஜீரணமும், சலிப்பும் உண்டாகும். ஆனால் அறிவுப்பசியைத் தீர்க்கும் சிந்தனை–உணவு அறிவை வளர்ப்பதற்கும், அறிவு மேம்பட்டு முழுமை அடைவதற்கும் உதவியாக உள்ளது. அறிவுப்பசிக்கு உட்கொள்வதில் சலிப்பும், அஜீரணமும் ஏற்படுவதில்லை. மாறாக அறிவுப்பசிக்காக உட்கொள்ளும் விருந்து தன் வம்சாவளிக்குப் போய்ச் சோ்கின்றது.

எப்படியெனில் அறிவுப்பசிக்காக உட்கொண்ட சிந்தனை–உணவு,
வயிற்றுப்பசிக்காக உட்கொண்ட உணவில் ஒருபகுதி அழிகின்ற உடல் தேவைக்குப் போக, மீதமுள்ளது சக்கையாகி மலமாவதுபோல் அல்லாமல்,
அழியாத ஆன்மாவில் பதிந்து, தரமேன்மைக்கு உதவுவதால், ஆன்மா அந்தப்பிறவியிலேயே தரமேன்மையின் பலனை அடைவதற்கும்,
அவ்வாறு ஒருவேளை அடையமுடியாமல் போய்விட்டாலும், அந்த பலனை அடைவதற்கு, மற்றொரு பிறவி தேவைப்படுகின்றது என்றால் தனக்குப்பிறகு வரும் தன் வம்சாவளிக்கு, கருமையப்பதிவுகளாகச் செல்கின்றது.

வயிற்றுப்பசி உணர்வு ஏற்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? வயிறு தன் இயல்பு நிலையை இழந்து விட்டது என்று பொருள். அதனை நோய் என்றும் கோளாறு என்றும் அழைக்கிறோம். இயல்பு நிலையை இழந்துவிட்டக் கோளாறினை சரி செய்ய மருத்துவரிடம் சென்று முறையான மருத்துவம் செய்துகொண்டு வயிற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து குணமடைகின்றோம்.

  • அது போல் அறிவுப்பசியே இல்லை என்றால் என்ன பொருள்?
  • அறிவு தன் இயல்பு நிலையில் இல்லை என்று பொருள்.
  • அறிவு தன் இயல்பு நிலையி்ல் இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்?
  • ‘எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம்’ என்கின்ற ஆதங்க புதிராக உள்ளது மனம். அதாவது தெய்வமே மனமாக இருந்தும் மனம் தெய்வமாக செயல்படவில்லை என்பதுதான் அந்த ஆதங்கப் புதிருக்கான விடை. மனதின் அந்நிலையை மாற்றி தன் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அறிவிற்குப்பசி அவசியம்

இயல்பு நிலை என்றால் அறிய வேண்டியதை அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒன்றும் தன் இயல்பு நிலையில் இல்லை என்றால் என்ன பொருள்? அந்த ஒன்று தன் சரியான பணியால், தன் இயக்கத்தை சரியாக செய்யவில்லை என்பதாகும். எனவே அறிவிற்குப் பசி இல்லையெனில் அறிவு தன் இயல்பு நிலையில் இல்லை என்பதாகின்றது. அறிவின் இயல்பு நிலை என்பது என்ன என்கின்ற வினா எழுகின்றது. அறிவு எதற்காக உயிரிடம் உள்ளது? உயிர்கள் உணர்வதற்கு அறிவு இருக்கின்றது. புலன்கள் மூலமாக அறிவு, பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், சுவை, ஒலி, ஒளி, மணம் ஆகிய ஐந்தையும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஐந்து உணர்வுகளைப் பெறுவதற்காக பேரறிவு, ஓரறிவிலிருந்து தொடங்கி ஐந்தறிவு விலங்கினம் வரை தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது. அதற்கு மேலும் பேரறிவு ஏன் மனிதனாக தன்மாற்றம் அடைந்தது? இந்த வினா தான் ஒவ்வொரு மனிதனிடம் தானாகவே எழ வேண்டிய வினாவாகும். இந்த வினா எழுவதைத்தான் அறிவுப்பசி என்கிறோம். இந்த அறிவுப்பசி வினா தானாகவும் எழலாம். அவ்வாறு அறிவுப்பசி எழுந்தால் அறிவு இயல்பு நிலையில் உள்ளது என்று பொருள். அதாவது அறிவு அறியவேண்டியதை அறியத் தயாராகிவிட்டது என்று பொருள்.

