மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 FFC – 113

26-08-2015—புதன்

3. உயிர் என்பது என்ன?

FFC-113-26-815- உயிர்

கடோ உபநிடதத்தில், சிறுவன் நசிகேதன் யமனிடம் பெற்ற மூன்று வரங்களில் கடைசி வரமாக உயிரைப்பற்றி கேட்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யமனோ, தேவர்களுக்குக் கூட அந்தக் கேள்விக்கு விடை தெரியாது. ஆகவே அதனைத் தவிர்த்து வேறு ஏதாவது உலகியல் இன்பங்களை வரமாகக் கேட்கச் சொல்கிறான். ஆனால் நசிகேதன் அதனை மறுத்துவிட்டான். பல வழிகளில் யமன் அந்த கேள்வியினைத் தவிர்க்க விரும்பினான்.

கடைசியில் அத்யாத்ம யோகத்தால்தான் உயிரைப்பற்றி அறிய முடியும் என்று கூறி விட்டு யமன் அங்கிருந்து சென்று விடுகிறான். நசிகேதன் பல மாதங்கள் அங்கேயே இருந்து தவம் புரிந்து முடிவில் ஆன்மாவைப்பற்றி அறிகிறான். முதன் முதலில் ஆன்மாவைப்பற்றி அறிந்தவன் நசிகேதன் எனப்படுகின்றது. அத்தகைய சிறப்பைப் பெற்ற உயிரைப்பற்றி வேதாத்திரியத்தின் துணை கொண்டு அறிய இருக்கிறோம்.
ஒருவரின் ‘இறப்பினை’ தெரிவிக்க அவரது உயிர் பிரிந்து விட்டது எனப்படுகின்றது. உயிர் உடலை பிரிந்து விட்டது என அறிய முடிகின்றது. ஆனால் உடலை விட்டு பிரிந்த உயிர் எங்கு சென்றது என்று தெரியுமா? தெரியாது? இதைத்தான் நசிகேதன் யமனிடம் அன்று கேட்டான். ஆனால் யமன் அதற்கு வாய்மொழியாக பதிலளிக்கவில்லை. நசிகேதன் யமனிடம் கேட்டு பின்னர் தானே தவமிருந்து விடையைப் பெற்றான். அந்நிலையினை மாற்றி இப்போது இயற்கை/இறை ஒருமணிநேர வகுப்பிலேயே உயிரைப்பற்றிய விளக்கம் வேதாத்திரியத்தின் வாயிலாக அளித்து வருவது வேதாத்திரியம் அருள்துறைவளர்ச்சியில் ஏற்படுத்தியுள்ள திருப்புமுனையாகும்.

1) உயிர் பிரிந்ததை படுக்கையில் உள்ள நோயாளியைச் சுற்றியிருந்த யாரும் கவனிக்க முடிவதில்லை.
2) உயிர் பிரிந்த உடல் எரிக்கப்படுகின்றது. ஆகவே உயிர் எரிக்கப்படுவதில்லை.
இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்து
உயிர் என்பது ஆற்றல் என்றும்,
அதனால் அதனை அழிக்க முடியாது என்றும்,
ஆற்றல் என்பதால் அதனைக் கண்களால் காணமுடியாது என்றும் தெரிகின்றது.

நசிகேதன் அன்று அத்யாத்ம யோகத்தால்(ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்) உயிரைப்பற்றி அறிந்ததை இன்று மனவளக்கலைஞர்கள் உயிரறிவை கருத்தியலாகவும், செய்முறைப்பயிற்சியிலும் அறிந்து கொண்டிருக்கின்றனர். கருத்தியலாக தெரிந்தாலும், செய்முறைப்பயிற்சியான தவம் மற்றும் தெளிவின் மூலமாக உயிரறிவை தானாகவே பெறுவதுதான் உயிரைப்பற்றித் தெரிந்து கொண்டதற்கான பொருள். மனிதன் உத்தமனாக, அதுதான் உத்தமம்.

அப்போதுதான் மனிதனிடம் அறவுணர்வு மேலோங்கும். மனிதனிடம் உள்ள விலங்கினப்பண்பு செயலிழந்து, அறவுணர்வு தழைக்கவேதான் ஆன்மீகம் என்கின்ற அருள்துறை வளர்ச்சியடைந்து வருகின்றது.
வறுமையை நீக்க எவ்வளவுதான் பொருள்துறை வளர்ச்சியடைந்து வந்தாலும்,
அறிவின் வறுமையை நீக்கக்கூடிய அருள்துறை வளர்ச்சியடையும் அளவிற்குத்தான்
மனிதகுலம் வறுமை நீங்கி, தன் பூர்வீகச் சொத்தான் அமைதியினை அனுபவித்து வாழ முடியும்.

