218-பிறவிப் பயனை நல்கும்!2/?

வாழ்க மனித அறிவு                                                            வளர்க மனித அறிவு

பிறவிப் பயனை நல்கும்!2/?

அறிவிற்கு விருந்து—218

            17-08-2016—புதன்

நம் குருதேவர் ‘பிறவிப்பயன்’  என்ன என்று கூறுகிறார்?

      இயற்கை/இறை கருணையோடு அளித்துள்ள  (சுத்த அத்வைத பொருளில்) மனவளக்கலையின், முதல் வெற்றியாளர், நம் குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆவார்.  மானுடனாக அவதரித்த பாலகன் வேதாத்திரியை பின்னர் மகரிஷியாக உயர்த்தி அவர் வழியாக சமுதாயத்திற்கு வாழும் கலையாகிய வாழ்வியலை அளித்துள்ளதால், இதற்கு வேதாத்திரியம் என்கின்ற நாமத்தை சூட்டியுள்ளது இயற்கை/இறை.  பின்னர் அதன் சிறப்பையும், மதிப்பையும், பயனையும் உணர்ந்தும், அடைந்தும்  வருகின்றபோது வேதாத்திரியம் என்பது ‘திரு’ என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருவேதாத்திரியம் என அழைக்கலாகின்றது,  திருவேதாத்திரியம் பிறவிப்பயன் எது என்று கூறுகின்றது?

malare_malare_nee_yaar

     மலர் வழியே மறைபொருள் விளக்கத்தை இருவர் பங்குபெறும் நாடக வடிவில் மலருக்கும் மனிதனுக்கும் நடைபெறும் உரையாடலாக  பன்னிரண்டு சரணங்களில்(stanzas) கூறுகின்றது. வருங்காலத்தில் இந்தப்பாடலை பட்டி தொட்டியிலெல்லாம் குழந்தைகள்  மனனம் செய்து ராகத்தோடு இசைப்பார்கள் என்று திரிகால ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்  கூறியிருக்கிறார்.  எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த  பாடலின் பெருமையினை முதலில் அறிந்துவிட்டு பிறகு பிறவிப்பயனாக,  என்ன கூறப்பட்டுள்ளது என்று அறிவோம்.

  அந்த உரையாடலில்  மனிதன் ‘மலரே நீ யார்?’ என்று ஒரு  சரணத்தில்,   கேட்டது  ஒரு கேள்விதான் என்றாலும், மலர் கூறும் பதில் இதுவரை, இயற்கையின் ஆதிநிலையைப்பற்றி /இறையைப்பற்றி கூறுவது  தத்துவமாக இருந்து வந்ததை, இன்றைய  விஞ்ஞான உலக அறிவின் துணை கொண்டு உண்மையினை ஒன்பது  சரணங்களில்  (9×4=36) முப்பத்தாறு வரிகளில் கண்டுபிடிப்பாகவே எடுத்து இயம்புவதாக உள்ளது. தத்துவம் என்கின்ற நிலைமாறி கண்டுபிடிப்பு என்று ஆன்மீக சாதகர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் அமைந்துள்ளது

     இப்பாடலில் அறிவிக்கப்பட்டுள்ள இயற்கையின் ஆதிநிலை/இறை பற்றிய கண்டுபிடிப்பினை எடுத்து சொல்லிய பாங்கு  எளிமையாகவும், விரிவாகவும்,  வருங்காலத்தில் குழந்தைகளும் புரிந்து கொண்டு பாடுகின்ற பாடலாகவும் உள்ளது.      பன்னிரண்டு  சரணங்களில், முதல்   சரணத்தில் மனிதன், மலரின் அழகு, வண்ணம், மணம் ஆகியவற்றை ரசித்ததால், பேரின்பமுற்று, தன்நிலையினைக் கூறி மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக் கேட்பது இடம் பெற்றுள்ளது.  மனிதனின் இரண்டு வார்த்தைகளைக் கொண்ட ‘நீ யார்?’ என்கின்ற சிறு கேள்விக்கு விடையான மாபெரும் உண்மை ஒன்பது சரணங்களில் இடம் பெற்றுள்ளது.

