150-பூர்வீக சொத்து

World_Peace_Year_31_Greetings

 

சிறப்பு – அறிவிற்கு விருந்து 150

பூர்வீக   சொத்து

                                                            01-01-2016 –வெள்ளி

vv

வாழ்க வளமுடன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டு தினத்தையும் உலக அமைதி தினமாக கொண்டாட இயற்கை/இறை திருவேதாத்திரியத்தின் வாயிலாக ஏற்பாடு செய்துள்ளதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  ஏனெனில் இது இயற்கை/இறையின் விருப்பம்.  இயற்கை/இறை தனது வாரிசுகளான உலகமக்கள் அனைவரும், தனது சொத்தான பூரணஅமைதியை அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக  ‘பூர்வீக சொத்து’ என்கின்ற தலைப்பை இறையருள், நம் குருவருள், மற்றும் அனைத்து அருளாளர்களின் அருட்துணையுடன் சிந்திப்போம்.

பூர்வீக சொத்து என்றால் என்ன?  சொத்து என்றால் என்ன என்று தெரியும்.  சொத்து என்றால் உடைமை என்று பொருள்.  உடைமை என்றால் ஒருவருக்குரியது. சொத்து என்பது மனிதனின் தேவைக்கு அனுபவிப்பதற்குரியது.  பூர்வீகம் என்றால்  ஒருவரின் குடும்பத்துக்கு(family) மூலமாகக் கொள்ளும் இடம். உதாரணத்திற்கு அவரின் பூர்வீகம் திருநெல்வேலி என்றால் அவரது முன்னோர்கள் வாழ்ந்த இடம் திருநெல்வேலி என்று பொருள்.  பூர்வீகம் என்றால் காலத்தால் பழமையானது, முன்னோர் மூலம் பெறுவது என்று அர்த்தம்.  பூர்வீக சொத்து என்றால் முன்னோர்களால் சோ்த்து வைக்கப்பட்ட உடைமை  என்று பொருள்.

ஒரு நாள் இப்புவியை விட்டுச் செல்லும்  ஒவ்வொருவருக்கும் புவியில் பிறந்த இடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு பூர்வீக இடங்கள் உண்டு.  இப்புவியில் பிறந்த ஒரு சிறிய இடமா  உண்மையான பூர்வீகம்?  ஆனால் எல்லோருக்கும் ஒரே பூர்வீகம்தான்.  எப்படி?  அந்த பூர்வீகம் எது?  அந்த பூர்வீக சொத்தைப்பற்றித்தான் இன்றைய சிந்தனை.  இந்தப் பூா்வீக சொத்து அனைவருக்கும்  பொது என்பதால் அனைத்துலக மக்களுக்கும் அதனை அனுபவிக்க உரிமை உண்டு.

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் அங்கம்தானே. இயற்கை வேறு, மனிதன் வேறா?  அல்லவே! உலக மக்கள் அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள்.  அப்படியிருக்கும்போது எல்லோருக்கும் பொதுவான பூர்வீகம் இயற்கையே.  இயற்கையின் பூர்வீகம் எது?  அதுதான் இயற்கையின் ஆதிநிலை.  அந்த ஆதிநிலையிலிருந்துதான் பஞ்சபூதங்கள், பிரபஞ்சம், மனிதன் உள்ளபட எல்லா உயிரினங்களும் தோன்றியுள்ளன.  தோன்றியுள்ளன என்பதனைவிட அந்த ஆதிநிலைதான் எல்லாமாகத் தன்மாற்றம் அடைந்துள்ளது.

இயற்கையின் ஆதிநிலை என்பது என்ன?  அதனைத்தான் வெட்டவெளி, இறைவெளி என்றும் கூறுகிறோம்.  அந்த வெட்டவெளி எத்தன்மையானது?  அது சலனமில்லாதது, அமைதியானது. பேரறிவை உடையது. பேராற்றல் உடையது.  அமைதியானது என்பதனைக் கருத்தில் கொண்டுதான் ஒரு சாரர் அமைதியிலிருந்துதான் இப்பிரபஞ்சம் தோன்றியது என்கின்றனர்.  அந்தப் பேரறிவேதான் மனிதனிடம் அறிவாக, மனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.  மனிதமனம் நான்கு நிலைகளில் இயங்குகின்றது. இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகியன.  மனிதகுலம் பெரும்பாலும் இன்ப-துன்ப சுழலிலேதான் மாறி மாறி சிக்கித் தவிக்கின்றது.  மூன்றாவது நிலையான அமைதிக்கு வரமுடிவதில்லை.  அப்படியே வந்தாலும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