இந்த வினாவாகிய அறிவுப்பசி ஏற்படவில்லை என்றால் அறிவு மந்தமாக உள்ளது என்று பொருள். அறிவுக்கூர்மையாக இல்லை என்று பொருள். அந்த அறிவின் மந்த நோயைப் போக்க என்ன செய்வது? இயற்கை அளித்துள்ள திருவேதாத்திரியம் என்னும் அருமருந்தை உட்கொள்ள வேண்டும். திருவேதாத்திரியம் எனும் அருமருந்து. அறிய வேண்டியதை அறியாது மந்த நிலையில் இருக்கும் அறிவிற்கு பசியையும் ஏற்படுத்தி, இயற்கை மருத்துவத்தில் ‘உணவே மருந்து’ என்பதுபோல், திருவேதாத்திரியம் அருமருந்தாகவும் செயல்பட்டு, அதுவே விருந்தாகவும் அமைகின்றது. முதலில் அறிவுப்பசியை ஏற்படுத்தும் மருந்தாகவும், பிறகு விருந்தாகவும் அமைந்துள்ளது இயற்கை அளித்துள்ள மனவளக்கலை யோகா.

Unave_Marundhu

மருந்து என்பது மருவி+உந்து= மருந்து என்றாகியுள்ளது. ‘மருவி’ என்றால் மாற்றமடைதல் என்று பொருள். ‘உந்து’ என்றால் தூண்டுதல் என்று பொருள். பொதுவாக இயற்கையில் தானே நோயை சீர்படுத்திக் கொள்ளும் திறமை உள்ளது. சில நேரங்களில் அது இயலாதபோது நோயைக் குணப்படுத்துவதற்கு வெளியிலிருந்து மருந்து என்கின்ற பொருள் தேவைப்படுகின்றது. மருந்து என்கின்ற பொருள், இயல்பாக உள்ள நிலை சீர்கெட்டு இருப்பதனை, மாற்றி, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தூண்டுதலாக இருப்பது.

மருத்துவ இயலில், வயிற்றுப்பசியின்மையை நோய் எனக்கருதப்படுகின்றதோ அதுபோல் அறிவின்-அறிவியலில் அறிவுப்பசியின்மை நோயாகக் கருதப்படுகின்றது. அது பிறவிப்பிணி என்றும் சொல்லப்படுகின்றது. ஆன்மா பேரான்மாவுடன் முன்பிறவியிலேயே இணைய வேண்டியது முன்வினையின் மிச்சத்தினால் இப்பிறவி எடுத்துள்ளதை ஆன்மாவிற்குப் பிணி என்றே கொள்ளப்படுகின்றது ஆன்மீக—அறிவியலில். ஆகவே அறிவுப்பசியின்மையாகிய நோயைக்குணப்படுத்த, அதாவது வெளியிலிருந்து மருந்து கொடுக்கபட வேண்டியுள்ளது. அது பசியை ஏற்படுத்தும் நல்ல நிவாரணியாக Good appetiser ஆக இருக்க வேண்டும். அத்தகைய அறிவிற்கு பசியை ஏற்படுத்தும் நல்ல நிவாரணி–Good appetiser மனவளக்கலையாகும்.

பருப்பொருளான உடல் உறுப்புகளில் உள்ள நோயைக் குணப்படுத்த வெளியிலிருந்து கொடுக்கப்படும் மருந்தும் பருப்பொருளாகவே இருக்கும். ஆனால் அரூபமான அறிவிற்கு கொடுக்க வேண்டிய புறமருந்து பருப்பொருளாக இருக்காது. மனவளக்கலை அறிவுப்பசிக்கு அருமருந்து என்கின்றபோதே அது பருப்பொருள் வகை மருந்தைச் சார்ந்ததல்ல எனத் தெரிகின்றது.

அரூபமான அறிவிற்குப் பசி ஏற்படின், அதற்கான இரை இறையே என்பதிலிருந்து, அறிவுப்பசிக்கான விருந்து அறிவின் தர மேன்மையை வளா்த்து, உயர்த்தி அறிவு ஆட்சி செய்யும் அறிவாட்சித்தரத்தின் உச்சத்திற்கே அழைத்துச்செல்லும் என்பதாகின்றது. ஆகவே மனவளக்கலை, மந்தமாக இருக்கின்ற அறிவை, அதாவது அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரு கோசங்களிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்து வயிற்றுப்பசியினை மட்டுமே தீர்த்துக் கொண்டிருந்த அறிவை முதலில் பிராணமய கோசத்திற்கு அழைத்துச் செல்லும். இதனால் அறிவிற்கு அறிவுப்பசி இல்லாமல் இருந்த நோயிலிருந்து உந்தித்தள்ளி, விடுவித்து, அறிவிற்கு அறிவுப்பசியினை ஏற்படுத்தும். எனவேதான் மனவளக்கலை அறிவுப்பசியினை ஏற்படுத்தும் மருந்தாக செயல்படுகின்றது என்கிறோம். மனவளக்கலை, அறிவிற்கு ஆரோக்கியமான, நல்ல, சத்சங்கத்தை ஏற்படுத்தித் தருகின்றது. நற்சிந்தனையை வளர்க்கின்றது. அவ்வையார் கூறும் இனிதிலும் இனிதான நல்லோர் இணக்கத்தைத் தருகின்றது. நல்லோர் இணக்கத்தால், நல்ல பல அறிவுரைகள், ஆலோசனைகள் கிடைக்கின்றன. அவை,

