222-பிறவிப் பயனை நல்கும்!6/?

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

பிறவிப் பயனை நல்கும்!6/?

அறிவிற்கு விருந்து—222

           31-08-2016—புதன்

    perinbapppadikalum thunaipapadikalum

‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் பிறவிப்பயன் என்ன என்பதனை பல்வேறு கோணங்களில் உறுதி படுத்தி வருகிறோம்.  அவற்றில் நம் குருதேவர் அவர்கள் ‘பிறவிப்பயன் பெற்ற அனுபவத்தையே’ எடுத்துக் கொண்டு,  ஒவ்வொரு படிகளாக சிந்தித்து உறுதி படுத்தி வருகின்றோம். 

     இன்றைய விருந்தில் மனம் தூய்மை அடையும் ஏணிப்படிகளில் (துணை) மூன்றாவது படியான விழிப்புணர்வு மற்றும் நான்காவது படியான பொறுப்புணர்வு பற்றியும் சிந்திப்போம்.

விழிப்புணர்வு என்பது என்ன?

‘பின்அந்த எல்லையினை அடைவதற்கு

              அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து ஆற்றி’,

என்கிறார் மகரிஷி அவர்கள்.

 தான் கண்டுபிடித்த பிறவியின் நோக்கத்தின் எல்லையினை அடைய அறநெறியில் விழிப்புடன் இருந்து செயல்கள் ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோது அடைந்த பேரின்பத்தை இரண்டாவது  படியாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டது  என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம்.  இப்போது ‘விழிப்போடு, பொறுப்புணர்ந்து’ என்பது பற்றி ஆராய இருக்கிறோம்.

    ‘விழிப்பு’ என்றால் என்ன? ‘உத்தம நண்பர்கள்காள் உங்கட்கும் உரியது’ என்று உறுதி அளித்திருக்கிறாரே மகரிஷி அவர்கள். அந்த அருள் மொழி  பிடித்திருந்தால், ஈர்த்திருந்தால், அதனை எப்போதும் கவனத்தில் கொள்வதுகூட விழிப்பு நிலைதான். விழிப்பு நிலை அவ் அருள் மொழியைக் கேட்ட அன்றே ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். எனவே  அவர் அடைந்த விழிப்பு நிலையினை அடைய ‘விழிப்பு’ என்கின்ற சொல்லுடன் தொடர்புடைய மற்ற மூன்று சொற்களின் பொருளையும் அறிய வேண்டும்  அதிலிருந்து ‘விழிப்போடு’ என்று மகரிஷி அவர்கள் கூறுவதற்கான அவரது அனுபவத்தைப் பெறலாம்.

    பொதுவாக ‘விழிப்பு’ என்றால் தூக்கம் கலைந்த நிலை அல்லது மயக்கம் நீங்கிய நிலை என்று    பொருள். 

   ‘விழித்துக் கொள்’ என்றால் ஜாக்கிரதை உணர்வு பெறுதல், உஷார் நிலை அடைதல்(awake) என்று    பொருள்.

  ‘ விழிப்புணர்வு’ என்றால் கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவு(state of awareness, awakening)    என்று பொருள்.

இங்கே மகரிஷி அவர்கள் கூறும் விழிப்பு நிலை என்பது கண்கள் விழித்துக் கொண்டிருக்கும் நிலை அன்று.

  இப்போது மகரிஷி அவர்கள் கூறும் அவரின் விழிப்படைந்த அனுபவநிலைக்குள் செல்வோம்.    ‘விழிப்போடு‘ என்பதால் தூக்கம் கலைந்த நிலை என்று பொருளா? 

    அல்லது மயக்கம் கலைந்த நிலை என்று பொருள் கொள்வதா? 

    விழித்துக் கொண்ட நிலை, அதாவது ஜாக்கிரதை உணர்வு பெற்ற நிலை என்று பொருள் கொள்வதா?  

    அல்லது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவின் நிலை என்று பொருள் கொள்வதா? 

    மனிதன் தன் பிறவியின் நோக்கத்தை அறியாத வரை ‘விழிப்பு’ என்பதற்கு எல்லாப்பொருட்களிலும்-எல்லா அர்த்தங்களிலும் விளக்கம் கொள்வதும் சரியே. சாதரணமாக விழிப்பு என்றால் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அறிவின் நிலையை விழித்திருக்கும் நிலை என்று பொருள் கொள்வோம்.

 விழித்திருப்பது என்ன?