மனம் தனது  நான்கு நிலைகளில் ஒன்றான அமைதி நிலையையே தனது பூர்வீகமாக கொண்டிருந்தாலும், மனம் அதனை அனுபவிக்க முடிவதில்லை.  அமைதியிலிருந்து உருவான மனம் அமைதியினை அனுபவிப்பதில்லை அனுபவிக்க முடிவதில்லை என்ன விந்தை இது?  மனதிற்கு பூர்வீகம் அமைதி நிலையாக இருந்தும்  மனிதன் தன்னுடைய பூர்வீக சொத்தான(Hereditary wealth) அமைதியினை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான் என்கிறோம்.

எப்படி முன்னோர்கள் சேர்த்துவைத்துள்ள வீடு போன்ற சொத்தில் ஒவ்வொருவருக்கும் சட்டப்படி உரிமை இருக்கின்றதோ அதுபோல் மனிதகுலம் அனைத்துக்கும் தனது பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க உரிமை உள்ளது.  ஆனால் நடைமுறையில் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்தினை அனுபவிப்பதுபோல் மனிதகுலத்தின் பொதுவான பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க முடிவதில்லை. இந்நிலையினை மாற்றி உலகமக்கள் அனைவரும் அறிவின் இருப்பிடம் அறிந்து அமைதியினை அனுபவித்து இன்பமுற  வழிகளையும் திட்டங்களையும் எடுத்துரைக்கின்றது திருவேதாத்திரியம்.

ஆன்மீகத்தில் ஒரு கூற்று  உள்ளது.  அது யாதெனில்

பகவத்கீதை கடவுள் மனிதனுக்கு சொன்னது,

திருவாசகம் மனிதன் கடவுளுக்கு சொன்னது,

திருக்குறள் மனிதன் மனிதனுக்கே சொன்னது.

வேதாத்திரியம் யாருக்கு,  …………………………  யாரால் சொல்லப்பட்டுள்ளது?

வேதாத்திரியப் பயனாளிகளாக இருக்கும் நாம்தான் சொல்ல வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் இயற்கையே/இறையே வேதாத்திரி வடிவில் மனிதனாகி தனது உலக மக்கள் அனைவருக்கும் தன் சரித்திரத்தை அப்பட்டமாக (ஒளிவு மறைவு இல்லாமல்) சொன்னது.

இத்தருணத்தில் ‘பேரின்ப ஊற்று’ என்கின்ற கவியில் மகரிஷி அவர்கள் அருளிய   நான்கு வரிகளைக் கவனிப்போம்.

peerinba uurRu

இதுவரை அவனியில் அவதரித்த, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் அருட்கூற்றுக்கள் அனைத்தையும் ஒன்று சோ்த்த ஒட்டுமொத்த சாரமே திருவேதாத்திரியம்.   இதற்கு சான்று, வேதாத்திரியம் அறியாத முன்னர், புரியாதிருந்த எந்த அருளாளர்களின் கூற்றுக்களும் இப்போது புரிகின்றன. எல்லா ஆன்மீகக் கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்குத் தேவையாய் இருக்கின்ற  ஒரு ஆன்மீக மொழிதான் திருவேதாத்திரியம்.

 கடந்த நூற்றாண்டிலிருந்து விஞ்ஞானம்–அறிவியல்(Science) அதிவேக வளர்ச்சி அடைந்து வருகின்றது.  ஆனால் அறிவியலில் பலதுறைகள் இருந்தாலும், அதனுடைய முதன்மையானதும், வாயிலாகவும் உள்ள இயற்கையியல்/இறையியல் ஏற்படுத்தப்படவில்லை. எனவே Science – அறிவியல் வளர்ந்துள்ளதே தவிர அது வாழ்வியலைத் தர இயலவில்லை.  இத்தருணத்தில் இயற்கையியலை/இறையியலைத் தந்துள்ளது திருவேதாத்திரியம்.

 இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளக்கும் இயற்கையியல்/இறையியலை ஏற்படுத்தியுள்ளது திருவேதாத்திரியம். அதன் விளைவாக குடும்பவியலை உள்ளடக்கிய வாழ்வியலை தரமுடிந்துள்ளது திருவேதாத்திரியத்தால்.  அந்த வாழ்வியல் முறைகள்தான் மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதான திட்டங்கள்.

 இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டதன்   விளைவு, மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதான திட்டங்களை ஏற்பதன்றி வேறு என்ன இருக்க முடியும்?  வேறு எதனை ஏற்கமுடியும்?!  இயற்கை/இறையேதான் தனது ஆதிநிலையிலிருந்து இன்று நாம் காணும் பிரபஞ்சமாகவும் மனிதகுலம் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்றபோது, இயற்கைக்கு இசைவாக, ஒத்த முறையில் வாழவேண்டுமெனில் மனிதகுலம் மகரிஷி அவர்களின் உலக சமாதானத் திட்டங்களின்படி வாழ்வதன்றி  வேறு எவ்வாறு வாழ வேண்டும்? வாழமுடியும்?

 இதுவரை அவனியில் அவதரித்த அனைத்து அருளாளர்களும் விரும்பிய ‘மனித இனம் நல்வாழ்வு வாழ வேண்டும்’  என்கின்ற அடிப்படை இலட்சிய நறுமணத்தின்  ஒட்டு மொத்தத்தை பிரதிபலிக்கும் பாரிஜாத மலரே திருவேதாத்திரியம். அந்த திருவேதாத்திரம் தந்ததுதான் உலக சமாதானத் திட்டங்கள்.  எனவே உலக சமாதான திட்டங்கள்

  •  மனித இன வாழ்விற்கும், இயற்கைக்கும் ஒத்த முறையில் இருக்கும்படியாகவும்,
  •  மனித சமுதாயத்திற்குப் பொதுவானதாக இருக்கும்படியாகவும்,
  • சிரமமில்லாமல் கொண்டுவரக் கூடியதாகவும்,
  • தொடர்ந்து பயனைகொடுக்கக் கூடியதாகவும்,

பிறந்ததுமுதல் பல நாட்களாக உடற் கருவிகளை இயக்கிப் பழகியதால்  கொண்ட பழக்கங்களையும், பற்றுதல்களையும், கொள்கைகளையும் உடனே மாற்றிக் கொள்ளவோ, விடவோ, விட்டுவிடச் செய்யவோ எளிதில் இயலாது,  ஆகவே படிப்படியாக அவசியமான மாற்றங்களை ஏற்படுத்தும் படியாக உலக சமாதான ஆராய்ச்சியுடன் கூடிய திட்டங்கள் 200 கவிகளாக அமைந்துள்ளன.

 இதற்காக மகரிஷி அவர்களே அளித்துள்ள விளக்க உரை முதற் பதிப்பில் (1957) தமிழில் மட்டும் உள்ளது. ஆனால் இரண்டாம் பதிப்பில்(1990) தமிழ் உரையுடன் ஆங்கில உரையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.  விரிவுரை அவரே வழங்குவதற்கான  காரணம் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், அவருடைய எந்த நல்நோக்கத்திற்காக அக்கவிகள் உதித்தன என்பதனை அன்பர்கள் விளங்கிக் கொள்வதற்காகவே எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

 ஒருமுறை மகரிஷி அவர்களை ‘உங்களுடைய நோக்கம் என்ன’ என்று வினவியபோது ‘உலகசமாதானம்’ என்றார். அவரது ஆங்கில முகவுரையில் ஓரிடத்தில் “the ultimate aim is the achievement of World Peace at any cost என்பதனைக் காணலாம்.

