ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 1/?

வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

FFC – 185

01-05-2016—புதன்

FFC-185-ததிருவள்ளுவர் படம்with kural

FFC-185-sub title-ஒழக்கவாழ்விற்கு போராட்டம் ஏன்-

இரண்டாயிரத்து நாற்பத்தோறு வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் ஒழுக்கத்தை செல்வமாகக் கருதி, ஒழுக்கமுடைமை எனும் அதிகாரத்தை இயற்றி, அதில் பத்து கோணங்களில் ஒழுக்கத்தை பற்றி தெளிவுபடுத்த. குறட்பாக்களை அருளியுள்ளார். அதில் முதல் குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்படுகின்றது என்கிறார் திருவள்ளுவர். அறிஞர் ரூஸோ “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார். ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும் என்று அறிஞர் ரூஸோ கூறுவதால் ஒழுக்கத்தில் வாழ்வதை விட்டு விடமுடியுமா? முடியாது. மீண்டும் திருவள்ளுவர் கூறுவதனை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் இரண்டாவது குறளில் என்ன கூறுகிறார்?

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்

தேரினும் அஃதே துணை.                              குறள் எண். 133

பொருள்: ஒழுக்கத்தைக் காத்தால் அவ்வொழுக்கமே துணையாக இருக்கும்.

எதற்காக ஒழுங்காற்றலாக திகழ்கின்ற இயற்கையின்/இறையின் அருள் வேண்டப்படுகின்றது? மனிதன் தனக்கு பாதுகாப்பு, துணை வேண்டி ஒழுங்காற்றலாகத் திகழும் இயற்கையின்/இறையின் அருளை வேண்டுகிறான். ஆகவே திருவள்ளுவர் கூறும், துணையாக இருக்கும் ஒழுக்கத்தைக் காக்க வேண்டியது அவசியமாகின்றது அன்றோ!

அறிஞர் ரூஸோ கூறும் ஒழுக்கத்திற்கான போராட்டம் பிறருடன் அல்ல. ஒழுக்க வாழ்வு என்பது திருந்தி வாழ்வது. ஒழுக்க வாழ்விற்காக நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது நம்மோடு தான் நடைபெற வேண்டும்? போராட்டம் இல்லாமல் திருந்துவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. இதுவரை அவரவர் பழகிய பழக்கப்பதிவின் அழுத்தத்தைப் பொருத்தது. போராட்டம் நம்மோடு என்றால் நம்மனதோடுதான் போராட்டம் நடைபெற வேண்டும். இங்கே நம் மனமேதான் குற்றவாளியாகவும், நீதிபதியாகவும் செயல் புரிந்து தண்டனை அளித்துக் கொண்டு திருந்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

ஒழுக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது என்பதால் ஒழுக்க வாழ்வை விட்டுவிடுவது என்பது புண்ணியத்தையல்லவா இழப்பதாகிவிடும். நல்லொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘புண்ணியம்’. தீயொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘பாவம்’. ‘புண்ணியம்‘, ‘புண்ணியம்’, ‘பாவம்’ என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கான விஞ்ஞானச் சொற்கள் முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகும். விஞ்ஞானச் சொற்கள் என்பது என்ன? நல்லொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய மூன்றின் விளைவுகள் நல்லபயன்களாகத்தானே இருக்கும். தீயொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தீயபயன்களையல்லவா கொடுக்கும். இக்கூற்றில் விஞ்ஞானம் இல்லையா? நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பதனை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாதா? இதில் ஏதும் மூடநம்பிக்கையுள்ளதா? நல்லொழுக்கம் நல்ல பயன்களையும், தீயொழுக்கம் தீய பயன்களைத்தரும் என்பது விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. ஆகவே நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் ஆகிய சொற்களை விஞ்ஞானச் சொற்கள் என்கிறோம். நாம் computer உலகில் இருக்கிறோம். Computerல் உள்ள Chipset, memory registers மற்றும் ALU(arithmetic and logic unit) போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் நம் கருமையம் என்கின்ற Chipset ல் பதியப்பெற்ற நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கப்பதிவுகளை விஞ்ஞான கண்ணோட்டத்தோடே அணுகி, விஞ்ஞான சொற்களாக ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும்.

அறிஞர் ரூஸோ கூறும் போராட்டத்தைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கிறார். ஒழுக்கம் பின்பற்றாது வாழ்ந்தது பல பிறவிகளில் பழக்கப்பதிவுகளாகி அழுத்தம் பெற்றுவிட்டது. இப்பிறவியில் ஒழுக்கத்திற்கான விளக்கம் பெற்றுள்ள கருமையப் பதிவில் வலிமை குறைவாக உள்ளது. ஒழுங்காற்றலாக திகழவேண்டிய அறிவிற்கு ஒழுக்க-விளக்கத்தை விடவும் முடியவில்லை. ஆனால் ஆதே நேரத்தில் ஒழுக்கமற்ற செயல்பதிவுகளின் பதிவுகள் வலிமையோடு இருப்பதால் விளக்கப்பதிவுகள், பழக்கப்பதிவுகளுடன் போராட வேண்டியிருக்கின்றது. இதனைத்தான் அறிஞர் ரூஸோ போராட்டம் என்கின்றார். மகரிஷி அவர்கள், ‘போராடிக் கொண்டிருக்கம் சீவன் மனிதன்’ என்கிறார்.