   விழித்திருப்பது என்பது தூங்காமல் இருப்பது.  கண்களை திறந்து கொண்டிருப்பது.  தூங்கும் நேரத்தில் கண்கள் திறந்திருப்பதில்லை. தூங்கும் நேரத்தில் அறிவு விழித்திருப்பதில்லை.  ஆனால் தூங்காமல் கண்விழித்திருக்கும்,  நினைவிருக்கும் நேரங்களிலும் மனிதன் விழித்துக் கொண்டிருப்பதில்லை என்பது மனித சமுதாயத்தைப்பற்றிய அருளாளர்களின் கவலையாக உள்ளது.  காரணம் என்ன? 

     பிறவியின் நோக்கத்தை அறியவில்லை; அல்லது 

     பிறவியின் நோக்கம் அறிந்திருந்தாலும் அதனை  மறந்துவிடுவது. 

     அதனால் பிறவியின் நோக்கத்திற்கேற்ப மனிதன் வாழமுடியவில்லை.

     ஆகவே பிறவிப்பயனை அடைவதற்கான செயல்கள் ஆற்ற முடிவதில்லை.

     ஆகவே துன்பத்தில் மூழ்கி செய்வதறியாது தவிக்கிறான்.

     உறங்காதபோது மனிதஅறிவு விழிப்போடு இருந்து செயல்பட்டால், இறையோடு ஒன்றி  அல்லது இறையாகவே செயல்படும். எப்படி?  இறை என்பது என்ன என்று அறிவோம்.

    ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.  தெய்வமாகிய அறிவே மனிதனிடமும் அறிவாக உள்ளது.  தெய்வமாகிய அறிவின் தன்மைகள் என்னென்ன?  பேரறிவு சர்வ வல்லமை உடையது; எல்லாம் அறியத்தக்கது. எல்லாம் அறியத்தக்கதாக இருப்பதால்தான் அது ஆட்சியின்றி இப்பிரபஞ்சத்தை ஆளமுடிகின்றது. ‘செயலுக்கு ஏற்ப  விளைவு ஏற்படும் (செயல்விளைவுத்தத்துவத்தை)’ நீதியை பரிபாலனம் செய்ய முடிகின்றது. ஆகவே அந்த நிலைக்கு   மனித அறிவு தவத்தாலும், தற்சோதனையாலும் வந்துவிட்டால் எந்த தவறுமே அறிவு செய்வதற்கு வாய்ப்பில்லை.  அதுவே அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு நிலை.  அறிவு அன்பையும்  கருணையையுமே வெளிப்படுத்தும் நிலை அது. ஆங்கில ஆன்மீக நூல்கள் இறையை ‘Awareness  is God’ என்கின்றன. Awakening stage is God.  எனவே மகரிஷி அவர்கள் மற்ற அருளாளர்களின் ஆசியுடன், வழிகாட்டுதலுடன் பிறவியின் நோக்கத்தை நீண்ட நாள் சிந்தித்து அறிந்தபோதே அவரின் அறிவு விழிப்புநிலைக்கு வந்துவிட்டது.  எனவே அவர் அந்த முதல் நிலையிலேயே பேரின்பம்  அடைந்ததாகக் கூறுகிறார். மேலும்  சிறுவயதிலேயே அவரிடம்  பிற்காலத்தில் அவரை மகானாக்கிய நான்கு வினாக்கள்’ எழுந்து அரித்துக் கொண்டிருந்தன.  மகானாக்கிய அந்த நான்கு வினாக்களாவன:

1)   கடவுள் என்பவர் யார்?

2)   உயிர் என்பது என்ன?

3)   இன்பதுன்பம் என்பதென்ன?

4)   வறுமை ஏன் வருகின்றது?

இந்த வினாக்கள் எழுந்து அவரது உள்ளத்தை சதா அரித்துக் கொண்டிருந்ததே அவரை பிறவியின் நோக்கத்தை அறிய வைத்தது எனலாம்.  அவ்வினாக்களுக்கு கண்டுபிடித்த விடைகளே இப்போது வேதாத்திரியம் என்றும் மனவளக்கலையோகா  என்றும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இங்கே ஒரு ஐயம் எழலாம்.   என்ன அந்த ஐயம்?  மகானாக்கும் நான்கு கேள்விகள் எழுந்து அதற்கான விடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மனவளக்கலை யோகா என்கின்ற பெயரில் பயின்று வருகிறோம்.  அப்படியிருக்கும்போது மீண்டும் அந்த அரிய நான்கு வினாக்களுக்கு பயிற்சியாளர்களும் விடை கண்டுபிடிக்க வேண்டுமா?  அவ்வினாக்களுக்கான விடைகளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாதா என்பதே அந்த ஐயம்.  அவ்வினாக்களுக்கான விடைகளை பயிற்சியாளர்கள் அதனை தாங்களாகவே கண்டுபிடித்து அவ்விடைகள் சரியானதுதானா என உறுதி படுத்த வேண்டும்அவ்வாறு உறுதி படுத்தும்போது பிறவியின் நோக்கமும் என்ன என்று அறியப்படும். 

