மனிதத் தேர்வு

30-10-2014

உயிரினப் பரிணாமத்தில் விலங்கினமாக வந்த உயிர்தான் பின்னர் சடுதி மாற்றத்தால் மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும். இதுதான் மனிதம் எனப்படுகின்றது. மனிதம் இருந்தால்தான் அவன் மனிதன்.
ஆகவே ஆன்மா தன் பரிணாமச் சுழற்சியை முடித்துக் கொள்ள தன்னை தூய்மைப் படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்துவிட வேண்டும். இதற்காகவே தான் மனிதப் பிறவி. ஆன்மா பிறவி எடுத்த பிறகு மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது. மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.
கல்வித் தேர்வில், பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள் வரை எடுக்கலாம். எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிவதில்லை. ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதனை யாவரும் அறிவர். தேர்ச்சி பெற்றால் தான் அந்த கல்வித் தகுதியை வைத்து வேலை கிடைத்து வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை ஈட்டி நிறைவாக வாழமுடியும்.
அதேபோன்றுதான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத் தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுத்துவதில், தேர்ச்சி பெற வேண்டும். அதுவும் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான். நடைமுறையில் அப்படி இல்லை. ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத் தேர்வில் தேர்ச்சி பெறமுடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெற முடிவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களுக்கும்(நாற்பது விழுக்காடு) கீழ் பூச்சியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.
இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர் தான் அறிஞர் அல்லது ஞானி. எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட நல்ல வேலை கிடைத்து பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ வாழ்க்கையில் அதுபோல் kspjமனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்த ஞானியால் இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்பம், பெற்று வாழமுடிகின்றது.
மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தான் நுகரலாம். நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா, துன்பமில்லாப் பேரின்பத்தைப் பெறமுடியாது.
மனிதத்தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள். அவர்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டும். கல்வித் தேர்விலாவது மீண்டும் ஒரு முறையோ அல்லது இரண்டு அல்லது மூன்றாவது முறையோத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது. ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை (பிறவி) எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை. இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்;தின் அமைதியின்மைக்குக் காரணம்.
இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையிருந்தது இயற்கைக்கு. இப்போது இயற்கை கருணையோடு அளித்ததுதான் வேதாத்திரியம்.
வேதாத்திரியம்
1) மனிதத்தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி, அதாவது மனிதத் தேர்வில் 40-99 மதிப்பெண்கள் எடுக்க வைப்பது.
2) பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பதுபோல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது.
ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனிதசமுதாய வாழ்க்கையில் புரையோடிக்கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும் மற்றும் தேவையற்றவைகளை அடியோடு நீக்கி புதிதாக நலம் தரும் அறிவு பூர்வமானப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்க வாழ்வு மலர்வதற்கு (revamp), இயற்கை கொண்டுவந்த திட்டம்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது. எனவே இந்த வேதாத்திரியத்தை வாழ்த்துவோம். வணங்குவோம்.

வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.