ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7

வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7

FEAST FOR CONSCIOUSNESS – FFC – 92

அறிவிற்கு விருந்து – அ.வி. – 92

  

17-06-2015—புதன்

     கடந்த அறிவிற்கு விருந்துகளில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்திலுள்ள அறிவியல் காரணங்களைப் பார்த்தோம்.  ஆதிமனிதனிலிருந்து பல்லாயிரம் தலைமுறைகளாக கருமையத்தொடர்பால் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள பழக்கப்பதிவுகள் வலிமை  உடையதாக இருப்பதால், அவைகள் இப்பிறவியில் மட்டுமே பதிந்துள்ள விளக்கப்பதிவை எளிதாக வெற்றி கொள்கின்றன என்று பார்த்தோம். அப்பல்லாயிரம் பிறவிகளில் குறைந்தது மனிதனுக்கு தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில் அவனுடன் எத்தனை  பிறவிகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதனை அட்டவணையின் வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.

     ஒரு மனிதனுக்கு இப்பிறவியில் பழக்கப்பதிவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதனை  அறிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணைத் தயாரிக்கப்பட்டுள்ளது.   மனிதனாகப் பிறந்த ஆன்மா, இறை உணர்வு பெறுகின்ற வரை, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம் தலைமுறைகள் கடக்க வேண்டியுள்ளது ஆன்மா.  பல லட்சம் தலைமுறைகள் கடந்து வந்தாலும், இந்த அட்டவணையில் ஏழு தலைமுறைகள் (பிறவி) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    காரணம்

ஒரு மனிதனின் ஆன்மா, இதுவரை அதன் முந்தைய ஆறு(6+1=7) தலைமுறைகளில் செய்யாத ஒரு செயலை,

புதிதாக இந்தப் பிறவியில் செய்து, அதனால்  ஏற்பட்டுள்ள கருமையப்பதிவு,

ஏழு பிறவிகளுக்கும் விளைவைக் கொடுக்கும் வலிமை உடையது என்பதால்

அவனுக்கும், அவனுக்குப் பிறகு வருகின்ற ஆறு தலைமுறைகளுக்கும் விளைவைக் கொடுக்கும் எனலாம்.

    ஒரு வேளை அந்த ஆன்மா அடுத்த  ஆறுபிறவிகளில் அச்செயலை செய்யாமல் இருந்தால் அவனுக்கு பிறகு வருகின்ற  ஏழாவது பிறவியில் அவன்  செய்துள்ள அந்த செயல்பதிவு ஊக்குவிடப்படாமல் (not activated) இருந்தால், அக்கருமையப் பதிவு செயலிழந்து விடும் என ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது.  ஆகவே ஏழு தலைமுறைகள் மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கருமையப்பதிவு மீண்டும் அடுத்த ஆறு பிறவிகளில் ஊக்குவிடப்படாமல் இருந்தால் செயலிழந்து விடும் என்பதனை அவ்வையார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய அறிஞர்களின்  பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது.  அப்பாடல்களாவன–

         நல்வழி – பாடல் எண் 25

“ஆன முதலில் அதிகம் செலவானால்

    மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை

    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்

    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”               …..அவ்வையார்.

 

   அதிகாரம் 13- அடக்க உடைமை-குறள்- 126     

 “ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,

    எழுமையும் ஏமாப்பு உடைத்து,”                குறள் எண். 126

  மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவ்வையாரின் பாடலில், ஒரு தீயசெயலின் விளைவு ஏழ்பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

     அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள குறளில்  எழுமையும்’ என்பது ஏழு பிறப்புகள் என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகரால்.

     ஆகவே ஒரு மனிதன் ஏற்படுத்தும் ஒரு பதிவு, அவனையும் சேர்த்து ஏழு பிறவிகளுக்கு விளைவைக் கொடுக்க வல்லது என அறிகிறோம்.  தொடக்கத்திலிருந்து, அதாவது ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனை தலைமுறைகள் ஒரு மனிதனின் ஆன்மா பிறவிச்சுழற்சிப் பயணம் செய்துள்ளது என அறிவது இயலாது.