 எப்போது பேரின்பநிலை கிட்டும் அறிவிற்கு?

   அயரா விழிப்புநிலையில் பேரின்பம் கிட்டும்.  புலன்களைக் கடந்த நிலையில்இறையை உணரும்போது. இறையோடு ஒன்றியிருக்கும்போது பேரின்பம் கிட்டும்.  ஆகவே பிறவியின் நோக்கம் அறிந்தபோதே மகரிஷி அவர்கள் பேரின்பம் அடைந்ததாகக் கூறுவதால், அவர் இறையை உணர்வது உறுதியாகிவிட்டது.  எனவே அவர் ஆரம்ப நிலையிலேயே பேரின்பத்தை அடைந்ததாகக் கூறுகிறார்.  ஆரம்ப நிலையிலேயே பேரின்பநிலையை ருசிக்க ஆரம்பித்த அறிவு அதனை தொடர்ந்து ருசிக்க,  பல்லாயிரம் பிறவிகள்தோறும் ஏற்படுத்திக் கொண்ட பழக்கத்தால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், அவற்றில் வெற்றி பெற்று முடிவாக இறையை உணர்ந்துவிடும் என்பதனை மனவளக்கலைஞர்களுக்குத் தெரிவிக்கவே இப் பாடல் அருளப்பட்டுள்ளது.

அயராவிழிப்பு (constant awareness)

அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டது என்றும், எனவே  ‘அறநெறியில் விழிப்போடு’  என்பது ஒழுக்கத்தில் இருந்து எப்போதும் தவறிடாமல் இருந்து  கடமைகளை ஆற்றுவதும்,  பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் கருணையை வெளிப்படுத்துவதும் பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெறுவதற்கான அடிப்படை அம்சங்கள் என்றும் இதுவரை அறிந்து கொண்டோம்.  

  மகரிஷி அவர்கள் இதனை அயராவிழிப்பு நிலை(constant awareness) என்பார். விழிப்புநிலை அயர்ந்து விடக்கூடாது அதாவது எப்போதுமே விழிப்பு நிலையில் அறிவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது விழிப்பு நிலைக்கு வருவதன்று அயராவிழிப்பு என்பது. அவ்வப்போது விழிப்புநிலைக்கு வருவது என்றால், விழிப்புநிலைக்கு வராதபோது அல்லது விழிப்பு நிலையில் இல்லாதபோது அறிவின் நிலை என்னவாக இருக்கும்? இறையை மறந்துவிட்ட நிலை அது. அதாவது தன்னை மறந்தநிலை. ‘இறையே நானாக இருக்கிறேன் என்பதனை மறந்த நிலை’. உணர்ச்சிவயத்தில் உள்ள நிலை. அமைதியும் சாந்தமும் இல்லாத  நிலை அது, அதனால்தான் பாடலில் ‘அறநெறியில் விழிப்போடு’ என்று வலியுறுத்திக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.       இப்போது ‘அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து ஆற்றி’ என்கின்ற பாடல் வரியில் பொறுப்புணர்ந்து என்பது என்ன என்பதனை ஆராய்வோம்.

 பொறுப்புணர்வு என்பது என்ன?

   பிறவிப்பயனைக் கண்டுபிடித்த பிறகு,  ‘இறை உணர்வு பெறுதலின்’  எல்லையினை அடைவதற்கு, அறநெறியில்(ஒழுக்கம், கடமை, ஈகையில்) விழிப்போடு இருந்து கொண்டு, பொறுப்புணர்ந்து அன்றாட செயல்களை ஆற்றி, மனம், செயல் தூய்மை ஆனதை பேரின்பப்படிகளின் இரண்டாவது படியாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.அதில் பொறுப்புணர்வு என்று குறிப்பிடுவதன் பொருள் என்ன என்று இப்போது அறிய இருக்கிறோம். நமது வழக்கம்போல் ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கு  விளக்கம் காண்போம்.

 ‘பொறுப்பு’ என்றால்

 1)   விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்று பொருள். 

2)   இரண்டாவது  பொருள்—விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி.

3)   மூன்றாவது பொருள்—ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility).

    இப்போது மகரிஷி அவர்கள் பிறவிப்பயனைக் கண்டுபிடித்த பிறகு, அடுத்ததாக அதனை நிறைவேற்றிக் கொள்ள ‘தேவையானப் பொறுப்பு’ பற்றி அவர் அறிந்தவாறே நாம் அறிந்து கொள்ள அவரது அறிவாற்றலை வணங்கி நின்று ஆய்வு செய்வோம்.