அறிஞர்கள், தாங்கள் கூறுவது அமுத மொழிகள் என்று அவர்களே சொல்லிக்கொள்வதில்லை. எந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த சமுதாயம்தான் அறிஞர்களின் கூற்றுக்களை அமுத மொழி என அழைக்கின்றது. மக்கள் பாராட்ட வேண்டுமென்று என்பதற்காக, அறிஞர்கள் அமுத மொழிகளை எழுதுவது இல்லை. அவற்றைச் சிந்தித்து உணர்ந்து அன்றாட வாழ்க்கைக்கு இச்சமுதாயம் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று விரும்பியே, இயற்கை அறிஞர்களின் வாயிலாக அறநெறி அறிவுரைகளை அமுதமொழிகளாக வழங்கி வருகின்றது.

அறிஞர்களின் அமுதமொழிகளோ, கவிகளோ, எப்போது பயனாகும் என்றால், அவற்றை கண்ணுறுகின்ற மனிதன், அந்த அறவுரைகளை மதித்து நடக்கும்போது போதுதான். அமுத மொழிகளை, வெறுமனே வாசிப்பதானால் அது மூளை அளவில் செல்வதோடு நின்று விடுவதில் மட்டும் பயனில்லை. மூளை வழியாகச் சென்று அது கருமையத்திற்குள் அழுத்தமாக பதிய வேண்டும். பிறகு மனம் அதனை விரும்பி மனதில் உருவகப்படுத்த வேண்டும்(contemplate). பின்னர் அமுத கூறியபடி மாற வேண்டும்.

அழுத்தமாக பதிதல் என்பது ஆழ்ந்து விரிந்து சிந்தனை செய்தலின் பதிவுகளே. மீண்டும் மீண்டும் அதனை நினைவிற்கு கொண்டு வந்து ஆராய வேண்டும்.

இப்புவி மீது அறிஞரும் வாழ்கிறார், நாமும் வாழ்கிறோம். அறிஞர் கூறும் அமுத மொழிகள் அவர் வாழ்க்கையில், தான் பெற்ற அனுபவம், அல்லது பிறரது வாழ்க்கையில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து அதில் கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுவதாகும். அறிஞரும் நம்மைப் போன்று தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே. வாழ்வியல் உண்மைகளை அறிந்து அறிஞரால் கூறுவது நமக்கு ஏன் முன்னரே தெரியாமல் போய்விட்டது? அறிஞர் எடுத்துக் கூறிய பிறகுதானே நமக்கு அந்த வாழ்வியல் உண்மை நமக்கு தெரிய வருகின்றது. அப்படியே தெரிய வந்தாலும் நாமோ, இந்த சமுதாயமோ அதனை சிந்தித்து உணர்ந்து உறுதிப்படுத்தி வாழ்வதில்லை. ஏன்? அவ்வாறாக இச்சமுதாயம் வாழ்ந்திருந்தால் தனது பூர்வீகச் சொத்தான அமைதியை இழந்து தவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. ஏதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. அதனை சிந்திக்கவே தான் இன்றைய விருந்து.

இப்பொழுதாவது. வாழ்வியல் உண்மைகளைக் கூறும் விடிவெள்ளியான திருவேதாத்திரியத்தை உலகசமுதாயம், மதித்து போற்றி, பின்பற்றி வாழ்வதுதான் உலக சமுதாயத்திற்கு விடிவு. அதற்காகத்தான், உலக சமுதாயத்திற்கு சேவை செய்யவே உலக சமுதாயச் சேவா சங்கத்தை தோற்றுவித்துள்ளார் பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர, மனிதன் எவ்வாறு அதற்கு வழிவிட வேண்டும் என்பது பற்றிய, சிந்தனையை இன்றைய அறிவிற்கு விருந்தாக அருந்த இருக்கிறோம். அறிஞர் ரூஸோ, திருவள்ளுவர், சுவாமி விவோகனந்தர், வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியுள்ள அத்துனை அறிஞர்களின் அறிவாற்றல் துணையுடன் இச்சிந்தனையை தொடங்குகிறோம்.

