சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

17-07-2020  — வெள்ளி

நல்ல பழக்கமே நல்லொழுக்கம்

 

தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

….. புத்தர்

பயிற்சி—
1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

விடை:–

 

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல். தீய பழக்கம், பெரும்பாலும், ஆரம்பத்தில் இன்பத்தையே தந்தாலும் அல்லது தருவதுபோல் இருந்தாலும்/இருந்து ஈர்த்தாலும், பின்னர் அது தீங்கையேத்தான் நிச்சயம் தரும். அதுவரை அந்த தீயபழக்கத்தை தேனாக நினைப்பவனை முட்டாள் என்கிறார் புத்தர். பின்னர் அந்த தீயபழக்கம் தீங்கை தர ஆரம்பித்ததும் அதனை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வதில் வெற்றி பெறுவது,

  • அத்தீய பழக்கத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம்,
  • அதில் ஆழ்ந்து, ஆழ்ந்து அனுபவித்த ஆரம்பகால சுகம்,
  • எவ்வளவு காலம், அது பழகப்பட்டிருக்கின்றது

ஆகியவற்றைப் பொருத்து எளிமையாகவும் இருக்கலாம். அல்லது அறிஞர் ரூஸோ கூறும் ‘ஒழுக்கவாழ்விற்கு போராட வேண்டும்’ என்பதுபோல் போராடும்படியாகவும் இருக்கலாம். எந்த ஒரு பழக்கத்தையும் பழகுவது என்பது ஐம்புலன்களைக் கொண்டுதான் பழகவேண்டும். எந்த ஒரு தீயபழக்கமும் ஆரம்பத்தில் சுகம் கொடுத்து பிறகு சிக்க வைத்துவிடும். உணர்கருவிகளாகிய புலன்களை தவறாகப் பயன்படுத்தும்போது புலன்கள் அறிவை சிக்கவைத்துவிடுவதால், ஐம்பொறிகளும் (ஐம்புலன்களும்) அறிவிற்கு உணர்கருவிகளாகச் செயல்பட்டாலும், அறிஞர் திருவள்ளுவர் அவற்றை ‘பொறி’ என்பதனை கருவி எனும் அர்த்தத்தில் கூறாமல், ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்கின்றபோது ‘சிக்கவைக்கும்–அகப்படுத்தும் பொறிகளாகத்தான் எச்சரிக்கிறார். (traps-உதாரணத்திற்கு எலியைச் சிக்கவைக்கும் எலிப்பொறி)’

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்.” …. குறள் எண் 6

ஆகவே ஆரம்பத்தில் சுகம் கொடுப்பதாக இருந்து, ஆரம்பிக்கப்பட்ட தீயபழக்கம், பின்னர் தீங்கை கொடுக்கும்போது, அதனை விட்டுவிடுவதற்கு அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
தீய பழக்கம் ஆரம்பத்தில் ஒருவேளை இன்பத்தைக் கொடுத்தாலும், ‘தீமை தீங்கைத் தரும் இயல்புடையதால்’, பின்னர் தீங்கைத்தான் நிச்சயமாகத் தர ஆரம்பிக்கும். அதுவரை அத்தீயசெயலை தேனாகக் கருதுகிறான் முட்டாள் என்பதனை வலியுறுத்திக் கூறவந்ததே புத்தரின் இந்த அமுதமொழி. உதாரணத்திற்குப் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், சூதாட்டம் போன்ற இன்னும் எத்தனையோ, தீயபழக்கங்கள் மனிதனிடம் உள்ளன. மனிதத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்த மானுடவியல் அறிஞரும் நம்முடைய குருநாதருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘மனிதனிடம் இருக்கும் தீமை, பழக்கம்’ என்கிறார். பழக்கம் பழகிவிட்டால் அது வழக்கமாகிவிடும். பழக்கவழக்கம் தீமையைத் தருவதாக இருந்து விட்டால் பின்னர் அதனை நிறுத்துவதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

    துன்பம் தரும் பழக்கம் எவ்வாறு  நற்பழக்கமாகும்? 

    துன்பம் தரும் செயல் எவ்வாறு ஒழுக்கச் செயலாகும்?

