தன்குறைகளை அறிவதே ஞானமா? (நேற்றயைத் தொடர்ச்சி) 2/2

வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

 

FFC – 16

.

                                                                             12-11-2014

       வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.

        ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.  

          சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்

அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.

                           அழைப்புக் கவி

                                               அன்பர்களே, வாரீர்!

                                   அறிவின் இருப்பிடம்

                                   அறிந்து இன்பமுற

                                   அன்பர்களே வாரீர் …….. என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   ஞானம் என்கின்ற சொல்லிற்குத் பொதுவான அர்த்தம் தெளிவு. தெளிவு என்பது யாருக்கு?   எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம்.. வாழ்வது ஒரு கலை.

       எதற்காகப் பிறந்தோம்?

       கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?

       ஏன் துன்பம் வருகின்றது?

       வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

       துன்பமில்லாமல் வாழ முடியாதா?

ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.

. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.

   அதற்கு, “நான் நான்“ எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.

   அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான். மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன? தீய எண்ணங்கள், தேவையில்லாத ஆசைகள், சினங் கொள்வது, கவலையுறுதல் மற்றும் தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.

   பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது.  ஆகவே தன் குறையை அக்கறையோடு எடுத்துப் பிறர் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்

     அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .

     ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு. அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.

     அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

                                “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்

                           காணும் இன்ப துன்பமவன் “      . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது அநேகருடைய வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

     தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும். நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெறுக்கி ஞானபீடத்தை அடைவான்.

   மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், மனிதன் இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும் அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும். வாழ்க வளமுடன்.

  வாழ்க மனித அறிவு.    வளா்க மனித அறிவு.      

வாழ்க அறிவுச்செல்வம்.      வளர் அறிவுச் செல்வம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Posted in: