FFC – 176-தெளிவு—2/?

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு
தெளிவு—2/? 

FFC – 176

30-03-2016—புதன்.

ninaivu_koorvaam

வாழ்க வளமுடன்.

சென்ற அறிவிற்கு விருந்தில் ‘தெளிவு’ பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம். இன்று அதே பொருள் பற்றி இரண்டாவது நாளாக சிந்திக்க இருக்கிறோம். சென்ற விருந்தில் சிந்தித்ததை இப்போது நினைவு படுத்திக் கொள்வோம். இறை உணர்வு பெற, பயிற்சியோடு, தெளிவும் அவசியம் என அறிந்து கொண்டோம். இப்பிறவியிலேயே பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கான தெளிவினையும், உறுதியினையும் நம் குருதேவர் அளித்துள்ளது பற்றி அறிந்து கொண்டோம்.

திருமூலரின் திருமந்திரத்தின் ஒருபாடலின் தலைப்பு ‘குருவருளே திருவருள்’ என்பதனை எடுத்துக் கொண்டு, இறை உணர்வு பெற தெளிவு அவசியம் என வலியுறுத்துவதனை ஆராய இருக்கிறோம். அதுவும், அந்த தெளிவு குருவின் வழியாக நான்கு வழிகளில் வருகின்றது என்கிறார் திருமூலர்.

தெளிவு என்பது என்ன? தெளிவு என்பது அறிவின் புரிந்து கொள்ளும் தன்மையின் உச்ச நிலை. அறியக்கூடிய அறிவு, அறியவேண்டியதை, புரிந்து கொள்வதில்
எவ்வித ஐயமும் இல்லாமல் விளக்கங்கள் பெறவேண்டும்
குழப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது.
இதுவா, அதுவாக என்கின்ற ஊசலாடும் மனநிலை இருக்கக் கூடாது.
தீர்மானமான நிலை அடைதல் வேண்டும். (CONFIRMED DETERMINATION)

நீரோடையில் ஓடும் நீர் அசுத்தமாக இருந்தால் நீரின் கீழே அடியில் உள்ள பொருட்கள் கண்களுக்குத் தெரியாது. நீரிலுள்ள அசுத்தங்கள் நீரின் தெளிந்த தன்மையை மறைக்கும். அசுத்தங்கள் நீக்கப்பட்டால் அதே தண்ணீர் தெளிந்ததாகிவிடும். தெளிந்த நீரோடையில் நீரின் ஆழத்தில் உள்ள பொருட்கள் தெரிவதுபோல், தெளிந்த அறிவிற்குத்தான், எதனை ஆழ்ந்து அறிந்து, அறிந்ததன் அடிப்படையில், வாழ்க்கைக்கான அர்த்தமும், அதற்கேற்ப எவ்வாறு வாழவேண்டும் என்பதும் தெரியவரும்.

மேலும், தெளிவு என்றால் ‘பொலிவு’ என்கின்ற பொருளும் இருப்பதால், தெளிவு பெற்ற அறிவில் பொலிவு ஏற்படும். அதாவது அறிவு புத்துணர்ச்சி பெறும். அறிவில் புதிய மலர்ச்சி ஏற்படும். அறிவு பிரகாசிக்கும். அறிவு அறிவொளியாகத் திகழும்.

சுருங்கச் சொல்வதென்றால், அறிவு தனது நீண்டகால பயணத்தில் தன்னுடைய மூலத்தை, இருப்பிடத்தை, சுயவிலாசத்தை மறந்துவிட்டு புலனின்ப மயக்க நிலையில் உள்ளதை-intoxicated sensual pleasures – a state of coma of sensual pleasure). மீட்டு, மீண்டும் பூர்வீக நினைவிற்குக்கு(துரியாதீத நிலை) கொண்டு வரவேண்டும். அதுவே தெளிதலாகும். தெளிவடைந்துவிட்டால் அது புனர்ஜென்மமாகும். இப்பிறவியிலேயே, மறுபிறவி எடுத்து ஆனால், மீண்டும் பிறவாதிருத்தலாகும்.

இதுவரை வாழ்க்கையைப்பற்றிய சிந்திக்காமல், ‘பிறப்பது, இன்ப, துன்பம் மாறி, மாறி அனுபவிப்பது, இறப்பது(birth, enjoyment of pain and pleasure, death) என்பதுதான் வாழ்க்கை’ என்கின்ற புரிதலில் வாழ்ந்து வருகின்றான் மனிதன். மனிதவாழ்க்கை என்பது
இயற்கையின் நிகழ்வு என்பதால்,
மனிதவாழ்க்கைக்கு இயற்கை நோக்கம் வைத்துள்ளது,
அது இறை உணர்வு பெறுவது,
அதனை நிறைவேற்றும் வகையில் இயற்கை நீதியை மதித்து,
இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்கின்ற உறுதியான தீர்மானம் செய்வதுதான் தெளிவடைதலாகும்.

திருமூலத்தெய்வம் நான்கு வழிகளிலே தெளிவினை அடையலாம் என உறுதியாகக் கூறுகிறது. அந்த யுக்தியினைக் கையாள வேண்டும். அல்லது மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி, பண்பேற்றம் பெற்று குருவை மதித்து ஒழுகி பிறவிப்பயனை அடைய வேண்டும். திருமூலத்தெய்வம் நான்கு வழிகளிலே தெளிவினை அடையலாம் எனக்கூறுவதும், மகரிஷி அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி, பண்பேற்றம் பெறலாம் என்று கூறுவதும் ஒன்றுதான்.

குருவருளே திருவருள்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

. . . அறிஞர் திருமூலர்.

குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பது ஆன்றோர் மொழி. குரு அருள் இல்லாமல் இறை அருள் பெறமுடியாது. ஏனெனில் அறிவை அறிந்த, அறத்தின் கவசமாக விளங்கும் பெரியவரே இறையை நோக்கிய பயணத்தில் சீடருக்கு வழிகாட்டி வெற்றி அடையச்செய்ய முடியும் என்பதால், குருவின் அருள் இல்லையானால் இறையருள் இல்லை என்கின்றனர்.

சீடன் தன் ஆன்மீக பயணத்தில் வெற்றி அடையும்போது, குரு என்பவர், இன்பம்-துன்பம் ஆகிய இருநிலைகளிலிருந்து விலகி இருந்தாலும், அவரே முதலில் மகிழ்ச்சி அடைவார். ஏனெனில் அவர் கற்றுக் கொடுத்து வழிகாட்டியது வெற்றிகண்டதே அதற்குக் காரணம். மேலும் குரு விரும்பி இன்னாருக்கு அருள் புரிய வேண்டும் என்று நினைத்து அருளை அருளுவதில்லை. சீடருக்கு குருவருள் கிடைப்பது என்பது இயற்கையின்/இறையின் நிகழ்வே-செயலுக்கேற்ற விளைவு இயற்கை நீதி. யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகுகிறார்களோ அவர்களை, குருவின் உயர்வு, தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை அடையச் செய்கின்றது இயற்கை/இறை. அது தானாகவே நிகழும் நிகழ்வு(It is an automatic process.)
எனவே குருவருளுக்கு பாத்திரமாகிவிட்டால் திருவருள் நிச்சயம் என்கிறார் பாடலின் தலைப்பிலேயே அறிஞர் திருமூலர். பாத்திரமாவது என்றால் என்ன? திருவருள் பெறுவதற்குத் தகுதியாக பண்பேற்றம் பெற்றுத் தயாராகி, இறை உணர்வு பெறுதலுக்காக ஏங்கி நிற்கும் நிலையே பாத்திரமாவது என்பது. திருவருளுக்கு தகுதி நிலையாகிய பண்பேற்றம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆதிமனிதனாகியபோது அவனது பண்பின் ஆரம்ப இருப்பு முழுவதும் விலங்கினப் பதிவே. அறத்தின் தோற்றம் என்று நடந்ததோ அன்று வரை விலங்கினப்பண்பில், சொல்லுகின்ற அளவிற்கு மாற்றம் ஏதும் இருந்திருக்காது. மனித இனப்பரிணாமத்தில் அறத்தின் தோற்றத்திற்குப் பிறகு விலங்கினத்தன்மை(பண்பு) பிறவிகள் தோறும் அவனது முயற்சி, சூழ்நிலைக்கு ஏற்ப மிக மிகச் சிறிதளவிலேதான் மாற்றம் பெற்று வந்திருக்கின்றது. அப்போது அவனது தன்மை விலங்கினப்பண்பு, மற்றும் மனிதப்பண்பு சேர்ந்த ஒரு கலவையாக இருந்திருக்கும். விலங்கினப்பண்பும், மனிதப்பண்பும் கலந்த கலவையாக இருந்தாலும், தெய்வமே மனிதனாக தன்மாற்றம் அடைந்ததால், அந்த இரண்டு பண்போடு தெய்வப்பண்பும் வெளியே தெரியாமல் மறைந்திருக்கின்றது(dormant). மறைந்திருக்கும் தெய்வீகப்பண்பை முழுவதுமாக வெளிப்படுத்தும் காலகட்டத்தில் மனிதஇனப் பரிணாமம் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சடுதிமாற்றமாக இயற்கை/இறை கருணையோடு அருளியதுதான் மனவளக்கலை.
மனதை வளமாக்கும் கலையினை பயில்வதோடு, அறிவு தெளிவினையும் பெறவேண்டும். ஏனெனில் மனவளக்கலை மற்ற கலைகளிலிருந்து வித்தியாசப்படுகின்றது. மற்ற கலைகளை எல்லோரும் பயில வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. மற்ற கலைகளை பயில்வது என்பது, அவரவர்களின் விருப்பம், திறமை ஆகியவற்றைப் பொருத்தது.