    எனவே   நல்ல பழக்கமே நல்லொழுக்கமாகும்.

     பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவது எதனைக்குறிக்கின்றது? அறிவின் கூர்மையின்மையைக் குறிக்கின்றது, காய்கறிகளை நறுக்க உதவும் கத்தி அதன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையற்ற கத்தியால்(மழுங்கிய) உபயோகமில்லை. அதுபோல் கூர்மையில்லாத அறிவால்(மழுங்கிய) பயனில்லை மனிதனுக்கு. அறிவு அரூபமாக உருவமற்று இருந்தாலும், அது கூர்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவு கூர்ந்து உணரமுடியும். அறிவு கூர்மையில்லாதிருந்தால், அது தனக்கே உபயோகமற்றுபோய்விடும். ஒன்று தனக்கே உபயோகமற்று இருப்பது விசித்திரமாக இல்லை?! ‘நான் எனக்கே உபயோகமற்று இருக்கிறேன்’ என்றால் எப்படியிருக்கும்? கூர்மையின்மையால் உபயோகமற்றிருப்பது/போவது அறிவிற்கே துன்பத்தை தரும். 

      கூர்மையாக இருக்கும் அதே நேரத்தில், அறிவு தன்முனைப்பில் சிக்காமல் இருக்க விழிப்புடனும் இருக்க வேண்டும். ‘தான் கூர்மையாக இருக்கிறேன்’ என்று அறிவு கர்வம் கொள்ள நேரிடின் அது தன்முனைப்பில் சிக்க நேரிடும்.

  கூர்மையாக இருக்க வேண்டியது அறிவின் இயல்பு. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மனிதன். அதில் பெருமை கொண்டு கர்வமடைய எங்கே நியாயம் இருக்கின்றது? நியாயமே இல்லை. அந்த அறிவுக்கூர்மை விவேகமான பேரறிவின் சிறப்பு. இது சுத்தஅத்வைதம். என் அறிவு கூர்மையானது என பெருமை கொள்கின்ற துவைதத்திற்கு இடமில்லை.

    கூர்மையான கத்தியை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் கூர்மையான கத்தி விரல்களையே காயப்படுத்திவிடும். சாணை பிடிக்கப்பட்ட அறிவாள்மனை சில நாட்கள் மிகக்கூர்மையாக இருக்கும். அதனை காயை நறுக்கப்பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிடில் சில நேரங்களில் விரல்களை காயமாக்கிவிடும்.

    அதுபோல் அறிவின்கூர்மையால் தன்முனைப்பை வெளிப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். அடக்கம் வேண்டும்.

   ஒரு பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவதற்குக் காரணம், அறிவின் குறைபாடே!

    அறிவின் குறைபாடுகள் என்ன என்று ஆராயப்போனால், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம். ஆகியமூன்றும் அறிவின் குறைபாடுகளாகத் தெரியவரும்.

     அவற்றை ஒவ்வொன்றாக சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

முதலில் அறியாமையை எடுத்துக் கொள்வோம்.

இயற்கையின்/இறையின் நெறியான அறநெறியை சமுதாயத்தில் நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்கள் பல இருந்தாலும், தவறிழைக்கும்போது அது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் குற்றம் எனகருதப்படுமானால், அப்போது அந்தச் சட்டம் தனக்கு தெரியாது(அறியவில்லை) என வாதிடமுடியாது. ‘Ignorance of Law cannot be an excuse’ என்பதுபோல், அறியாமையும் (அறியாமைக்கு அறியாமை காரணமாக இருந்தாலும்) மன்னிக்க முடியாததுதான். ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிறைய சட்டங்கள் உள்ளன. அவற்றிற்கு பெயர்களும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. ஆகவே வழக்கறிஞரல்லாத மற்ற குடிமகன்கள் எல்லாம், ஒருசட்டத்தைக் குறிப்பிட்டு ‘இந்த சட்டம் எனக்குத் தெரியாது’ என்று சொல்ல முடியாது.

     ஏனெனில் எந்த ஒரு சட்டமும் மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஆறாம் அறிவிற்குடைய அறநெறியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

    ஆறாம் அறிவுடைய மனிதன் அறநெறி வாழ்க்கை வாழத் தெரிந்திருக்க வேண்டும். அறநெறி வாழ்க்கை வாழாமல் போனால் அது சட்டத்தை மீறியதாகி, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சட்ட–எண்ணைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தி, தண்டிக்கும்.

    நெறியுடன் இயங்குகின்றது இயற்கை. நெறியுடன் இயங்குகின்ற இயற்கை ஒழுங்காற்றலாகவுள்ள பேரறிவே. அதுவேதான் இறை. ஆகவே இறையின் நெறியான அறநெறி என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். ஆகவே இது ஆறாம் அறிவிற்கு இருக்க வேண்டிய நெறிகளாகும். ஒழுக்கம் மீறும்போது/தவறும்போது அது தவறுதானே?!

   ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள். விளைவறிந்து செய்தாலும், விறைவறியாது செய்தாலும் அதற்குரிய விளைவு வந்தே தீரும். (குற்றம் என தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் ஒரே விளைவுதான் வரும்)

     சூடான பாத்திரம் எனத் தெரியாமல், குழந்தை அறியாமல் அதன் மீது கைகளை வைத்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். குழந்தை அறியாமையில் கை வைத்து விட்டது என்பதற்காக பாத்திரம் சுடாமலா இருக்கும்? பெரியவர்களும் கவனக்குறைவாக சூடான பாத்திரத்தின் மீது கையை வைத்துவிட்டாலும் கை சுட்டுவிடும். கவனக்குறைவுடன் செய்த செயலுக்கான விளைவு ‘கைசுட்டுவிடுதல்’

அடுத்ததாக கடமையை எடுத்துக் கொள்வோம்.

     கடமை என்பது இயற்கையின்/இறையின் இயல்பு அல்லது பண்பாகும் ஆகவே கடமையை விடுவது அல்லது செய்யாமல் இருப்பது அல்லது தவறுவது தவறுதானே?! இயற்கை தனது கடமையை தவறாது செய்து கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு சூரியனைச் சுற்றி பூமி ஒரே சீராக வலம் வந்து கொண்டிருகின்றது. இது இயற்கையின் கடமைகளில் ஒன்று. அந்தக்கடமையில் ஏதாவது குறை ஏற்படுமாயின் என்னவாகும்? ஆகவே அந்த இயற்கையின் ஒரு சிறந்த உயர்ந்த அங்கம்தான் மனிதன். எனவே மனிதன் கடமையில் தவறக்கூடாது. கடவுளையும் கடமையையும் இணைக்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

கடவுளும் கடமையும்(17-12-1954)

கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்.
கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.

…. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இப்பாடலிலுள்ள உண்மை அனைவருக்குமே பொருந்தும். ஏன் இவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது. இது மகரிஷியின் மாணவா்களாகிய மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல.

    மனிதனின் வாழ்வை பற்றிய ஒரு உண்மை கண்டுபிடிக்கப்படுகின்றது என்று சொன்னால் அது ஏதோ ஒரு தரப்பினருக்குமே மட்டும் பொருந்துவதாகக் கொள்வதற்கில்லை. இப்புவியில் வாழ்கின்ற மனிதகுலத்திற்கே பொருந்துவதாகத்தான் கொள்ள வேண்டும்.

    கடமையையும் கடவுளையும் இணைத்து சொல்வதால் இந்த உண்மை கடவுளை அறியவேண்டும் என்கின்ற மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகாது. மனவளக்கலைஞர்களல்லாத, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

கடமையைச் செய்வதும் கடவுளை அறிவதும் சமப்படுத்தப்படுகின்றது. கடமை என்பது என்ன? கடமை என்பது உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயலாகும். செய்த செயலுக்கு இயற்கைநீதியின்படி விளைவு உண்டு. அந்த விளைவு எது? விளைவாக வருவதுவே இறைவன். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்கின்ற உண்மையை தெரிவித்துள்ளது வேதாத்திரியம் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.

