சிந்திக்கக் கவிகள் – 3

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்கக் கவிகள் – 3

நாள் 27—03-2018-செவ்வாய்
உ.ச.ஆ.27-03-33

சி.க.3.படம்-27-03-2018
கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல்

கவிதைகள் மனித சிந்தனையைச் செம்மைப்படுத்தவும், அறிவை விசாலப்படுத்தவும் வல்லன. அவை சுயஅறிவைத் தூண்டி மக்களை விழிப்படையச் செய்யும். கவிஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் இணைக்கும் அற்புதமும் ஆற்றலும் கொண்டன. உள்ளத்தால் உணர்ந்து, தான் பெற்ற அனுபவங்களைப் படிப்போரும் அனுபவிக்கும் தன்மையைக் கொடுத்து எழுதுபவனே சிறந்த கவிஞன். கவிதையில் அமையும் கவித்தன்மை, பாடுவோரின் உள்ளுணர்வைப் பொறுத்தது என்பார் கி.வா. ஜகந்நாதன். இத்தகு நிலைக் களன்களில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதைகள் புலப்படுகின்றன.

சி.க.ப.3-பாட்டு image

 

(ஓரிரு முறை பாடலை வாசிக்கவும்)

சி.க.2-கவியினால் பயன்பெற யுக்தி-image

பதினோறு வினாக்கள் உள்ளதே என்று மலைக்க வேண்டாம். இப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால், ஒரு சில நொடிகளிலேயே நம் மனதில் இத்தனை வினாக்களும் எழுந்து விடும். அந்த மனதுடன் கவியின் பொருளைக் காண்போமேயானால் கவியின் உட்பொருள் மற்றும் கவிஞர் எந்த உள்ளுணர்வுடன் கவியை அருளினாரோ அந்த உள்ளுணர்வும் கவி வாசிப்போரின் மனதிலும் எழும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம்-பயன் நிறை வேறும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம் நிறைவேறுவதுதானே தேவை! கவியை வெறும் புற மனதளவிலே மட்டும் தெரிந்து வைத்திருந்து, அதாவது ஞாபகத்தில் வைத்திருப்பதனாலேயே மட்டும் என்ன பயன் வந்துவிடப்போகின்றது?