 இன்றுவரையில் ஆறாம் அறிவைக் கொண்ட மனித இனம் அறிவின் இருப்பிடம் அறியாமையால் ஏற்பட்டுள்ள   அறியாமையினாலும், சமய சந்தர்ப்பங்களாலும், ஏற்றுக் கொண்ட வாழ்க்கைச் சிக்கல்களையும், துன்பங்களையும் விளைவிக்கத்தக்க எல்லா  வழக்கப் பழக்கங்களையும், பேத உணர்ச்சிகளையும் திருத்துவதற்காக மாற்றி அமைத்து இதுவரையில் அறிவின் உயர்வினாலும், ஆராய்ச்சியினாலும் கண்டுபிடிக்கப்பட்டு உயர்தரமான வாழ்க்கை முறைகள் எல்லோருக்கும் கிடைக்க வாழ வழிகாட்டுகின்றன  உலகசமாதானத் திட்டங்கள் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

 இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டதன்   விளைவு, மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதானத் திட்டங்களை ஏற்பதன்றி வேறு என்ன இருக்க முடியும்?!  இயற்கை/இறையேதான் தனது ஆதிநிலையிலிருந்து இன்று நாம் காணும் பிரபஞ்சமாகவும் மனிதகுலம் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்றபோது, இயற்கைக்கு இசைவாக, ஒத்த முறையில் வாழவேண்டுமெனில் மனிதகுலம் மகரிஷி அவர்களின் உலக சமாதானத் திட்டங்களின்படி வாழ்வதன்றி  வேறு எவ்வாறு வாழ வேண்டும்? வாழமுடியும்?

 உலக நியதி—இயற்கையின் எதார்த்தம் என்ன என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அன்று கூறியுள்ளது, திருவேதாத்திரியத்தின் வாயிலாக இயற்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு எதார்த்தத்தில் வாழ வழிவகைகளைக் காட்டியுள்ளதே திருவேதாத்திரியத்தின் உலக சமாதான திட்டங்கள்.  கீதாசாரம் மொழிவதனையும் நினைவு கூர்வோம்.

FFC_46-geetha chaaram-

 இச்செய்தி என்ன தெரிவிக்கின்றது?  மனிதனிடம்  தன்முனைப்பு எழுவதற்கு வாய்ப்பே  இல்லை என்பதனைத் தெரிவிக்கின்றது. ‘தான், தனது’  இல்லாத நிலையைத் தெரிவிக்கின்றது.  நிலையாமையை அறிகின்ற ஞானத்தைத் தெரிவிக்கி்ன்றது.

‘தான், தனது’  இல்லாத சமுதாயச்சூழல்தான் உலக நியதி என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.  ‘தான், தனது’ என்கின்ற இரு தம்பதிகள் இல்லாத நிலையில் அவலக் குழந்தைகளான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகள் பிறப்பதற்கே வழியில்லை, உலக சமாதானத்திட்டங்கள் அமுலில் இருந்தால்.  இச்சூழலில் உண்மையில், ஆண்-பெண் இருவர் சோ்ந்த தம்பதிகளுக்கு  ஞானக்குழந்தைககள் தான் பிறக்கும்.  ஆகவே அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய உலக நியதிக்கேற்ப இன்று திருவேதாத்திரியம் குடும்பவியலை உள்ளடக்கிய வாழ்வியலை அருளியுள்ளது.

    ஒரு வேளை இயற்கை/இறை இதுவரை அவதரித்துள்ள(கி.மு. மற்றும் கி.பி. இன்று வரை) எல்லா அருளாளர்களை அழைத்து, ஒன்று கூட்டி ஒரு ஆன்மீக மாநாடு நடத்துமேயானால், அருளாளர்கள் அனைவரும், திருவேதாத்திரியத்தையும், அதன் உலக சமாதானத் திட்டங்களையே போற்றி, போற்றி வரவேற்பர், ஆமோதிப்பர்.  அந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில் அருளாளா்களின் வழித்தோன்றல்களாகிய  நாமே அதனை செய்வோம். அதாவது திருவேதாத்திரிய உலக சமாதான திட்டங்களை சிந்தித்து ஆமோதிப்போம்.

    ஆகவே இன்றைய நன்னாளில் நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு கவியினையும் தமிழ் மற்றும் ஆங்கில  விளக்கவுரை இரண்டையுமே சேர்த்து வாசித்து மகரிஷி அவர்களின் விருப்பப்படி அவருடைய உயர்நோக்கத்துடன் இணைந்து இவ்வையகத்தை வாழ்த்துவோம்.  

வாழ்க உலக சமதானம். விரைவில் வரட்டும் உலக சமாதானம்.  வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

  

வாழ்க வேதாத்திரியம்                                                         வளர்க வேதாத்திரியம்