FFC – 175-தெளிவு—1/?

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

தெளிவு—1/? 

FFC – 175

28-03-2016—திங்கள்.

ninaivu_koorvaam

Pushpaanjali

வாழ்க வளமுடன்.
காலம் உருண்டோடுகின்றது. 10 வருடங்கள் கடந்துவிட்டன நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்து. இதே நாளில் 2006 ல் மகா சமாதி அடைந்தார். இப்போது பூதவுடல் இல்லையாயினும் அவரது சூக்கும உடல் வழியாக நம்மை கண்காணித்துக் கொண்டும், காப்பாகவும் இருந்து கொண்டு, இறைத்தூதுவர் பணிசெய்ய அவர் பணித்துள்ளதால் அப்பணியை நாம் சிறப்பாக, செவ்வனே செய்ய உற்ற துணையாகவும், அரணாகவும் இருந்து கொண்டு நம்மை ஆசிர்வதித்துக் கொண்டும் இருக்கிறார். நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நம்முடைய சத்சங்கத்தில் எப்போதும்போல் சூக்குமமாக எழுந்தருள அவர் திருவடிகளை வணங்கி வேண்டுகிறோம்.

வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக சத்சங்கத்தில் குழுமியிருக்கிறோம். நினைவு அஞ்சலி(homage done on someone’s death anniversary) என்றால் என்ன என்பது நமக்குத் தெரிந்ததே. நினைவு அஞ்சலி என்பது ஒருவர் பூதவுடலை நீத்த நாளில் அவரை நினைத்துச் செலுத்தும் மரியாதை. எனவே நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக குழுமியிருக்கும் இவ்வேளையில் அவரை எவ்வாறு நினைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றி யோசித்தபோது, மகரிஷி அவர்கள்,
அவரது மாணவர்களுக்கு ஆறாம் அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்தியும்,
அதன் வாயிலாக வாழ்க்கையின் எதார்த்தத்தை விளங்கவைத்தும்,
இருண்டிருந்த வாழ்க்கையை அறிவொளியில் மிகச்சிறப்பாக வாழ வழி வகுத்துள்ளதால், ‘தெளிவு’ என்கின்ற தலைப்பையே எடுத்துக் கொண்டு சிந்திக்கலாம் என்று தோன்றியது. எனவே ‘தெளிவு’ பற்றியே இன்று சிந்திப்போம்.

பண்டைக்காலத்தில் சீடன் குருவுடனே தங்கி, குருவிற்கு உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து பண்பேற்றக்கல்வி பெற்றான். எனவே குருவின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றிலிருந்தும் பண்பாட்டுக் கல்வியினை இயல்பூக்க நியதிப்படிக் கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தது. நன்றியுணர்வாக குருவிற்கு காணிக்கையையும் சீடன் அளிப்பது வழக்கமாக இருந்தது.

நவீன காலத்திற்கேற்ப இப்போது, அதே பண்பாட்டுக் கல்வியினை வேதாத்திரி மகரிஷி அவர்களிடம், தினம் வீட்டிலிருந்து கல்விக் கூடத்திற்கு வந்துபோகும் முறையில்(day-scholars) மாணவர்களாக இருந்து கல்வி பயின்று வருகிறோம். நம்முடைய குருதேவர், சீடர்களிடம் ஏதும் காணிக்கை எதிர்பார்ப்பதில்லை. எனவே வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில், சீடர்களும் காணிக்கை கொடுக்கும் பழக்கமும் இல்லை. ஆனால்,

Kumbakonam

இதிலிருந்து என்ன தெரிகின்றது; தெளிவாகின்றது? நம்முடைய குருதேவர் அவர்கள், அவரைப்போன்றே, நாமும் பண்பேற்றத்தில் வெற்றி பெற்று மாக்களுக்கும், மக்களுக்கும் மனமுவந்து தொண்டாற்றும் மாமுனிவர்களாகவும் முழுமனிதர்களாகவும் ஆக வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கிறார் என்று ஐயமின்றி தெளிவாகின்றது.

அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வில் அந்த அறிஞரின் குணங்களை, செயல்களை, உயர்வினை, தொண்டினை, தியாகத்தினை, தன்னலமற்ற சேவையினைப் பற்றி கலந்துரையாடி அவரை நினைவு படுத்திக் கொள்வோம். இது எதற்காக? இரண்டு பயன்கள் உள்ளன இதில்.

