FFC – 272- செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்-7/?- கருமையம் (பாகம்-2)

வாழ்க மனித அறிவு                                           வளர்க மனித அறிவு

lotus

FFC – 272
அ.வி. 272

03-12-2017-ஞாயிறு

செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் 7/?

கருமையம்  (பாகம்-2)

வாழ்க வளமுடன்!

      கருமையத்தில் பல்லாயிரம் பிறவிகளில்  பதிந்துள்ள வினைப்பதிவுகளை யாரே அறிவார்? பேரறிவாளர் ஒருவரே(இயற்கை/இறை) அறிவார். எடுத்துள்ள இந்த ஒரு பிறவியில் செய்துள்ள பதிவுகளாக மட்டுமே இருந்தாலும் பரவாயில்லை; ஞாபகம் வைத்திருக்கலாம்.  அப்படியே எடுத்துக்கொண்டாலும் இந்த ஒரு பிறவியில் செய்த வினைகள் எல்லாவற்றையுமே ஒருவர் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடியாது எனலாம். ஏனெனில் தீய வினைகள் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால், சில சில சிறு  தீய வினைகளையெல்லாம்  ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகக் கூடும். அறியாமை மற்றும் உணர்ச்சிவயத்தால் தீயவினைகளைச் செய்துவிட்டு  ‘தீயவினைகளைத்தான் செய்தோமோ’ என்றே வினை செய்தவர் நினைக்கக்கூடிய  நிலையேதான் காணப்படுகின்றது.

     கருமையத்தில் ‘பதிதல்’ ஏற்படுவதால், சென்ற அறிவிற்கு விருந்தில்இயற்கையின் அதி அற்புத நிகழ்வான ‘பதிதல்’ பற்றி மட்டுமே  கருமையம் – முதல் பாகத்தில் விரிவாக சிந்தித்தோம்.  ‘பதிதல்’ என்பது இயற்கையின் அதி அற்புத நிகழ்வு என்று அறிந்து கொண்டோம். எந்த பிரபஞ்ச நிகழ்விலும் பதிதல் இல்லாமல் இல்லை என்றும் அறிந்து கொண்டோம்.  இன்று கருமையம் பற்றிய உண்மைகளை அறிய இருக்கிறோம்.

இயற்கைநீதி எப்போதுமே தவறிடாதா?!

11230650_1612478765690891_6536263016119760624_n

    ஆம். எப்போதுமே இயற்கை நீதி, தவறிடாது. ஏன் இவ்வாறு  ஐயம் எழுகின்றது? பிரபஞ்சத்தில் கோள்கள் தவறிடாது உலவி வருகின்றதுபோல், மனிதனுடைய செயல்களுக்கும் விளைவை அளிப்பதிலும் இயற்கை தவறிடாதல்லவா?   இயற்கை நீதி எப்போதுமே தவறாததுதான். ‘Unfailing Law of Nature’ என்பார் மகரிஷி அவர்களும். அதனால்தானே அது நீதி என்று அழைக்கப்படுகின்றது. இயற்கையே/இறையே நீதியாகவே உள்ளது. ஐயம் நீங்க மேலும் சிந்திப்போம். பதிந்த குறுந்தட்டினைக்(Recorded cassette) கண்களால் காண முடிகின்றது.  அதுவும் குறுந்தட்டினை மட்டும்தான் காணமுடியும், அதில் பதிந்துள்ளதை கேட்கவும், பார்க்கவும் முடியாது. ஆனால்  அதற்குரிய சாதனத்தின் (audio/video player) மூலம் குறுந்தட்டில் பதிந்துள்ளதைக் கேட்கவோ, பார்க்கவோ முடியும். ஆனால் அது போன்று கருமையத்தை பார்க்கவோ அல்லது கருமையத்தில் பதிந்துள்ளதையோ படிக்கவோ அல்லது பார்க்கவோ முடியாது.ஆனால் மனிதனின் முத்தொழில்களும் ஒன்றுவிடாது தவறிடாது கருமையத்தில் பதிந்து கொண்டிருக்கின்றன. முத்தொழில்களின் விளைவுகளாக இன்பமோ, துன்பமோ வருகின்றன.

