FFC – 133-யோகவாழ்வு வாழ்வோம் – 2/3

வாழ்க மனித அறிவு                                           வளர்க மனித அறிவு

யோகவாழ்வு வாழ்வோம் – 2/3

 FFC – 133

04-11-2015-புதன்

‘நான் யார்?’ என்கின்ற இயற்கை இரகசியம்:

மனிதன் வேறு, இயற்கை வேறா? அல்லவே! இயற்கையின் ஒரு மிகச் சிறிய அங்கம் தானே மனிதன். ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குடும்பத்தலைவன் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் போது, பொறுப்புள்ள மகன், மகள் குடும்பச்சூழலை உணர்ந்து, தந்தையுடன் சேர்ந்து உழைத்து பொருளாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவதில்லையா? இது நடைமுறையில் நடக்கவில்லையா? தந்தையைக் குறை சொல்கிறார்களா பிள்ளைகள்? அதுபோல்தான் இயற்கை அன்னையுடன் அதன் மகன்கள், மகள்களான நாமும் சேர்ந்து, இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ, அதனைத் திட்டமிட்டு செயலுக்கு கொண்டுவர வேண்டும்.

செயல் மனிதனுடையதாக இருக்கும் போது இயற்கையின் நியதிப்படி விளைவை இயற்கை தருமல்லவா? இந்தச் சமுதாயம் உய்வதற்கான வழிகளை வேதாத்திரி என்கின்ற திருமகனார் வழியாக சமுதாயச் சிக்கல்களையும் கூறி, அதற்கான தீர்வுகளையும், இயற்கை அன்னை அருளியுள்ளாள். அதனை நாமெல்லோரும் முதலில் எண்ணத்தால், இதயத்தால் ஆமோதிக்க வேண்டும்(endorse). ஆமோதித்தலின் வலிவு அதிகமாக அதிகமாக திணிவு பெறுவதால், இயற்கை தன்னுடைய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது எளிதாகிவிடும் (Fraction demands. Totality supplies.) இயற்கை அன்னையும் நம் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி எதனையும் செய்யமாட்டாள்.
இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலை(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கே உண்டு.

இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்றார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறை (proto type) உற்பத்திதான் (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது.

‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே ஆதங்க எண்ணங்கள் வலுப்பெற்றால்தான் பூரணத்துவமாகிய இயற்கையின் மனிதகுலத் தன்மாற்றம் பூரணத்துவம் பெறும்.

மனிதன், “கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்” என்கின்ற பாடல் வரியின் மூலம், அறியாமையிலும், அறிந்தும் மனிதன் செய்கின்ற செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றவனாக இறைவனேதான் இருக்கிறான்” என்கிறார் மகரிஷி அவர்கள்.

ஆனால் இறையை உள்ளத்திலே வைத்துக்கொண்டுள்ள நற்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது.

இங்கே ஆழ்ந்து சிந்தித்தால் இயற்கை ஏன் மனிதனாக வந்தது என்று தெரியவரும். அதுவேதான் மனிதப் பிறவியின் நோக்கமும், அந்த நோக்கத்திற்கேற்ப வாழ்தலால் அடைகின்ற பயனுமாகும்.
இயற்கை ஓரறிவிலிருந்து ஐயறிவு வரை சீவ இனங்களாக தன்மாற்றமாகி வரும்போது ஒவ்வொரு புலன் உணர் கருவிகள் கூடிக் கொண்டே வந்தது தெரிய வருகின்றது. ஆனால் ஆறாம் அறிவாக வரும்போது புலன் உணர் கருவி ஏதும் உருவாகவில்லை. புலன் உணர் கருவி ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவிற்கு புலன்கள் வழியாக ஏதும் உணர்வதற்கில்லை என்பதும் தெரிய வருகின்றது. ஆனால் ‘தான் ஆறாம் அறிவுடையவன்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் உயிரினமான மனிதனாக வந்துள்ளது இயற்கை. இதற்கு என்ன காரணம்?

இயற்கையில் எதற்கும் காரணமில்லாமல் இருக்காது. எல்லா இரகசியங்களையும், காரணங்களையும் ஆறாம் அறிவு அறிய முடியாவிட்டாலும், வாழ்க்கைக்கு அவசியமானதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சோ்ந்தது தான் நான் யார் என்கின்ற இயற்கை இரகசியமும்.

FFC-133-நான் யார் படம்

ஐந்தறிவு சீவன்கள் வரை உருவாகிய புலன் உணர்க்கருவிகள் புற நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை மட்டுமே உணர்வதற்காக உருவாகியது. ஆனால் ஆறாம் அறிவிற்கு எனத் தனியாக புலன் உணர்க்கருவிகள் உருவாகாவிட்டாலும், புலன்களின் உதவியின்றி, ஆறாம் அறிவு உணர வேண்டியது இருக்கின்றது.