  • ஒன்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொண்டு பண்பேற்றத்தில் உயர்வது.
  • மற்றொன்று அவ்வைத்தாய் கூறுவது போன்று இனிதிலும் இனியதை அனுபவிப்பது.

அவ்வைத்தாய் எவ்வாறு இனிதிலும் இனியதை அனுபவிப்பது பற்றி கூறுகிறார் என்பதனை நினைவு கூர்வோம். 

28-3-2016-NEW- அவ்வையாா-தெளிவுஅவ்வைத்தாய் கூறியுள்ளதுபோல்

1) ஏகாந்தத்திலும்,
2) அடுத்து ஆதியைத் தொழுவதிலும்-(துரியாதீத தவத்தில் அப்பாலுக்கு, அப்பாலாய் சென்றும்),
3) அறிவினரோடு சேர்ந்திருத்தலிலும்(மகா புருஷர் வேதாத்திரி மகரிஷி அவர்களுடன்),
4) அறிவினரைக்(மகா புருஷரை) கனவிலும், நனவிலும் காண்பதிலும்,
அடுத்தடுத்து படிப்படியாக, அதிகரித்து வரும் இன்பத்தை அனுபவித்து வருவது வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைந்ததன் பயன், என்பதனை மனதை சாட்சியாக வைத்து பதிவு செய்கிறோம்.

அவ்வையார் கூறும் அறிவினராக வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாகப் பெற்றது நம்பாக்கியம் அன்றோ! அத்தகைய அருளாளருக்கு நினைவு அஞ்சலி செலுத்த ஆனந்தத்துடன் குழுமியிருக்கிறோம். ஏற்கனவே தினந்தோறும், அவ்வைத்தாய் கூறுவதுபோன்று அவரை நினைத்து மகிழ்வு அடைந்து வருகிறோம்.

இன்று மகரிஷி அவர்களுக்கு நினைவு தினமாக இருப்பதால் பிரத்தியேகமாக என்ன நினைக்க இருக்கிறோம். இத்தனை நாள் நினைந்து வருவதற்கும், இன்று நினைக்க இருப்பதற்கும் ஏதாவது விசேஷம் இருக்க வேண்டுமல்லவா?! அதனால்தான் ‘தெளிவு’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திக்க உள்ளோம்

மனவளக்கலை வடிவமைப்பு,

  • மனிதன் பண்பேற்றத்தில் உச்சத்தை அடைந்து,
  • அதன் பயனாக இறை உணர்வு பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
  • வளம் குறைந்த மனதை இறை உணர்வு பெற்ற வளமான மனமாக ஆக்குவதே மனவளக்கலையின் நோக்கம்.

எனவே இக்கலைக்கு மனவளக்கலை எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இறை உணர்வு என்பது ஆங்கிலத்தில் ‘Realisation of God’, என்றும் அல்லது ‘Enlightenment’ எனவும் அழைக்கப்படுகின்றது. தன்னை அறிதல் என்றும் – ‘Self Realisation’ என்றும் சொல்வதுண்டு.
‘Enlighten’ (verb) என்றால் விவரமாக, தெளிவாக விளக்கு என்று பொருள்.

‘Enlightenment’ என்றால் advanced state of Knowledge, அறிவு, ஒளி, அறிவு புகட்டுதல், ஞான உபதேசம், அறிவொளி என்றெல்லாம் பொருள்.
இறை உணர்வு என்பதற்கு பொருள், தெளிவு பெறுதல் என்றிருத்தலால், தெளிவில்லாமல் இருக்கும் அறிவு, இறை உணர்வு பெறுவதற்கு தெளிவு அடையவேண்டும். இறைஉணர்விற்கு அடிப்படையாக இருப்பது தெளிவே. பயிற்சிகள் மட்டுமே இல்லாமல், அதனுடன் தெளிவு சேர்தலும் இறை உணர்விற்கு மிக மிக அவசியமாக இருக்கின்றது. பழக்கப்பதிவின் அழுத்தத்தின் காரணமாக, பயிற்சியில் அவ்வப்போது தொய்வு அடையும் அறிவிற்குத், ‘தெளிவு’ உந்துதலையும், ஒளியையும் ஊட்டி அறிவை அறிவொளியாக மாற்றச் செய்யும். அறிவு முழுமையாக தெளிவடைந்துவிட்டால் அது ‘திடஞானம்’ பெற்றது போல்தான். அதன் பிறகு எத்தனை ஆயிரம் (சுமார் 325000) பிறவிகளின் பழக்கப்பதிவுகளும் தோற்றுப்போய், விளக்கப்பதிவே வெற்றி கொள்ளும் சாதனையாக அமையும் என்பது நிச்சயம்.