 சில விளைவுகளுக்கு  மூலமான செயலை மனிதன் தன் வாழ்நாளில் செய்திருக்க மாட்டான். பின்னர் அவன் செய்யாத செயலுக்கான விளைவை அவன் ஏன் அனுபவிக்க வேண்டும்?     இங்கேதான் இயற்கையின் நீதி எப்போதுமே தவறாதா என ஐயம் எழுகின்றது.  மேலும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த ஐயம் எழுகின்றது. இன்று வருகின்ற விளைவிற்கு மூலமான செயல் அவன் வாழ்நாளில் செய்யவில்லை என்றால், அந்த மூலச்செயலின்(action–source) வினைமுடிச்சு(பதிவு) அவனது சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையிலிருந்து அவிழ்ந்திருக்கின்றது என்று பொருள். ‘சஞ்சிதகர்மா’ என்கின்ற வினைமூட்டை என்பது  முற்பிறவிகளில் அவனது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட வினைப்பதிவுகள் நிறைந்தது.  கருமையத்தில் அப்பதிவுகளை எல்லாம் பதியப்பெற்ற கருமையத்துடன் பிறக்கின்றான் மனிதன்.  ஆகவே இப்பிறவியில் ஏதும் தீயவினைகளை செய்யாவிடிலும், ஒருவேளை தீயவினைப்பதிவுகளின் காரணமாக துன்பம் வந்தாலும் அது  அவனது முற்பிறவிகளில் செய்த தீயவினைப் பதிவுகளின்  விளைவேதான்என்பதை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்.ஒரு காரணம்  இறைநீதி தவறு செய்யாத ஒருவனை தண்டிக்காது என்பதற்காக மட்டுமல்ல.    மற்றொரு காரணம்  முற்பிறவிகளின் உயிர்த் தொடர்புதானே தற்போதைய மனிதனும்.  அவரவர்கள் செய்த வினைகளின் பதிவுகள் அவரவர்களின் கருமையத்தில்தான் பதிந்து இருக்கின்றன.

 மூலத்தைப்போன்றுதானே நகலும் இருக்கும்:

 குழந்தைகள் ‘பெற்றோர்களின் நகல் (copy) தானே’ என்பார் மகரிஷி அவர்கள். மூலத்தைப்போன்றுதானே நகலும் இருக்கும். இதில் சந்தேகம் இருப்பதற்கே வாய்ப்பில்லை. ஆகவே தான் இப்பிறவியில் தீயவினைகளை செய்யாதாயிருப்பினும் ஒருவேளை துன்பம் வரின் அது முன்வினைப்யனாகவே வந்ததுதான் என்பதில் ஐயம் இருக்கக் கூடாது.  வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டால் இவ்வுண்மையை நன்றாக உறுதிப்படுத்திக்  கொண்டு நாமும் வாழ்வாங்கு வாழ பேருதவியாக இருக்கும். அவ்வாறே உறுதிபடுத்திக் கொள்ள  ஒர் அறிஞரின் வாழ்நாள் நிகழ்ச்சியினை நினைவுகூர்வது நலம் பயக்கும்.

 அந்த அறிஞர் யார்?

 ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்கின்ற இயற்கையின் எதார்த்தத்தைக் கண்டுபிடித்து எடுத்துச் சொன்னவரான  பட்டினத்து சுவாமிகளே (பட்டினத்தார்) அந்த  அறிஞர்.  இப்பூலகிற்கு வரும்போதும் மனிதன் சஞ்சிதகர்மா எனும் வினைமூட்டையைத் தவிர வேறு உலகியல் பொருட்களைக் கொண்டு வருவதில்லை.  அதுபோல் இப்பூவுலகைவிட்டு செல்லும் போதும் உலகியல் பொருட்கள் ஒன்றையும்  கொண்டு செல்வதில்லை.  ஆனால்

வரும்போது கொண்டு வந்த  சஞ்சித வினைமூட்டையைக் காலி செய்யாமலும்,

வாழ்நாளில் சேர்த்த பிராரப்த மற்றும் ஆகாம்ய வினைகளையும் சேர்த்து கொண்டு போவதைத் தவிர

சேர்த்து வைத்த உலகியல் பொருட்களை யாருமே கொண்டு செல்ல  முடியாது.