ஆனால் மனவளக்கலையை எல்லோருமே கற்றே ஆக வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் மனித இதுவரை இனப்பரிணாமத்தில் இல்லாதிருந்த, ‘வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்கின்ற கலையைக் கற்றுத்தருவதால்’ வாழ்வதற்காகப் பிறந்த மனிதகுலமே கற்க வேண்டிய கலை மனவளக்கலை.

மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலை,

இதுவரை பல்லாயிரம் பிறவிகளாக, இன்பம், துன்பம் ஆகிய இரண்டை மட்டுமே மாறி, மாறி வாழ்க்கை அனுபவங்களாகக் கண்ட மனித குலத்தை, பழைய பாதையிலிருந்து விலக்கி,  இன்பத்தில் அளவும் முறையும் பின்பற்றி, துன்பமில்லாமல் வாழ்ந்து இன்பத்திற்கும் மேலான அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிக்கக் கூடிய சிறப்பான வாழ்க்கைப் பாதைக்கு மாற்றும் வாழ்க்கைக் கலையாக இருக்கின்றது.

எனவே எல்லோருமே வாழ்வதற்காகப் பிறந்துள்ளதால் மனவளக்கலையை எல்லோருமே பயின்றுதான் வாழ்க்கையை வாழவேண்டும்.

மனவளக்கலை முதலில் சிறப்பாக வாழும் கலையாக செயல்பட்டு, இறுதியில் இறை உணர்வை பெறச்செய்யும் தெய்வீகக்கலையாக பரிணமிக்கும். எனவே இவ்வரிய கலையை பயில்வதற்கு பயிற்சியோடு, தெளிவும் அவசியமாகின்றது.

ஏனெனில் இதுவரை பல்லாயிரம் பிறவிகளாக, அறிவு வேறு பாதையில்(இன்ப-துன்பம்) வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது. எனவே திடீரென்று இப்பிறவியில் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டுமெனில் பழக்கப்பதிவுகளின் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். எனவே விளக்கப்பதிவு பழக்கப்பதிவை எளிதில் வெற்றி பெற அறிவிற்குத் தெளிவு இருத்தல் அவசியம். தெளிவு இருந்தால் மனதிற்கு உறுதி ஏற்படும். இத்தருணத்தில் மகான் பாரதியாரை நினைவு கூர்வோம்.

மகான் மகா கவி பாரதியார் துவைத நிலையில் இருந்து கொண்டு(பின்னர் அத்வைதத்தையும் உணர்ந்துவிட்டார்),
தான் எண்ணியது நடக்க வேண்டும், என்று அன்னையை இறைஞ்சுகிறார்.
அதே நேரத்தில் நல்லதையே எண்ணுதல் வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.
நல்லதையே எண்ணுவதற்கு வலிமையான நெஞ்சம் வேண்டும் எனக் கேட்கிறார்.
வலிமையான நெஞ்சமாக இருப்பதற்குத் தெளிந்த நல்லறிவு வேண்டும் என்கிறார்.

இவற்றை எல்லாம் எதற்காக மகா கவி பாரதியார் கேட்கிறார்?
செய்த பாவமெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காகக் கேட்கிறார்.

