231-பழக்கமும் விளக்கமும்-1/?

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

அறிவிற்கு விருந்து—231

02-10-2016—ஞாயிறு.

வாழ்க வளமுடன்.

இன்றைய அறிவிற்கு விருந்து ‘பழக்கமும் விளக்கமும்’ என்கின்ற தலைப்பு. தலைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. ஏன் இந்த தலைப்பை எடுத்துக் கொள்கிறோம்?

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் என்ன தொடர்பு?

அதனை அறிந்து கொள்வதற்கே இந்த தலைப்பு. இந்த தலைப்பை எடுத்துக் கொண்டதற்கான காரணத்தை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்; அனுபவத்தால், சிந்தனையால். வேறு சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்ளாத ஏனையோரும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். யாரிடம் இல்லை தேவையில்லாத பழக்கங்கள்? உதாரணத்திற்கு சினப்படும்-பழக்கம். மனிதன் என்றால் சினப்படாமல் இருக்க முடியாது என்று நினைக்கலாம். சினம் என்பது ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் உடல் நலத்திற்கு கேடானது. மருத்துவர் ஒரு சில நோய்களுக்கு ‘சினம் கொள்வதனை தவிர்த்திடுங்கள்’ என அறிவுறுத்துகிறார். சினப்படுவது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகின்றது ஒரு சிலருக்கு. காரணமில்லாமலேயும் பழக்கத்தால் சினம் வருகின்றது.

ஆகவே எல்லோருமே தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்கிக் கொண்டு அதற்கு மாற்றாக நற்பழக்கங்களை மேற்கொள்வதற்கு மனிதர்கள் அனைவருக்குமே தேவைதான் ‘பழக்கமும் விளக்கமும்’. பற்றிய சிந்தனை. அறிவிற்கு விருந்திற்காக, பிரத்யேகமாக, ‘பழக்கமும் விளக்கமும்’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திக்கும்போது, அறிவு நல்லவைப்பற்றிய விளக்கம் பெற்று அதனைப் பழகுவதற்குத் தெளிவினைப் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். என்ன தெளிவு அது? அறிவோம் இச்சிந்தனையில்.

பழக்கம், விளக்கம் ஆகியவற்றின் அறிவியல்:

பழக்கம், விளக்கம் என்கின்ற சொல்லை சொல்லளவில்தான் தெரிந்திருக்கிறோம். அவை பற்றி அறிவியல் கண்ணோட்டத்தில்(science of habit and wisdom) இன்று அறிந்துகொள்வோம். மனிதவாழ்வின் நோக்கமே, பண்பில் ஏற்றம் பெற்று மனிதஅறிவின் தரத்தை முழுமையாக்குவதுதான்.
எனவே மனிதன் வாழ்வில் நன்மாற்றங்கைளை, சீர்திருத்தங்களை (சீரமைக்கும் திருத்தங்களை) மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது மனிதனுக்கு சிக்கல் ஏற்படாமலும், ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால், சிக்கலின் அறிவியல் அடிப்படையைத் தெரிந்து கொண்டு, எவ்வாறு பொறுமையாக இருந்து சிக்கல்களை எதிர்கொண்டு பண்பேற்றத்தில் தொடர் விடாமுயற்சியுடன் முன்னேற்றமடைந்து அறிவின் முழுமைப் பேற்றினை விரைவில் அடைந்துவிட வேண்டும்.
தலைப்பில் பழக்கம், விளக்கம் என இரண்டு சொற்களே இருந்தாலும், பதிவு-பதிதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

பதி-பதிவு-பதிதல்(imprint) என்றால் என்ன?

பதிதல் என்றால் அடையாளத்தை, தடயத்தை ஏற்படுத்துதல் என்று பொருள். ஒரு நாள் புதிதாக ஒரு செயலைச் செய்கிறான். அச்செயல் செய்ததற்கான அடையாளம்/தடயம் ஏற்படும். மீண்டும் மற்றொருநாள் அதே செயலைச் செய்கிறான். முதல் நாள் அச்செயல் புதியது. மற்றொரு நாள் அச்செயல் புதியதல்ல. அதே செயலை இரண்டாவது முறையாகச் செய்கிறான். இதற்கிடையில் முதல் நாள் செய்த செயல் செய்ததோடு மறைந்துவிடுவதில்லை. அதன் நினைவு உள்ளது. எப்படி? அதாவது அச்செயல் செய்தது அதன் சுவட்டை(Trace) ஏற்படுத்திவிட்டது. செய்த செயல் கருமையத்தில், உடல் உறுப்புகளில், மூளைச் செல்களில் பதிவை(சுவடு) ஏற்படுத்துகின்றது. அச்செயல் செய்யாதபோதும் செயல் செய்ததால் ஏற்பட்ட பதிவு நினைவாக, எண்ணமாக வருகின்றது. அச்செயல் தேவை என்றாலும் அல்லது தேவையில்லை என்றாலும் அச்செயலை மீண்டும் செய்யத்தூண்டுகின்றது மனம்.

