தன்முனைப்பில்லா நான் (Egoless I )

தன்முனைப்பில்லா நான் (Egoless I )

FFC-17

13-11-2014

       தன்முனைப்பு என்பது ”Ego” என்கின்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாகும்(meaning). ”Edging God out” என்கின்ற வாக்கியத்தில் உள்ள மூன்று சொற்களின் (words) ‘E’, ‘G’, ‘O’ என்கின்ற முதல் எழுத்துக்களை (letters) எடுத்து உருவாக்கப்பட்ட(coined) எழுத்துதான் ”Ego” என்கின்ற எழுத்து.   இறையை (இறைவனை, God) வெளியே ஓரம் தள்ளி விடுதல் என்பதாகும். தன்முனைப்பு என்பது இறையை மறந்த நிலை. மனிதனுக்கும் இறைக்கும் உள்ள திரையே தன்முனைப்பாகும். தன்னை இறையிடமிருந்த பிரித்துக் காட்டிக் கொள்ளும் நிலை.

     எனவே இறையுணர் ஆன்மீகத்தில் இறை உணர்வு பெறுவதற்கு தன்முனைப்பு கரைய வேண்டும். ”தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்” என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட் செய்தியினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     தன்முனைப்பு என்பது,   அறிவு தன் மூலத்தை மறந்து தன்னை உடலுடன் அடையாளம்(body consciousness—mistaken identity) கொண்டு முனைப்பு கொள்கின்றது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இருக்கும்போது, மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது அல்லது ஏங்குவது அல்லது புகழ் மயக்கத்தில் இருப்பது, இறையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் தன்முனைப்புதான் காரணம். தன்முனைப்புதான் எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர். ஆகவே தன்முனைப்பு நீங்க அறிவு தன்னைப் பற்றி தெளிளாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதற்கு தவமும் சுயசோதனையும் அவசியம்.

     தினந்தோறும் மனிதன் ”நான்” ”எனது” என்கின்ற இரு சொற்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தன்முனைப்பை வெளிபடுத்துகின்ற ”நான்” ”எனது” என்கின்ற சொற்களை உபயோகிக்காமல் இருப்பது எங்கனம் சாத்தியம். என ஐயம் சாதகர்களுக்கு எழலாம். இந்த ஐயம் தீர்க்கவே இன்றைய சிந்தனை.

   தன்முனைப்பு நீக்கிக் கொண்ட ஞானியும் ”நான்” என்கின்ற சொல்லை பயன்படுத்தினாலும் ஞானி பயன் படுத்துவதற்கும் சாதாரண மனிதன் பயன் படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது..   ஞானி என்பவர் எப்போதும் அயரா விழிப்பு நிலையில் இறையே தானுமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற ஞாபகத்தில் இருப்பார். ஆனால் சாதாரண மனிதன் இவ்வுண்மையை தெரிந்திருந்தாலும் அந்நிலையை மறந்து தான் வேறு, இறை வேறு என்கின்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதுதான் அந்த வித்தியாசம்.

எனவே ஞானி பயன்படுத்துவது ”Egoless I”. சாதாரண மனிதன் பயன்படுத்துவது ”Egoist I or Egoful I” ஞானியின் ”நானை” சாதாரண மனிதன் புரிந்து கொள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளுவதைக் கவனிப்போம்.

   ”எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது. அதுபோல் பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட ஞானியின் அகங்காரமும்(தன்முனைப்பு) அப்படிப்பட்டதே என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

   மேலும் விவேக சூடாமணி கூறுவதையும் கவனிப்போம். நிழலைப்போல் தொடர்ந்து தேகம்(உடல்) வந்து கொண்டிருந்தாலும் ”நான்” என்னுடையது” என்கின்ற எண்ணமில்லாமை சீவன் ”முக்தனுடைய அடையாளம்” என்கிறது. நாளை சந்திப்போம்.

                       வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.