எங்கு போகிறோம் என்பதே தெரியாது, போகின்ற இடத்தில் எங்கு வைப்பது கொண்டு செல்கின்ற

பூவுலகில் சேர்த்தப் பொருட்களை?

      இந்த  எதார்த்தத்தை எல்லோரும் அறிந்திருந்தாலும் உலக மக்கள்  பிறப்பு இறப்பு எனும் சக்கரத்திலிருந்து(cycle of birth and death) விடுபடவில்லையே!  ஆனால் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்கின்ற தெய்வீக அறிவுறுத்தல்தானே(எதார்த்த வாழ்வின் அறிவுறுத்தல்தானே!) பட்டினத்து சுவாமிகளுக்கு  ஞானத்தைத் தந்தது.  ஆன்மீக சரித்திரத்தில் அழியா இடம் பெற்றதோடு வருங்கால சந்ததிக்கு  எப்போதும் உதவக்கூடிய வாழ்க்கையைப்பற்றிய எதார்த்த உண்மைகளை விளங்கங்களாகத் தந்துள்ளார் பட்டினத்து சுவாமிகள்.

 பட்டினத்து சுவாமிகளை தடுத்தாட்கொண்ட  நிகழ்ச்சி:

   ஒருநாள் இரவு பட்டினத்தடிகள் விநாயகர் கோவில் ஒன்றில் தியானம் செய்துகொண்டிருந்தார்.  பத்திரகிரி என்கின்ற அரசனது அரண்மனையில் பல விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது, நள்ளிரவில் விநாயகர் கோவிலுக்கு வந்தனர் கொள்ளையர்கள்.  விநாயகரை வணங்கி, விநாயகருக்கு ஒரு மணிப்பதக்கத்தை அணிவிக்க எண்ணினர் கொள்ளையர்கள். இருட்டில் அங்கு தியானத்தில் இருந்த பட்டினத்தடிகளின் கழுத்தில் தவறுதலாக அணிவித்துச் சென்று விட்டனர்.  மறுநாள் அரண்மனைக் காவலர்கள் சோதனைக்கு வந்தபோது  அகப்பட்டுக் கொண்டார் பட்டினத்தடிகள்.  கழுவில் ஏற்றுமாறு அரசன் உத்திரவு பிறப்பித்தான்.  அப்போது “என்செயலாவது யாதொன்றுமில்லை” என்று பாட, கழுமரம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைக் கேட்டறிந்த பத்திரகிரியார் ஓடிவந்து பட்படினத்து சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்தார்,  அவருக்கு ஞான உபதேசம் செய்து அருளினார் பட்டினத்து சுவாமிகள்.  பின்னாளில் பத்திரகிரியாரும் ஞானம் பெற்றார், அந்த அருட்பாவை பட்டினத்து சுவாமிகளின் வாய்மொழியாகவே அறிவோம்.

FFC-272-பட்டினத்தார்-3-12-17

 விளக்கம்:  இறைவனே! எல்லாம் உன் செயலால் மட்டுமே நடக்கின்றது  என்செயல் என்று ஒன்றும் இல்லை.  இங்கு நடக்கும் அனைத்தும் உன் செயலே என்பதை உணர்ந்து கொண்டேன்.   இந்த உடம்பை  எடுத்த பிறகு இந்த பிறவியில் நான் செய்த தீவினை ஏதும் இல்லை.  ஆனால் இப்புவியில் பிறந்து நான் படும் துன்பங்களுக்கு காரணம் முற்பிறவியில் யான் செய்த பாவத்தின் விளைவாக வந்திருக்கலாம்.