எதற்காக கவிஞர் தன் அனுபவ-கண்டுபிடிப்புகளை கவியாக்குகிறார்? ‘ஒருவர் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும்’ என்கின்ற பெருநோக்குடன், தமது கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கும் தெரிவித்து கவிஞர்கள் மகிழ்வதோடு மட்டுமன்றி, சமுதாயத்தையும் மகிழச்செய்து, சமுதாயம் பண்பேற்றத்தில் வெற்றி காண்பதற்குத் தானே கவிகள் பிறக்கின்றன. மேலே கூறிய புதிய யுக்தியுடன்- அணுகுமுறையுடன் கவியின் உட்பொருளை அறியாததனால்தான் மகரிசி அவர்கள் கூறுவதுபோல் அறநூல்கள் கூறியிருக்கின்ற நெறிகள் சாதனைக்கு வராமல் போய்விட்டன இதுவரை(ஞ.க. பாடல் எண்-533). அந் நிலை 1911 ற்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது என்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம். வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
இதுபோன்ற புதிய யுக்தியுடன்-அணுகுமுறையுடன் கூடிய வினாக்கள் எல்லா அருளாளர்கள் அருளிய கவிகளுக்கும் பொருந்தும். இருப்பினும் மகரிசி அவர்களின் சிந்தனாப்பள்ளியில்(school of thoughts) சீடராக நாம் இருந்து வருவதனால், அப்பயனை முழுவதுமாக அடைவதற்கு, மகரிசி அவர்கள் அருளியுள்ள 1854 கவிகளையும் இந்த அணுகுமுறையோடு-யுக்தியோடு அணுகி பயன் பெற விரும்பப்படுகின்றது.
இப்போது பாடலின் பொருளை அறிந்து கொண்டு அதன் உட்பொருளை விரிவாகக் காண்போம். வாழ்க வளமுடன்!
பொருள்:
சிற்பிகளின் திறமையைக் காட்டுவது சிலைகள். மக்களின் சிந்தனையைத் தூண்டுவது கவிதைகள். கவிஞனின் கற்பனை, ஆராய்ச்சி, அனுபவம், காட்சிகள் அனைத்தையும் சுருக்கித் தருவது கவிதை. அது மனிதரின் சுய அறிவைத் தூண்டி விழிப்பை வெளிச்சமிட்டுக் காட்டும்.
உட்பொருள்:
வேதாத்திரிய கவிதைகள் அனைத்தும் உட்பொருட் களஞ்சியங்கள்.
சிலைகளும் கவிதைகளும்:
சிற்பியின் தனித்திறமையும், அறிவும், கலை நுணுக்கங்களும் இணைந்து, சிலை வடிவமாகும். சிற்பி, கற்களையோ மரங்களையோ உலோகங்களையோ எடுத்து, வேண்டாதவற்றை நீக்கி விரும்பும் வடிவங்களில் சிலையாக்கும் போதுதான் கலை வடிவமாகவும், கவின் வடிவமாகவும் அவை மக்களைக் கவர்கின்றன.
சிற்பியின் சிற்பங்களைப் போன்று கவிஞனால் படைக்கப்படும் கவிதைகளும் அமைகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் பதிவுகளின் கொள்கலமாகின்றான். அப்பதிவு நீக்கம் பெற இறையுணர்வும் அறவுணர்வும் பெறுதல் வேண்டும். இறையுணர்வு பெற்ற மனிதனே பிரம்மஞானியாகிறான்.
சிற்பங்களை உருவாக்குவதற்குச் சிற்பிக்கு உளி, சுத்தியல் போன்ற கருவிகள் தேவைப்படுவன போன்றே மனிதன் இறைநிலை உணர அறுகுண சீரமைப்பும், தவமும், தற்சோதனையும் கருவிகளாகின்றன. அல்லதை(தேவையற்றதை) விடுத்து உள்ளதை உணர்ந்து நல்லதைக் கொள்ளுவதே சிற்பியின் சிலைவடிப்பு நேர்த்தியாகும்;. வேதாத்திரியக் கவிகளோ மனிதன் இறைநிலை உணரும் பயணத்தைத் தொடர வேண்டி அல்லதைத் தவிர்த்து உள்ளதை உணர்ந்து நல்லதைக் கொள்ளும் பக்குவம் தருவன.
பக்திவழி செல்லும் பக்தனுக்குச் சிலை, கடவுளோடு ஒன்றும் மன ஓர்மைக்கு ஊன்றுகோல். வேதாத்திரியக் கவிகள் மக்களின் மன ஓர்மைக்கு வழிகாட்டி, வாழ்வில் எழும் சிக்கல்களை ஓட்டும்.
மகரிசி அவர்களின் கவிதைகள் இறை உணர்வின் வெளிப்பாடுகள். அவர் கவிதை எழுத ஏட்டினில் கை வைக்கும் போது எண்ணங்கள்(அகண்டாகாரம்) இறைநிலையோடு ஒன்றியிருக்கும். இயற்கை இரகசியங்களை அகக்கண்ணால் கண்டு அக்காட்சிகளை எழுதுவதால், அவருடைய கவிதைகள் அனைத்தும் இறையுணர்வு கவிதைகளாக மலர்ந்துள்ளன.
நல்ல கவி(19-12-1962)
“கவியென்றால் மனித இனப் பண் புயர்த்தும்
கல்வியாய்க் கருத்தொலியாய்த் திகழவேண்டும்”
ஞா.க. பகுதி-1-481
என நல்ல கவிதைக்கு இலக்கணம் வகுத்துள்ளார் மகரிசி.
அறிவு பண்பட்ட நிலையில் தன்னை உணர்ந்து மக்களின் நிலையினை ஆராய்ந்து சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்துக் கவிஞன் கவிதை படைப்பான். வேதாத்திரிய கவிஞரோ மக்களின் நல்வாழ்வுக்கேற்ற வழிமுறைகளையும், இறையுணர்வுத் தேடல் நெறிகளையும் கவிதைகளாக்கியுள்ளார். “ஒரு பொருளை உணரவேண்டுமென்றால் அப்பொருளின் கீழ் உன் மனஅலையை நிறுத்திப்பார். அது உனக்கு உணர்த்தும்” என்பார் அருட்தந்தை. இதனை,
“பாட்டெழுதும் பழக்கமுளான், அறிவு நன்றாய்ப்
பண்பட்டுப் பற்றற்ற நிலையடைந் தால்,
நாட்டுமக்கள் தேவைஅவன் அறிவில் தோன்றும்;
நல்வாழ்வுக் கேற்றமுறை அனைத்தும் தோன்றும்;

