புகழும் உயர்புகழும் – 4 / ?

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

புகழும் உயர்புகழும் – 4 / ?

அ.வி. 51

28-01-2015 புதன்

இன்றைய விருந்தில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்துவது எவ்வாறு பேரின்பம் அடைவதை இழக்கவைக்கின்றது என்று அறிவோம். அதற்கு காந்த தத்துவத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கவனிக்க வேண்டும்.

காந்த தத்துவம்

  FFC_51-Phi_mag_songs

‘28-06-1990 அன்று கலிபோர்னியா மாநிலத்தில் யக்காவேலி நகரத்தின் வனஆசிரமத்தில்’ இருந்தபோது வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதியவை காந்தத் தத்துவப் பாடல்கள். பன்னிரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார். பன்னிரண்டு பாடல்களுக்கும் மகரிஷி அவர்களே விரிவுரையையும் எழுதியுள்ளார். இது போன்று உலக சமாதான நூலிலும் பாடல்களுக்கு மகரிஷி அவர்களே விளக்க உரை எழுதியுள்ளார். மற்றுமொரு நூலான ‘அருட்பேராற்றலின் அன்புக் குரல்’ எனும் நூலிலும் பாடல்களுக்கு அவரே விரிவுரை எழுதியுள்ளார்.

மெய்ஞானிகள் கவிகளை அருளுகிறார்கள். ஆனால் இது வரை கவிகள் அருளியவரே அதற்கான விளக்கவுரை எழுதியதில்லை என்றே பொதுவாகத் தெரிகின்றது. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகுதான், பிறரால் விளக்கவுரை எழுதப்படுகின்றது. அந்த மெய்ஞ்ஞானி எந்த உள்நோக்கத்துடன் அந்தக்கவியினை எழுதினாரோ அந்த உள் நோக்கம் முழுவதும் பிறரால் எழுதப்படும் விளக்கவுரையில் வெளிப்பட்டுள்ளதா என்றால் சந்தேகமே. ஆனால் மகரிஷி அவர்கள் மட்டும் உலக சமாதானப் பாடல்களுக்கும், காந்தத் தத்துவப் பாடல்களுக்கும், அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்னும் நூலில் உள்ள பாடல்களுக்கும் விளக்கவுரையையும் அருளியுள்ளார்.

உலக சமாதானம் எனும் நூலுக்கு விரிவுரை எழுதும் போது தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தையும் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடல்களை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், எந்த உள்நோக்கத்திலிருந்து அந்தக் கவிகள் உதித்தன என்பதைத் தெளிவுபடுத்தவும் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும். எனவே உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார்.

விஞ்ஞானத்தின் நோக்கம் என்பது இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அனுபவித்தலே. மெய்ஞ்ஞானத்தின் நோக்கம் அவ்வாறு இயற்கை வளங்களிலிருந்து மாற்றப்படும் வாழ்வின் வளங்கள் எல்லோருக்கும், எல்லாவற்றையும் போதுமான அளவில் கிடைக்கச் செய்து, எல்லோரும் இன்புற்று, உலகில், ‘அமைதி பூத்துக்குலுங்க’ வழி செய்வதே. அதற்கு மெய்ப்பொருள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தெளிவாகிட வேண்டும். மெய்ஞ்ஞானம் அடைவதற்கான பயிற்சிகள் மட்டுமே உலகில் அமைதியினை ஏற்படுத்திவிடாது.

720 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில். தனிநபர்கள் வெகு சிலர் மேற்கொள்ளும் மெய்ஞ்ஞானப் பயிற்சிகளால் மட்டுமே உலகில் அமைதி வந்துவிடாது. அப்பயிற்சிகளை செய்பவர்களுக்கு மட்டுமே அமைதி கிடைக்கும். மெய்ஞ்ஞானப் பயிற்சிகளை மக்கள் அனைவருமே மேற்கொள்வதில்லை. மேற்கொள்ளவும் இயலாது. ஆனால் உலகில் அமைதி நிலவிடவேண்டும். ஆகவே உலகில் அமைதி நிலவிட, மெய்ஞ்ஞானப் பயிற்சியின் நோக்கத்தையும் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவையும் கருத்தில் கொண்டு சமுதாய வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பலதிட்டங்களை தீட்டி ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. இதற்காக இரவு பகலாக சிந்தித்து மகரிஷி அவர்கள் உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இம்முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் உலக சமாதானப் பாடல்களுக்கு அவரே விரிவுரை அளிக்க விரும்பி முதலில் தமிழில் விளக்கவுரையும், உலக சமாதானம் என்பது உலகத்திற்கு பொதுவானது என்பதால், பிறகு இரண்டாம் பதிப்பில் விளக்கவுரையை மட்டும் உலகப் பொது மொழியான ஆங்கிலத்திலேயும் அளித்துள்ளார்.

காந்த தத்துவ நூலின் முகவுரையில் மகரிஷி அவா்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்” எனக் கூறியுள்ளார். எனவே இவ்வளவு முக்கியமான கவிகளுக்கும் அவரே விளக்கவுரை நல்கியுள்ளார்.

காந்த தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை’ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக, பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக் கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடல் அமைந்துள்ளது.

‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்கின்ற முதல் பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விரிவான விளக்கவுரையை அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். முதல் பாடல் எட்டு வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், மகரிஷி அவர்களே அவ்வரிகளுக்காகத் தந்துள்ள விரிவுரை 181 வரிகளில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே தத்துவ நூல்களையும், தத்துவக் கவிகளையும் படிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை (word to word) பொருள் கொள்ளக் கூடாது. வரிகளுக்கு வரி பொருள் கொள்ளக்கூடாது. வரிகளுக்கு இடையேயும் பொருள் கொள்ள வேண்டும் (We must read in-between lines)

.அவ்விரிவுரையில் மகரிஷி அவர்கள், தான் இறையுணர்வு பெற்றதை படிப்படியாக விளக்குகிறார். நம்முடன் மகரிஷி அவர்கள் நேராக பேசுகின்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒருவேளை, வேறுயாராவது விளக்கவுரை தந்திருந்தால் மகரிஷி அவர்களின் சொந்த இறையுணர்வு அனுபவம் விடுபட்டே போயிருக்கும் ஆகவே முதல் பாடலுக்கான விளக்கவுரையை காந்ததத்துவ நூலில் கட்டாயமாக வாசித்துப் பயன் பெறவும்.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(01-02-2015) காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மற்றும் சங்கல்பத்தில் கூறும் ‘உயர் புகழ்’ பற்றியும் அறிவோம்.