பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்.1/?

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

 

FFC – 168

02-03-2016—புதன்.

FFC-168- மகரிஷி படம்

வாழ்க வளமுடன். நம்முடைய குருநாதரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால்,

இவ்வுலகம் எவ்வாறு/எவ்விதங்களில் எல்லாம் உய்ய வேண்டும் என தான் விரும்பியதை/ஆவல்கொண்டதை,

உலக மக்களும் விளங்கி விரும்பி ஏற்றுக்கொண்டு,

உலகநல விருப்பம் மக்களிடம் வெகு விரைவில் பரவிட,

எண்ணங்கள்தான் பரிணாமப் பயணத்திற்கு வாகனமாக இருப்பதனை அறிந்து,

தினந்தோறும் தவத்தின் முடிவில், மிக நுண்ணிய மனஅலைச்சுழலில்,

எண்ண அலைகளை பரப்பிட,

உலக நல மகா மந்திரமான ‘வாழ்க வையகம்’ என்கின்ற மந்திரத்தை உருவாக்கியதோடு.

அம்மந்திரம் விரைவில் செயல்பட்டு உலக மக்கள் அனைவரும் தங்களது பூர்வீக சொத்தான பூரணஅமைதியினை நிரந்தரமாக அனுபவிக்க,

உலக நல மகா மந்திரத்திற்கு துணை மந்திரங்களாக மூன்று பாடல்களை இயற்றியுள்ளார்.

இதனை மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

உலகம் எவ்வாறு நலத்துடன் வாழவேண்டும் என்று தான் சிந்தித்து மனத்தோற்றத்தில் மகிழ்ந்ததன் வாயிலாக, முடிவாக, உறுதியாக எண்ணிய எண்ணங்களை காரணத்தோடு ஒரே பாடலில் கூறாமல் முறைப்படுத்தி, மூன்று தலைப்புகளில் கூறியிருக்கிறார்.

ஒன்று உலகநல வேட்பு,
இரண்டாவது உலக நலவாழ்த்து,
மூன்றாவது உலக நல நாட்டம்–எழுவகை திட்டம்.

உலக நல வாழ்த்துப் பாடலில் வருகின்ற வரிகளில் ஒன்றான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்து விரிந்து சிந்திக்கவே இன்றைய சத்சங்கத்திற்கு கூடியிருக்கிறோம். வாழ்க வளமுடன்.

எனவே பொன் வரிகளுக்கெல்லாம் பொன்னான வரி மற்றும் அறிவை ஈா்த்த ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரி இடம் பெற்றுள்ள உலக வாழ்த்துப் பாடலை இப்போது நினைவு கூர்வதன் வாயிலாக மகரிஷி அவர்களை சூக்குமமாக எழுந்தருளி இச்சத்சங்கத்தை நடத்தித் தர வணங்கி வேண்டுகிறோம். ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து அவரிடம் மந்திர எழுத்துக்களாக மலர்ந்ததற்குக் காரணமான அவரது சிந்தனைகள் நமக்கும் உதிக்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

இப்பாடலில் எட்டு வைர வரிகள் உள்ளன. ஒவ்வொரு வைர வரியிலும், இவ்வுலகம் உய்வு பெறவேண்டி வெவ்வேறு வகையில் வாழ்த்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளார். ‘வாழ்க வையகம்’ என்கின்ற உலகநல மகா மந்திரம், இந்த எட்டு வாழ்த்துக்களையும் மற்றும் இரண்டு பாடல்களிலுள்ள வேட்புகள் மற்றும் நாட்டங்களை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே மகா மந்திரம்.

மந்திரங்களின் பொருள் தெரிந்து உச்சரிப்பதற்கான விசேஷ பலன் உண்டு என்பதால், உலகத்தை வாழ்த்துகின்றவர் இந்த மூன்று பாடல்களின் ஒவ்வொரு தனித்தனி வாழ்த்துக்கள், வேட்புகள், நாட்டங்கள் ஆகியவற்றின் ஆழ்ந்த விரிந்த பொருளை மகரிஷி அவர்கள் கொண்டிருந்ததுபோல், அறிந்திருத்தல் நலம் பயக்கும். அவ்வாழ்த்துக்களோ வேட்புகளோ, நாட்டங்களோ நிறைவேறினால் இவ்வுலகம் எவ்வாறு அமைதியோடு வாழும், வாழலாம் என்பதனை மனக்கண்ணால் பார்த்து மகிழ வேண்டும். அதாவது கனவு காண வேண்டும்.

இன்று உலக நல வாழ்த்துப் பாடலில் நான்காவது வாழ்த்தாகிய ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை சிந்தனைக்காக எடுத்துக் கொண்டுள்ளோம்.

உலக நல வாழ்த்துப் பாடலில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தை தவிர்த்து மற்ற ஏழு வாழ்த்துகளாவன

1. உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
2. உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
3. பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
4. கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
5. கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
6. நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞனாஒளி வீசட்டும்
7. நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.

என்பனவற்றிற்கு பொருள் தெரிந்ததே.

ஆனால் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது மட்டும் சற்று ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இம்மந்திர வார்த்தையில் மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ள இயற்கையியல்/இறையியல் சாராம்சமே அடங்கியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து மந்திரத்தில் நான்கு சொற்கள் இடம் பெற்றுள்ளன.