எந்த ஒரு நிகழ்ச்சியும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை:

இப்பிரபஞ்சத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும்/செயலானாலும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. பதிதல்(imprint) நடைபெறாமல் இருந்திருந்தால் மனிதனுக்கு ஞாபக சக்தி என்பதே இருந்திருக்காது. மனிதன் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவதற்கு பதிதலேதான் காரணம். முன்னர் செய்தது பதிந்துள்ளது. அவன் விருப்பத்தினாலோ அல்லது அந்த மனஅலைச்சுழல் வரும்போதோ அந்த பதிதல் எண்ணமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. மனிதன் எண்ணும்போது, அந்த எண்ணம், உடல் செல்களில், மூளையில், கருமையத்தில், வான்காந்தத்தில் பதிகின்றது. ஒவ்வொரு முறை எண்ணும்போதும் பதிவை ஏற்படுத்துகின்றது. எத்தனை பதிவுகள் ஏற்படுகின்றதோ அதற்கேற்றால்போல் பதிவு அழுத்தம் பெறுகின்றது.

பரமாணுவிலும் பதிதல் நடைபெறுகின்றது:

பரமாணு என்ன செயல் செய்தது பதிவதற்கு? இங்கே ஒரு முக்கியமான உண்மையையும் அறிந்து கொள்வோம். பரமாணுவிலும் பதிதல் நடைபெறுகின்றது. மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். பரமாணு தோன்றியதே ஒரு நிகழ்வுதானே(செயல்தானே!)! அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள் தோன்றியதும் நிகழ்வுகள்தானே! அதிலிருந்து உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி அதிலேயிருந்து உலகம் தோன்றி வந்த எல்லா இயக்கங்களும், அலையின் மூலமாக பரமாணுவில் பதிந்துவிடுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். எனவேதான் மனஅலைச்சுழல் மிகவும் நுணுகிவரும்போது பரமாணுவில் பதிந்த எல்லா நிகழ்ச்சிகளும் எடுத்துக்காட்டப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.(மேலும் விரிவாக அறிந்து கொள்ள மனவளக்கலை தொகுதி மூன்றில் உள்ள அலை இயக்கத்தைப் படிக்கவும்.) இந்த உண்மைக்கு மகரிஷி அவர்களே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். எப்படி?

மகரிஷி அவர்கள் விதிவிலக்கு:

எதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார் மகரிஷி அவர்கள்? பொதுவாக ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ எனப்படுகின்றது. அதாவது இறைவனைக் கண்டவரால் அதுபற்றி சொல்ல முடிவதில்லை என்பதாகும். இதற்கு விதிவிலக்காக, அத்வைதத்தை சுத்த அத்வைத விஞ்ஞானமாக விரிவாக்கியவர் மகரிஷி அவர்கள். பஞ்சபூதங்களைப் பற்றி தான் சிந்தித்த விதத்தை நமக்குத் தெரிவிக்க மகரிஷி அவர்கள் “பஞ்சபூத பூங்காவிலே உலாவினேன்” என்று அனுபவித்து, அழகாகக் கூறுகிறார். அவர் எந்த அளவிற்கு சிந்தனையை ரசித்திருக்கிறார் என்பதனை அறிய முடிகின்றது. எனவே அவர்போல் நாமும் சிந்திக்கவும் இதுபோன்ற மகரிஷி அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அறிந்து ரசித்து, மகிழ்ந்து உயர்வினைப் போற்றிப் போற்றி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி பண்பேற்றத்தில் . உயரவும் முடியும்.

அவ்வாறு பஞ்சபூத சிந்தனைப் பூங்காவிலே உலவி வந்ததால்தான் அவர் அணுதோன்றியதை அறிய முடிந்தது. அணுதோன்றியவிதத்தை தான் அறிந்ததை அறிந்தவாறே நமக்கும் சொல்கிறார். அது எவ்வாறு தனக்கு சாத்தியமாகியது என்கின்ற உண்மையையும் கூறுவதனைக் கவனிப்போம்.

