225-பிறவிப் பயனை நல்கும்! 9/?

வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

பிறவிப் பயனை நல்கும்! 9/? 

அறிவிற்கு விருந்து—225

11-09-2016—ஞாயிறு.

perinbapppadikalum thunaipapadikalum

‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’

வாழ்க வளமுடன்.

இன்றைய தலைப்பான ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதில் முதல் இடம் வகிப்பது மகரிஷி அவர்கள் கூறும் அறிவுரையான ‘சுயமாய்ச் சிந்திப்பது’ என்பதால் சென்ற விருந்தில் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிந்து கொண்டோம். அதாவது ‘சிறப்பான சிந்தனை என்பது, சிந்தனையுடன் சிந்திப்பது’ என்று அறிந்துகொண்டோம். ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பே சிந்தித்தேதான் ஆக வேண்டும். அப்படிப்பார்த்தால் வாழ்வில் எவ்வளவு செயல்கள் செய்யப்படுகின்றன. அன்றாடம் செயல்கள் புரிந்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன். சிந்திக்கும் பருவம் வந்ததிலிருந்து(12 வயதிலிருந்து) இறக்கும் வரை சிந்திக்க வேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகள் இருக்கின்றன.

மனிதன் ‘நான் எப்போதுமே சிந்தித்துதான் ஒவ்வொரு செயலையுமே செய்கிறேன்’ என்று தைரியமாகவும் உறுதியாகவும் சொல்ல முடிகிறதா? சிந்திக்காமலேயே உணர்ச்சிவயத்தில் விளைவை முன்னரே கணிக்காமல், அறியாமையில் எவ்வளவோ செயல்களை செய்து விளைவுகள் துன்பங்களாக வரும்போது துன்பமடைவதனைத்தான் கண்கூடாகப் பார்க்கின்றோமே! வாழ்நாளில் சிந்தித்து வாழவேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகளில் ஒரு சில முக்கியத்துவம் பெறுகின்றன.

மகா சிந்தனை எது?

அவ்வாறு முக்கியத்துவம் பெரும் சிந்தனைகளில் முதன்மை வகிப்பது பிறவிப் பயனை அறியும் சிந்தனையாகும். இதனை ஆறாவது அறிவின் மகா சிந்தனை என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஏன்? பிறவிப்பயனை உணரவைப்பதால் அது மகா சிந்தனையாகின்றது. அப்படியானால் பிறவிப்பயன் என்பது என்ன? ஏற்கனவே பிறவிப்பயன் என்ன என்று அருளாளர்கள் கூற நாம் அறிந்திருந்தாலும் இப்போது அதனை நினைவுபடுத்திக் கொள்வோம். பிறவிப்பயன் பற்றி அருளாளர்கள் கூறுவது என்ன? முன்னோர்கள் செய்துள்ள வினைப்பயனை அனுபவிக்கவே ஆன்மா பிறவி எடுத்துள்ளது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் ஒரு அறிஞர். அதாவது பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், இவ்வாறாக முன்னோர்கள் செய்துள்ள வினையின் பயனை அனுபவிக்கவே ஆன்மா இப்போது பிறவி எடுத்துள்ளதனை எப்போதும் மனிதன் நினைவில் கொண்டு இப்பிறவியில் எவ்வாறு வாழவேண்டும்? முன்னோர்கள் செய்துள்ள வினைகளுக்கேற்ப இன்பமும் துன்பமும் வரும். ஆகவே ஆன்மா இப்பிறவியில் கொண்டுவந்துள்ள தீயவினைப்பதிவுகளையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். மேலும், தானும் இப்பிறவியில் தீய வினைகளைச் செய்யாமல் விழிப்போடு இருந்து நல்ல செயல்களையே செய்துவர வேண்டும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறவி எடுப்பதற்குக் காரணமான தீயவினைப்பதிவுகளை செயலிழக்கச் செய்து மீண்டும் பிறவாத நிலைக்கு ஆன்மா உயர்வதே பிறவிப்பயன் என்று அறிந்துகொள்ள வேண்டும். பயிற்சியினால் தீயவினைப் பதிவுகளை செயலிழக்கச் செய்வதால் மனம் தூய்மை அடையும். தூய்மை அடைந்த மனமே இறைமனமாகி தன்னை இறையுடன் இணையச் செய்யும். மனம் தூய்மை அடைந்து இறையோடு கலப்பதே பிறவிப்பயன் ஆகும். இது யாவருக்குமே பொது. இந்த உண்மையில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ இந்த உண்மையின் அடிப்படையில்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அமைகின்றது. உண்மையை யாரும் மாற்ற முடியாது. மறைக்கவும் முடியாது. எனவே உற்ற வயதில் மனிதன் சான்றோர்களின் அறிவுரைகளின் துணையுடன், சுயமாகவும் சிந்தனையுடன் சிந்தித்து பிறவிப்பயனை அறிய வேண்டி இருப்பதால் இச்சிந்தனையை மகா சிந்தனை என்கிறோம்.