ஞா.க. பகுதி-1-489
என்ற கவியில் வெளிப்படுத்தியுள்ளார். ஆழ்ந்த சிந்தனையில் மன அலைச்சுழல் குறையும். அவ்வமயம் கவிஞனின் கற்பனைகளும் அனுபவங்களும் ஆராய்ச்சிகளும் அகக்காட்சியாக மலரும்.
மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், அரக்கர் முதலிய உருவங்களையும் அழகு பட அமைப்பதே சிற்பக்கலையாகும்.
“காக்கை குருவி எங்கள் ஜாதிநீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமின்றிவேறில்லை
நோக்கநோக்கக் களியாட்டம்”
இறைவனே ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை பரிணாமம் பெற்று, எங்கும் நிறைந்துள்ளான். உலகிலுள்ள இயங்கும் பொருள், இயங்கா பொருள் அனைத்தும் இறைவனின் வடிவங்களே. இதனால்தான் சிற்பியின் சிலையை கோயிலில் தெய்வமாகக் கண்டு மகிழ்கிறோம். வணங்குகிறோம். இறைவனே மனிதனாகி வந்தமையே மகரிஷி அவர்கள் காந்த தத்துவ சிறப்பின் வெளிப்பாடு. அந்த வெளிப்பாடே பாரதியின் பாடலிலும் மலர்ந்துள்ளன.

சுருக்கிச் சொல்லுதல்:
எழுத்துலகில் கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடுண்டு. வாசிப்போன் கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உரைநடை உதவுகிறது. நாளிதழ்கள் பல நாள்தோறும் வெளிவரினும் வாசிப்பைப் பாமரமக்களிடம் தொடர்ந்து அவன் மொழியாய்த் தருவன சில இதழ்களே. அவை செய்தியை எளிய உரைமொழியில் தந்து மக்களிடம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கம்ப்யூட்டர்யுகமான இக்காலத்தில் மனிதன் சுருக்கத்தையே விழைகிறான். ஆதலால் உரைநடை சுருக்கமாகிப் புதுக்கவிதைகள் உருவாயின. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கவிஞர் இயல்பு. மேலைநாட்டு அறிஞர்கள் சொற்களின் சிக்கனமே கவிதை என்பர். சுருக்கம் கவிதைக்கு அணி. காலங்காலமாக மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது ஆத்திசூடி.
அறம்செயவிரும்பு
ஆறுவதுசினம்
இயல்வதுகரவேல்
எனக்கூறும் (1,2,3) ஆத்திசூடியும்

தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
தாயிற் சிறந்ததொருகோயிலுமில்லை

எனமொழியும் (37,38) கொன்றை வேந்தனும் சுருங்கச் சொல்லி பிஞ்சு நெஞ்சங்களில் அறஉணர்வை ஊட்டிவளர்க்கின்றன. கவிதை அமைக்கும் தன்மையினைத் தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை,
“சொல்லும் பொருளும் நனிசிறப்பச்
சுருங்கச் சொல்லல் முதலாய
தோட்டி(அழகு)அமைய”
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – முத்தப்பருவம் – 3
வேண்டும் என்பார். மனிதன் இறைவன் இட்ட சுருக்கு ஒப்பம் என்பார் இறையன்பு. இங்கு மனிதனே இறைவனின் சுருக்கம் என்பது புலனாகிறது.