குருவணக்கம்

FFC-185-அறிவேதான் தெய்வம்-

என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவி இயற்றி சூசகமாக அவ்வையார் கூறிய அறிவினராகிய நல்லோர் இணக்கத்தை பெற்றுக் கொள்ளச் செய்து, ஒழுக்கவியலைப் போதிக்க, இரண்டாம் உலகப் பொது மறையான திருவேதாத்திரியத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் நினைவு கூர்வோம். அகவினத்தார்க்கு சாகா வரமும், மற்றவர்களுக்கு பரிபக்குவ நிலையும், தருவதாகவும், திருத்திடுவோம் என்று, திருகாப்பிட்டுக் கொள்ளும் போது அளித்த வள்ளலாரின் உறுதிமொழியும் நமக்கு வெகுவாக துணை நின்றே நம்மை எல்லாம் வழிநடத்துகின்றது. அந்த வழிநடத்துவதில் இடம் பெற்றது இன்றைய சிந்தனையும்.

முதலில் அறிஞர் ரூஸோ ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

“ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார் அறிஞர் ரூஸோ. இங்கே எழுகின்ற வினா ‘ஏன் ஒழுக்கத்தை போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார்’ என்பது. ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என முடிவு செய்து அதற்காக, ஆன்மீகப் பயிற்சிகளை விடாது செய்து வருபவர்கள், ஒழுக்கம் போர்க்களம் போன்றது என்று அறிஞர் ரூஸோ கூறுவதனை அனுபவித்திருப்பர். மற்றவர்களுக்கு அறிஞர் ரூஸோவின் இந்த வேத வாக்கு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்துவது கடினம்.

ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. அப்படியானால் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டுமெனில் வாழ்க்கை முழுவதும் மனதோடு போராடிக் கொண்டிருக்க வேண்டுமா? மனப் போராட்டத்திற்கு முடிவு என்பது கிடையாதா? ஒழுக்கத்திற்கான போராட்டமேதான் வாழ்க்கையாகிவிடுமே என்று ஒழுக்கத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடலாமா என்று கூடத் தோன்றலாம். எந்த ஒரு பயிற்சிக்கும் முடிவு என்பது உண்டு. அதுபோல் ஒழுக்கப் பயிற்சிக்கான முடிவினை, தெய்வீகப் பயிற்சியான தற்சோதனையின் வழியாக விரைவில் பெற்று விட்டால் ஒழுக்கத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆனந்த வாழ்வு வாழலாம்.

இப்பொழுது வேண்டியது யாதெனில், ‘மனிதஇனம் ஒழுக்க வாழ்வு வாழவில்லை எனில், வேறு எந்த உயிரினம் ஒழுக்க வாழ்வு வாழமுடியும்’ என்பதனை விளங்கிக் கொண்டு, ஒழுக்கத்திற்கான சரியான வரையறையைத் தெரிந்து கொண்டு, ஒழுக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதற்கான எளிய பயிற்சிகளையும் செய்து வருவதுதான் தேவை.

இயற்கை வகுத்துள்ள ஒழுக்கத்தைப்பற்றி அறியாதவர்கள் ஏராளம்! ஏராளம்!. சரியான ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்களே அதிகம். ஒழுக்கப்பயிற்சியில் அது போராட்டமாக உள்ளது என மனம் தளர்வடைந்து, ஒழுக்கப்பயிற்சியினைக் கைவிட்டவா்களும் இருக்கின்றனா். ஒழுக்கத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான் அறிஞர்கள், ஞானிகள், நெறிசார்ந்த சான்றோர்களாவார்கள். நெறியைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் சான்றோர்களாகிறார்கள்.

ஒழுக்கம் போர்க்களம் என்றால், யார் யாரிடம் போரிட வேண்டும்? மனிதன், தான், தன்னுடனேயே போராட வேண்டும். “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று உலக நீதியில், உலகநாதர் கூறிய வேதவாக்கினை நினைவில் கொண்டு, மனம் சொற்படி போகாமல் அறிவு சொல்லும் வழியில் சென்று கொண்டு போராட்டத்தில் வெல்ல வேண்டும். போராட்டம் என்றால் இருவருக்கிடையே நடப்பது. ஒரு மனிதன் தன்னுடன் போராட வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் யார்? ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் இருப்பதாக அல்லவா அர்த்தம் ஆகின்றது. ஒழுக்கத்தைப் பற்றி, வேறு சில அறிஞர்கள் கூறுவதனை ஆராய்ந்து இதற்கான பொருள் என்ன என்று அறிவோம். போராட்டம் என்பது ஒரு செயல். எனவே எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதால், ஒழுக்கத்திற்கான மனப்போராட்டத்திற்கும் முடிவு உண்டு. அந்த முடிவு எப்போது கிட்டும்? அடுத்த விருந்தில் அறிவோம். அடுத்த விருந்தில் அறிவின்-–அறிவியல், மற்றும் முதல் அறிவின்-அறிவியலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். தொடரும் 04-05-2015–புதன் அன்று தொடரும்.

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்.