எனவே இன்று உயிர் என்பது என்ன என்கின்ற இரண்டாவது வினாவினைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். இது வரை உயிரைப் பற்றிய விளக்கம் விஞ்ஞானத்தில் இல்லை. ஆனால் உயிர் என்பது என்ன என்கின்ற வினா எழுந்து அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இயற்கை/இறை விளக்கம் அளித்துள்ளது. உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் இருக்கின்றது. இல்லை என மறுக்க முடியாது. உயிர் இருப்பதை உணரலாம். அப்படியானால் உயிர் எவ்வாறு உள்ளது?
இப்பிரபஞ்சத்தில் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய, ஆனால் இருக்கின்ற பொருள் என்ன?
பஞ்சபூத தன்மாற்றத்திற்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றியுள்ளன. பஞ்சபூதங்களில் மிகச் சிறியதும் கண்களுக்குத் தெரியாததும் எது? விண்தான் பஞ்சபூதங்களில் கண்களுக்குத் தெரியாத ஒன்று. பஞ்சபூதங்கள் தோன்றிய பிறகு, பஞ்சபூதக் கலவைகளால்தான் உயிரினங்கள் தோன்றியுள்ளன.
பஞ்ச பூதங்களிலிருந்துதான் உயிர் வந்துள்ளது என்கின்றபோது, பஞ்சபூதங்கிளிலேயே கண்களுக்குத் தெரியாத ஆனால் இருக்கின்ற விண்தான் உயிராக வந்துள்ளது.
இப்போது உயிர் என்பது என்ன, அது எவ்வாறு உடலில் இயங்குகின்றது என்கின்ற வினா எழுந்ததால் இயற்கை அருளிய விடைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) இயற்கை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குப் பஞ்சபூதங்கள் உருவான வரலாற்றினைத் தெரிவித்துள்ளது. பஞ்ச பூதங்கள் உற்பத்திப் பற்றியச் சிந்தனையில் மகரிஷி அவர்கள் ஈடுபட்டிருந்த போது, மகரிஷி அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை “பஞ்சபூதப் பூங்காவிலே உலாவினேன்” என அவரைச் சொல்ல வைத்து இயற்கையும் மகிழ முடிந்தது.

2) ‘உயிர்’ ஒரு மறை பொருளாக இதுவரை இருந்ததை, இப்போது விரும்பியவர்களுக்கு உணரச்செய்கின்றது.

3) மனமும் ஒரு மறைபொருளாக இருந்ததை இப்போது விளக்கப் பொருளாக மாற்றியுள்ளது இயற்கை. மகரிஷி அவர்கள் ஒரு முறை ஆங்கிலத்தில் மனம் என்கின்ற தலைப்பில் அருளுரை ஆற்றும்போது கூறியதை இப்போது நினைவு கொள்வோம். மகரிஷி. அவா்கள் கூறியதாவது: “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind.” இவ்வாறு அவர் கூறியது எவ்வளவு சரி என்று, மனதைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளேக் கூறும்.

4) உயிர் இருக்கும் வரை தான் மனம் செயல்படுகின்றது. இதனை யாவருமே அறிவர். ஆகவே மனதிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்புதான் என்ன? அந்த தொடர்பினை எளிய வாக்கியமாகிய “உயிரின் படர்க்கை நிலைதான் மனம்- The extended activity of life force is mind” என்பதன் மூலம் மிகத் தெளிவாக அறிய முடிகின்றதல்லவா? இதுவே மனதிற்கான எளிய வரையறையாக அமைந்து விட்டது. இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்ட மனதிற்கான வரையறை விளக்குவதற்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன மகரிஷி அவர்களால். இது மட்டுமா முடிந்தது இயற்கைக்கு? மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ளத் தொடர்பை, சுத்த அத்வைத உண்மையை, நான்கு வார்த்தைகளால் ஒரு வரையறையாகவே சொல்ல முடிந்துள்ளது. அது இதோ!

5) மனதின் மறு முனை தெய்வம்(The other end of mind is God) என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் மானசீக குருவான திருமூலர் அருளிய “உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற உண்மை இதன் மூலம் விளக்கப்பட்டுவிட்டது.

6) ஆன்மீக நூல்கள் “நீ உடலல்ல, நீ ஆத்மாவே என்கின்றது.” ஆத்மா என்ன என்று தெரிந்தால்தானே ஆத்மாவாகிய நான் யார் என்றும் நான் எவ்வளவு சிறப்புடையவன் என்றும் விளங்கும். ஆகவே ஆத்மா என்ன என்றும், அது தெய்வீக நீதி மன்றம் என்றும் தெரிவித்துள்ளது. “Fraction demands. Totality supplies.” என்பார்கள் மகரிஷி அவர்கள். பின்னமான வேதாத்திரிய சிறுவர் பன்னிரண்டு வயதிற்குள் எழுப்பிய வினாக்களுக்கு முழுமையாகிய இயற்கை/இறை (Totality) கொடுத்ததுதான் இவ்வளவு அறிவு பூர்வமான வேதாத்திரிய விளக்கங்களும்.

“உற்றுப்பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்று பார்த்தசாரதி சதகம் கூறுவது இப்போது விளங்குகின்றது.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற அறிஞர் திருமூலரின் சத்திய வாக்கு விஞ்ஞான அடிப்படையில் விங்குகின்றது.

மேலும் மகாகவி பாரதியார் கூறும்  ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்பதும் விளங்குகின்றது.

FFC-110-FIN- காக்கைக்

அடுத்த (30-8-2015 ஞாயிறு) அறிவிற்கு விருந்தில் கடவுள் என்பவர் யார் என்கின்ற வினாவினை எடுத்துக் கொண்டு சிந்திப்போம்.