கண்டவர் ஏன் விண்டதில்லை?(1955)

ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு
அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்,
ஆதியாம் நிலையடைந்தார். அறிவு அங்கேது?
அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார் யார்?
ஆதியே அணுவான காரணத்தை
அறிஞரெல்லாம் விளக்காதது இதனால் என்று,
ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி,
அறிந்த நிலையில் விளக்கம் பெற்றுவிட்டேன்.

                                                           . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பதிதல்தான் பழக்கமாகின்றது என்பதால், பதிதல் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டோம். இப்போது பழக்கம் என்றால் என்ன என்று அறிவோம்.

பழக்கம் என்றால் என்ன?

பழக்கம் என்றால் பலமுறை செய்து ஏற்கனவே படிந்துவிடுகின்ற செயல்(habit, practice). ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்யும்போதும் அது உடல் உறுப்புகளில், மூளையில், கருமையத்தில், வான் காந்தத்தில் ஏற்கனவே உள்ள அச்செயல்-பதிவுகளின் மேல் பதிவுகளை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்துவதால் அச்செயல்-பழக்கம் வலிமை பெறுகின்றது என்பதனை ஒவ்வொரு மனிதனும் கவனிக்க வேண்டியது அவசியம். அதனால்தான் பலநாள்(இப் பிறவியில் மட்டுமல்லாது, நமக்கு முன்பிறவிகளிலும் ஆன்மா செய்த) செய்து வருகின்ற செயல்களின் பழக்கம் வலிமை அடைந்து, மேலும் அது தீயபழக்கமாக இருக்கும் பட்சத்தில் அதனை விடுவதற்கு மனிதன் போராட வேண்டியிருக்கிறது. அப்போராட்டத்தில் ஒருசிலரே வெற்றி பெறுகின்றனர். இதுவரை பழக்கம் என்பது பற்றி சிந்தித்தோம். இப்போது விளக்கம் என்பது பற்றி சிந்திப்போம்.

விளக்கம் என்றால் என்ன?

‘விளக்கம்’ என்கின்ற சொல் ‘விளக்கு’ என்கின்ற சொல்லிருந்து வந்துள்ளதால் முதலில் விளக்கு என்றால் என்ன என்று அறிவோம்.

விளக்கு= 1) ஒளி தரும் சாதனம்(lamp,light)
2) பாத்திரம், பல் முதலியவற்றைத் துலக்குதல்(clean the vessel, brush the teeth)
3) தெளிவு படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைத்தல், விவரித்தல்(explain, elucidate)
விளக்கம் என்பது, மற்றவர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் பற்றியத் தெளிவு ஏற்படுத்துவதற்காக அனுபவம் உள்ளவர் எடுத்துரைக்கும் தகவல் விளக்கம் ஆகும்.
ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது என்பதால் விளக்கம் என்பது தனக்குத்தானே ஏற்படுவதும் உண்டு. இது ஒரு சிலருக்கே சாத்தியமாகின்றது. ஏனெனில் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தாலும் எப்போதுமே சிந்திப்பது இல்லை. அறிவு சிந்திக்காமல் செயல் புரிந்தால் விளைவு எப்போதுமே இன்பமாக இருக்கும் என்கின்ற உத்திரவாதம் இல்லை. எனவே பெரும்பாலும் செய்ய இருக்கின்ற செயலுக்கு என்ன விளைவு வரும் என்று முன்னரே சிந்திக்காமல் உணர்ச்சிவயத்தில் பொறுமையில்லாமல் செய்யப்படும் செயல்களுக்கு விளைவு துன்பமாகத்தான் வருகின்றது.
எப்படி விளக்கு(lamp) இருட்டினை நீக்கி தனது ஒளியினால் வெளிச்சத்தைத் தருகின்றதோ, அதுபோல் அறிவு விளக்கப்படும்போது ஏற்படுகின்ற விளக்கம், அறியாமை என்கின்ற இருட்டினை நீக்கி அறிவு அறிவொளி வீசுவதற்குத் தெளிவைத் தருவதால்,
அறிவு ஏற்கனவே ஒன்றைப்பற்றி தெரிந்திருந்து ஆனால் தெளிவில்லாமல் இருப்பவர்களுக்கும் அல்லது
அந்த ஒன்றைப்பற்றித் தெரியாமலே இருப்பவர்களுக்கும்
தெளிவு தேவையாக உள்ளது.
இதுபோன்று தெரிந்திருந்து தெளிவில்லாமல் இருப்பது அல்லது தெரியாமலே இருப்பது ஒன்று மட்டும் அல்ல. பல உள்ளன மனிதனிடம்.
எனவே இரு தரப்பினருக்குமே பிறரின் அனுபவம் தேவையாக உள்ளது. பிறரின் அனுபவம் நேரிடையாக அவரிடமிருந்தோ அல்லது அவர் எழுதியுள்ள நூல்களின் வாயிலாகவோ அறிந்து கொள்வது விளக்கம் எனக் கொள்ள வேண்டும். எதற்காக இந்த விளக்கம் பெறப்படவேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் பற்றிய தெளிவில்லாமல் செய்யப்படும் செயல்களின் முழுப்பயனை செயல்புரிபவர் அடைய முடியாது. தெளிவில்லாமல், செய்யப்படும் செயல்களின் முழுப்பயனை செயல்புரிந்து அடையாத நிலை என்றால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப்பற்றித் தெரிந்துகொள்ளாமல், அதனால் செயலும் புரியாமல் இருப்பவருக்கு இழப்புதான் பெரிதாக இருக்குமல்லவா?! எனவே பிறர் வாழ்க்கை-அனுபவங்களிலிருந்து வரும் விளக்கம் இக்குறையை நிவர்த்தி செய்யும் வல்லமை உடையது. எனவே வாழ்க்கையைப்பற்றிய விளக்கம் என்பது இன்றுள்ள சூழ்நிலையில் அனைவருக்குமே அவசியம்.