     இருந்தாலும் முடிந்தவரை, கணக்கெடுக்கும் வரையிலாவது எத்தனை தலைமுறைகள் என கணக்கெடுக்கலாமே என எண்ணி ஏழு தலைமுறைகளுக்கான விவர ஓட்டப்படம்(flowchart)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 7-chart_new

     பல லட்சம் தலைமுறைகளில், ஏழு தலைமுறைகளில் மட்டும் அவனுடன் கருமையத்துடன்   தொடர்புள்ள குறைந்தபட்ச ஆன்மாக்களின்  எண்ணிக்கை மொத்தம் 126(127-1=126) அதாவது  இன்று பிறக்கின்ற குழந்தை தனது வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப இருப்பாக(opening balance) கொண்டு வந்தது தனது பூர்வீகசொத்தான(சொத்து மூட்டையாக) 126 சஞ்சிதகர்மாக்களை (சஞ்சி என்றால்  பை அல்லது மூட்டை என்று பொருள்)  அதாவது 126 வினைமூட்டைகளை கொண்டுவந்துள்ளது.  அதனை வைத்து வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பித்து அதில் லாபம் என்கின்ற இன்பத்தையும், நஷ்டம் என்கின்ற துன்பத்தையும் அனுபவிக்கின்றது.

      பொருள் வியாபாரம் என்றால் அதில் லாபமும் இருக்கும். நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு பொருள் வியாபாரம் லாபத்துடன் நடந்திட வேண்டும் என்றே வியாபாரி விரும்புவார். அதாவது  லாபத்தையும்(plus Quantity) நஷ்டத்தையும்(minus Quantity) கூட்டினால் வருவது (plus Quantity) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரின் பதில் என்னவாக இருக்கும்  விழிப்பதுதான் பதிலாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்றும் எண்ணம் எழலாம்.

     பொருள் வியாபாரத்தில் plus Quantity ஐயும் minus Quantity கூட்டுவதுபோல் கூட்டி லாபத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?  இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டி வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது?  லாபத்தினை கண்டுபிடிக்க முடியாது என்றால் வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டுருக்கக் கூடாது.  வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டது சரிதான்.  வாழ்க்கை எனும் வியாபரத்தில் வரும் இன்ப-லாபத்தினையும், துன்ப-நஷ்டத்தையும் அனுபவிப்பது எது?  மனம்.  மனது நான்கு நிலைகளில் இயங்க வல்லது.  அதாவது இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் ஆகிய நான்காகும்.  ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம், அதிக லாபம் என்பது முறையே அமைதி, பேரின்பமாகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் மற்றும் அதிக லாபத்தினை ஈட்ட வழிகளை சொல்வதுதான் மனவளக்கலை எனும் அருமருந்தாகும்.

     7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்-அட்டவணை எதற்காக?  கருவில் திரு உடையவர்களுக்காக அல்ல இந்த அட்டவணை.  கருவில் திருவை அடையப்போகின்ற ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு இந்த அட்டவணைஉதவும் என்பதற்காக தரப்பட்டுள்ளது.

      ஏன் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்?  விவேகானந்தர் கூறுவதுபோல்,

          விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய கலவைகளால் ஆன மனிதன்,  தெய்வீக பண்பிற்கு உயர்வதுதான்  ஒழுக்கம் என்பதால், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதாலும்,

              மற்றும் ‘வினைப்பதிவால் உடல் எடுத்து மனிதனாக வந்துள்ளதால், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே ஆக வேண்டும்’ –  (புண்ணியம்=ஒழுக்கம் என்கின்ற சமன்பாட்டின் படி ஒழுக்கமுடன் வாழ்ந்தே ஆக வேண்டும்) என்று மகரிஷி அவர்கள் பகர்ந்துள்ளதாலும், ஒழுக்கப்பாதைக்கு திரும்புவதில் வினைப்பதிவால் ஏற்படும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில் முழுநம்பிக்கையும் தொடர் ஊக்கமும், தளராவிடாமுயற்சியும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த அட்டவணை உதவியாக இருக்கும் என்பதால்,  விவர ஓட்டப்படம்(flowchart)   தரப்பட்டுள்ளது. விவர ஓட்டப்படத்தில்  உள்ள தகவல்களை(data) அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்பர்களும் தாங்களாகவே சிந்தித்து  இந்த கணித ஆராய்ச்சியின் தகவல்களை சரிபார்த்து விட்டு முடிவினை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்

 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்.  எவ்வாறு?

     முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மா இன்றைய தலைமுறையின் சஞ்சித கா்மாவாகின்றது.

    முந்தைய தலைமுறையின் சஞ்சித கர்மா அவர்களின் முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மாவைப் பொறுத்துள்ளது

    எனவே 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள் என்பது முதல் ஆன்மாவின்  முந்தைய தலைமுறைகளான தந்தை-தாய்,  பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி,ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரை ஆகியவர்களின்  வினை மூட்டைகளை  கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகும்.

