புகழும் உயர்புகழும் – 1 / ?

  

வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

புகழும் உயர்புகழும் – 1 / ?

அ.வி. 48

18-01-2015 ஞாயிறு

   புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கின்ற, பலராலும் பேசப்படுகிற நிலையைக் (fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை (glory, praise) என்றும் பொருள்.  புகழ் என்ற வார்தையைப்போல் உயர்புகழ் என்கின்ற வார்த்தையும் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.

   புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக (higher in grades or in hierarchical set up) உள்ளதைக்குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையயைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது.

   ஆனால் புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் புகழ்தான் உயர்ந்தது என்கின்றது மெய்ஞானம். எப்படி? உயர்புகழ்தானே புகழைவிட உயர்ந்ததாக இருக்கமுடியும். ஏனெனில் புகழ் என்பது இறைக்குரியது.  உயா்புகழ் என்பது மனிதனுக்குரியது என்கின்றபோது ‘புகழ்’ உயர்ந்ததாகி விடுகின்றது. ஏன் இந்த குழப்ப நிலை?   அப்படியானால் இறைக்குரியது உயர்புகழ் என்றும் புகழ் என்பது மனிதனுக்குரியது  என்று ஏன் வைத்திருக்கக்கூடாது.

   ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்’ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி இறைக்குரியதாகும்?

   பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

   தன்மூலத்தினுடனான (இறையுடனான)  பிணப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

   அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து  பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில்(மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) நாம் என்ன குறைந்து விடவாப்போகின்றோம்? யாரிடம் குறைந்துவிடப் போகிறோம்? மனிதனிடமா குறைந்து விடப்போகிறோம்?  இல்லையே.. அருட்பேராற்றலிடம் தானே குறைந்து விடப்போகிறோம்.  ‘அருட்பேராற்றல் கருணையினால் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்” என்றுதானே தினமும் சங்கல்பம் செய்து வருகிறோம். புகழ் இறைக்குரியது என்று உள்ளம் அறிந்து செயல்படுவது  பேரானந்த நிலைக்கு செல்வதற்கான  திறவுகோல். சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கின்ற புனித வாசகம் ஏற்கனேவே உள்ளது.

   ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காகவே உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

   நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதால், மனிதன் உடலளிவிலே எல்லைக் கட்டிக் கொண்டு ஆன்ம உணர்வோடு(soul consciousness) வாழ்வதைத் தவிர்த்துவிட்டு தேகாபிமானத்தோடே(body consciousnes) வாழ்கிறான். விளைவு இன்ப-துன்பக் கலவையைத்தான் அனுபவிக்கிறான்.  மனதின் மூன்றாவது மற்றும் நான்காம் படிகளான அமைதி, பேரின்ப நிலைக்கு செல்ல முடியாமல் சலிப்புள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே,   காரணத்தோடுதான் (என்ன என்று பின்னர் பார்ப்போம்) மனிதனுக்கும் புகழும்  அவசியம் எனக்கருதி, ஆனால் வேறுவடிவத்தில் அவசியம் எனக்கருதி ஆன்மீக உலகில் நீங்கா இடம் பெற்றுவிட்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல்லை உருவாக்கியிருக்கிறார்.   காரணம், உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

   ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  ஏனெனில் மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும்.  அறிந்தாலும், அறிந்தபோது அறிந்ததோடு சரி,  அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும்.  அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும்.  ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்’  வித்தியாசம் எந்த  அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு  பற்றுக்கள் நீங்கிவரும்.  பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும்.

பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

1)  முதன்மையானது பிறவியின் நோக்கம் அறிதல்—அதனை அமுலுக்குக் கொண்டு வந்து வெற்றி பெறுதல்.

2) இரண்டாமது  உறவு நிலையில் உண்மை நிலை அறிதல்—பிறகு அந்நிலை எய்துதலாகும்.

  இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில்   ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 -ல் அறியலாம்.  அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை நான்கு படிகளில் கூறியுள்ளார்,

   பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது,  பேரறிவிலிருந்து பின்னப்பட்ட மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால்  குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது  அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட  வேண்டியதே.  அப்போதுதான், மனிதஅறிவில் தெளிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வரும்போது மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்குவதற்கான வழிகள் பிறக்கும்.

   அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.  வாழ்க்கை என்பது,  ‘தான்’,  ‘சமுதாயம்’,  ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது.  எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும்.  ஆகவே இன்றைய சிந்தனைக்கான தலைப்பு ‘புகழும் உயர்புகழும்’ என்றிருந்தாலும் ‘பொருள் மெய்பொருள்’ என்பது  இயற்கையைப் பற்றியது என்பதால் அதனைச் சற்று சிந்தித்து விட்டு தலைப்பிற்குள் செல்வோம்.  தலைப்பை விட்டு வெளியே சென்றுவிடுவதாக நினைக்க வேண்டாம்.

புதனன்று(21-01-2015)  மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அறிந்துவிட்டு, புகழும் உயர் புகழும் என்கின்ற தலைப்பிற்குள் நேரிடையாகச் சென்றுவிடுவோம்.