படைப்பாளனின் கற்பனை, ஆராய்ச்சி, அனுபவங்கள், விளக்கங்கள் அனைத்தும் கவிதையாகச் சுருங்குவதும் உரைநடையாக விரிவதும்போல் மனித மனத்தின் இயல்பு சுருக்குதலும் விரித்தலுமாகும். மனிதனின் எண்ணம், சொல், செயல்கள் அனைத்தும் கருமையத்தில் சுருக்கிப் பதிவு செய்யப்படுகிறது. தேவைப்படும்போது அதை எண்ணமாக மனம் விரித்துக் காட்டுகிறது.
கவிதைக்கும் கருமையத்திற்கும் ஒற்றுமை உண்டு. இரண்டும் சுருக்கப் பதிவுக் களங்கள்(fields). இக்களங்களையே மகரிசி அவர்கள், ‘சொற்ப நேரத்தினிலே சுருக்கிச் சொல்லி’என மொழிந்துள்ளார். ஒரு பொருளைப் பார்ப்பதும் செயலைச் செய்வதும் வெகு நேரமாக இருப்பினும் அது கணப்பொழுதிலேயே கருமையப் பதிவாகிவிடுகிறது. கவிதை சுருங்கச் சொல்லப்படுவதால் கால விரையம் பெரிதும் தவிர்க்கப்படுகிறது.
சிந்திக்கவைத்தல்:
வேதாத்திரிய கவிகள் அனைத்தும் சிந்தனைத் துளிகள். தனிமனிதன், சமுதாயம், உலகம், அமைதி, பொருளாதாரம், இறைநிலை என மகரிசி தொட்ட இடங்களெல்லாம் சிந்தனைக் களங்கள்.
பண்பு(02-01-1955)
“சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”
ஞா.க. பகுதி-1-632
என நற்பண்பினைப் பற்றியசிந்தனையைத் தந்துள்ளார் மகரிசி.

கடன் புண் போன்றது. வட்டிபுண் சீழ் பிடித்தல் போன்றது.
ஞா.க.80
“வேரறுந்தமரத்தினைப் போன்றவர்கள்
ஐயுணர்வில் மயங்கியவர்கள்” ஞா.க.1399

“ஆழ்கடல் போன்றது மெய்ப்பொருள்” ஞா.க.1125

“தவஉணர்வுநங்கூரம் போட்டகப்பல்
போன்று விலகாமல் ஓரிடமாய் நிலைத்துநிற்கும்.”
ஞா.க.1481
எனத் தொட்ட இடங்களிலெல்லாம் வேதாத்திரி மகரிசி மக்களைச் சிந்திக்க வைத்துள்ளமை புலனாகின்றன.
சுய அறிவைத் தூண்டுதல்:
ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவரவர் சுய அறிவு, படைப்புகளில் வெளிப்படும். கவிதை சுய அறிவைத் தூண்டும் போது அது உயிரோட்டமான கவிதையாகிறது.
“நுண்ணிய நூல்பலகற்பினும் மற்றும்தன்
உண்மைஅறிவேமிகும்.” . . . (குறள். 373)

என்பார் திருவள்ளுவர். உண்மை அறிவு என்பது சுய அறிவு அல்லது இயற்கை அறிவாகும். மகரிசியின் சுய அறிவே அவரின் படைப்பாக்கங்களின் வெளிப்பாடு. அவை பாமரனையும் பிரம்மஞானியாக்கும் உத்தியினைத் தன்னகத்துக் கொண்டன.
“ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்குசொல்லவேண்டாம்
மாதாவைஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்”
– . . . உலகநீதி– 1
என உலகநீதி வலியுறுத்தும். இக்கவிதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அறிவுமேம்பாடு அடையுமல்லவா?
மகரிசிஅவர்கள்,
“கடவுள்எனப் படுபவனே மனித னானான்!
கருத்தியங்கிக் கருத்துயர்ந்து கருத்தறிந்தான்!
கடவுளாய் அனைத்தையுமே கண்டு விட்டான்!
காண்பவனே ஆதி அந்தமாகநின்றான்!”
. . . ஞா.க.1119

இங்கு மகரிசி அவர்கள், மனிதனானான், கருத்தறிந்தான், கண்டுவிட்டான், அந்தமாகி நின்றான் என்ற வினைமுற்று அடுக்குகளில் கடவுளே தன்மாற்றம் கொண்டு ஆறாவது அறிவைப் பெற்ற நிலையைக் கவிதையில் போற்றியுள்ளார்.
சுயஅறிவைத் தூண்டும் புலவர்களைப் போற்றுவதற்காகவே மகரிசி அவர்கள் கவிதைகளைப் போற்றியும், கவிதைப் பயன் விளக்கியும் படைப்புக்கும் படைப்பாளிக்குமான ஒற்றுமையைக் கவிதையாக்கியுள்ளார்.
விழிப்படைதல்:
எண்ணம், சொல், செயல்களில் எதைச் செய்யவேண்டு, எதைத் தவிர்க்கவேண்டும் என்பதை ஆராய்ந்து நல்லவற்றைச் செய்யவேண்டும் என்ற மனஓர்மையுடன் இருப்பதுவே விழிப்படைதலாகும். மகரிசி அவர்கள் அகண்டாகார விழிப்பு நிலையில் இருந்து வெளிப்படுத்தியதே ஞானக்களஞ்சியக் கவிதைகளாகும்.
கவிஞர்கள் எண்ணத்தில் உதிக்கும் கருத்துக்கள் விழிப்புநிலையில் வெளிவருவனவாகும். அறக்கருத்துகளும் தத்துவ சிந்தனைகளும் பக்திப் பாடல்களும் விழிப்புநிலையின் வெளிப்பாடுகளாகும். மகரிசியின் விழிப்புநிலையே
குருவாகவும்,
ஞானியாகவும்,
ஆசிரியராகவும்,
கவிஞனாகவும்,
மருத்துவராகவும்,
விஞ்ஞானியாகவும்,
சிந்தனையாளராகவும்,
மெய்ஞ்ஞானியாகவும்,
பொருளாதார நிபுணராகவும்,
உழைப்பாளிகளின் நண்பனாகவும்,
நமக்கு அவரைப் பன்முகங்களில் அடையாளம் காட்டுகிறது.
சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் சீரினைஅறிந்தவர் மகரிசிஅவர்கள்.
“செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்தவிரும்பியதையெய்தலாம்!”

என்ற பாரதியின் தொடர் மக்களை விழிப்படையச் செய்வதற்குரிய தூண்டுகோலாகும். விழிப்புணர்வு என்பது இறைநிலை உணர்வோடு இருத்தலாகும்.
“இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
ஏற்படும்ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வ தாகும்”
. . . ஞா.க.1487

என்ற மகரிசியின் கூற்றில் விழிப்புநிலையின் விளக்கம் எளிமையாகிவுள்ளதைக் காணமுடிகிறது.
திருவிழா கூட்டத்தில் குழந்தையைத் தேடுவதுபோன்று நல்ல கவிதைகளைத் தேடவேண்டியகாலம் இது. இக்காலகட்டத்தில் அருட்தந்தையின் அமரத்துவம் பெற்ற அருட்கவிகள் நமக்கு வரமாக அமைந்துள்ளன. மழைநீர் பள்ளம் நோக்கி ஓடி இறுதியில் கடலில் கலப்பதுபோன்று வேதாத்திரியகவிகள் மனிதர்களைக் குருவழியில் இறைநிலையை உணரவைக்கின்றன.
சுயசோதனை வினாக்கள்:
(தன்னையே சோதித்துக் கொள்ளும் வினாக்கள்)

1. கவிதை என்பது யாது?
2. இறைநிலையைஉணரக்கூடிய கருவிகள் யாவை?
3. கவிஞனின் கற்பனைகளும் அனுபவங்களும் ஆராய்ச்சிகளும் எப்பொழுது அகக்காட்சியாய் மலரும்?
4. கவிதைக்கும் கருமையத்துக்கும் உள்ள ஒற்றுமையாது?
5. சுய அறிவு என்பது யாது?
6. விழிப்புணர்வு–விளக்கம் தருக.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்