மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

FFC – 112

23-08-2015—ஞாயிறு

 

2-அறிவுத்தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாதமலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.

அறிவுத்தேனீக்கள்

 

 “மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்கின்ற தலைப்பிலே அறிவிற்கான விருந்தை அருந்தி வருகிறோம். ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது. எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுப்பி அறிவுப் பூர்வமான விடைகளைப் பெற்று வாழ்க்கையை அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் எனப் பார்த்தோம். ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம், ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்றில்லாமல் மனித அறிவு, வாழ்க்கையை பொருளுடையதாக்கும் வண்ணம் வாழவேண்டும். வாழ்ந்ததற்கு அர்த்தம் இருக்க வேண்டும். எண்ணிலடங்காமுறை இப் புவியில் வந்து போயிருந்தாலும் இந்த முறையாவது, வந்ததற்கான அடையாளம் பதிக்க வேண்டும்.

குறைந்த பட்சம் முக்கிய நான்கு வினாக்களையாவதுக் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பார்த்தோம். இன்று அந்த நான்கு வினாக்களும் மகானாக்கும் வினாக்கள்தானா, அவைகளுக்கான விடைகள் என்ன, அவ்வாறு அவ்வினாக்களைக் கேட்டு அறிவுபூர்வமாக விடைகளைப் பெற்று வாழ்ந்து யாராவது மகானாக ஆகியிருக்கிறார்களா என அறிய இருக்கிறோம்.

இந்த நான்கு வினாக்கள்தான் வேதாத்திரி என்கின்ற சிறுவரை பின்னர் வேதாத்திரி மகானாக்கியது. இந்த நான்கு வினாக்களை பன்னிரண்டு வயதிற்குள் உள்ளம் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு.

அவ்வினாக்களுக்கு மகரிஷி அவர்கள் கண்ட விடைகள்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரில் ஆன்மீகத்தில் பாரிஜாத மரமாகியுள்ளது. தேவலோகத்தில் விரும்பியதைத் தரும் பாரிஜாத மலர்களைப்(கற்பனை), போன்று  வேதாத்திரிய பாரிஜாத மலர், மனிதன் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவதற்கு என்னென்ன அறிந்து தெளிய வேண்டுமோ அவற்றை அளித்துக் கொண்டிருக்கின்றது. வேதாத்திரிய பாரிஜாத மலரில் சுரக்கும் அறிவுத்தேனை அருந்த உலகெங்கிலும் உள்ள அறிவுத்தேனீக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.  அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.

மகரிஷி அவர்களின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான் என்றாலும், அவர் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்த படிப்பு ஏராளம், ஏராளம், ஏராளம். Though he did not study in any University in the world, He studied in the city of Universe in which the world is located. After his third standard study in school, His further study took place in the Universe, the Kingdom of Mother Nature. அவர் பிரபஞ்சக் கல்வியில் அடைந்த உன்னதத் தேர்ச்சியினை வைத்து உலக மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், பள்ளியில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை, யோகமும் மனித மாண்பும் என்கின்ற பாடமாக எடுத்துச் சென்றுள்ளது இயற்கை.
சுருங்கச் சொல்வதென்றால் சிந்தனையாளர்களுக்கு ஆசான் யார் என்றால், இயற்கையே!. எனவே இயற்கை–ஆசான் முற்றிலும் கீழ்படிதல் உள்ள மாணவருக்கு (implicit obedient student) தன்னுடைய, இதுவரைத் தெளிவாக அறியாதிருந்த இரகசியங்களையெல்லாம் தெளிவாக்கிவிட்டது, அவ்வாறு கருணையோடு மனித சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி வழியாகக் கொடுத்தது தான் வேதாத்திரியம்.

இயற்கை எல்லோருக்கும் இவ்வாறாக ஆசானாக இருக்கத் தயாராக இருக்கின்றது. மனிதன் தான் தயாராக இல்லை. புலன்வழி வாழ்க்கையையே மேலானதாகவும், அதுவே வாழ்க்கையாகவும் நினைத்துக் கொண்டு மாயையில் வாழ்கிறான். உயிர் வாழ்வதற்கு, புலன் வழி வாழ்க்கை தேவை என்பதால், அதனை அளவுடனும், முறையுடனும் வாழ்ந்து கொண்டு, அறவோனாக வாழ்வதற்கு,  ‘அறிவுவழி வாழ்க்கை’ வாழ வேண்டும். அறவோனாக வாழும் போதுதான் துன்பம் இராது. இருப்பினும் துன்பம் வந்தாலும், வந்த துன்பத்தைப் போக்கவும், எதிர்கொள்ளவும் துணிச்சலும் இருக்கும். மனதின் உணர்வுகளான நான்கு படிகளில் இறுதிப் படியான பேரின்பத்தை அடைய முடியும்.