     பதினொன்றாவது சரணத்தில், கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையும், அரியதுமான மலர் கூறிய கண்டுபிடிப்பாகிய மறைபொருள் (mother-source of all inventions so far invented and to be invented in future) வரலாற்று உண்மையினை, தான்  தெளிவாக ஏற்றுக் கொண்டதை(confess) மனிதன் தன் வாய்மொழியின் வாயிலாக நன்றி பெருக்கோடு கூறுவதாக அமைந்துள்ளது.

    இறுதியாக பன்னிரண்டாவது சரணத்தில் மலருக்கும் மனிதனுக்கும் நடந்த உரையாடலில், பிறவிப்பயனை உணர்ந்து விட்டதனையும், மேலும் அப்பயனை  அடைந்து விட்டதாகவே தெரிவிப்பது முத்தாய்ப்பாக உள்ளது  கேள்வி கேட்டு பதிலை அறிந்த மாத்திரத்திலேயே பிறவிப்பயன் அடைந்து விட்டதாக பாடலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக பாடல்களில் கற்பனையும் உண்டு என்பதால் இதுவும்  கற்பனை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.  கேள்வி கேட்ட அந்த மனிதர் ஆன்மீக பயிற்சியாளரா அல்லது இனிமேல் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள இருப்பவரா?  அதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வை இயற்கை/இறை நிகழ்த்தி வைத்ததா? இது நிஜமாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான்.  அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதுதான்.  இனி வரும் காலங்களில் இது எல்லோரிடம் நடக்கவிருப்பது.  தனது தந்தையை (பரமபிதா-இறை-பிதாவிற்கெல்லாம் பிதா) அறிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது?  அதற்காகத்தானே இறை மனிதனாகத் தன்மாற்றம் அடைந்துள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சியில்,  ‘தெளிவு’ பெரும் பங்கு வகிக்கின்றது.  இறை-உணர்-ஆன்மீகப்பயிற்சியின் முடிவு இறைஉணர்வு பெறுதல் என்று தமிழில் கூறுவதனை ஆங்கிலத்தில்   ‘Enlightenment’ எனப்படுகின்றது.   ‘Enlightenment’ என்பதற்கு தமிழில் ‘அறிவு ஒளி’ என்று பொருள்.   இன்னும் சற்று விளக்கமாக ஆங்கிலத்தில் சொல்வதானால்- Enlightenment is the advanced state of mind. ‘அறிவு ஒளி – அறிவொளி’ என்பதற்கான பொருள் என்ன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்? அறிவு ஒளியைப் பெறுகின்றபோது  அறிவு ஒளி-அறிவொளி எனப்படுகின்றது. ‘தெளிவு’ என்பதே இருட்டில் இருக்கின்ற அறிவிற்கு அதாவது அறியாமையில் இருக்கும் அறிவிற்கு ஒளியைச் சேர்ப்பது.       

      பன்னிரண்டாவது சரணம்தான் மனிதப்பிறவியின் பயன் என்ன என்று கூறுவதால் அதனை  இங்கே நினைவு கூர்வோம்.

     பன்னிரண்டாவது சரணத்தின் உட்பொருள்:

 12.  “ஆறறிவாக வாழ் மனிதர்

    அதற்கு ஏற்ப பொருத்தமுள

    பேறு உண்மைப் பொருளுணர்தல்

    பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.”

                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  முதலில் இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொள்வோம்.  பிறகு சரணத்தின் பொருளுக்குள் செல்வோம். இந்த கடைசி சரணத்தில்,  மலரைப்பார்த்து ‘நீ யார்?’ எனக்கேட்டு, அதற்கு பதிலாக, மலர்கூறுவதனைக் கேட்ட மாத்திரத்திலேயே தெளிவடைந்து பிறவிப்பயன் அடைந்து விட்டதாக மனிதன் கூறுவதாக அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வரிகளை அமைத்துள்ளார்.  இவ்வாறாக வரிகள் இயற்கை/இறை(சுத்த அத்வைதத்தில்) அமைத்ததன் காரணம் அல்லது மகரிஷி அவர்கள்(துவைதத்தில்) எழுதியதன் காரணம்,  இருவருமே(இறைமற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள்) அவ்வாறு கனவு காண்கின்றனர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  அல்லது திரிகால ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள், இறையைப்பற்றிய புரிதல்  அவ்வளவு எளிமையாகிவிடும் என்பது நிதர்சனமாகத் தெரிவதால் அவ்வாறு வரிகளை அமைத்துள்ளனர் இருவருமே.  இந்த சரணத்தின் அருமையை உணர்ந்து கொண்டோம்.