  • அறிவை, இதுவரை காற்றடிக்கும் திசையில் செல்லும் பாய்மரக்கப்பல் போன்று
  • மனம் போன போக்கில் புலன் வாழ்க்கையே பிரதானமாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த பாமரத்தனத்திலிருந்து விடுவித்து,

அறிவு ஆட்சி செய்யும் அறிவாட்சித்தரத்தின் உச்சத்தை அடைந்து மனித மாண்பினை வெளிப்படுத்துகின்றது. புலன் வழி வாழ்கின்ற பாமரனை மனித மாண்பினை அளிக்கக் கூடிய அறிவாட்சித்தரத்திற்கு உயர்த்துவதால், மனவளக்கலை அருளிய, முதன் அறிவின் அறிவியலாளரான பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாமர மனிதனின் தத்துவ ஞானி– Common man Philosopher என்று அன்புடனும், பிரியமுடனும், பயனாளிகளான அவருடைய மாணவர்களால் மகிழ்ச்சி பொங்க அழைக்கப்படுகின்றார். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

ஒரு நாட்டின் பிரதம மந்திரி யார் என்று கேட்டால், அந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அறிவர். அந்த நாட்டு மக்கள் அறிந்திருப்பதோடு அல்லாமல், வேறுநாட்டுமக்களும் பொது அறிவாக அறிந்திருப்பா் ஆனால் கடவுள் என்பவர் யார் எனக் கேட்டால் பெரும்பாலோருக்குத் தெரியாது. இதுபோன்ற வினாவினை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில், இறைவன் என்பவர் யார், இறைவழிபாடு என்றால் எப்படி இருக்க வேண்டும், ஆன்மீகம் என்றால் என்ன என்றும், ‘நான் யார்?’ என்கின்ற ஆன்மீகத்தின் மிகச் சிறந்த வினாவிற்கான விடையை கருத்தியலாகவும், அதனை அனுபவபூர்வமாக அறிய செய்முறை பயிற்சிகளையும் அளிக்கின்றது மனவளக்கலை.

   இறைஉணர் ஆன்மீகத்தில் மிகச்சிறந்த வினாவான ‘நான் யார்?’ என்பதற்கு அனுபவபூர்வமாக விடைகிடைத்தலே ஆன்மீகத்தின் இறுதி வெற்றி. இந்த வெற்றிக்கு ஆறாம் அறிவு அறிய வேண்டியவைகளை அறியாமல் இருக்கின்றது.

 நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், எங்கு செல்லப்போகிறேன். ஏன் துன்பம் வருகின்றது. இந்த பிரபஞ்சத்தை யார் படைத்தது, இந்த பிரபஞ்சத்திற்கு மூலம் எது என்கின்ற அறிவுப்பூர்வமான வினாக்கள் எழாமைதான் அறிவுப்பசியின்மையாகக் கருதப்படுகின்றது அறிவின்-அறிவியலில். இவ்வாறு சிந்திக்காமல், அறிவுப்பசியில்லாமல் இருக்கும் அறிவிற்குள்ள மந்த-நோயினைத் தீர்ப்பதற்கான ஏற்ற மருந்து மனவளக்கலை. ஏனெனில் மனவளக்கலை அறிவின் மந்த நிலையைத் தூண்டி விடுவதற்கு அதனைச் சிந்திக்க வைக்கின்றது.

அதனால்தான் மகரிஷி அவர்கள் ‘Information, Confirmation, Transformation என்கின்ற மந்திரத்தைச் சொல்லி, அவர் சொல்வதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், சிந்தித்து உறுதி படுத்திக் கொண்டு, அதுபோல் மாற்றம் பெறுங்கள் என்கிறார். ஆகவே இவ்வுலக மக்களின் அறிவுப்பசியினைத்தூண்டக்கூடிய அருமருந்து மனவளக்கலை. அடுத்த விருந்தில் தூண்டப்பட்ட அறிவுப்பசிக்கான விருந்து மனவளக்கலை என்பதனை சிந்திக்க இருக்கிறோம். அடுத்த விருந்தில் 15-07-2015 புதனன்று சத்சங்கத்தில் கூடுவோம்.