    மனிதனாகப்  பிறந்து மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் எல்லோருமே கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயக் கண்டுபிடிப்பாகிய ‘பிறவிப்பயன் என்பது என்ன, அது இறை உணர்வு பெறுதலே’ என்பதாகும்.  அவ்வாறு இல்லாத நிலையில் பின்னாளில் அருளாளர்கள் ஆக இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே அதனை வாழ்நாளில்  கண்டுபிடிக்கின்றது.  மற்றவர்கள் கண்டுபிடிக்காத நிலையில் அவர்களால் மட்டும் எவ்வாறு கண்டுபிடிக்க முடிகின்றது?  ஒரு காரணம் பரிபக்குவ நிலை என்று சொல்லலாம்.

 பரிபக்குவ நிலை என்றால் என்ன?    

  பக்குவம் என்றால் என்ன?  பக்குவம் என்றால் ஒன்றிற்கு அளவான இருக்க வேண்டிய தன்மை என்று பொருள்.  உதாரணத்திற்கு மாமரம் காய்க்கும் பக்குவத்தில் இருக்கின்றது என்பது.   மனிதனிடம் வரும்போது அதுநிலை (சூழ்நிலை) அறிந்து செயல்படும் தன்மை என்று பொருளாகும்.‘பரிபக்குவம்’ என்கின்ற சொல் ஒரு சொல்லாகத் தெரியவில்லை.  ‘சுத்தம்’, ‘பரிசுத்தம்’ என்று இரு சொற்கள் இருப்பதுபோல் ‘பக்குவம்’, ‘பரிபக்குவம்’ என்கின்ற இரு சொற்கள் உள்ளன.  பக்குவம் என்பதுடன் ‘பரி’ என்கின்ற இடைச் சொல்  சேர்ந்திருக்கின்றது.  அப்படியானால் ‘பரிபக்குவம்’ என்றால் என்ன?  ‘பரி’ என்றால் என்ன?  ‘பரி’ என்பது மிகுதிப் பொருள்  தரும் ஒர் இடைச் சொல் –- a particle meaning excess. பரி என்றால் பெருமை, உயர்வு, அன்பு, வருந்திக்காத்தல், அறிதல் செய், கடந்து செல், பேறு —- greatness, elevation, love, to protect with difficulty,  to know, to pass, to get  என்று பொருள்.

    பொதுவாக பரிபக்குவம் என்றால் ஏற்ற சமயம் என்று பொருள்.  எனவே ‘ஆன்மாவை உணரும் ஆன்மீகத்தில் பரிபக்குவம்’ என்பது ஆன்மாவை உணர்கின்ற உயர்ந்த நிலையை அடைவதற்கு எந்த இடையூறுகள் வரினும் அதனையெல்லாம் கடந்து சென்று கிடைத்தற்கரிய பேறாகிய ‘ஆன்ம உணர்வு’ பெறுகின்ற ஏற்ற சமயத்திற்கு(right time, ripened state) ஆன்மா பரிணாமத்தில் வந்துள்ளது என்றே பொருள்இதுவே கருவில் திருஉடையவர்களின் நிலையாகும்.

   ‘பொறுப்புடன்’  என்பதற்கான பொருளை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது,  பரிபக்குவம் என்கின்ற வார்த்தை குறுக்கிட்டதால் அதன் பொருளையும் அறிந்து கொண்டோம்.  பரிபக்குவம் என்கின்ற நிலையினையும் அறிந்து கொள்வது இறை உணர் ஆன்மசாதகர்களுக்கு அவசியமானது. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(04-09-2016-ஞாயிறு) பொறுப்பு என்பதற்கான மூன்று பொருட்களை அறிவோம்.

இன்றைய சிந்தனையின் சாராம்சம்:

1)   விழிப்புணர்வு என்பது என்ன? மகரிஷி அவர்கள் கூறும் அயரா விழிப்புணர்வு(constsnt awreness) பற்றி அறிந்து கொண்டோம். அவருடைய துணையுடன் அவர் கூறும் அயரா விழிப்புநிலையிலேயே இருப்போம்.

2)   பரிபக்குவ நிலை என்பது,  இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்), ஆன்மா தன்னை உணர்கின்ற மிகுந்த ஆர்வ நிலைக்கு இப்பிறவியில் வந்துவிட்டதே ஆகும்.

 வாழ்க அறிவுச் செல்வம்                                                           வளர்க அறிவுச் செல்வம்.