       ‘வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்’ என்கின்ற மறுபிறவிக்கான  காரண-உண்மையினைக் கண்டுபிடித்த பட்டினத்து சுவாமிகளை கழுகேற்றும்போது, அவரை தன்னிடம் பரிபூரண சரணாகதி  அடையச் செய்து தடுத்தாட்கொண்டார் இறைவன்(இறைவன்/இறை).  அது மட்டுமின்றி அரசரான பத்திரகிரியாரையும் தெளிவு பெறச்செய்து அவரையும் அருட்பாதைக்கு அழைத்துக் கொண்டார் இறைவன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் போலும் இறைவன்(இறைவன்/இறை)! அரச பதவியைத் துறந்த பத்திரகிரியாரும்  பின்னாளில் ஞானத்தை முழுமையாக அடைந்தார். நலம் பயக்கும் என்பதால் மற்றொரு அறிஞரையும் இங்கே நினைவு கூர்வோம்.  அந்த மற்றொரு அறிஞர் புத்தராவார்.

 துன்பம் ஏன் வருகின்றது என்று ஆழ்மனம் எழுப்பிவிட்டால் நடப்பது என்ன?

     புத்தரும் அரசனின் ராஜகுமாரன். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிவிட்டார்.   அந்நிலையில்  துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை எழுப்பக் கூடிய காட்சிகளைக் கண்டார் என்பது அனைவரும் அறிவர்.  யாரிடமும் கேட்டும் அதற்கு  விடை கிடைக்கவில்லை.  விடைகாண அன்று இரவே அரண்மனையிலிருந்து வெளியேறி துறவு பூண்டார் என்று சரித்திரம் கூறுகின்றது. இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனை  நினைவில் கொள்வது சிறப்பாகும்.

 ‘யார் ஒருவருக்கும் துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்கின்ற மகரிஷி அவர்களின்  இன்றைய (இருபதாம் நூற்றாண்டின்) பொன்னான அனுபவக்கூற்று. ‘ஏன் துன்பம் வருகின்றது?’ என்கின்ற கேள்வி  ஏற்கனவே இருபது  நூற்றாண்டுகளுக்கு  முன்னரேயும் எழுந்து, விடைதேடுதலில் முடிவாக  ஞானம் அடையச்செய்துள்ளது இயற்கை/இறை என்பதனை அறியமுடிகின்றது.  எனவே ‘ஏன் துன்பம் வருகின்றது?’ என்று அடி மனம் எழுப்புகின்ற வினாவில் உள்ள அறிவியல்(சூத்திரம்) என்ன என்றும் அதற்கான விடை கிடைத்தலில் எவ்வாறு  அறிவியல் ரீதியாக இறையை உணர முடிகின்றது என்பதனை மனவளக்கலைஞர்கள் சிந்தனை செய்து அறிந்து கொள்ளுதல் நலம் பயக்கும். 

  ‘யார் ஒருவருக்கும் துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்கின்ற மகரிஷி அவர்களின் பொன்னான குறிப்பினை   மீண்டும் நினைவில் கொள்வோம்.  இதற்கு ஓர் உதாரணம், வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆவார்.  எப்படி?  வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இளமையிலிருந்தே ஆன்ம தாகம் ஆரம்பித்து விட்டது,   அதன் விளைவாக பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே அவரது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது.  பின்னாளில் அவரை ஒரு மாபெரும் மனிதராக, உலகம் உள்ளளவும் அவர் புகழ் மறக்கப்படாமல்  இருக்கச் செய்த அந்த வினாக்கள் என்ன?

மகானாக்கிய மகோன்னத வினாக்களே அவை.

  1. இன்பம் துன்பம் என்கின்ற உணர்ச்சிகள் யாவை?  இவற்றின் மூலமும் முடிவும் என்ன?

  2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது?  நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?

  3. கடவுள் என்பவர் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?

  4. ஏழ்மை ஏன், எப்படி உண்டாயிற்று?  அதைப் போக்குவதற்குவது எப்படி?