ஈகை

துன்பத்தில் இருப்பவருக்கு உதவுகின்ற பண்புதான் ஈகை எனப்படுகின்றது. ஆகவே ஈகை ஆறாம் அறிவின் சிறப்பல்லவா?! ஆதலால், ஈகையைச் செய்யத் தவறும்போது ஆறாம் அறிவின் சிறப்பு கீழிறங்கிவிடும். ஆறாம் அறிவின் சிறப்புபோனால் அது கீழ்மைதானே? விளைவு சிறப்பால் வருகின்ற உயர்வோ அல்லது நன்மையோ இழக்கப்படுமன்றோ! ஒன்று இழக்கப்படுகின்றது என்றால் அதன் விளைவு துன்பமன்றோ! அறியாமையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் அறியாமை என்பது மன்னிக்க முடியாதது, அறியாமைக்கும் ஏற்ற விளைவு வரும் என அறிந்து கொண்டோம். அந்த சிந்தனையில் கூடவே அறம் பற்றியும் அதன் அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை பற்றியும் அறிந்து கொண்டோம்.

இப்போது அறிவின் குறைபாடான அலட்சியம் என்றால் என்ன என்று அறிவோம்.

பொதுவாக இது அனைவரிடமும் அவ்வப்போது தலைதூக்கும். பழக்கத்தாலும் அலட்சியம் செய்வது உண்டு. எனவே அலட்சியம் பற்றி பார்ப்போம். அலட்சியம் அறியாமையைவிட மோசமானது. தெரிந்தும் உதாசினப்படுத்துதல். தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்றிருக்கும்போது, செய்வது குற்றம் என்று அறிந்தும் அலட்சியத்தால் செய்வது’ அதனைவிட கொடுங்குற்றம். இது தன்முனைப்பின் வெளிப்பாடாகும்.

மூன்றாவது உணர்ச்சிவயம். இது எல்லோரிடமுமே உள்ளது. எல்லோரிடம் இருப்பதால் அது சரி என்றாகிவிடாது. .இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இயல்பும் – உயர்வும் (22-12-1953)

அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.”

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உணர்ச்சி பெரியதா அல்லது அறிவு பெரியதா? உணர்ச்சி உயர்ந்ததா அல்லது அறிவு உயர்ந்ததா? உணர்ச்சி அறிவை உணா்வதில்லை. அறிவுதான் உணர்ச்சியினை உணர்கின்றது. எனவே அறிவுதான் எல்லாவகையிலும் சிறப்புடையது, உயர்ந்தது. அறிவேதான் இறையாக மனிதனிடம் உள்ளது.

  உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளது மனிதர்களிடம் என்றால் என்ன நிலையில் உள்ளது இந்த சமுதாயம்? உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளதால் அறிவைக் கொண்டுதான் மனிதன் செயல்படமுடியும் என்கின்றபோது உணர்ச்சியிடம் தோற்ற அறிவு(இறை) எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும்?

   அறிவை(இறையை) தோற்கடித்த உணர்ச்சியால் தனக்கும், தன்னுடன் வாழும் சகமனிதர்களுக்கும் எவ்வாறு நலமளிக்க முடியும்? எனவே மனவளம் கருதி அறிவால் உணர்ச்சியை வெல்கின்ற கலைதான் மனவளக்கலை. அரசன் சேவகனிடம் அடிமையாவது போன்றது உணர்ச்சி அறிவை வெல்வது. அரசன்(அறிவு) சேவகனுக்கு(உணர்ச்சி) ஆணையிடுவது போன்றது அறிவு உணர்ச்சியினை வெல்வது.

    அறிவு எப்போதும் உணர்ச்சிக்கு வசப்படக்கூடாது. அறிவு உணர்ச்சிக்கு வசப்பட்டால் அது அறிவிற்கு உடைமையாகாது(அறிவுடைமையாயகாது). அதனால்தான் எது அறிவு என்று கூறவந்த திருவள்ளுவர் அறிவைப்பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறார். சிந்தனை முற்றுபெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.

வாழ்க சிந்தனைச் செல்வம்!      வளர்க சிந்தனைச் செல்வம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!