எல்லோருக்கும் பொதுவானது வாழ்க்கைத் துறை:

பணியின் நிமித்தமாகப் பல்வேறு துறைகளில் இருக்கின்றனர் மனிதர்கள். ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு துறை உள்ளது. அதாவது பணியின் காரணமாக வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் எல்லோரும் வாழப்பிறந்தவர்களே. எனவே எல்லோருக்கும் பொதுவான துறை வாழ்க்கைத்துறை. இன்னமும் எவ்வாறு வாழ வேண்டும் என அறிந்து வாழ்வதில்லை மனிதகுலம். இப்படிச் சொல்வது மிகவும் வியப்பாகவே இருக்கலாம். உண்மையா என்பதனை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு செயலோ/நிகழ்வோ சரியாக நடக்கின்றது என்றால் அதனால் நன்மையேதான் இருக்கவேண்டும், வாழ்க்கை என்கின்ற நிகழ்வில். நன்மை குறைந்துள்ளது. அதாவது துன்பம் மிகுந்துள்ளது. அப்படி என்றால் பொருள்? வாழ்வது மனிதன்? எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற விளக்கம் மனித குலம் இன்னமும் முழுவதுமாகப் பெறவில்லை. எனவே வாழ்க்கை என்பது என்ன, அதனை எவ்வாறு சிரமமின்றி, துன்பமில்லாமல் வாழ்வது. துன்பம் வந்தாலும் அதனை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்வது போன்றவற்றைப்பற்றிய அறிவியல் உண்மைகள் 1911 முன்னர் வரை கண்டுபிடிக்கபடவில்லை. இப்போது மனவளக்கலையால் வாழ்க்கைக்கு என பிரத்யேகமாக இயல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே வாழ்வியல்(Science of Living).

எனவே வாழ்வதற்கு விளக்கம் அவசியமாகின்றது. பொதுவாக விளக்கம் என்றால் என்ன என்று முன்னர் அறிந்தோம். ‘விளக்கம்’ பற்றி மேலும் விளங்கிக் கொள்வோம்.

சிந்தினையும் விளக்கமும்:

சிந்திப்பதற்கும் விளக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஒருவரின் அறிவின் தன்மையை – சிறப்பைக் குறிப்பிடும்போது அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்கிறோம். கூர்ந்த அறிவுடையவர் என்கிறோம். அறிவு அரூபமானது(உருவமில்லாதது) என்றாலும் அறிவை கூர்மையுடையது என்கிறோம். உருவமில்லாத ஒன்றை கூர்மையாகவுள்ளது என்று சொல்வது எப்படி பொருத்தமாக உள்ளது? கத்தி கூர்மையாக உள்ளது என்கிறோம். இது சரி, கத்தி பருப்பொருளாக(உருவமுள்ளது) உள்ளது. எனவே கத்தி கூர்மையாக உள்ளது என்பது கண்களுக்கே தெரிகின்றது.

கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்:

கத்தி என்று ஒன்று இருந்தால் அது கூர்மையாக இருந்தால்தான் அது கத்தி. எதற்காக கத்தி கூர்மையாக இருப்பதை எதிர்பார்க்கிறோம்? கத்தி கூர்மையாக இருந்தால்தான் பொருட்களை வெட்டுவது சிரமமின்றி எளிதாக இருக்கும். கத்தி எவ்வாறு கூர்மையாக்கப்படுகின்றது? கத்தியைக் கூர்மையாக்க சாணைக்கல்லில் தீட்டி(தேய்த்து) கத்தி முனையில் உள்ள கூர்மைக்கு தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகத்தை நீக்க வேண்டும். எனவே கத்தி கூர்மையாக இருக்கின்றது என்றால் கூர்மைக்குத் தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகம் நீக்கப்பட்டிருக்கின்றது என்று பொருள்.

அதுபோல் அறிவு உருவமில்லாமல் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பிறவியிலேயே கூர்மையாகவே இருக்கும். இல்லை என்றாலும் அறிவை மனிதன் கூர்மையாக்கவும் முடியும்? கத்தியின் உபயோகம் பொருட்களை சிரமமின்றி எளிதாக வெட்டுவது. அதுபோல் அறிவின் உபயோகம், அறிய வேண்டியவைகள் இயற்கையில் ஆயிரமாயிரம் இருந்தாலும், வாழ்க்கையை செம்மையாக வாழ்வதற்கு தேவையான அறியவேண்டியவைகளை அறியவேண்டியதே. அதுவும் சட்டென அறிய வேண்டும். ஆகவே அறிவு கூர்மையாக இருந்தால்தான் அது சிந்தனை வளத்தில் சிறந்து விளங்க முடியும். எனவே அறிவுக் கூர்மை என்பது சிந்தனையே ஆகும்.

அறிவை தனது செல்வமாக்கிக் கொள்ள வேண்டும்:

சிந்தனையில்லாமல் அறிவு செயல்படக் கூடாது. சிந்தனையில்லாமல் செயல்பட்டால் ஆறாம் அறிவின் பயனை அடைய முடியாமல் போகும். ஆறாம் அறிவின் பயனை அடைய முடியாவிட்டால் விளைவாக தனது வாழ்க்கையில் துன்பமே மிகுந்திருக்கும். தனது வாழ்க்கை துன்பப்படுவதோடு மட்டுமல்லாமல் மனிதன் சமுதாயத்துடன் சேர்ந்தே வாழ்வதால், மற்றவர்களின் வாழ்க்கையையும் துன்பத்திற்கு உள்ளாக்கும். திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல் ‘அறிவை’ நமது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். (உடைமை=செல்வம்)

அறிவுக் கூர்மைக்கு …..

அறிவு கூர்மையாக இருக்கவேண்டும் என்றால் அறிவு அறியவேண்டியதைத் தவிர மற்றவற்றை நீக்க வேண்டும். மழுங்கியுள்ள கத்தியைக் கூர்மையாக்க கத்தியின் மழுங்கிய இடத்தில் உள்ள, கூர்மைக்குத் தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகத்தை நீக்குவதுபோல். அறிவு அறியவேண்டியதற்கு இடையூறாக உள்ளவற்றை நீக்க வேண்டும். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், அறியவேண்டியதை அறியாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கும் அறியாமையை நீக்க வேண்டும். அறியாமையை நீக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு விளக்கம் வேண்டும். விளக்கம் எங்கிருந்து பெறுவது? அனுபவமுள்ளவர்களிடமிருந்து பெறவேண்டும். யார் அந்த அனுபமுள்ளவர்கள்.? நெறியைச் சார்ந்து வாழ்கின்ற சான்றோர்கள்; அறிவை அறிந்த அறிஞர்கள்.
இதுவரை பதிதல், பழக்கம், விளக்கம் பற்றிய வாழ்வியல் சிந்தனை செய்தோம். இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்தில் (05-10-2016-புதன்)விளக்கம் யாரிடமிருந்து பெறுவது, எவ்வாறு பெறுவது, விளக்கத்தை எவ்வாறு வாழ்க்கையில் கடைபிடிப்பது, கடைபிடிப்பதில் ஏதாவது ஐயங்கள் வந்தால், அதற்கானத் தீர்வுகள் பற்றி அறிய இருக்கிறோம்.
வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்.