பேரறிவு ஒரறிவிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஆறு அறிவு வரை வந்துள்ளதால், ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை உணர்வதற்கென்று தனித்தனியாக, தொடுஉணர்வு, சுவை உணர்வு, ஒலி உணர்வு, ஒளி உணர்வு, நுகர் உணர்வு என்று ஐவகை உணர்வுகள் இருந்தது போல் ஆறாம் அறிவிற்கு உணர்வதற்கென்று உணா்வு இருக்கின்றது. அதனை உணர்ந்தே ஆக வேண்டும் ஆறாம் அறிவு. அந்த பிரத்யேக உணர்வை பெற்றால்தான் மனிதன், வள்ளுவர் கூறும் பிறப்பாகிய பெருங்கடலில் நீந்தி கரை சேர முடியும். மனக் கவலையையும் மாற்ற முடியும்.

FFC-132- குறள்- படம்

இந்த இரண்டு குறளிலும் “இறைவன் அடி சோ்தல்” என்றும், “தாள்சோ்ந்தார்க்கு அல்லால்” என்றிருக்கின்றது. அதன் பொருள், அரூபமாகிய இறையினுடைய “பாதங்களைச் (அடி,தாள்) சோ்தல்” என்பதன் பொருள், பின்னப்பட்ட (Fractioned) அரூபமாகிய சிற்றறிவு, அகண்ட அரூபமாகிய பேரறிவுடன் ஒன்றிணைதலாகும். இது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் – அறிவு முழுமை அது முக்தி” என்பதாகும்.

அந்த பிரத்யேக உணர்வு என்பது, புறத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகத்தையும் உணர்வதாகும். அகத்தை உணர்வதற்கு புலன்கள் தேவையில்லை. ஏன்? புறத்தே காணப்படுபவைகள் எல்லாம், பரிமாணங்களைக் (DIMENSIONS) கொண்ட (shape and image) பருப்பொருட்களும், அதிலிருந்து வரும் நிகழ்ச்சிகளாகும். எனவே புற உணர்விற்கு புலன்கள் தேவையிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காகத் தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது.

அகமாகிய உள்ளத்தில் எந்த பருப்பொருளும் இல்லை.
மாறாக அரூபம் ஆனால், பருப்பொருள் உருவாகக் காரணமாக இருந்த மெய்ப்பொருளாகிய பேரறிவே
மனதின் மறுமுனையான உள்ளமாக உள்ளது.
எனவே அரூபமாகிய ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காக வந்துள்ளதால், அதற்கெனப் பிரத்யேகப் புலன் ஏதும் உருவாகவில்லை.

ஆகவே விலங்கினங்கள் வரையில் புற நிகழ்ச்சிகளை உணர்ந்த பேரறிவு மனித வடிவில், புற நிகழ்ச்சிகளுக்கான காரணம் என்ன, அவற்றின் மூலமும், முடிவும் என்ன, அவை எவ்வாறு உண்டாகின்றன என அறிந்து வாழ்வதுதான், இயற்கை ஆறாம் அறிவாக மலர்ந்ததன் நோக்கம். இயற்கையே/இறையே, அறிவாக வந்துள்ளதால் நான் என்பது அறிவே, ‘நான் பார்க்கிறேன்’ என்கின்ற செயலில் யார் பார்க்கின்றது? அறிவுதானே பார்க்கின்றது. அப்டியானால் நான்=அறிவு என்கின்ற சமன்பாடுதானே வருகின்றது. ஆகவே நான் என்பது அறிவு. அறிவு இயற்கையின்/இறையின் ஆதிநிலையைிலிருந்து வந்துள்ளது. அப்படியானால் இயற்கையேதான்/இறையே தான் நானாக உள்ளது. இயற்கை/இறை நானாக (oneself) இருப்பதோடு மட்டுமல்லாது உலக மக்களாகிய 720 கோடி நான்களும் இயற்கையே/இறையேயாகும். இயற்கையே ‘நானாக’ இருப்பதால், ’நானின்’ (aim of Self)நோக்கமும் இயற்கையின் நோக்கமும் ஒன்றேயாகும். இவ்வாறாக நான் யார் என்கின்ற வினாவிற்கு விடை கருத்தியலாக அறியவேண்டும். அடுத்த விருந்தில் (08-11-2015) சிந்தனையைத் தொடர்வோம்.

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு