பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 3/?

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

FFC – 170

09-03-2016—புதன்

 FFC-170-மகரிஷி படம்-அறத்தின் மாண்புணர்ந்து caption

சென்ற இரு அறிவிற்கு விருந்தில், உலகநல வாழ்த்துப்பாவில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து–மந்திரம் பற்றி சிந்தித்து வருகிறோம். மந்திரங்களின்(மந்திரம்—வாழ்த்து) பொருள் தெரிந்து உச்சரிப்பதில் விசேஷ பலன் உண்டு என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்தும், விரிந்தும் சிந்தித்து வருகிறோம். மூன்றாவது நாளாக இன்றும் அதே பொருள் பற்றி சிந்திக்க ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம். இன்று,

1.  மனித இன பரிணாமத்தில் எப்போது அறம் தோன்றிற்று,

2.  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது என்ன,

3. எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தும் என்பது பற்றியும்,

4. வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறியிருக்கிறார்கள், எவ்வாறு கூறியிருக்கின்றனர்,

5. அது எவ்வாறு 20ஆம் நூற்றாண்டில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற புனிதச் சொற்றொடராக மலர்ந்துள்ளது

என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

ஆழ்ந்த விரிந்த சிந்தனையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில், மனிதஇன பரிணாமத்தைப்பற்றி சிந்தித்தபோது கிடைத்த மிக முக்கியமான கண்டுபிடிப்பாகிய ‘அறம்’ என்ன என்பதும் ஒன்றாகும். அந்த கண்டுபிடிப்பை தெரிவிப்பதற்கு சரியான வழி, பாடல் என்பதால் ‘அறத்தின் தோற்றம்’ என்கின்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கவியினை 20-12-1959 அன்று அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

FFC-169-6-3-16பகுத்துணர்வில் அறத்தின் தோற்றம்

இப்பாடலை 48 வயதில் இயற்றியுள்ளார். 35 வயதில் இறைவுஉணர்வில் தெளிவடைந்திருக்கிறார். ஈசன் மீது கொண்ட ஆசை நிறை வேறிவிட்டது. வேறு சில அருளாளர்கள் ஈசன் மீது கொண்ட ஆசையிலேயே தொடர்ந்து திளைத்திருப்பது போன்றில்லாமல், திருமூலத் தெய்வத்தை மானசீகக் குருவாக ஏற்று தன்னை அறியும் கலையில் நிறைவடைந்தவர் மகரிஷி அவர்கள். மேலும், அதனை சமுதாயத்திற்கு கற்றுத் தரும் விருப்பம் அவரிடம் இருந்ததால், அறிவுத் தொண்டிலும் நிறைவடைய, சிறக்க,

‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’

என்கின்ற திருமூலரின் எண்ணத்தின் ஊடுருவலால், மகரிஷி அவர்கள் உலக நல விரும்பியாக இருந்ததாலும், அதற்கேற்றபடி அறிவுத் தொண்டில் தன்னை உலக நலத் தொண்டராக அர்பணித்துக் கொண்டார். எனவே தான் மகரிஷி அவர்கள் இறை உணர்விலும் மற்றும் சமுதாயத் தொண்டிலும் நிறைவு பெற்றார். ஒரு முறை மகரிஷி அவர்கள் கூறியதாவது— ‘ஒரு சிலர் இறை உணர்விலேயே நிறைவு பெறுகிறார்கள். வேறு சிலர் தொண்டினால் நிறைவு பெறுகிறார்கள். ஆனால் நானோ இறைஉணர்வு, தொண்டு இரண்டிலும் சமமாக நிறைவு பெற்றேன்’ என்றார். அறிவுத் தொண்டில் அவருக்கு இருந்த ஈர்ப்பினாலே அவர் ஆழ்ந்து விரிந்த அற்புதத்திலும் அற்புதமான சிந்தனையாளராக திகழ்ந்தவர்.

     எனவே 35 வயதில் இறைவுணர்வில் தெளிவடைந்தாலும் இவ்வுலகம் உய்வதற்கான வழிவகைகளை தொடர்ந்து ஆராய்ந்து வந்தார். அதில் ஒன்று தான் இறையைப்பற்றிய தெளிவாக விளக்கம் இவ்வுலகிற்கு அளிக்க வேண்டும் என்பது. எனவே அவர் கடைசி சுவாசம் வரையில் சிந்தனை மூச்சையும் நிறுத்த வில்லை. மகா சமாதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், ‘இறையின் தன்மாற்ற சரித்திரம் என்கின்ற ஒரு நூலை இயற்றிவிட்டுத் தான் விடை பெற்றார்.

    உயிரினங்களிலேயே மிக மிகச் சிறந்தது மனித இனம். மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தி சிறப்புறுவதற்கு காரணம் உள்ளதால்தான், மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்கிறான்.

     மற்ற உயிரினங்களுக்கு தன் உணர்வு மட்டுமே தெரியும். பிற உயிர்களின் உணர்வு தெரியாது. எப்படி? புலிக்கு மானின் உணர்வு தெரியாது. பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. நரிக்கு முயலின் உணர்வு தெரியாது. ஏன் எனில் அவை விலங்கினங்கள். மேலும் பிற உயிர்களின் உணர்வு தெரிய வந்தால் புலி மானையும், பாம்பு எலியையும், நரி முயலையும் உணவாக்கிக் கொள்ள முடியாது. பின்னர் அவை உணவில்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்?

ஆனால் மனிதன் தன்னுணர்வு போன்று அதே அளவில், ஏன் சிலசமயங்களில் கூடுதலாகவும் பிற உயிர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பிறஉயிர்படும் துன்பங்களை, தான் அனுபவிப்பதுபோல் உணரக்கூடியத் தன்மை ஆறாம் அறிவிற்கு உண்டு. ஆனால் ஆறாம் அறிவின் இந்த நிலை ஆதிமனிதர்கள் தோன்றியதுமே அவர்களுக்கு தோன்றவில்லை. ஆறாம் அறிவின் இந்த நிலை மனிதஇன பரிணாமத்தில் வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே அவ்வாறு இருந்த நிலையில் ஆறாம் அறிவு பிறஉயிர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையை எந்த சம்பவத்தால் எத்தினம் ஏற்பட்டது என்பதனையே இப்பாடல் வரிகள் நமக்கு தெரிவிக்கின்றன.

அறத்தின் தோற்றம் என்கின்ற பாடலுக்குள் ஆழ்ந்து செல்வோம். அப்பாடலிலுள்ள வரிகளைக் கவனிக்கவும். மகரிஷி அவர்களின் சிந்தனை அனுபவத்தை உள்ளது உள்ளவாறு அப்படியே பிரதிபலிக்கின்றது. மகரிஷி அவர்களின் மனக்கண்களில் அறம் தோன்றிய காட்சி தோன்றியதுபோல், நமக்கும் அவ்வாறே மனக்கண்களில் தோன்றுமாறு படம் பிடித்துக் காட்டுகின்றன பாடல் வரிகள்.

பாடல் நான்கு வரிகளாக இருந்தாலும் அவை தெரிவிக்கும் ஐந்து மாபெரும் உண்மைகள் மனிதகுலம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டியவைகளாக உள்ளன.

அவ்வுண்மைகளை விளக்க வரிகள் நாற்பதோ, ஐம்பதோ போதா. நானூறோ அல்லது ஐநூறு வரிகளும் தேவைப்படும். ஏனெனில் பலநாள் சிந்தித்து கண்டுபிடித்த உண்மைகளை தெரிவிக்க எளிய சுருக்கமான வழிதான் அருட்பாடல்(condensed form of thoughts is poem) என்பது. எனவே அருட்பாடலுக்கு விளக்கம் அளிப்பதென்றால் அதிக வரிகள் தேவைப்படுகின்றன. பாடல் வரிகள் தெரிவிக்கும் உண்மைகள் என்னென்ன?

1) அறம் என்ன என்பதற்கும் விடையும்,

2) மதம் தோன்றியதற்கான காரணம்,

3) ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சுத்த அத்வைத விஞ்ஞானத்தை அன்றே திருமூலத் தெய்வம் கூறியிருந்தாலும், மதம் ஏன் பலவாகியதற்கான காரணம்,

4) மதங்கள் பலவானாலும் எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றுதான் எனவும்,

5) அது தான் அறம் என்கின்ற விளக்கமும் அறியப்படுகின்றன.

    நீண்ட நாள் மனித இன பரிணாமத்தை ஆராய்ந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். மனித இன பரிணாமத்தை ஆராய்ந்த போது இயற்கையால்/.இறையால் அவருக்கு விளக்கப்பட்ட விளக்கங்களே அவை. ஆங்காங்கே ஆதிமனிதர்கள் தோன்றி இருப்பார்கள். முதன் முதலில் விலங்கினத்திலிருந்து வந்த ஆதிமனிதர்களிடம் விலங்கினப்பண்பேதான் முழுவதுமாக இருந்திருக்கும். நாள் செல்லச்செல்ல அறிவு வளர வளர, மனிதப்பண்பு வெளிப்பட ஆரம்பிக்கும்போதுதான் ‘பிறர் உணர்வை அறிய ஆரம்பித்திருப்பான் ஆதிமனிதன். ஆரம்பித்ததோடு இல்லாமல் அந்த துன்பத்தின் தன்மையையும், அளவினையும் தனது மனதால் யூகித்து உணர்ந்திருப்பான்.

அப்போது ஏற்பட்ட மனநிலைதான் இரக்கம் என்பது. இரக்கம் ஏற்பட்டதோடு, பிற மனிதன் படும் துன்பத்தைப் போக்குவதற்கு, கைகள் இருந்ததால், கைகளின் துணையுடன் உதவியிருப்பான். எனவே இந்த இரக்கத்திற்கு வேறு பெயர் கருணை எனலாம். உலகில் எங்கோ ஒருமனிதனுக்கு இரக்கம் ஏற்பட்டு உதவி செய்த முதல் நிகழ்வு அறிவில், சிந்தனையில் ஏற்பட்டதனை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதுதான் அறம் என்றாயிற்று என்கிறார். இங்கே நாம் முதலில் ரசிக்க வேண்டியது ‘முதல் நாள்’ என்பது. மனிதகுலம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகின்றது. அதில் ஒரு நாள் இரக்கப்பட்டு உதவி செய்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

     அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, ஆராயும் திறனும், அதன் மூலம் கண்டுபிடித்த உண்மைகளை எளிமையான வரிகளில் அவர் கவிகளாக படைக்கும் கவித்துவம் பெற்றதனாலும் நமக்கன்றோ பயன்!. அவருக்கு இயற்கை/இறை அறிவித்த எதனையும் விட்டுவைக்காமல் 1800க்கும்மேல் கவிகளாகவும், விரிவாக உரைநடை வடிவில் நூல்களையும் அருளியுள்ளார். இது இயற்கையால்/இறையால் திட்டமிட்டு சமுதாயத்தை விலங்கினத்திலிருந்து மனித நேயத்திற்கு திருப்புவதற்கு எடுத்த முயற்சியாகும்.

அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய சொற்கள் ‘சிறந்த திருப்பம்’ என்பது. திருப்பம் என்று மட்டும் சொல்லவில்லை நம் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ‘சிறந்த’ என்கின்ற அடைமொழியினைச் சேர்த்துக் கொள்கிறார். காரணம் என்ன? இந்தக் காரணத்தை அறிந்துகொள்வது நமக்குச் சிறப்பு.

    ஐந்து புலன்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த ஐந்தறிவு விலங்கினமே சடுதி மாற்றத்தால் ஆறறிவுடைய சீவனாக மாற்றம் பெற்றுள்ளது. உணவிற்காக ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்னும் அன்பும் கருணையுமிலா(அன்பும் கருணையும் இல்லா தன்மை (ஐந்தறிவின் நிலை.) இயல்புடைய விலங்கினம்தான் சடுதிமாற்றத்தால் மனிதனாக மாற்றம் பெற்றுள்ளது. காரணமில்லாமலா இயற்கையோ/இறையோ எதனையாவது செய்யும்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தற்கான காரணம் என்ன?

    ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை அறிவதற்காக ஐந்தறிவு வரை உயிரினங்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு மற்றொரு சீவ இனமான மனிதனாக தன்மாற்றம் அடைந்ததற்குக் காரணம் ஐவகை நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இதற்கெல்லாம் மூலம் என்ன என்று அறிவதற்காகவேதான். இதனைத்தான் இப்போது நாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்கிறோம்.

ஐந்தறிவு வரை, சீவ இனங்கள் விலங்கினங்களாகவே வாழ்கின்றன. ஐந்தறிவு சீவ இனங்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் சென்றபிறகு, இயற்கை/இறை தன்னை அறிவதற்காக ஆறாம் அறிவு சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளது. ஆதிமனிதனின் தோற்றத்திற்கு பிறகு பல லட்சம் ஆண்டுகள் சென்ற பிறகும், விலங்கினத்தன்மையுடனே வாழ்ந்து வந்திருந்த ஆறாம் அறிவு சீவ இனம். ஆறாம் அறிவு சீவன் மனிதன் என்பதால், அது மனிதத்தை வெளிபடுத்தி ஆக வேண்டும். மேலும் இயற்கை/இறை தன்னை உணர்வதற்காகவே ஆறாம் சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளதால், அச் சீவ இனம் இயற்கையின்/இறையின் தன்மையான அன்பும் கருணையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. எனவே விலங்கினத்தன்மையோடு வாழ்ந்துவந்த மனித இனம், திடீரென்று, ஒரு நாள், பிறர் படும் துன்பத்தை அறிந்து, மனம் இரங்கி உதவி செய்ததை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இந்த இரக்கம் தான் மனிதனை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. பிறஉயிர் படும் சுக துக்க உணர்வினை மனிதனால் மட்டுமே உணர முடியம். இந்த நிகழ்வு மனித இன பரிணாமத்தில் ஒரு நாள் ஏற்பட்டதை சிறந்த திருப்பம் என்கிறார். அதுவரை விலங்கினமாகவே வாழ்ந்து வந்த மனிதன் ஒரு நாள் இரக்கம் கொண்டு உதவி செய்தது திருப்பம் தானே! அதுவும் அது சிறந்த திருப்பம்.

விலங்கினத்திலிருந்து வந்த மனித இனம் வந்திருந்தாலும், தொடர்ந்து விலங்கினங்கள்போல் வாழமுடியாது. மனித குலத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு துன்பம் அளிக்காத அன்பு நிலையும், பிறர் படும் துன்பத்தைப் போக்கும் இரக்க குணமும்-கருணையும் மிக மிக அவசியம்.  இதுவே மகரிஷி அவர்கள்  இயற்றிக் கொடுத்துள்ள இரண்டொழுக்க சங்கல்பாமாகும். இந்நிலை மனிதகுலத்தில் மலர்வதற்கு என்ன வழி? ஒருநாள் ஏற்பட்ட சிறந்த திருப்பம் தொடர்ந்து, இயல்பாகி, மனிதகுலத்தில் மனித நேயமாக மலர வேண்டும். அதற்கு இயற்கையின்/இறையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மனிதன் இறைஉணர்வு பெறவேண்டும். இறைஉணர்வு பெறுவது என்பது விலங்கினத் தன்மை முற்றிலுமாக நீங்கும்போதுதான் சாத்தியம்.

     மனிதகுலம் பண்பின் உச்சத்தில் வாழ்வதற்கு அறஉணர்வு அவசியம். அறஉணர்விற்கு இறை உணர்வு அவசியம். பொதுவாக வெளிச்சத்தைக் காண கண்கள் அவசியமாக இருப்பதுபோல், மனிதகுலம் உயர்ந்த பண்பின் வெளிச்சத்தைக்காண்பதற்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றன. அவை ஒன்று இறை உணர்வு. மற்றொன்று அற உணர்வு. மனிதனுக்கு அறஉணர்வும் அவசியம். அதற்கு இறை உணர்வும் அவசியம். இறை உணர்வில்லாமல் அறஉணர்வில்லை. அற உணர்வில்லாமல் இறை உணர்வில்லை. ஒன்றை ஒன்று சார்ந்துதான் உள்ளது. அதனால்தான் அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறை உணர்வு என்று இறை உணர்வை வரையறுக்கிறார்  மனிஇனப்பரிணாமத்தில் என்று அறம் தோன்றியது என அறுதியிட்டு கூறிய மெய்ஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     பின்னர் அறிவில் சிறந்த அறிஞர்கள் ‘இரக்கம் கொண்டு பிறர் துன்பத்தைப் போக்கும் குணத்தை’ மக்களிடம் பரவிட நெறிகளை போதனை செய்தார்கள். பின்னர் அந்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள், அவற்றிற்கு அந்நெறிகளை போதித்தவரின் பெயரை வைத்து இன்னார் மதம் என அழைக்கலாயினர். இவ்வாறாக ஆங்காங்கே அறிஞர்கள் தோன்றி மக்களிடம் அன்பு நெறிகளை போதித்து, அவற்றை ஆங்காங்கே மக்கள் பின்பற்றி வந்த போது மதம் பலவானது என்கிறார் மகரிஷி அவர்கள்.

     அறம் தோன்றியதைக் கூறும் பாடலை மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மகரிஷி அவர்களின் இந்த கண்டுபிடிப்பின் அலைநிலைக்கு சிந்தனையில் உயரலாம். ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்றுதானே கூறுகிறார்.

     இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். இன்று அறத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொண்டோம். அறம் ஓங்கியிருத்தலே மனிதபண்பாடாகும். மனிதஇன பரிணாமத்தில் என்றோ ஒரு நாள் ஏற்பட்ட சிறந்த திருப்பமான அறம், தொடர்ந்து செழிப்புடன் வளராமல் இருப்பதால், மனிதப்பண்பாடு உயர்ந்து சிறப்பது என்பது பகுத்துணர்வில் தொகுத்துணர்வால்தான் முடியும் என்பதால் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்று அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-03-2016—ஞாயிறு) அறிய இருக்கிறோம்.

வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.