விழிப்பும் மயக்கமும்:

இந்த மகா சிந்தனை, வாழ்க்கையை எவ்வாறு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வது என்பதனை வாழப்பிறந்த மனிதனுக்கு தெளிவு படுத்தும். இந்த மகா சிந்தனை வெற்றி பெற்றுவிட்டால் மற்ற சிறு சிறு சிந்தனைகள் எளிதாகிவிடும். அதெப்படி? ஏனெனில் மகா சிந்தனை எப்போது வெற்றி பெறும்? சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்து பயன் அடையும்போதுதான் சிந்தித்தது வெற்றி அடைந்ததாகும். அதாவது மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வோம். பேரறிவு அயரா விழிப்புடையது என்பதனை அறிவோம். அந்த அயராவிழிப்புடைய பேரறிவின் சிறு துளியே மனிதனின் அறிவாக இயங்குகின்றது. ஆனால் பல்வேறு பரிணாம நிலைகளை(EVOLUTIONARY PROCESS) கடந்து வரவேண்டியுள்ளதால் மனிதஅறிவு அந்த விழிப்பு நிலையை இழந்துவிடுகின்றது. விழிப்பு நிலையை இழந்து விடுவதற்கு மற்றொரு பெயர்தான் மயக்கம். எனவே பிறவிப்பயனை அறிந்து அதனை அடைவதற்கான தளம் அமைத்துக் கொடுத்த மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது மனித அறிவு மயக்க நிலையிலிருந்து மீண்டும் விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எப்போதும் இயற்கையில் இல்லாததை மனிதன் பெற இயாலாது. ஆகவே ஏற்கனவே இயற்கையில் பேரறிவிற்கு விழிப்பு நிலை உள்ளது. விழிப்புநிலையே பேரறிவு. விழிப்புநிலையே இறை.

விழிப்பு நிலையும் பிறவியின் நோக்கம் அறிதலும்:

ஏனெனில் மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது அயரா விழிப்பாகிய பேரறிவின் அங்கமான மனிதஅறிவு மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எனவே இருந்த விழிப்புநிலை(AWARENESS) இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் விழிப்பினை பெற்றுவிடும்போது அந்த விழிப்புநிலை என்பது அனிச்சையாகிவிடும். அதாவது மகா சிந்தனையில் வெற்றி பெற்ற பிறகு, அறிவு விழிப்பு நிலையிலேயே இருக்க ஆரம்பித்து விடும். வேறு விதமாக சொல்வதென்றால் விழிப்பு நிலை ஏற்பட்ட பிறகுதான் பிறவியின் நோக்கம் என்ன என்று தெளிவாகும். இன்னும் வேறுவிதமாக தெளிவாகச் சொல்வதென்றால் விழிப்புநிலை ஏற்படுவதும் பிறவியின் நோக்கம் தெளிவாவதும் ஒரே நேரத்தில் அறிவிற்கு ஏற்படும் அனுபவ சம்பவங்கள். சம்பவங்கள் என்று இரண்டாக பன்மையில் சொல்வது தெளிவான தெளிவு அல்ல. தெளிவானத் தெளிவு என்பது என்ன? சிந்தனையுடன் சிந்திப்பது போன்றதே இதுவும். தெளிவு வேறு சிந்தனை வேறா?! இல்லை. ஒன்றே. ஒரே அறிவின் நிலைகள்தானே சிந்தனையும், தெளிவும். விழிப்பு நிலை பெறுவதும், பிறவியின் நோக்கம் அறிவதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. எனவே இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன.