இந்த நான்கு வினாக்களில் ஒன்று ‘இன்பம் துன்பம் என்பது என்ன?’ என்கின்ற வினாவும் இருப்பதனைக் காணலாம்.  பின்னாளில் இந்த நான்கு வினாக்களுக்கும் கிடைத்த விடைகளே இப்போது நம்மால் போற்றி போற்றி வணங்கி ஏற்றுக்கொள்ளபட்டுவரும் திருவேதாத்திரியம் ஆகும்.  இதனை  நாமும் பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற ஆன்றோர் மொழிக்கேற்ப திருவேதாத்திரியத்தை சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் அரிய அறிவுப்பணியை மகரிஷி அவர்கள் உள்ளிட்ட  இதுவரை அவதரித்துள்ள அனைத்து  அருளாளர்களின் ஆசிகளின் துணை கொண்டு உலகநலத் தொண்டு செய்து வருவதற்கு காரணகர்த்தாவாக அமைந்தன அவ்வினாக்களின் விடைகள்.  இதனை நினைக்கும்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினாவை ஒருவரின் அடிமனம் எழுப்பி விட்டால் அவர் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடமுடியும்’ என்று பின்னாளில் மகரிஷி அவர்கள் கூறிய பொன்னான கூற்று  அவர்களது வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது என்பதனை அறிய முடிகின்றது.  இல்லை!  இப்படி கூறுவதைவிட  அவரது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையில் அனுபவித்த அனுபவ-உண்மையை பின்னாளில் அவர் சமுதாயத்திற்காக கூறியுள்ளார் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒப்புதல் அளித்தல்(Confession)

முன்னோர்கள் செய்த நல்வினைப் பயனாலும் நன்மைகளும், தீவினைப்பயனால் தீமைகளும் வரும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நல்வினைப்பயன் என்பதற்கான உதாரணத்தைக் கவனிப்போம்.  நம் அனைவரின் வாழ்விலும் நடந்துள்ள நிகழ்ச்சியே அந்த உதாரணம்.  நம் முன்னோர்கள் செய்த நல்வினைப் பயனால்தான் இருபதாம் நூற்றாண்டில் கிடைத்தற்கரிய ஜகத் குருவைத் தரிசித்ததும்,  தொடர்ந்து அவரது பாதையில் கீழ்படிதலுள்ள மாணவர்களாக (implicit obedience) சென்று கொண்டிருக்கிறோம் என்பது மாதா பிதா செய்துள்ள நல்வினைப்பயனே ஆகும்.

ஒரு வேளை மனிதன் இப்பிறவியில் ஏதும் தீவினை செய்யாதிருப்பினும்,  துன்பம் ஏதேனும் அனுபவிக்க நேர்ந்தால் அது அவனது முன்னோர்கள் செய்த தீயவினைப்பதிவுகளை பெற்றோர்களின் மூலம் பிறந்த போது கொடுத்தனுப்பிய ‘சஞ்சிதகர்மா’ என்னும் வினை மூட்டையிலிருந்து அவிழ்ந்த முடிச்சே ஆகுமே அன்றி  வேறு எதுவும் காரணமில்லை என்பதனை உணர்ந்து கொண்டு ‘துன்பம், தான் செய்த தீவினையால்தான் வந்தது’ என்றுணர்ந்து  ஒப்புதலை(confession) அளிக்கும் முகத்தான் இயற்கை/இறையிடம் அறிவியல் ரீதியாக சரண் அடைந்து விட  வேண்டும் மனிதன்.  அது என்ன அறிவியல் ரீதியான சரண்?

அறிவியல் ரீதியாக இறையிடம்  சரண்:

தன்முனைப்புள்ள நானிலிருந்து (Egoful I) ‘தன்முனைப்பில்லா நான்(Egoless I) ஆகி பண்பேற்றம் பெற்று அறிவை முழுமைப்படுத்துவதற்கு   இயற்கையிடம்/இறையிடம் அறிவியல் பூர்வமாக சரணடைய வேண்டும். (To become ‘Egoless I’ surrender scientifically to Nature/God)அறிவியல் ரீதியாக இறையிடம் சரணடைய, நம் குருநாதரின் மானசீகக் குருவான   சித்தர் வழி அவதரித்த திருமூலர் நமக்கு அறிவுறுத்தக் காத்துக் கொண்டிருக்கிறார்.  நாமும் திருமூலரை உடல், மனம், மொழி ஆகியவற்றால் வணங்கி குருநாதரின் மானசீகக் குருவை நாமும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.  நம் மானசீகக் குருவான திருமூலர்  ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையிலுருக்கும் வினைமுடிச்சுகளை எல்லாம்  அவிழ்க்கக்  கூறும் அறிவுரையை  அச்சித்தர் பெருமானார் வாய்மொழியாகவே அறிவோம்.