எவ்வாறு வாழ வேண்டும் எனத் தெரியாமல் இருந்த மனித குலத்திற்கு வாழ்வியல் கல்வியைத் தந்து அறவொளி வீசச் செய்துள்ள இந்த நான்கு வினாக்களை மகோன்னதக் கேள்விகள் என அழைக்கக் கூடாதா? மொழி மனிதனுடையக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற ஊடகம். ஆன்மீகத்தில் மறை பொருட்களான இறை, உயிர், மனம், அறிவு ஆகியவைகளைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரவா்கள் உணா்ந்த அனுபவங்களின் மூலமாகத்தான் வாழ்க்கையோடு இணைத்துப் பொதுப்படையாக்கித் (generalisation) தெரிவிக்க வேண்டியுள்ளது. உணர்ந்தது உணர்ந்தவருக்குத் தெளிவாக இருந்தாலும், அதனை எளிமையாக்கி பிறர்க்கு விளங்குமாறு தெரிவிப்பதற்கு மொழிவளம் அவசியம். ஆகவே ஆன்மீகக் கல்விக்கெனத் தனிமொழித் தேவை. அந்த மொழித் தேவையைப் பூர்த்தி செய்கின்றது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ஆன்மீக வரலாற்றில் வேதாத்திரியத்தின் தோற்றம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுச் சிறப்புகளை ஏற்படுத்தியது அந்த நான்கு வினாக்கள் தானே ! வேதாத்திரிய எண்ணப் பள்ளியில்(Vethathiri’s school of thoughts) ஆர்வமுள்ள மாணவனாக ஆறு மாதம் இருந்து வந்தாலே அம்மாணவர் இயற்கை அன்னையின் வரலாற்றையும், அதன் குழந்தைகளின் மனித சமுதாயம் உய்வதற்கான வழிகளையும் அறிந்து பிறர்க்கும் எடுத்துச் சொல்லும் அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
எனவே இந்நான்கு வினாக்களையும் மகோன்னத வினாக்கள் எனக் கூறி அறிவு மகிழக் கூடாதா? மகோன்னதம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டச் சொல்(coined word). உன்னதம் என்றாலே தன்மையில், பண்பில், இயல்பில் மிக உயர்வானது என்று பொருள். மேன்மையானது என்று பொருள். பயன்பாட்டில் மிகச்சிறந்தது என்றும் பொருள். மகா என்கின்ற சொல் சிறப்பு அல்லது கீர்த்திவாய்ந்த என்று பொருள். ஒன்றின் தன்மையை மிகுவித்துக் காட்டும் அடைமொழியான மகா என்னும் சொல்லை உன்னதமான என்கின்ற சொல்லுக்கு முன்னர் சோ்த்து  “மகோன்னதமான” எனப்படுகின்றது.
மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்கு முன்னரே உள்ளத்தில் எழத் தொடங்கியது அந்நான்கு வினாக்கள். அந்த நான்கு வினாக்கள்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேதாத்திரியக் குழந்தையை பின்னர் மகானாக்கியதால் அந்த நான்கு வினாக்களையும் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று போற்றிப் பேரானந்தம் அடைகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். இதுவரை எந்த வினாக்கள் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று பார்த்தோம். 

மகரிஷி அவா்களின் உள்ளத்தில் எழுந்த மகோன்னத வினாக்களுக்கு இயற்கை அளித்த விடைகளைப்பற்றி ஆராய்வோம். அவரது உள்ளம் பன்னிரண்டு வயதிற்குள் எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கிய வினாக்களை மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வோம்.

  1. இன்பம் துன்பம் என்பது என்ன? இவற்றின் ஆரம்பமும் இறுதியும் என்ன?
  2. உயிர் என்பது என்ன? அதனுடைய இயக்கம் உடலில் எவ்வாறு நடக்கின்றது?புத்தருக்கு வினாக்கள் எழுந்தது போல், நோயும், முதுமையும் ஏன் வருகின்றன என்கின்ற வினாக்கள் எழுந்தன?
  3. தெய்வம் என்பது யார்? அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?
  4. வறுமை ஏன் வருகின்றது? அதைப் போக்குவதற்கு வழி என்ன?

அவரது முதல் வினாவிற்கு, இயற்கை அளித்த விடையினை இன்றைய விருந்திற்கு எடுத்துக் கொள்வோம்.

  1. இன்பம் துன்பம் என்பது என்ன?

எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்போம் (life is to enjoy). காரணம், இன்பம் மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு. மகிழ்ச்சியைத் தரும். ஆனால் துன்பம் என்பது இன்பம் என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். எனவே துன்பம் என்பது மனதுக்கு மகிழ்வைத் தராத உணர்வு. மனதை வருந்தச் செய்யும் உணர்வு. இன்மை என்றால் இல்லாதிருக்கும் என்று பொருள். ஆகவே துன்பம் இன்மையை இன்பம் என்கிறோம்.