மகா சிந்தனையால் மகா புருஷரானார்:

இதுவரை சிந்தித்தில், மனிதனின் வாழ்நாளில் சிந்திக்கின்ற ஆயிரமாயிரம் சிந்தனைகளில், பிறவிப்பயனை அறிகின்ற சிந்தனை மகா சிந்தனை என்று முடிவு செய்துள்ளோம். அந்த மகா சிந்தனையால்தான் மகரிஷி அவர்கள் மகா புருஷனானார். பிறவியின் நோக்கத்தை அறிந்துள்ளார். அது பேரின்பப்படிகளில் முதல் படி. பிறகு அடுத்த மூன்றுபடிகளையும் கடந்து முழுமை அடைந்த அனுபவத்தை அறிவிக்கும் பாடலை சிந்தித்து வருகிறோம். ஏற்கனவே விருந்தில் இரண்டு படிகளை கடந்து வந்துவிட்டோம்.

எனவே இப்போது பேரின்பப் படிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது படிகளைக் கடக்க இருக்கிறோம். ஆகவே அவற்றை நினைவு படுத்திக் கொண்டு சிந்தனையைத் தொடர்வோம்  

‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி,

உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்,

துறவுநிலை முடிவாகப் பெற்ற போதும்,

துய்த்த பேரின்பம் எவ்வாறுரைப்பேன்!’                             

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மூன்றாவது நிலை:

பேரின்பப்படிகளின் மூன்றாவது நிலை என்ன தெரிவிக்கின்றது? ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி, உயர்வான துறவு நிலை உணர்ந்த போது பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இந்த நிலையை ஆய்விற்கு எடுத்துக் கொண்டு சிந்தனையுடன் சிந்திப்போம். அப்பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம்.

1) உறவுகளில் 2) உண்மைநிலை 3) உணர்ந்து 4) ஆற்றி 5) உயர்வான 6) துறவு நிலை 7) உணர்ந்த போதும். 8) உயர்வான 9) துறவுநிலை 10) உணர்ந்த போது

உறவு என்பது என்ன?

உறவு என்றால் சொந்தம்(RELATIONSHIP), தொடர்பு. பிணைப்பு(BONDAGE) என்று பொருள். உறவு என்பது மனிதர்களோடு உள்ள தொடர்பு மட்டுமல்ல. உயிரற்ற சடப்பொருட்களோடு ஏற்படும் தொடர்பும் உறவு என்றுதான் பொருள்.

உண்மை நிலை என்பது என்ன?

உண்மை என்பது மறுக்க முடியாதது. பொய் அல்லாதது, கற்பனைக்கு மாறானது, நடப்பில் உள்ளது, முறை பிறழாதது, இயல்பானது, முடிவாக இருப்பது என்று பொருட்கள் பல இருக்கின்றன. நிலை என்பது இருக்கும் தன்மை என்று பொருள். ‘உண்மை’ என்பதன் பொருளையும், ‘நிலை’ என்பதன் பொருளையும் இணைத்து ‘உண்மை நிலை’ என்பதற்கான பொருள் ஒன்றின் மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலை. எவ்வாறு பொருள் மெய்ப்பொருள் என்று இரண்டாகக் கருதுவதுபோலவும், மெய்ப்பொருளை உண்மை என்று கூறுவதுபோலவும் உறவின் நிலையிலும் இரண்டு உள்ளன. உறவின் வெளிப்படையாகத் தெரியும் நிலை உண்மை நிலையாகாது. உறவின் உண்மை நிலை ஒன்றுள்ளது. அதுதான் துறவு. உறவிற்கு எதிர் சொல் உண்டா எனில், துறவு என்பதனை உறவின் எதிர்ச் சொல்லாகக் கருதலாம். இதனைத்தான் உறவின் உண்மை நிலை துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். இதுவரை, இவ்வாறு பொதுவாகவோ (உலகியலில்) அல்லது ஆன்மீகத்திலோ ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு’ என்கின்ற கண்டுபிடிப்பின் மூலமாக இதுவரை பற்றினைப்பற்றிய தெளிவானத் தெளிவு இல்லாதிருந்த குறையை திருவேதாத்திரியம் போக்கியுள்ளது என்று கூறுவதன் மூலம் மகிழ்ச்சியினையும், உளமார்ந்த நன்றியினையும் வேதாத்திரியத்திற்கு தெரிவித்துக் கொள்ளலாகின்றது.