ஆகவே அறிவிற்குத் தெளிவு இருந்தால்தான் நெஞ்சம் உறுதியாக இருந்து செய்த பாவங்களை எல்லாம் நசித்திட முடியும். எனவே அறிவிற்குத் தெளிவு அவசியமாக இருப்பதால், மனவளக்கலை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலர் தெளிவு பற்றிக் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம்.

அறிஞர் திருமூலர் அருளியுள்ள பாடலுக்குள் பயணிப்போம். அறிஞர் திருமூலர் பாடலுக்கு ‘குருவருளே திருவருள் என வைத்துள்ளார். திருவருள் பெறுவதற்காக குருவருளை நாடுகின்றோம். குருவருள் கிடைத்துவிட்டால் திருவருள் கிடைத்துவிடும். ஏனெனில் அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் ஆன்மீக சாதகனுக்கு குருவாக கிடைத்துவிட்டால், ‘சாட்சாத் குருவே பிரம்மம்’ என்று குரு ஸ்லோகம் கூறுவது போலவும், ‘ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவரை தெய்வத்திற்குச் சமம்’ என்று திருவள்ளுவர் கூறுவது போலவும், குருவே தெய்வமாகி விடுகின்றார்.

அடுத்ததாக குருவருள் திருவருளை ஏற்படுத்துவதற்கு, தெளிவு அவசியம் எனக் கண்டுபிடித்துள்ளார் அறிஞர் திருமூலர். அந்த தெளிவு குருவிடமிருந்தே சீடன் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறுகின்றார். குருவை அடைந்த பயன் இப்பிறவியிலேயே நிறைவடைய, ஏதோ ஒருவகையில் தெளிவு பெறுவது போதாது எனக்கருதி, இருக்கின்ற எல்லா வழிகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவதனை நான்கு வழிகளில் கூறுகிறார் திருமூலர்.

இறை உணர்வு என்பது என்ன? உயிரினங்களிலேயே மனித உயிரினத்திற்கான பாக்கியம் இறை உணர்வு பெறுதல். மற்ற உயிரினங்களுக்கு இறை உணர்வு பெறுகின்ற பாக்கியம் இல்லை. மேலும் மனிதன் சமூகப்பிராணி(SOCIAL ANIMAL) என்பதால், சமூகத்தில் தான் வாழ முடியும் என்பதால், விலங்கினத்திலிருந்து வந்த மனித இனம், கருமையத் தொடர்பாக கொண்டுவந்துள்ள விலங்கினப் பதிவுகளை செயலிழக்கச் செய்து பூரண மனிதனாக வாழ வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி ஏற்படும். எனவே விலங்கினப் பதிவுகளை செயலிழக்கச் செய்து பூரணமனிதனாக வாழ்வதற்கு அறவுணர்வு அவசியமாகின்றது. அறம் என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று இறை நெறிகளைக் கொண்டது. அறம் இல்லாமல் இறை உணர்வில்லை. இறை உணர்வின் பயன் அற உணர்வு. அற உணர்வு என்பது மனித இனப் பண்பேற்றத்தின் உச்ச நிலை.

விலங்கினப்பண்பிலிருந்து மனித இனப் பண்பிற்கு உயர்வது என்பது ஒரு கலை. கலை எதற்காக? கலையை முறையாக, ஊக்கத்தோடு, இடைவிடாது பயிற்சி செய்து அக்கலையில் முழு தேர்ச்சி பெறவேண்டும். எந்தக்கலையிலும் தேர்ச்சி பெறவேண்டுமெனில் கலை பயில்பவர்கள் அக்கலையில் சிறந்து விளங்கியவர்/விளங்குபவரை முன்மாதிரியாக(Role Model) வைத்துக் கொள்வர். அதே போன்றுதான் பண்பேற்றக் கல்வியிலும் அக்கல்வியினைப் போதிக்கின்ற பெரியவர் குருவாகிறார். ‘குரு’ என்றால் அறியாமையை போக்குகின்றவர் என்று பொருள். அறியாமையைப் போக்குவது என்பது என்ன? அறியாமை நீங்கினால் அறிவிற்கு என்ன கிடைக்கும்? அறியாமை நீங்கினால் அறிவிற்கு தெளிவு கிடைக்கும்.

