தவறான அடையாளமும், அதனால் துன்பங்களும்.

Mistaken Identity and sufferings

FFC – 110

16-08-2015—ஞாயிறு

     மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா? தெரியாமல், மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? ஆம். தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை. இப்போது மகரிஷி அவர்களின் பாடல் ஒன்றை நினைவுகூர்வோம்.

meyviLakkam1

உண்மை இவ்வாறிருக்க மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். வாழ்வில் வளம் இல்லை; நிறைவில்லை.

ஏனெனில், தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையே துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முரணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி, அச்சம், திருடு, கொலை, கற்பழிப்பு, சினம், கவலை, பயம், அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

அவனுடைய உண்மையான ‘நான்’ தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையான துன்பங்களை அனுபவிக்கிறான். மனிதன் என்றால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாக அடையாளம் காண்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தி்ல் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

வாழ்க்கையில் என்ன வேண்டும்?

எதில் வெற்றி பெற வேண்டும்.

வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும்.

பேரின்பமே வேண்டும்.

துன்பம் வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும்.

ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும்.

துன்பம் தேவையில்லை.

பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது.

தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். ஏனெனில் இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானததுதானே? ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமைகெடச் செய்கிறான். இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பமே.

மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்பதுதான். உடல் உண்மையான நானல்ல (Body is unreal I).

உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிரிந்த பிறகும்,

உயிருடன் இருந்த போது சொன்னது போல் உடல், “நான்” என்று சொல்லலாமே! அப்படிச் சொல்வதில்லையே! எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு. எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

உடலை “நான்” என்கின்ற போது அது தன்முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து விடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation), இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

 “அவனில் தான் நீ, உன்னில் அவன்
அவன் யார்? நீ யார்? பிரிவேது?
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி”    

எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என உணர்ந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு குறைவுள்ளதாக இருக்கின்றது. குறைவுள்ளதில் எவ்வாறு நிறைவு இருக்கும். அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் ‘இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும்’ என அலைந்து கொண்டிருக்கிறான். அலைகிறவனுக்கு எப்படி நிம்மதி இருக்கும்? இப்போது “நான் யார்?“ என்கிற வினாவிற்கு விடை அறிவுதானே.

எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். “பிரக்ஞானம் பிரம்மம்” என்று அறிவே தெய்வம் என்கின்றது வேதம்.

அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel — meditation) என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically). எனவே தேர்விற்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதுபோல் அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே அறிந்த கருத்தியல் செய்தி (theoretical understanding – no it is only theoretical information) தான் “அறிவே (ஆன்மா) நான்” என்பது.

அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது.

இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரேத் தெளிவாகி, பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலமாகிவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்தின் தோற்றமே.

அறிவேதான் (ஆன்மா) நான் என சரியென நினைத்துக் கொண்டு வரும்போது, அக நோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.

மனிதனின் சரியான அடையாளம் அவனது அறிவு அல்லது ஆன்மா அல்லது தெய்வத்தின் ஒரு சிறு பொறி. இந்த சரியான அடையாளம்தான், 

  • உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.
  • வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.
  • போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.

இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று முப்பது கோடி. இந்த எழுநூற்று முப்பது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும், “உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.

FFC-110-FIN- காக்கைக்

என்ன கூறுகிறார் நம்முடைய பாரதி?

‘களியாட்டம்’ என்கிறார். எந்த அளவிற்கு ஆனந்தம் அனுபவித்திருந்தால் இவ்வார்த்தையினைக் கூறியிருக்க முடியும்? இந்த பாடலின் பொருளை அவரிடம் நேரில் கேட்டு அறிந்திருப்பார்களா? எவ்வாறு விளக்கியிருப்பார்?! இப்போது நாம் கேட்டுப் பார்க்கலாமா? அவர் இல்லையே இப்போது அவர் காதுகள் கேட்பதற்கு! அவருடைய காதுகள் மண்ணுக்கு இரையாகிவிட்டதே! இயற்கை பாரதியாரை நடுத்தர வயதிலேயே அழைத்துக் கொண்டது, ஏன்? என்ன காரணம்? நம் மகரிஷிபோல் அவா் ஆயிரம் பிறைகளை கடந்திருக்கலாமே! இயற்கையில் எதுவும் காரணமின்றி நடவாது என்பது நமக்குத் தெரியும். என்ன காரணம்?
பாரதி இன்னும் இருந்திருந்தால் மனிதகுலம் சீராகிவிடுமே என்பதற்காகவா இயற்கை அவரை வெகு விரைவில் அழைத்துக் கொண்டுபோய்விட்டது?! மக்களிடம் ஏற்புத்திறன்(receptivity) இல்லை. ஏற்புத்திறன் வேண்டும். Had fraction demanded, the totality would have supplied it.

இருப்பினும், அந்தக் களியாட்டத்தை அனுபவிக்க அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நிறைவேற்றி விட்டது. இது காலத்தின் கட்டாயம் இயற்கைக்கு/இறைக்கு.
‘களி’ என்றால் என்ன? கேட்பது, பார்ப்பது முதலியவற்றால் இன்பம் அடைவது ‘களி’ எனப்படுகிறது. ‘இன்பம்’ அடைவது என்பது சரியில்லை. ஏனெனில் இன்பம் என்பது புலன்களின் வாயிலாக அனுபவிப்பது. இந்த ‘Holistic View – புனிதப்பார்வை என்பது புலன்களைக் கடந்த ஆனந்த நிலை. ஆன்மாவின் ஐந்து நிலைகளில், உச்ச நிலையான ஆனந்தமய கோசநிலை. ஆகவே  “நோக்க நோக்க களியாட்டம்” என்பதால் ‘எல்லாம் ஒன்றே’ எனக் கேட்டு அறிவதிலும், அவ்வாறே பார்ப்பதிலும், வாழ்வதிலும் ஆனந்தம் என்கிறார் மகாகவி பாரதியார்.

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்கிறார். இதுதான் மகரிஷி அவர்கள் கூறும் ‘நான் என்கின்ற தத்துவம்’ எல்லாவற்றிலும் இருப்பதும் நானும் ஒன்றே, ‘நானே’ எல்லாமாகவும் உள்ளது என்பதாகும். நான் யாரோ அதுவே எல்லாமாகவும் உள்ளது. இதுதான் நான் என்கின்ற தத்துவம்.

Holistic View’ என்பதனை தமிழில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையானப் பார்வை என்று மொழி பெயர்ப்பர். உண்மைதான். அதுவும் சரிதான், எவ்வாறு? ‘HOLY’ என்றால் புனிதம் என்று பொருள் தமிழில். எனவே word to word மொழி பெயர்த்து புனிதப்பார்வை எனக் கூறவில்லை. இப்பிரபஞ்சத்தில் முழுமையானது பூரணமானது ஒன்றே ஒன்றுதான். அதுதான் மெய்ப்பொருள். அந்தப் புனிதமான, முழுமையான, மெய்பொருளை உணர்ந்த நிலையில் மனித அறிவு ‘எல்லாம் ஒன்றே’ எனப்பார்க்கும் நிலை முழுமையான பார்வை எனவும் கூறப்படலாம்.

இந்த நிலையில்தான் துரிய தீட்சையின் போது “பார்க்கும் பொருட்களெல்லாம் புனிதமடையட்டும், மக்களெல்லாம் நல்லோராகட்டும்”, என்று ஞானாசிரியரிடம் ஆன்மீக சாதகன் பெற்ற ஆசீர்வாதம் முழுமையாக நிறைவேறுகின்றது.

பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும். மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

மகரிஷி அவர்கள் “நானே நாம்” என்று கூறும் பாடலோடு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம். அவ்வாறு நினைவு கூர்வதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது” என்பதாகும்.

 NAnE_NAM_Vethathiri_maharishi

ஆச்சரியக் குறியுடன் பாடலை நிறைவு செய்துள்ளதைக் கவனிக்க வேண்டும். ஏன்? அவர்கூறுவது உண்மை. ஆனால், அது முதன் முதலாகக் கேட்பவருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் சிந்திக்க, சிந்திக்க, அது விளங்க விளங்க ஆச்சரியம் இருக்காது. உண்மையை அறிந்து கொள்வதில் ஏன் ஆச்சரியம் அவசியம்?

ஆகவே தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்! ஆகவே சரியான அடையாளத்தில், நமது பாரதி கூறும் களியாட்டத்தில் வாழ்வோம். இதுதான் ஆன்ம உணர்வு. உயிரறிவு. பேரின்ப நிலை.

வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம். ,

வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம். .

*****