உணர்ந்து  என்றால் பொருள்  தெரியும். உணர்ந்து என்றால் ஒரு நிலையையோ தன்மையையோ மனதால் புரிந்து கொள்ளுதல் என்று பொருளாகின்றது.

ஆற்றி என்றால் கடமையை நிறைவேற்றுதல் என்று பொருளாகின்றது. ‘உயர்வான’ என்றால் மதிப்பில் கூடுதலாக இருத்தல் என்று பொருளாகின்றது.

‘துறவுநிலை’ – ‘துற’ என்பதிலிருந்து வந்த வார்த்தையான ‘துறவு’ என்றால் நீக்குதல், கைவிடுதல் என்று பொருளாகின்றது. ‘துறவுநிலை’ என்பது அறமாகிய நல்லவை சேர அல்லதை நீக்கிய நிலை என்று பொருள். அதனால்தான் இல்லறம்(இல்+அறம்) என்பதுபோல் அல்லதை துறப்பதில் இல்லறத்தில் இருந்த அறம் மேலும் சிறப்புறுவதால் துறவறம் எனப்படுகின்றது. இல்லறம் அவசியம். இல்லறத்தில் அறம் காக்க நல்லதையே செய்து வர வர, அதன் பயனாகிய வீடுபேற்றினை அடையமுடியும். நல்லதையே செய்து வருவது என்பது அல்லதைத் துறந்து கொண்டு வந்தால்தான் சாத்தியமாகும். ஆகவே வீடுபேற்றைப் பெறுவதனை தடுக்கும் அல்லதை துறப்பதே துறவு ஆகும். இத்தகைய சிறப்புள்ள துறவினை பலவிதகோணங்களில் விளக்கவே திருவள்ளுவருக்கு 14 அதிகாரங்கள் தேவைப்பட்டுள்ளன.

எனவே அறத்துப்பாலை மூன்றாகப் பிரித்து அதில் முதலில் பாயிரத்தை வைத்து, இரண்டாவதாக இல்லறவியலை வைத்து, இல்லறவியலுக்கு அடுத்ததாக துறவியலை வைத்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டும். எனவே இல்லறமும், அதனுடன் தொடர்புடைய துறவறமும் அவசியம். இல்லறத்திலும் அறம் இருக்கின்றது. துறவறத்திலும் அறம் இருக்கின்றது. இல்லறத்தில் இருக்கின்ற அறம் மேலும் சிறப்புற துறவறம் அவசியமாகின்றது. இந்த பிறவிதான் ஆன்மாவிற்கு முதற்பிறவியன்று. பல்லாயிரம் பிறவிகள் எடுத்துள்ளது இந்த ஆன்மா. எனவே பல்லாயிரம் பிறவிகளாக இல்லறம் மட்டுமே சுகம் என்கின்ற நினைப்பில் வாழ்க்கையை நடத்திவிட்டு முறையான, சரியான துறவறத்தை புறக்கணித்துள்ளது ஆன்மா. எனவேதான் இந்த பிறவி எடுத்துள்ளது. ஆகவே வேதாத்திரியத்தை அறிந்த இந்தப்பிறவியிலாவது மீண்டும் ஒருமுறை இல்லறத்தையும் மேம்பட நடத்தி திருவள்ளுவர் மற்றும் அவரை மானசீகமாகக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் துறவறத்தை முதன் முறையாக நடத்தி இறந்து-பிறக்கும் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். எனவே வேதாத்திரிய ஆன்மீகத்தில் ஆழ்ந்து போகப் போக ஆனந்தமே. பொதுவாக ஆன்மீக சாதகர்களுக்கேயுரிய பற்றை விடவேண்டியதில் உள்ள அச்சம் வேதாத்திரிய ஆன்மீகத்தில் கிடையாது. துறவு பற்றி தெளிவினை பல கோணங்களில் ஏற்படுத்த 14 அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார் திருவள்ளுவர். அதில் ஒன்று துறவிற்கென்றே ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார்.

மூன்றாவது பேரின்பப் படி:

ஆக ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்’, என்கின்ற சொற்றொடருக்கான பொருளாவது, மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது மதிப்பில் உயர்ந்த துறவுநிலை உணர்ந்த போதும் என்று பொருள்.

கடமையைச் செய்து வரும்போது என்ன நடந்தது மகரிஷி அவர்களுக்கு? துறவு நிலை விளங்கியது. அதுவும் அத்துறவு நிலை உயர்வானதாகவும் இருந்திருக்கிறது மகரிஷி அவர்களுக்கு, ஆகவே மூன்றாவது பேரின்படியில் அறிந்து கொண்டது — மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது உயர்வான துறவு நிலை விளங்கியது. விளங்கியபோதே அதனை அடைவதற்கான உறுதிப்பாடு அவரிடம் இருந்ததால், பேரின்பம் அப்போதே கிடைத்துவிட்டது. அந்த நிறைவில் 30-11-1991 அன்று தன் மாணவர்களுக்குத் தெரிவிக்கவே மலர்ந்ததுதான் ‘மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி.

மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி                           (30-11-1991)

இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்!

நின்றேன் நடந்தேன்; உன்னை நினைந்து தேடியலைந்தேன்; சென்றேன் பலஇடங்கள் சிந்தனை விரிந்தபின்.

இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்! …………………………………………………………………. ………………………………………………………………….                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நான்காவது பேரின்பப் படி:

அறிவு ஒன்றை உணர்ந்து விட்டதாலேயே, உணர்ந்து விட்டது முழுமையானதாகாது. உணர்ந்ததை அடையும்போதுதான் அது முழுமையாகும், பயனுமாகும். எனவே மூன்றாவது பேரின்பப்படியில் உணர்ந்த துறவு நிலையை முடிவாகப் பெற்றபோது அடைந்த பேரின்பம்தான் நான்காவதும் இறுதியுமான துறவு நிலை. அதற்குப்பிறகு இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியது வேறு ஒன்றுமில்லை. அவர் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாக இறைஅருளாலும், அருளாளர்களின் அருளாசியுடனும்,

தானாகவும், பிறவிப்பயன் என்பது இறை உணர்வு பெறுவது என்பதனைக் கண்டுபிடித்து, பிறகு இறை உணர்வு பெற அறநெறியில் வாழ்ந்து, அத்துடன் இல்லாமல் உண்மைப்பொருளை அறிய (இறைஉணர்வு) உறவு நிலையில் உண்மை நிலை துறவு என்று அறிந்து, முடிவாக அத்துறவு நிலையினை எய்தியுள்ளார். இந்த பேரின்ப அனுபவத்தை அவரது மாணவர்களும் ஐயமறத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இறைஉணர்வின் மனவுருத்தோற்றத்தினை(CONCEPT) அறிந்து கொண்டு அதற்தாக பெரும் முயற்சி செய்து இப்பிறவியிலேயே இறை உணர்வு பெறுகின்ற பேற்றினை அடைய 1998 சனவரியில் இப்பாடலை (இன்பம், இன்பம், இன்பம், இன்பம்) இயற்றியுள்ளார். இறைஉணர்வு என்பதனை வேறு வழிகளில் கூறியுள்ளதை, அதாவது நான்கு பேரின்பப்படிகளின் சாரத்தை நினைவு படுத்திக் கொள்வோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமான பேறான உண்மைப் பொருளை உணர்ந்துவிட்டால் பிறவிப்பயன் அடைந்ததாக மலரே! மலரே! எனத்துவங்கும் பாடலின் கடைசியில் கூறுகிறார். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் உள்ள பாடலின் கடைசியில்

பேரின்ப ஊற்று

உன்னிலே நானடங்க, என்னுள்ளே நீ விளங்க,

உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.

இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?

எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை. . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இதுவரை பிறவிப்பயன் நல்கும் என்பதில் பிறவிப்பயன் என்ன என்று விரிவாகப்பார்த்துவிட்டோம். இனி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருஉயர்வு மதிப்பவரை தப்பாது தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்பதில் ‘குருவை எவ்வாறு மதித்து ஒழுக வேண்டும்’ என்பதனை அடுத்த விருந்தில்(14-09-2016-புதன்) நிறைவு செய்வதோடு மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து(14-08-2016) ‘பிறவிப்பயன் நல்கும்’ என்கின்ற தலைப்பில் அருந்தி வருகின்ற விருந்து நிறைவு பெறும். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.