    ஆகவே  இப்போது வாழ்கின்ற ஆன்மா குறைந்த பட்சமாக  முந்தைய ஆறு  தலைமுறைகளின் 126  வினை மூட்டைகளின் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது,

    இந்த  126  வினை மூட்டைகளின் தாக்கம் இந்த ஆன்மாவிற்கு இப்பிறவியில் விளைவுகளாக வருகின்றது,  இது மட்டுமல்ல.

    முந்தைய ஏழு தலைமுறைகளுக்கு  முன்னரும், பல்லாயிரக் கணக்கில் தலைமுறைகள் உள்ளதை மறந்து விடக்கூடாது.  ஒரு ஆன்மாவிற்கு ஆதிமனிதனிலிருந்தே கருத்தொடராக தொடர்பு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      126 வினை மூட்டைகளில்  விலங்கினப்பதிவும், அதனை ஒட்டிய பிறர்வளம் பறித்தலும், அது ஒழுங்கின்மைக்கு காரணமாக இருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஒரு ஆன்மா, இதுவரை முந்தைய ஏழு பிறவிகளில் செய்யாத தவற்றை இந்தப் பிறவியில் செய்வதாக வைத்துக் கொள்வோம்.   ஆனால் இப்பிறவியில் நல்லோர் இணக்கத்தால் அந்த தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தால் அதனை திருத்திக் கொள்வது எளிது.  ஏனெனில் அந்த தவறான செயலின் பதிவு ஏழு தலைமுறைப்பதிவுகளின் அழுத்தத்தைவிட வலிவு குறைந்தது.

   ஒருவேளை இந்தப்பிறவியிலேயே முதன் முதலாக செய்த தவறான செயல்கள் கூட தன் வாழ்நாளில் அதிக நாள்(say 10 years)  செய்து பழகியிருந்தால், நல்லோர் இணக்கம் ஏற்பட்டாலும்  உடனே திருத்தம் பெறமுடியாமல் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டும். ஆகவே நல்லோர் இணக்கத்தை தன் வாழ்நாளில் இளம் பருவத்திலேயே பெற்றிட வேண்டும்.  அதுதான் சிறுவர் பருவம்.  குழந்தைகளுக்கு பெற்றோர்களைவிட, உடனே தரிசிக்கக் கூடிய நல்லோர்கள் யார் உள்ளனர்?  வேறு யாருமில்லை பெற்றோர்களேதான்! வருங்காலத்தில் நல்லோர் இணக்கத்திற்கு இலக்கணமாக  பெற்றோர்களை உருவாக்க வல்லது அருங்கலையாகிய மனவளக்கலை என்னும் வாழ்க்கைக் கலை.

      “Fear is the greatest sin” என்பார்   அருட்தந்தையவர்கள். ஏனெனில் அறிவிற்கு துவைதநிலை(இரண்டு நிலை) இருக்கும்வரையில் பயம் இருக்கத்தானே செய்யும்.  எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றில் நானும் ஒருவன் என்கின்ற அத்வைத நிலை உருவாகிவிட்டால் பயம் ஏது? புலிக்கும் பயப்படத் தேவையில்லை.  பாம்பிற்கும் பயப்படத் தேவையில்லை.  Anxiety மற்றும் நிலையற்ற உலகியல் வாழ்க்கையில் பற்று (bondage) இருந்தால்தானே ‘என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ’ என்கின்ற பயம் இருக்கும்.

    இருந்தாலும் மனிதனுக்கு அச்சம் வேண்டும். எதற்கு பயம் தேவை?  ஆன்மா தீய செயல்களை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும். இந்த அஞ்சுதல் கூட வாழ்நாள் முழுவதும் .இராது.  இயல்பான ஒழுக்க வாழ்விற்கு switch over ஏற்படும் வரை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல் தேவையிருக்கும். ஆகவே ஆன்மா அயராவிழிப்புடன் இருக்க வேண்டும் ஒழுக்க வாழ்வு இயல்பான பிறகு  அச்சம் என்பதற்கே இடமில்லை..   ‘மனிதன் வாழ்கின்றான்’ என்பதனைவிட ‘வினை வாழ்கின்றது’ என்கின்ற ஆதங்கக் கூற்று சரிதோனே?!

    முறையான தவம் மற்றும் அறம் இறைஉணர்வு பெறுவதில் முடியும்.

    ஒழுக்க வாழ்வின் உச்சகட்டநிலை, இறைஉணர்வை பெறச்செய்யும்.

    எவ்வாறு?