   சரணத்தின் பொருள் என்ன? வரிகள் எளிமையாக, தானே பொருள் கூறக்கூடியதாக  உள்ளன.  (It is self explanatory.) இருந்தாலும் அருட்பாடல்களில் சொல்ல வந்த  உண்மை சுருக்கித்தானே சொல்லப்படும் (In condensed form).  எனவே பாடலுக்கானப்  பொருளை சிந்தித்து அறிவோம்.  நான்கு வரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொருளை ஆராய்வோம்.

1)   ஆறறிவாக வாழ் மனிதர்.

2)   அதற்கு ஏற்ப பொருத்தமுள.

3)   பேறு உண்மைப் பொருளுணர்தல்.

4)   பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.

ஆறறிவாக வாழ் மனிதர்:

     உயிரினங்கள் அவைகள் உணரும் தன்மைக்கேற்ப/எண்ணிக்கைக்கேற்ப ஒன்றிலிருந்து ஆறு வகையாக மனிதனால் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரித்த மனிதனுக்கு ஆறு வகையான உணர்வுகளை உணரக்கூடிய ஆற்றல் உள்ளதால் அவனே, அவனை ஆறாம் அறிவுடையவன் மனிதன் என்று வகைப்படுத்திக் கொண்டான்.  ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து  ஆறாம் அறிவான உயிரினமான மனிதனாக வந்தபோது அந்த ஆறாம் அறிவிற்கான பயன் என்ன என்று இன்னமும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாக உள்ளது என்றே சொல்லலாம். 

    ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை உயிரினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்தபோது ஒன்றிலிருந்து – இரண்டிற்கு, இரண்டிலிருந்து – மூன்றிற்கு இவ்வாறாக ஐந்தாக வரும்  வரை ஒவ்வொரு உணர்வுகளாக கூடிக் கொண்டே வந்தன.   ஆனால் ஆறாம் அறிவாக வந்த மனிதகுலத்திற்கு என்ன பிரத்யேக உணர்வு கூடி இருக்க வேண்டும் அல்லது இயற்கை/இறை என்ன உணர்விற்காக மனிதனாக தன்மாற்றம் அடைந்துள்ளது  என்பது  1911 வரை வரை சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் இந்நிலையினை மாற்றி வருகின்றது வேதாத்திரியம். அது வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் மிகச் சிறந்ததாகும்.

     பாடலின் ‘ஆறறிவாக வாழ் மனிதர்’ என்கின்ற பாடல் வரியில்  ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கினங்க மனிதன் ஆறறிவுடையவன் என்கின்ற நினைவை நினைவூட்டி, ‘எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற வைரவரியின் ஆதங்கமும் தெரிய வருகின்றது,  

‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ –

 எதற்கு ஏற்ப பொருத்தமுள?   ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக என்று பொருள்.   பொருத்தமாக இருந்து என்ன செய்யவேண்டும்?  அதனை மூன்றாவது வரியில் காணலாம்.   ‘பொருத்தம்’ என்று சொல்வதால் ஆதிமனிதன் தோன்றி இன்று வரை பல லட்சம் ஆண்டுகள் ஆகியும்,  ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படவில்லை என்றுதானே பொருளாகின்றது.   ஆறாம் அறிவிற்கு பொருத்தமாக செயல்படவில்லை எனில் எந்த நிலையில் ஆறாம் அறிவு மனிதனிடம் செயல்படுகின்றது?  விலங்கினத்திலிருந்து மனிதன் வந்துள்ளதால், மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் ஏதேனும் காணப்பட்டால் அப்போது, காரணத்தை அறிந்து தீர்வு காண, மனித இனத்திற்கு  முந்தைய இனமான விலங்கினத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துதானே தீர்வினைக் காண்பது சரியாக இருக்கும்.  மனிதஇனத்தில் உருவமாற்றத்திற்கேற்ப குணங்கள் மறைந்து குறைகள் காணப்படுகின்ற நிலையை ஆதங்கத்தோடு இயம்புவதனை மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பாடலின் வாயிலாக அறிவோம். ஏற்கனவே  இப்பாடல் தெரிந்திருப்பினும், அதனை மீண்டும்  நினைவு படுத்திக் கொள்வோம்.  பாடல்கள் அருட்பாக்கள் என்பதால், பாடல்களை முதல் முறை படிக்கும்போதே உட்பொருள் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மறுமுறை படிக்கும்போது மேலும் உட்பொருளைத் தெரிவிக்கும்.  

