25-மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 4/?

வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

 

மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 4/?FFC  – 25

 

நேற்றைக்கு முந்திய நாள் தொடர்ச்சி

 

22-11-2014

    மகரிஷி அவா்களின் உள்ளத்தில் எழுந்த மகோன்னத வினாக்களுக்கு இயற்கை அளித்த  விடைகளைப்பற்றி ஆராய்வோம். அவரது உள்ளம் பன்னிரண்டு வயதிற்குள் எப்போதும் எழுப்பிக்கொண்டயிருக்கத் தொடங்கிய வினாக்களை மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வோம்.

1)    இன்பம் துன்பம் என்பது என்ன? இவற்றின் ஆரம்பமும். இறுதியும் என்ன?

2)    உயிர் என்பது என்ன? அதனுடைய இயக்கம் உடலில் எவ்வாறு நடக்கின்றது?

புத்தருக்கு வினாக்கள் எழுந்தது போல், நோயும். முதுமையும் ஏன் வருகின்றன என்கின்ற வினாக்கள் எழுந்தன?

3)    தெய்வம் என்பது யார்? அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?

4)    வறுமை ஏன் வருகின்றது? அதைப் போக்குவதற்கு வழி என்ன?

அவரது முதல் வினாவிற்கு, இயற்கை அளித்த விடையினை இன்றைய விருந்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இன்பம் துன்பம் என்பது என்ன?

   எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்போம்(life is to enjoy) .காரணம், இன்பம் மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு. மகிழ்ச்சியைத் தரும். ஆனால் துன்பம் என்பது இன்பம் என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். எனவே துன்பம் என்பது மனதுக்கு மகிழ்வைத் தராத உணர்வு. மனதை வருந்தச் செய்யும் உணர்வு. இன்மை என்றால் இல்லாதிருக்கும் என்று பொருள். ஆகவே துன்பம் இன்மையை இன்பம் என்கிறோம்.

   எல்லோரும் இன்பத்தையே விரும்பினாலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று வரை (1911+12=1923)எவருமே  இன்ப-துன்பம் ஏன், எவ்வாறு வருகின்றன என்கின்ற வினாவை எழுப்பியதில்லை. ஆனால் மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினா எழுந்துவிட்டது,

   இன்பம் துன்பம் என்பது என்பது பற்றி இப்போது சிந்தித்துப்போம்.   இன்பம், துன்பம் என்பது விளைவுகள். அதாவது இன்பம் துன்பம் என்பது செயல்கள் அல்ல. செயல் என்று ஒன்று இருந்தால் அதற்கு விளைவு நிச்சயம் உண்டு. அந்த விளைவின் தன்மை செயலைப் பொருத்து இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ இருக்கும். செயல் மனிதனுடையது. விளைவைத் தருவது இயற்கை அல்லது இறை. இது இயற்கை நீதி. விளைவு இல்லாது செயல் இல்லை. இது ஒரு விளக்கம் இன்ப துன்பத்தைப் பற்றி. இன்னொரு விளக்கம் இன்ப துன்பத்தின் விஞ்ஞானத்தைக் கூறுகின்றது.

   வேதங்களில் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றன. இதனை விளக்குவதற்காகக் கூறப்படும் உதாரணத்தைப் பார்ப்போம். நாய் தெருவில் உள்ள காய்ந்த எலும்பைக் கடிக்கும் போது, எலும்பு நாயின் ஈறைக்(gum of the teeth)குத்தி, ஈறிலிருந்து வரும் இரத்தத்தை காய்ந்த எலும்பிலிருந்து இரத்தம் வருவதாக நினைத்துச் சுவைக்கும்.. அது போல் மனிதன் இன்பம் புறப் பொருட்களில் உள்ளதாக நினைத்துக் கொண்டு புறப் பொருட்களை நோக்கி அலைகிறான், தேடுகிறான், சொந்தமாக்கிக் கொள்கிறான். அனுபவிக்க நாட்டம் கொள்கிறான்.