எனவே அறிவில் தெளிவு பெறுவதற்கான பயிற்சியாக ஆன்மீகசாதனை செய்பவர்கள் தங்கள் குருவிடமிருந்து தெளிவினைப் பெறவேண்டும். அக்காலத்தில் குருகுலக்கல்வி முறை இருந்தது. குருவின் ஆஸ்ரமத்திலிலேயே தங்கி சீடர்கள் எழுத்தறிவினையும், ஒழுக்கப்பழக்க அறிவினையும் கற்பர். அப்போது உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றினையும் அர்ப்பணித்து கல்வி பயில்வர். அர்ப்பணிப்பு இல்லாமல் கலையில் தேர்ச்சி பெற இயலாது. குருவின் ஆஸ்ரமத்திலேயே தங்கி கல்வி பயில்வதால், குருவின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றிலிருந்துமே, தானாகவே, இயல்பாகவே பண்பேற்றம் சீடனிடம் ஏற்பட வாய்ப்பிருந்தது. அப்படி வாய்ப்பிருந்த நிலையிலுமே திருமூலர் குருவின் வழியாக சீடர் தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.

இப்போது திருமூலர் கண்டுபிடித்துள்ள நான்கு தெளிவு பெறும் வழிகளுக்குள் செல்வோம்.

1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்: குருவினுடைய திருமேனியை காண்பது எவ்வாறு அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்தும்? குருவின் திருமேனியைத் தரிசிப்பதில் தெளிவினை அடைந்தவர்கள், தொடர்ந்து குருவின் சீடராக இருந்து, பண்பேற்றத்தில் முழுவெற்றி பெற்று மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப அனுபவமான “நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்“ என்கின்ற நிலையினை அடைகின்றனர்.

ஒருவருக்கு குருவின் திருமேனி தெளிவாகிய ஆனந்தத்தை தருகின்றது, மற்றவருக்கு ஏன் அதே தெளிவாகிய ஆனந்தத்தைத் தருவதில்லை? இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். குருவிற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பதுகிடையாது. குருவானவர் ‘நோக்கும் திசையெல்லாம் தாமன்றி வேறில்லை’ என்கின்ற தெளிவினை அடைந்தவர் என்பதால், அவரிடம் எவ்வாறு வேண்டியவர், வேண்டாதவர் என்றிருக்க முடியும்? அவரிடம் வருகின்ற சீடர்களையெல்லாம் தாமாகவே பார்க்கக் கூடியவர். எனவே குருவின் தரிசனம் தெளிவு ஏற்படுத்துவது என்பது சீடர்களின் அருட்தாகத்தைப் பொருத்தது. சீடர்கள் பரிபக்குவ நிலையில் இருந்தால் குருவைத் தரிசித்த அன்றே ஈர்ப்பு ஏற்பட்டுவிடும் இது முதல் ரகம். வேறு சிலருக்கு, மற்றவர்களின் குரு-சீடர் உறவு அனுபவங்களைச் சொல்லக் கேட்டு மெல்ல மெல்ல ஈர்ப்பு வரும். இதற்காகத்தான் சத்சங்கம் மிக மிக அவசியமாகின்றது. அந்த முதல் ரகத்தவருக்கும் இரண்டாம் ரகத்தவருக்கும் ஏன் இந்த வித்தியாசம்? காரணம் முதல் ரகத்தவர் பரிபக்குவ நிலையில் இருக்கிறார். இப்படி சொல்வதால் இரண்டாமவர் பரிபக்குவ நிலையை அடையாதவரா என ஐயம் எழலாம். குரு கூறும் போதனைகள் அறிவிற்கு விருந்தாக அமைந்து, முதலாமவருக்கு எளிதில் அலை இயக்கத் தத்துவப்பண்புகள் படி ஊடுருவி கருமயத்தில் பதிவாகிவிடுகின்றது. இதன் விளைவாக அவ்வையார் கூறியுள்ளதுபோல் இனியவைகளுள் மூன்றாவதாக இடம் பெறுகின்ற ‘அறிவினரைச் சேர்தல்’ என்கின்ற நியதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவருக்கு மெல்ல மெல்ல இது நடைபெறும். மெல்ல மெல்ல நடைபெற்றாலும் இப்பிறவியிலேயே தெய்வாம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பேற்றத்தை எட்டிட வேண்டும். அதனை அடுத்த பிறவிக்க தள்ளிப்போடக்கூடாது. 325000 பிறவிகள் எடுத்து வீணாகிவிடுமன்றோ! எனவே இன்னும் சிறிது தூரம்தான் உள்ளது எல்லையைக் கடப்பதற்கு என்கின்ற உற்சாகத்தோடு மகரிஷி அவர்கள் ‘முயற்சி வெற்றியைத் தராமல் இருந்தாலும், முயற்சிசெய்வது தொடரவேண்டும்’ . என்று கூறுவதுபோல் முயற்சி தொடர் விடா முயற்சியாக இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சமே அலை இயக்கத்தினால் இயங்குகின்றது. குரு-சீடர் உறவின் வெற்றி, அலை இயக்கப் பண்புகளால் நடைபெறுகின்றது. அலை இயக்கப்பண்புகள் என்னென்ன? அலை இயக்கப்பண்புகள் ஐந்து.