‘நான் யார்?’ என்று தெரியாமல், தன்னுடைய நிரந்தர விலாசம்-சுயவிலாசம்(Permanent address) அறியாத தெளிவின்மையில்தான் மனிதன் இருக்கின்றான். ‘இறை உணர்வை’ ‘தன்னை உணர்தல்’ என்றும் அழைக்கிறோம். இது தெளிவினை பெறுதலைச் சேர்ந்தது தானா? ஆம். ‘நான் யார்?’ எனத் தெரியாமல் இருக்கும் மனிதன் தான் யார் என தெரிந்து கொள்வது அறிவிற்குத் தெளிவினைச் சேர்த்தல் தானே!

ஆகவே ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு கருத்தியலாகவும், செய்முறைப்பயிற்சியின் வாயிலாகவும்(both theoretically and practically) தெளிவினைப் பெறுவதுதான் ‘தன்னை உணர்தல்’ ஆகின்றது. கருத்தியலாகத் தெளிவு இருப்பதுபோல் தெரிந்தாலும் செய்முறையில் தெளிவில் வெற்றி பெறும்போதுதான் ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’ என இறைவியை வேண்டிய மகான் மகா கவி பாரதியார் அனுபவித்த பேரின்ப நிலையான
“நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.”
என்கின்ற பேரானந்த நிலையை, பேரின்ப நிலையை அனுபவிக்கமுடியுமன்றோ!!!.

தெளிந்த நல்லறிவை விருப்பியவர், இறைவியை வேண்டியதால்தான் களியாட்டம் என்கின்ற நிலையை அடைய முடிந்தது மகான் மகா கவி பாரதியாரால். அறிவு தெளிந்தால் பேரின்பம்தான் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். எப்போதும் ‘இன்னும் அதிகமாக வேண்டும் என்று கருதும் இயல்புடைய மனித மனம்’ மனதின் நான்கு நிலைகளான இன்பம், துன்பம், அமைதி, பேரின்ப நிலைகளில் கடைசியும், அதிகமுமான பேரின்ப நிலைக்கு ஆசைப்படுவதில்லை? ‘முடவனுக்கு கொம்புத் தேன் மீது ஆசை’ எனப்படுவது போன்றதா வேதாத்திரிய இறையியல்/ஆன்மீகப் பேரின்பம்?!  இல்லை! ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு ஏற்றால்போல், பொருத்தமாக, இறை உணா்வு ஆகியப் பேரின்பப் பேற்றினை பெற்றிட முடியும்.

‘தெளிவே’ தன்னை உண்மையாக உணர்தலாகும். தெளிவு பெறும் வரை உடலையே நான் என நினைத்துக் கொண்டிருக்கின்றது அறிவு. தெளிவில், ‘அறிவே நான்’ என்றும் ‘ஆன்மாவே நான்’ என்றும் உணர்ந்து கொள்கின்றது.

மகரிஷி அவர்கள் தன்னுடைய மாணவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? மாணவர்களும் தன்னைப்போல் அறிவில் உயரவேண்டும் என்பதே.
அதனால்தான் ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறார்.

மேலும் நம் குருதேவர் அவர்கள் கூறுவதனை உற்று நோக்க வேண்டும். ‘நான் எனினும் நீ எனினும் நிறை அறிவில் ஒன்றே, வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்’ என்கின்ற உண்மையினை தெரிவித்து மாணவர்களும் தன்னைப்போல் அறிவில், சிறந்து உணர்ந்து உயர வேண்டும் என்பதே அவருடைய பேரவாவாகும்.

தீயவினைப்பதிவின் காரணமாக பண்பில் பின்தங்கி இருக்கிறான் மனிதன். எனவே பண்பை உயர்த்துவதற்கான நோக்கத்தில் மகரிஷி அவர்களின் மாணவர்களாக இணைத்து வைத்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே வினைப்பதிவை இப்பிறவியிலேயேப் போக்கிக் கொண்டு பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெற்று அறவாழ்வு வாழ வேண்டும். இதற்கான சாத்தியக் கூறுகளைக் கூறி, உறுதி அளிக்கிறார்.

piRavipperunkadal

பாடலுக்கான விளக்கம்: தலைப்பு ‘பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்’ என்று வைத்திருக்கிறார் மகரிஷி அவர்கள். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் பத்தாவது குறட்பா என்ன கூறுகின்றதனை நினைவு கூர்வோம்.

“ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.” குறள் எண். 10

இக்குறளுக்கு மகரிஷி அவர்கள், தான் எழுதிய ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்கின்ற நூலில் விளக்கம் அருளியுள்ளார். அதனை வாசித்துப் பயன் பெறவும். பக்கம் 26 இல் கடைசி மூன்று வரிகளைக் கவனிக்கவும். ‘அடி சேர்ந்தார்க்கு’ என்பதற்குப் பொருள் தந்துள்ளார். ‘அடிசேர்ந்தார்க்கு’ என்பது ‘பாதார விந்தங்களிலே சரணாகதி அடைந்தவர்க்கு’ என அர்த்தம் கொள்வதை விட மெய்ஞ்ஞானி ஒருவரது வாழ்க்கை காட்டுகின்ற வழியிலே செல்வது’ என்பது மன விரிவாக ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கமாக அமையும் எனக் கூறியிருக்கிறார். மேலும் மகரிஷி அவர்கள் அவ்விடத்தில் குருவின் மேன்மையைப்பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதை விளக்குகின்றார். அன்பர்கள் அனைவரும், அக்கருத்தை படிப்பது மகரிஷி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் இந்நாளில் பொருத்தமாக இருக்கும்

இப்போது மகரிஷி அவர்களின் பாடலுக்கான பொருளைக் கவனிப்போம். ஆன்மா எடுத்துள்ள பிறவி ஒன்று இரண்டு அல்ல. பிறவியை பெருங்கடலுடன் திருவள்ளுவர் ஒப்பிட்டதுபோல் மகிரிஷி அவர்களும் ஒப்பிடுகிறார். ஏன்? கடலின் அடுத்த கரை தெரியாது. கடல் தொடர்ந்து கொண்டே போகும். அதுபோல் பிறவி ஒன்றுக் கொன்று தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே போகின்றது.  பிறவிகளின் எண்ணிக்கையும் தெரியாது. எனவே பிறவியைக் கடலோடு ஒப்பிடுகிறார்கள் திருவள்ளுவரும் மகரிஷி அவர்களும். வேண்டுமென்றால், உதாரணத்திற்கு தோராயமாக, ஒரு ஆன்மா இதுவரை எத்தனைப் பிறவிகள் எடுத்திருக்கின்றது என்பதனை அறிய ஒரு கணக்கெடுக்கலாம்.

மனிதகுலம் தோன்றி 65 லட்சம் ஆண்டுகள் ஆனாதாகக் கூறப்படுகின்றது. இன்றிருக்கும் மனிதன் ஆதிமனிதனின் கருத்தொடர்தான். அவன் எத்தனை பிறவிகள் இதுவரை எடுத்திருப்பான்? உதாரணத்திற்கு ஒரு பிறவிக்கு இருபது வருடங்கள் என வைத்துக் கொண்டால், (இருபது வருடங்களில் மனிதன் தன் வம்சாவளியை உற்பத்தி செய்யும் தகுதியுடையவனாகிறான்) 65,00,000 ÷ 20 = 325000 பிறவிகள் இன்றுள்ள மனிதன் எடுத்திருப்பான். இந்தக் கணிதப்படி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருக்கிறான் என்று பொதுப்படையாக சொல்வது 325000 பிறவிகளைக் குறிக்கும். இதனை அறிஞர் திருவள்ளுவர், மனிதன் எடுத்துவரும் பிறவிகளைக் குறிப்பிடுவதனை ‘பிறவிப்பெருங்கடல்’ என்கிறார்.