எல்லோரும் இன்பத்தையே விரும்பினாலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று வரை (1911+12=1923) எவருமே இன்ப-துன்பம் ஏன், எவ்வாறு வருகின்றன என்கின்ற வினாவை எழுப்பியதில்லை. ஆனால் மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினா எழுந்துவிட்டது.
இன்பம் துன்பம் என்பது என்பது பற்றி இப்போது சிந்தித்துப்போம். இன்பம், துன்பம் என்பது விளைவுகள். அதாவது இன்பம் துன்பம் என்பது செயல்கள் அல்ல. செயல் என்று ஒன்று இருந்தால் அதற்கு விளைவு நிச்சயம் உண்டு. அந்த விளைவின் தன்மை, செயலைப் பொருத்து இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ இருக்கும். செயல் மனிதனுடையது. விளைவைத் தருவது இயற்கை அல்லது இறை. இது இயற்கை நீதி. விளைவு இல்லாது செயல் இல்லை. இது ஒரு விளக்கம் இன்ப துன்பத்தைப் பற்றி. இன்னொரு விளக்கம் இன்ப துன்பத்தின் விஞ்ஞானத்தைக் கூறுகின்றது.

வேதங்களில் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றன. இதனை விளக்குவதற்காகக் கூறப்படும் உதாரணத்தைப் பார்ப்போம். நாய் தெருவில் உள்ள காய்ந்த எலும்பைக் கடிக்கும் போது, எலும்பு நாயின் ஈறை(gum of the teeth) ரணப்படுத்துவதால், ஈறிலிருந்து வரும் இரத்தத்தை காய்ந்த எலும்பிலிருந்து வருவதாக நினைத்துச் சுவைக்கும். அது போல், மனிதன், இன்பம் புறப் பொருட்களில் உள்ளதாக நினைத்துக் கொண்டு புறப் பொருட்களை நோக்கி அலைகிறான், தேடுகிறான், சொந்தமாக்கிக் கொள்கிறான்; அனுபவிக்க நாட்டம் கொள்கிறான்.
ஆனால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தது இறுதியில் துன்பமாகிவிடுவதனை அனுபவத்தில் பார்க்கிறோம். காரணம் என்ன என்று வினவவில்லை. வினவியிருந்தால், அச்செயல் அளவுமீறியும், முறைமாறியும் இருந்ததால் துன்பத்தைத் தந்தது என்கின்ற விடை கிடைத்திருக்கும். இதில் சில மறைந்திருந்த உண்மைகள் வெளியாகின்றன. இயற்கையில் என்றும் எப்போதும் இருப்பது இன்பம் தான். இயற்கையில் துன்பம் இருக்குமேயானால் அது இயற்கையின் எதிர்மறைத்தன்மையாகிவிடுமே (negative aspect). இயற்கையில் குற்றம் இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இயற்கையில் குற்றம் இருக்குமானால் அதனை மனிதன் எவ்வாறு சரி செய்யமுடியும்? முடியாது. இது ஏதோ இயற்கைக்காக வாதாடுவதில்லை.

இன்பம் துய்ப்பதில் அளவும், முறையும் காக்கப்படவேண்டும். மற்றொன்று புறப்பொருட்களைத் துய்க்கும் போது, தன் உடலில் உள்ள சீவகாந்த ஆற்றலே எழுச்சி பெற்று செலவாகும்போது, புலன் செல்கள் தாங்கும் வரை இருந்தால், அத்துய்த்தலில் இன்பம் இருக்கும். சீவகாந்தம் எழுச்சி பெற்று செலவாகுதல் புலன் செல்கள் தாங்கும் அளவினைக் கடப்பதால் ஏற்படும் பொருந்தா உணர்வு தான் துன்பம். முதலில் இன்பமாக இருந்தது பிறகு துன்பமாகிவிடுகின்றது. எனவே இன்பம் என்பது தனது சீவகாந்தமே செலவேதான்தான் என்பதால், வேதங்கள் கூறும் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பது நிரூபணம் ஆகின்றது.

இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினாவிற்குக் கிடைத்த உண்மைகள்:
1) செயலுக்கேற்ற விளைவு உண்டு என்றும், நல்ல செயலுக்கான விளைவு இன்பமாக இருக்கும் என்றும் தீய செயலுக்கான விளைவு துன்பமாக இருக்கும் என்கின்ற உண்மை இது வரை தெரிந்திருந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது. இவ்வினாவிற்கு கிடைத்த விடையால் செயல்விளைவுத் தத்துவமாக உறுதி படுத்தப்பட்டது.
2) புலன் வழி இன்பம் என்பது தன்சொந்த சீவகாந்தமே எழுச்சி பெற்று அந்த புலனின் செல்கள் தாங்கும் அளவு இருக்கும் வரை அது இன்பமாக உணரப்படும். தாங்கும் அளவை மீறும்போது செல்களின் பொருந்தா உணர்வு துன்பமாக உணரப்படும். இதுவரை மறைந்திருந்த உண்மை வெளியாகியது.

3) இன்பம் அனுபவிக்க ஒரு சாம்யம் உருவாகியுள்ளது. அது, அளவு மீறவும் கூடாது, முறை மாறவும் கூடாது.

4) இன்பம் துன்பம் என்கின்ற அருட்கவி உருவாகிற்று அவ்வினாவிற்கு கிடைத்த விடையால்.

FFC-112-இன்பம் துன்பம்

இத்துடன் இன்பம் துன்பம் பற்றியச் சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த விருந்தில் (26-08-2015) உயிர் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு இயற்கை அளித்த விடையை சிந்திப்போம்.

வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்