1) மோதுதல்(CLASH)
2) பிரதிபலித்தல்(REFLECTION)
3) சிதறுதல்(REFRACTION)
4) ஊடுருவல்(PENETRATION)
5) முன்பின் ஓடுதல்(INTERACTION)

விளக்கம்: எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அணு முதற் கொண்டு, அண்டங்கள் வரை அது சுழன்று கொண்டே இருப்பது நாம் அறிந்ததே. அதனால் அலை என்பது தோன்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த அலை எங்கு செல்லும்?

சுற்றியுள்ள பொருள் மீது தாக்கும். இதுதான் மோதுதல்(CLASH) எனப்படுகின்றது.
ஒவ்வொரு பொருளிலிருந்தும் அலை வந்துகொண்டே இருக்கின்றது. அலைகள் பிரதிபலிக்கின்றது.
அப்போது திரும்பி வருகின்றது. ஆனால் எல்லா அலையும் திரும்பாது. மோதுதல் ஏற்படுவதால், சிதறுதல்(REFRACTION) நடைபெறுகின்றது.
எல்லாப்பொருட்களும் அலைகளின் கூட்டு இயக்கமாக நடைபெறுவதால் ஒரு அலை மற்றொரு அலை மீது மோதும்போது ஊடுருவதலும்(PENETRATION) நடை பெறுகின்றது.
அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஒடிக்கொண்டேயும்(INTERACTION) இருக்கும்.

இவ்வகையில் அலைகள் இயங்குகின்றன. இதே நிலைதான் குரு-சீடர் உறவிலும் நடைபெறுகின்றது. இந்த நிலையால்தான் சீடரின் பண்பேற்றத்தில் இயல்பூக்க நியதியும், குருவின் உயர்வு சீடரின் பண்பேற்றத்தை உயர்த்தி பிறவிப்பயனை நல்குகின்றது.

அறிஞர் திருமூலர் கூறும் முதல் தெளிவான ‘தெளிவு குருவின் திருமேனி காணல்’ என்பதற்கு வருவோம். குருவின் திருமேனி என்பது என்ன? உடலா குரு? அல்லவே! அவருடைய ஆன்மாதான் அவர். குருவின் ஆன்மா எத்தன்மையது? அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு என்பதால், தெய்வாம்சமான அன்பும், கருணையும் பிரதிபலிக்கின்ற வகையில் தூய்மை அடைந்தது குருவின் கருமையம். சுருங்கச் சொல்வதென்றால் ‘நோக்கும் திசையெல்லாம் தாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்’ என்கின்ற நிலையினை அடைந்த தூய்மையான நிலை அது.

ஆன்மாவிற்கு மேல் உடல் கவசம்போல் உள்ளது. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் அதன் தன்மையை அலையாக வீசிக் கொண்டிருப்பதால், கண்களுக்குத் தெரியாத குருவின் ஆன்மாவிலிருந்தும், கண்களுக்குத் தெரிகின்ற ஆன்மாவின் கவசம் போல் உள்ள திருமேனியிலிருந்தும் அலைகள், குருவினுடைய தன்மையினை வீசிக் கொண்டே இருக்கும். எனவே குருவின் திருமேனியைக் காண்கின்றபோது, அவரிடமிருந்து வருகின்ற தெய்வாம்ச அலைகள் சீடரின் மீது மோதி, பிரதிபலித்து, சிதறி, ஊடுருவி, இருவருக்கும் இடையே மோதி, திரும்பி வந்தும், இருவருக்கும் இடையே ஓடிக்கொண்டேயும் இருக்கும். இது இயற்கையின் நியதியாக உள்ளதால், குருபிரானை தரிசிக்கின்றவர்கள் அனைவருக்கும் பராபட்சம் இல்லாமல் இது நடக்கின்றது. இருந்தாலும் சீடர்களின் பரிபக்குவ நிலையினைப் பொருத்து, அலைஇயக்கத்தின் ஐந்தாவது நிகழ்வான இருவருக்கும் இடையே அலை ஓடிக்கொண்டிருத்தலில் வித்தியாசம் உள்ளது.