எனவேதான் பல்லாயிரம் பிறவிகள் மனிதன் எடுத்திருக்கின்றான் எனப்படுகின்றது. முதலில் மனிதன் எடுத்துள்ள பிறவிகளின் எண்ணிக்கையைக் கூறிவிட்டார். அடுத்ததாக பல்லாயிரம் பிறவி எடுத்து ஏற்ற பாவங்களைப்பற்றிக் கூறுகிறார். கடந்தபிறவிகளில் செய்துள்ள பாவங்களால், எடுத்துள்ள இந்தப் பிறவியில் மீண்டும் பழக்கவழக்கத்தால் பாவங்களையே செய்கின்றான் மனிதன். இப்படியாக பாவங்களின் சரித்திரம் தொடர்கின்றது. பிறவிகள் ஏன் பாவங்களைச் சோ்க்கின்றது? பிறவிகள் ஏன் பாவங்கைளைச் செய்கின்றன? அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சி வயத்தாலும் செய்த செயல்களினால் ஒழுக்கமில்லாது போய் பாவங்களாகின்றன. எனவே பிறவிதோறும் பாவக்கணக்கு தொடர்ந்து கொண்டே போகின்றது. எந்தப்பிறவியிலும் பாவக்கணக்கு முடியாததால் இப்போதும் பிறவி 325000 வது பிறவி எடுத்துள்ளான் மனிதன். இந்த பிறவியில் பாவக்கணக்கை முடித்துக் கொண்டு தெய்வமாக வாழ்ந்து, பெருங்கடலோடு ஒப்பிடப்பட்டுள்ள பிறவியை முடித்துக் கொள்வதற்காக வழிகளை மனித சமுதாயத்திற்குச் சொல்லி, உறுதியளித்து, அவர்களையும் இந்தப்பிறவியிலேயே தன்னைப்போலவே பண்பேற்றத்தில் உயர்ந்து பிறவியை முடித்துக் கொள்ளவே இந்தப்பாடலை 26.10.1994 அன்று இயற்றியுள்ளார்.

பிறவிகள் தோறும் செய்த வினைப்பதிவின் சுமையை இறக்கி தூய்மை பெறவே பிறவி எடுக்கப்படுகின்றது என்கின்ற உண்மையினை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெரிவிக்கும் பாடலை இத்தருணத்தில் நினைவு கூர்வது நலம்.

vinaisumai

மூன்றாவதாக 325000 பிறவிகளில் செய்யப்பட்டுள்ள பாவங்களை, இப்பிறவியில் புண்ணியச் செயல்களையே செய்து, இந்தப் ஒரு பிறவிக்காலத்திலே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றலை, இயற்கை மனிதனுக்கு வைத்துள்ளது என்கிறார். புண்ணியச்செயல்களைச் செய்து பாவச்செயல் பதிவுகளை மாற்றி தெய்வத்திலிருந்து புறப்பட்ட மனிதன் மீண்டும் தெய்வமாகலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இது நல்வாய்ப்பு என்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு நேரிடையாக செய்ய வேண்டியது என்னவெனில் ஆதிமனிதலிருந்து ஆரம்பித்த கருமையக் களங்கங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்கின்ற உறுதி வேண்டும்

கருமையத்தூய்மையால் பலனடைய அகத்தவத்தால் பரத்தை உணர்ந்து ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறத்தின் பாதையிலே வாழவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மனிதன் அறவாழ்வு வாழ்வதுதான், அவனுக்கும் சமுதாயத்திற்கும் இன்றைய தேவையாக உள்ளது. மனிதனுக்கு இறை உணர்வு அவசியமா, அற உணர்வு அவசியமா என வினவினால் அறவுணர்வு அவசியம், ஆனால் அந்த அவசியம் பூர்த்தியாக இறை உணர்வு அவசியமாகின்றது என்கின்ற விடைதான் சரியாக இருக்கும். இருப்பினும், உயிரினங்களிலே மனித உயிர் இறை உணர்வு பெறுகின்ற பாக்கியம் பெற்றுள்ளது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘தெளிவு’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். எனவே இப்பாடலின் பொருள் அறிவிற்குத் தெளிவினைச் சேர்க்கிறதன்றோ?!

இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(30-03-2016-புதன்) ‘தெளிவு’ பற்றி மேலும் விளங்கிக் கொள்வோம். அதற்கு, திருமூலர் ‘குருவருளே திருவருள்’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு, இறை உணர்வு பெற தெளிவு அவசியம் என வலியுறுத்துவதனை ஆராய இருக்கிறோம். அதுவும், அந்த தெளிவு குருவின் வழியாக நான்கு வழிகளில் வருகின்றது என்கிறார் திருமூலர். நம்முடைய குருதேவருக்கு நினைவஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இறை உணர்வு பெறுவதற்கு அவசியமானதான ‘தெளிவு’ குருவின் வழியாக நான்கு வழிகளில், பெறுவது பற்றி சிந்திப்பது பொருத்தமானதாகவல்லவா உள்ளது.! அடுத்த சத்சங்கத்தில் (30-03-2016) சந்திப்போம்.

வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.

வாழ்க வளமுடன்.

தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil,click here.