1. பகுத்துணர்வு,
2. தொகுத்துணர்வு,
3. பண்பாடு,
4. உயர்வது

‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரத்தில் உள்ளது ஒரு வாழ்த்தா அல்லது இரண்டு வாழ்த்துக்களா? முதலில் அதனை அறிவோம். சந்தேகமின்றி இவ்வரியில் இரண்டு வாழ்த்துக்கள் உள்ளன. ஏன்? ‘பண்பாடு உயரட்டும்’ என்று மட்டும் வாழ்த்தாமல், ‘பகுத்தணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். அவ்விரண்டு வாழ்த்துக்களில்

ஒன்று‘ பகுத்துணர்வில் தொகுத்துணர்வும்’ பெறவேண்டும்.
மற்றொன்று, அதன் பயனாக பண்பாடு உயர வேண்டும் என்பது.

பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் பண்பாட்டை உயர்த்த முடியும் என்பதனைக் கண்டுபிடித்து அம்மந்திர வரியினை அமைத்துள்ளார். மேலும் அவரது இயற்கைவியல்/இறையியல் சாராம்சமே அமையும்படி ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற மந்திர சொற்றொடரை அமைத்ததிலிருந்து மகரிஷி அவர்களின் ஆழ்ந்த விரிந்த சிந்தனைத் திறனை அறிந்து போற்றி மகிழ வேண்டும். இயல்பாகவே அவ்வாறு செய்வதன் வாயிலாக, இப்போது இங்கே இயற்கை/இறை நமக்கு இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளவும், அதன் கிளைத்தேற்றத்தைக் கொண்டு, நம் நிலையை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் அளித்துள்ளது எனலாம்.

அப்படியானால் மகரிஷி அவர்கள் எதிர்பார்க்கின்ற,

1. இயற்கைக்கோ/இறைக்கோ இசைவோடும் இணக்கத்தோடும் இருக்கும்படியான மனிதபண்பாடு என்ன என்பதனையும்,

2. அப்பண்பாடு உயர்வதற்கு எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ தான் தேவை என்பதனையும் அறிய வேண்டும்.

பகுத்துணர்வு, தொகுத்துணர்வு இரண்டு சொற்களுக்கும் பொருள் தெரிந்து கொண்டால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வது சுலபமாக இருக்கும். ஆகவே நமது வழக்கப்படி முதலில் வார்த்தை விளக்கம் காண்போம்.

பகுத்துணர்வு(Perspective view) :

‘பகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘பகு’ மற்றும் ‘உணர்வு’ என்கின்ற இரண்டு சொற்கள் உள்ளன. ‘பகு’ என்றால் என்ன பொருள்? பிரித்தல் என்று பொருள். உணர்வு என்றால் அறிதல் என்று பொருள். ஆகவே ‘பகு’ வையும் ‘உணா்வையும்’ சேர்த்தால் ‘பகுத்துணர்வு’ ஆகின்றது.

 பகுத்துணர்வு என்றால் என்ன பொருள்?
 அதாவது பிரித்து உணர்வது பகுத்துணர்வு ஆகின்றது.

 பிரித்து உணர்வது என்றால் என்ன?
 பிரித்து பிரித்து உணர்வது பிரித்துணர்வு.

 பிரித்து என்றால் என்ன?
 முழுமையாக இருப்பதை பகுதிகளாக்குதல்.

பகுத்துணர்வு என்பது புலனறிவுதான். (அதாவது புலன்களால் அறிவது, புலன்களால் அறிவது என்றால் புலன்கள் இல்லாமலும் அறிவது இருக்கின்றதா என ஐயம் எழலாம். ஆம் உள்ளது அதுதான் மெய்யுணர்வு. மெய்யுணர்விற்கு புலன் ஏதும் அவசியம் இல்லை. அறிவால் அறிவை அறிவது. எனவே இதுதான் தன்னிலை அறிதல்(Self Realisation)

 அது இது, அது. இது என்று பிரித்துப் பிரித்துப் அதன் தன்மையை உணர்ந்து கொண்டே போனால் அது பகுத்துணர்வு(Perspective view).

தொகுத்துணர்வு (Holistic View):

‘தொகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘தொகு’ மற்றும் ‘உணர்வு’ ஆகிய இரு சொற்கள் உள்ளன.

o ‘தொகு’ என்றால் என்ன? ஒன்று படுத்துதல் என்று பொருள்.
o தொகுத்துணர்வு என்றால் எல்லாவற்றையும் ஒன்று படுத்தி உணர்தல் ஆகும்.

o ஒன்று படுத்தி உணர்தல் என்றால் என்ன?
o ஏன் ஒன்று படுத்திப் பார்க்க வேண்டும்?

பகுத்துணர்வு என்ன என்பதனையும், தொகுத்துணர்வு என்ன என்பதனையும் அறிந்து கொண்டோம். இப்போது இவற்றில் எது சிறந்தது((Perspective view or Holistic View?) என அறிய வேண்டும். பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்கின்ற போதே தொகுத்துணர்வுதான் சிறந்தது என தெரியலாகின்றது. அப்படியிருக்கும்போது நேரிடையாகவே தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்றே மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கலாமன்றோ! பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என ஏன் சொல்ல வேண்டும்? காத்திருப்போம் அடுத்த அறிவிற்கு விருந்து வரை. வாழ்க வளமுடன்.

அடுத்த அறிவிற்கு விருந்தில் (06-03-2016—ஞாயிறு)
1. இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,
2. அறம் எப்போது தோன்றியது என்றும்,
3. எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,
4. அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.
வாழ்க வளமுடன்

வாழ்க அறிவுச் செல்வம்                                 வளர்க அறிவுச் செல்வம்.