   ஆனால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தது இறுதியில் துன்பமாகிவிடுவதனை அனுபவத்தில் பார்க்கிறோம். காரணம் என்ன என்று வினவவில்லை. வினவியிருந்தால், காரணம் அச்செயல் அளவுமீறியும், முறைமாறியும் இருப்பதால் துன்பம் வருகின்றது என்கின்ற விடை கிடைத்திருக்கும்.. இதில் சில மறைந்திருந்த உண்மைகள் வெளியாகின்றன. இயற்கையில் என்றும் எப்போதும் இருப்பது இன்பம் தான். இயற்கையில் துன்பம் இருக்குமேயானால் அது இயற்கையின் எதிர்மறைத்தன்மையாகிவிடுமே((negative aspect). இயற்கையில் குற்றம் இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இயற்கையில் குற்றம் இருக்குமானால் அதனை மனிதன் எவ்வாறு சரி செய்யமுடியும்? முடியாது. இது ஏதோ இயற்கைக்காக வாதாடுவதில்லை. .

   இன்பம் துய்ப்பதில் அளவும். முறையும் காக்கப்படவேண்டும். மற்றொன்று புறப்பொருட்களைத் துய்க்கும் போது, தன் உடலில் உள்ள சீவகாந்த ஆற்றலே எழுச்சி பெற்று செலவாகும்போது, புலன் செல்கள் தாங்கும் வரை இருந்தால், அத்துய்த்தலில் இன்பம் இருக்கும். சீவகாந்தம் எழுச்சி பெற்று செலவாகுதல் புலன் செல்கள் தாங்கும் அளவினைக் கடந்து, பொருந்தா உணர்வு தான் துன்பம். முதலில் இன்பமாக இருந்தது பிறகு துன்பமாகிவிடுகின்றது. எனவே இன்பம் என்பது தனது சீவகாந்தமே செலவேதான்தான்   என்பதால், வேதங்கள் கூறும் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பது நிரூபணம் ஆகின்றது. இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினாவிற்குக் கிடைத்த உண்மைகள்:

1)   செயலுக்கேற்ற விளைவு உண்டு என்றும், நல்ல செயலுக்கான விளைவு இன்பமாக இருக்கும் என்றும் தீய செயலுக்கான விளைவு துன்பமாக இருக்கும் என்கின்ற உண்மை இது வரை தெரிந்திருந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது, இவ்வினாவிற்குகிடைத்த விடையால் செயல்விளைவுத் தத்துவமாக உறுதி படுத்தப்பட்டது

.

2)   புலன் வழி இன்பம் என்பது தன்சொந்த சீவகாந்தமே எழுச்சி பெற்று அந்த புலனின் செல்கள் தாங்கும் அளவு இருக்கும் வரை அது இன்பமாக உணரப்படும். தாங்கும் அளவை மீறும்போது செல்களின் பொருந்தா உணர்வு துன்பமாக உணரப்படும். இதுவரை மறைந்திருந்த உண்மை வெளியாகியது.

 

3)   இன்பம் அனுபவிக்க ஒரு சாம்யம் உருவாகியுள்ளது. அது அளவு மீறவும் கூடாது, முறை மாறவும் கூடாது.

 

4)   இன்பம் துன்பம் என்கின்ற அருட்கவி உருவாகிற்று அவ்வினாவிற்கு கிடைத்த விடையால்.

 

                             இன்பம் துன்பம்

           ”இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

            எங்கிருந்து தோன்றுகின்ற தெனவராய்ந்தேன்

          இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

              எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு

         இன்பத்தின் அளவுமுறை மாறும்போது

              ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்

         இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்

               இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.” ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 இத்துடன் இன்பம் துன்பம் பற்றியச் சிந்தனையை முடித்துக் கொள்வோம். நாளை உயிர் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு இயற்கை அளித்த விடையை சிந்திப்போம்.

                        , . . . . நாளைத் தொடரும்

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                          வளர்க அறிவுச் செல்வம்