FFC-272-திருமூலர்

 

அன்றும் இன்றும் துறவு பூண்டது ஒரே பேரறிவுதான்:

ஞானிகள் தோன்றுவது முடிவில்லா தெய்வீகத் தொடர் ஓட்டம்(Never ending Divine Relay Race).  வாழையடி வாழையாக அவதரிக்கின்ற திருக்கூட்ட மரபினில் வருபவர்கள் அவர்கள். ஆனால் இன்றுள்ள உலக மக்கள் தொகைக்கு இந்த உணர்ந்தவர் உணராதவர் விகிதாசாரம் போதுமானதன்று என்று இயற்கை/இறை எண்ணி, கருணை கொண்டு இந்தக் குறைவான விகிதாசார நிலையினை உயர்த்துவதற்கு இருபதாம் நூற்றாண்டில்(1911 ற்குப் பிறகு) மனவளக்கலையினை அருளியுள்ளது என்றால் அது மிகையே அன்று.  இது அனுபவ பூர்வமாக காணுகின்ற நிகழ்வு என்பதால் மிகையாகாது. வேண்டியதெல்லாம் வினைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.  அதுவும் தொடர் விடாமுயற்சியால் அழுகணி சித்தரைப்போன்று பழக்கப்பதிவுகள் வந்து பயமுறுத்தினாலும் தெய்வமாகும் மனவளக்கலைப் பயிற்சிப் பயணத்தில் வெற்றி பெற்றே தீருவேன் என்கின்ற உறுதியோடும், திடத்தோடும் இருந்து பயிற்சிகளை செய்து வரவேண்டும். என்பதே அழுகணி சித்தர் மற்றும் மகரிஷி அவர்களையும்  உள்ளடக்கிய வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் அவதரித்த எல்லா அருளாளர்களின் ஆசியுமாக உள்ளது  இந்த மனிதகுலத்திற்கு.

கடுமையாக இருந்த துறவு இருபதாம் நூற்றாண்டில் எளிமையாகியது:

பட்டினத்து அடிகள் செல்வந்தராக இருந்து துறவு மேற்கொண்டார் என்பதனை அறிகிறோம்.  ஆனால்   அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கடுமையானத் துறவுநிலை. இந்த அறிவியல் மற்றும் பரபரப்பான உலகில் அது மக்களுக்கு பொருந்தாது/சாத்தியமாகாது.  எனவே இருபதாம் நூற்றாண்டில் இயற்கை/இறை எளிமை படுத்திக் கொடுத்துள்ள  துறவு நிலையை அறிந்து கொள்வோமே!

சுத்த அத்வைத தத்துவப்படி அன்றும் பேரறிவுதான் பட்டினத்து அடிகளின் வழியாக அந்த துறவு நிலையை மேற்கொண்டு தன்னை உணர்ந்து கொண்டது.  இருபதாம் நூற்றாண்டிலும் அதே பேரறிவுதான் கருணை கொண்டு,

பயத்தால் பெரும்பாலும் மக்களால்  ஒதுக்கப்பட்டுள்ள  ஆன்மிக வாழ்வை இல்லற வாழ்வோடு இணைத்து

பயமின்றி மேற்கொண்டு,

பிறவிப்பனை அடையும் பொருட்டு,

துறவறத்தின் உண்மையை விளக்கத்தைக் கூறி,

துறவறத்தை எளிமையாக்கி பொருளுடையதாக்கியுள்ளது

ஒர் அறிஞரின் வாழ்க்கையின் வாயிலாக.

அந்த அறிஞர் யார் என அறிந்து கொள்ள ஆவல் உள்ளதல்லாவா!!

அந்த அறிஞரின் வாழ்க்கையின் வாயிலாக இயற்கை/இறை என்ன செய்தியினை கூறியுள்ளது என்பதனை  அடுத்த அறிவிற்கு விருந்தில்(06-12-2017-புதன்) கருமையம் பாகம் மூன்றில் அறிந்து கொள்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளர்க அறிவுச் செல்வம்