    தவமின்றி ஒழுக்கமில்லை. ஏனெனில் தவத்தாலான்றி மனஅலைச்சுழலை நுண்ணிய நிலைக்கு கொண்டு வரமுடியாது.  மனஅலை நுண்ணிய நிலைக்கு வரவில்லையெனில், மனம் உணர்ச்சிவயத்தில்(14 – 40 cps பீட்டாஅலை) இயங்கும்.  உணர்ச்சிவயத்தில் உள்ள மனிதனிடம் ஒழுங்கு எவ்வாறு நிலைக்கும்?

    ஒழுக்கமின்றி அறமும்  இல்லை.  ஒழுக்கமின்மையில் எவ்வாறு அறம் இருக்க முடியும்?  அதனால்தான் அறம் என்பதில் ஒழுக்கத்தை முதல் நிலையில் வைத்து, இரண்டாவதாக கடமையையும், மூன்றாவதாக ஈகையையும் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

   கடமையின்றி ஒழுக்கம் எவ்வாறு சிறக்க  முடியும்?

   ஈகையில்தான் வேதாத்திரிய ஒழுக்க வரையறை(Simple Definition for Discipline as per Vethathriam) செயலுக்கு வரும்.  நிரூபணமாகும்.

   அன்பிலும் கருணையிலும் தான்  ஒழுக்கம் சிறப்பு பெறமுடியும்.

   ஒழுக்க வாழ்வே அறவாழ்வாகும். 

   தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பத்தை இயற்றச் சொல்கிறார்  மகரிஷி அவா்கள்.   எதற்காக? ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அன்பும் கருணையும் மலர வேண்டும் என்பதற்காகவே.  இயற்கை இந்த சூரிய குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,  இப்பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்பதால்தான்.  ஆனால் மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்.  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக உள்ளது.  ஆனால் மனிதன் என்கின்ற உயிரினம் பிறப்பதற்கு மட்டுமே சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருக்கின்றது என்றுதான் மனிதனே சொல்ல வேண்டியுள்ளது.  ஏன்?  மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருந்தது, ஆனால் மனிதன் பிறப்பதற்கு மட்டுமே இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்றால் என்ன பொருள்?  பிறப்பின் தொடர் நிகழ்ச்சியான வாழ்க்கைக்கு  ஏற்ற சீதோஷ்ணம் (living climate) நிலவவில்லை அன்றிலிருந்து இன்று வரை?  அந்த சீதோஷ்ண சூழல்தான் அன்பும் கருணையும். இது யாருடைய தவறு?  இயற்கையின் தவறா?  இயற்கையில் தவறு இருக்க முடியுமா? ஒருகாலும் இருக்க முடியாது?  இயற்கையில் குறை இருந்தால் யாரிடம் சென்று முறையிடுவது?  அப்படியே இயற்கையில் குறையுடையதாக குறையுடைய மனிதர்கள் யாரோ ஒரு சிலர், ஒருவேளை கருதினாலும், அது இயற்கைக்கு ஒத்த முறையில், இயற்கையின் இசைவிற்கு ஏற்ப இயற்கையின் இனிமை கெடாமல் வாழத் தெரியாமையையே காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

இப்பூமியில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறையின்படி அமைதி நிரந்தரமாக  நிலவி, அதனை, மனிதன் ஏற்படுத்திக் கொண்ட, சொத்துக்களில், பூர்வீகச் சொத்தை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க உரிமை இருப்பதுபோல், அவ்வமைதியினை அனுபவிப்பதற்கான சீதோஷ்ண சூழல் நிலவவில்லை. அதனை மனிதன் தான் வேதாத்திரிய உலகசமாதான திட்டங்களின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாழ்க உலக அமைதி.  வரட்டும் விரைவில் உலக அமைதி.

    ஒழுக்கம் இல்லாதவனிடம் அன்பும், கருணையும் இல்லை.  அப்படியிருக்க பிறரிடமிருந்தும் அன்பும் கருணையையும் எதிர்பார்க்க முடியாது.  ஒழுக்கமில்லாதவனின் செயலுக்கு வருகின்ற விளைவும், ஒழுக்கமில்லாத மற்றொருவரின் செயலிருந்துதானே வரும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதால் மனித மனம் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டும்.

    ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்று அறிஞர்களே சொல்வதால், போராடி ஒழுக்கத்திற்கு வரவில்லையானால், ஒழுக்கமில்லா வாழ்விற்கான கடும்விளைவுகளை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்குமே.  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் நம்மனதுடன் தான் போராட வேண்டும்.  இது எளிது, சுலபம். தன்னைத்திருத்திக் கொள்வதில் அக்கறையில்லாமல் வாழ்வது எவ்வாறு  சரியாக இருக்கும்? ஒழுக்கமின்மையால் வரும் விளைவுகளை போராடுவது என்பது ஒழுக்கத்திற்காக மனதுடன் போராடுவதைவிட கடினமாக இருக்கும்.  ஒழுக்க வாழ்வு எதற்காக? இறைஉணர்வு பெறுவதற்கே! ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்றிருந்தாலும்,  இப்பிறவியிலேயே ஒழுக்க வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவுகூர்வோம்.

     வினைப்பதிவுகள் தூய்மை

“பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்

பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்

நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்

நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை

நில உலகில் மனிதருக்கு அளித்துள்ளது இயல் பென

நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்

பலனடைய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்

பாதையிலே விழிப்புடனே வாழ்வது தான் அவ்வழி”  …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 ஒழுக்கமில்லாத போது  தீயவினைகள் செய்யப்பட்டன.  ஒழக்கத்திற்கு வரும் போது நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே வினைத்தூய்மை என்பதே  ஒழக்கத்திற்கு வருவதுதான்.  பல்லாயிரம் பிறவிகளாக, ஒழுக்கமின்மையால் செய்துள்ள  பழச்செயல்பதிவுகளை ஒழுக்கத்திற்கு வந்து ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம் என உத்திரவாதம் அளிக்கிறார்.  மாற்றி நலமடையலாம் என்கிறார். நலமடையலாம் என்பது, அதுவரை விலங்கினப்பதிவில் செயல்பட்டதெல்லாம் அன்பும் கருணையுமாக மாறி மனிதனாகலாம் என்கிறார்.  மனிதனாகி தெய்வமாக உயரலாம் என்கிறார். தெய்வமாக உயர்வதற்காக ஒழுக்கம் வேண்டாமா?  மனிதன் தெய்வமாக வேண்டாமா? சின்னம்மாள்-வரதப்பா் என்கின்ற அருட் தம்பதியினருக்கு ஏழாவதாக பிறந்த குழந்தை தெய்வமாகாதிருந்தால் திருவேதாத்திரியம் என்கின்ற அருமருந்து உலகிற்கு கிடைத்திருக்குமா?  அப்படி திருவேதாத்திரியம் என்கின்ற அருள் மருந்து கிடைக்காதிருந்தால் www.prosperspirtually.com என்கின்ற இணையதளம் உருவாகியே இருக்காது. இப்படியொரு இணைய தளம் உருவாகவில்லை என்றால் இந்த இணையதள சத்சங்கம் ஏது?  வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க www.prosperspirtually.com.  வளர்க www.prosperspirtually.comவாழ்க www.prosperspirtually.comஇணையதள சத்சங்கம் மற்றும்  அதன் உறுப்பினர்கள் வளமுடன்.

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்றுரைத்த மகரிஷி அவர்களே,

நெடுங்காலமாக ஆதிமனிதனிலிருந்து கருமையம்  தொடர்புடையதாக இருந்தாலும்,  எப்படி போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது,

அக்கருமையத்தை அகத்தவத்தாலும், அகத்தாய்வினாலும், தூய்மை செய்து,

இறைஉணர் பாதையிலே விழிப்புடனே ஒழுக்கவழி வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்  அருட்தந்தை அவர்கள்.  உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது  எனும் அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்றும் நம்முள் ஒலிக்கட்டும்.

Swamiji blessing

“நல்ல பயனுள்ள அறச்செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் அனுபவத்தைக்கண்டு இன்புறுவீர்களாக” என்கிறார் மகரிஷி அவர்கள்.

     இத்துடன் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்கின்ற சிந்தனையை முடித்துக் கொள்வோம்.  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் முடிவிற்கு வரட்டும். ஒழுக்கத்தின் மேன்மையில் மேன்மக்களாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம். உலகெங்கும் மூலை முடுக்குளிலும் பரவட்டும் திருவேதாத்திரியம். மீண்டும் அடுத்த விருந்திற்காக 21-06-2015 ஞாயிறன்று சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

       மற்ற பாடங்கள் உள்ளதுபோல், ஒழுக்கவியல் பாடம் பள்ளியில்  விரைவில் கட்டயாமாக்கப்பட வேண்டும்.  எனவே எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்புவோம். நிரப்புவோம். வாழ்க ஒழுக்கவியல். வளர்க ஒழுக்கவியல்.

 Don’t delay Enlightenment

 வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.