இதனால்தான் ஆன்ம சாதகர்களுக்கு,  குருவிற்கும், சீடருக்கும் இடையே கெட்டியான பிணைப்பு(THICK BOND) ஏற்பட, பயிற்சியின் ஆரம்ப காலத்தில், குருவை அடிக்கடி சந்திக்கச் சொல்வதுண்டு. அடிக்கடி குருவை சந்திக்கும்போது குருவினுடைய திருமேனியைத் தரிசிக்கிறான் சீடன். அப்போது குருவிடமிருந்து வரும் அலைகள் சீடன் மீது மீண்டும் மீண்டும் மோதுகின்றன. குருவிடமிருந்து வரும் அலைகள் அதன் தன்மையை சீடா் மீது மீண்டும் மீண்டும் பதிக்கின்றது. அதாவது சீடரின் கருமையத்தில் பதிவாகின்றது. கருமைய பூரணத்தூய்மைதானே இறை உணர்வின் உச்ச கட்ட நிகழ்வு. அது என்ன உச்ச கட்ட நிகழ்வு. பக்தி மார்க்கத்தில், எவ்வாறு ஆலயங்களில் சுவாமி சிலைக்கு அலங்காரம் செய்து முடிந்ததும் சுவாமி சிலையை பக்தர்கள் காண்பதற்கு திரை விலக்கப்படுகின்றதோ, அதுபோல் ஞானமார்க்கத்தில், தெய்வத்தையும், மனிதனையும் பிரித்து வைக்கின்ற தன்முனைப்புத் திரை விலக வேண்டும். அப்போதுதான், தன்முனைப்பிலிருந்து உண்டாகிய ‘தான்’, ‘தனது’ என்கின்ற இரு தம்பதிகளுக்கு உருவாகிய அவலக் குழந்தைகளான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகள் நீ்ங்கி அறுகுணசீரமைப்பு நடந்தேறிவிடும்.

குருவின் சன்னிதானத்தில் சீடனுக்கு அலாதியான அமைதி கிடைக்கின்றது. யார் சரியான குரு என்று சொல்வதற்கு ஒரு சாம்யம் உண்டு இறை உணர் ஆன்மீகத்தில். யாருடைய சன்னிதானத்தில் அமைதி கிடைக்கின்றதோ அவரே உகந்த குரு என்பார்கள். ஆரம்ப ஆன்மீக சாதகன், குருவைத் தரிசித்து சென்றுவிட்ட பிறகு அவர் சன்னிதானத்தை விட்டு விலகி இருக்கும்போதுகூட அவரது நினைவு பல விதங்களில் அடிக்கடி வரலாம்/வரும். இது பண்பேற்றத்திற்கான நல்ல அறிகுறியே! பல விதங்கள் என்பது, அடிக்கடி, குருவின் திருமேனி நினைவிற்கு வந்துபோகும். அவர் அருளிய அருட்செய்திகள் காதில் வந்து மோதலாம். அவரை மீண்டும், மீண்டும் காணவேண்டும் என்கின்ற தீராத அவா எழலாம். இதனை, அறிவு தெளிவு பெறுவதற்குத் தயாராகிவிட்டது எனலாம். இது அலை இயக்கத்தின் ஐந்தாவது பண்பான ‘அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக்கொண்டேயும்(INTERACTION) இருக்கும்’ நிலையாகும். இங்கே, மகரிஷி அவர்கள் கூறும் ‘பண்பேற்றத்திற்கு உதவும் இயல்பூக்க நியதியினை’ அறிவோம்.

குருவின் சேர்க்கை(15-08-1984)
“எப்பொருளை எச்செயலை, எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும், உடலினிலும் மாற்றங் காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்;
—————————————————————
——————————————————————–
———————————————————————-
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எனவே அவ்வாறு ஆரம்பகால ஆன்மீக சாதகருக்கு அனுபவம் வந்தால் அது நல்ல அறிகுறியே. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(03-04-2016—ஞாயிறு) அறிஞர் திருமூலர் கூறும் அடுத்தடுத்த தெளிவுகளைப் பற்றி சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                         வளர்க அறிவுச் செல்வம்.

வாழ்க வளமுடன்.

தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil, click here.