   எனவே அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வோம். மேலும் ஒரே பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம். எனவே பாடல்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும்போது எந்த சூழ்நிலையை எடுத்து இயம்புவதற்காக நினைவுபடுத்திக் கொள்ளப்படுகின்றதோ அந்த சூழ்நிலையை/உண்மையினை அறிந்து கொள்வதுதான் முக்கியம். ஒரு பாடலின் உட்பொருளை விளங்கிக்கொள்வதற்கு வேறொரு பாடலைத் தேட வேண்டியுள்ளது. இங்கேயே உள்ளது உதாரணம். ‘மலரே மலரே’ பாடலின் கடைசி சரணத்தில் வரும் இரண்டாவது வரியின் உட்பொருளை அறிவதற்கு வேறொரு பாடலான ‘மனிதருள் உயர்ந்தோர்’ என்கின்ற தலைப்பில் உள்ள பாடலை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

      மனிதருள் உயர்ந்தோர்(3-1-59)

மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

  மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

  மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.

                  . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இப்பாடலை 1951 ஆம் வருடம் இயற்றியுள்ளார்.  அது வரை ஆதிமனிதன் தோன்றி எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தும், அவ்வாறு அப்பாடலை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அப்பாடல் இயற்றி அறுபத்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னமும் அப்பாடலை அவசியம் நினைவு கூறப்படுவதாகத்தான் உள்ளது சமுதாயத்தின் நிலை.  பாடல் மனிதருள் யார் உயர்ந்தோர் எனக் கூறுகிறார்.  எனவே அப்படிப்பட்டவர்களே ஆறாம் அறிவிற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்பவராக உள்ளார்.  முதல் வரியில் இன்னமும் மனித உருவத்தில் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், இயல்பூக்க நியதியான உருவமாற்றத்திற்கான குணங்கள் மாறவில்லை என்பதனையேத் தெரிவிக்கின்றது.  அப்படியானால் இயற்கையின் ஆதிநிலை/இறையின் திறனான இயல்பூக்க நியதி இதுவரை செயல்பட்டு வந்தது இப்போது மனிதனிடத்தில் செயல்பட முடியவில்லை என பொருள் கொள்ள முடியுமா?  முடியாது.  அப்படியானால் எவ்வாறு பொருள் கொள்வது? 

      ஓர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.  ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்வோம்.  குழந்தை பிறந்த உடனேவா நடக்கின்றது?! பேசுகின்றது?!! பதினோரு மாதம் கழித்துதான் தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்கின்றது. பேச ஆரம்பிக்கும் போது முதலில்  ‘ஒரு வார்த்தை சொல்’ பிறகு  ‘இரண்டு வார்த்தைச் சொல்’ என முயற்சிக்கின்றது. இதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது.  எனவே ஒவ்வொரு உயிரினத்தின் தன்மாற்றத்திலும் அததற்குரிய குணங்கள் மலர்ந்து அந்த தன்மாற்றம் முழுமை அடைய அததற்குரியநேரத்தை கடக்க வேண்டியுள்ளது.

அதேபோன்று மனித இனம் தன்மாற்றத்தில், ஆதிமனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தன்மாற்றம் சீரடைந்து சிறந்து விளங்குவதற்கான நேரம் இருபதாம் நூற்றாண்டில்தான் இயற்கைக்கு/இறைக்கு சாத்தியமாகியது என்றுதான் இயற்கையின்/இறையின் அம்சமான நாம் எடுத்துக் கொள்ள முடிகின்றது.  

 ஆறறிவாக வாழ் மனிதர்’, ‘அதற்கு ஏற்ப பொருத்தமுள’ என்கின்ற இருவரிகளையும் சேர்த்து படிக்கும்போது  அறிய வருவது யாதெனில், ‘மனிதன் ஆறறிவுடையவனாக இருந்தும், அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழவில்லை என்பதனை மகரிஷி அவர்கள் தெரிவிக்கின்றார் என்பது தெரிகின்றது.’  அடுத்த வரியில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையும், கடைசி வரியில் அதுவே பிறவிப்பயன் என்பதனை அறிவித்துள்ளார்.  அவற்றை அடுத்த விருந்தில் (21-08-2016-ஞாயிறு) அறிவோம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்.