புகழும் உயர்புகழும் – 2 / ?

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

புகழும் உயர்புகழும் – 2 / ?

அ.வி. 49

21-01-2015 புதன்

மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து, இந்த உலகம் பொய்யானது (the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்!

இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமோ அறிவுப்பூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது. எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ, அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் (வெளி-இறைவெளி-Eternal Space) பொருள் என்றும், அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது. அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.

பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம். முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் ‘பொருள்’, ‘பொருளல்ல’, என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும். பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா?

எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன? தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால் மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! . மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி, நிகழ்ச்சியை ஆரம்பித்தது,. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது.. வாடிய போது வாடி, மலர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?

மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் மேடையில் இல்லை. அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் 48 வரிகளில்  கவியினை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் சில வரிகளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

                                                                                          “பரம அணுக்கள் பலகோடி

                                                                                                    பண்பாய்க் கூடி ஒருகூத்து

                                                                                       கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்

  கட்டம் எந்த தோற்றமும்ஆம்”

என்கிறார் மகரிஷி அவர்கள். 48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து சுத்த அத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும், இயற்கையின்/இறையின் சரித்திரத்தை கூறி இயற்கையும் இறையையும் ஒன்றே எனவும் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு எளிமையாக இறை தன்னுடைய சரித்திரத்தை மனிதன் வழியாகக் கூறமுடியும்?

இறையின் தன்மாற்றத்தில் காலம் கனிந்து வந்துள்ளது. இறையின் குழந்தைகள்(சமுதாயம்) இறையின் தன்மாற்றத்தில் வளர்ந்து பரிபக்குவ நிலையை அடைந்துள்ளதையே இது எடுத்து இயம்புகின்றது. விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது போல் மெய்ஞ்ஞானமும் வளர்ந்து வருகின்றது. விஞ்ஞானம் வேறு மெய்ஞ்ஞானம் வேறு வேறா? இல்லையே. இரண்டுமே இறையின்/இயற்கையின் பெருமையையும், புகழையும் எடுத்துக் கூறுவதுதானே.

இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் ஏற்படாத திருப்புமுனை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையே அல்ல.

வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்றெல்லாம் கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியிலே மேலும், மேலும் அன்பர்கள் சேர்ந்து மாணவர்களாகி நீடித்து அறிவுத் தொண்டாற்றினால் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் விரும்பியது போல் பரிணாமம் பூர்த்தியாகும், அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே  மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. இதற்கு என்ன பொருள்?

வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும், தானும் நடைமுறைக்கு கொண்டு வந்து, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கை நீதியின்படி, தான் பெற்ற பயனைச் சமுதாயத்திற்கும் சோ்க்கின்ற கடமையை உணர்ந்து. உடலாலும் பொருளாலும், அறிவாலும், குறிப்பாக எண்ணத்தாலும்(இயற்கையின் சிகரம் எண்ணம்) அறிவுத்தொண்டாற்ற வேண்டும். இது இயற்கை திட்டமிட்டதாகும்.. இந்த விருந்தை முடித்தவுடன், ஞானக்களஞ்சியம் நூலை எடுத்து மேலே குறிப்பிட்டப் பாடலை ஒரிருமுறை வாசிப்பது விருந்திற்கு விருந்து சோ்க்கும்.
மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா? விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது. எனவே மலரில் பல கோடி அணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார். அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும். மலராகும் போது அந்த அணுக்கள் எல்லாம், ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒருநாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன.

இதே போன்றுதான் எந்தத் தோற்றத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்றது. சுருங்கச் சொல்வதெனில் இறையின் நாடகம் இப்பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. உலகமே ஒரு நாடக மேடை. அவ்வாறு நடக்கும் நாடகத்தில் ஒரு கட்டம்தான் மலருடைய தோற்றம். மனிதனும் அவ்வாறே நடித்து கொண்டிருக்கிறான் இறையின் இயக்கத்தில்(God is the Director of the Universe).
மலரைப் போன்றுதான் மனிதனும். அணுவின் கூட்டுப்பக்குவமாக(கவனிக்கவும் வார்த்தையை. கவனித்து இறையின் புகழை நினைந்து மகிழவும்) உருவத்தை எடுத்து பிறக்கிறான்; அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து மறைகிறான். மனிதன் என்கின்ற நாடகம் முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. மலர்மட்டும் நிகழ்ச்சி அல்ல. எல்லாத் தோற்றங்களும் நிகழ்ச்சிகள்தான் மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல.

மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது? புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது? ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை இனிவரும் பகுதியில் அறிவோம்.

அடுத்த அறிவிற்கு விருந்தில் (25-01-2015 ஞாயிறன்று) நிகழ்ச்சி — பொருள் பற்றி இன்னும் சற்று கூடுதலாக, மகரிஷி அவர்கள் கூறுவதை அறிந்துவிட்டு புகழ்- உயா்புகழ்பற்றி விரிவாக பார்க்க உள்ளோம்.