ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?   10/10

 வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

FEAST FOR CONSCIOUSNESS – FFC –  194
அறிவிற்கு விருந்து – அ.வி. – 194
 01-06-2016—புதன்

ffc-194_1

ffc-194_2

இக்குறளுக்கான  பொருள் பற்றி அறிஞர்கள் கூறுவதனை இச்சிந்தனையின் முடிவில் அறிவோம்.

       gurudevar

ஒழுக்கமிருந்தால் பயம் அவசியமில்லை.  முதுகெலும்பு படுக்கை நிலையில் (horizontal position) உள்ள விலங்கினத்திலிருந்து, முதுகெலும்பு நிமிர்ந்த நிலைக்கு (vertical position) தன்மாற்றமடைந்த மனித உருவம் ஒழுக்க வாழ்வினால் நிமிர்ந்துவாழவேண்டும்.  பயத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிந்து கொள்வோம்.

     ‘Fear is the greatest sin’ என்பார் அருட்தந்தையவர்கள். ஏனெனில் அறிவிற்கு துவைதநிலை(இரண்டு நிலை) இருக்கும்வரையில் பயம் இருக்கத்தானே செய்யும்.  எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றில் நானும் ஒருவன் என்கின்ற அத்வைத நிலை உருவாகிவிட்டால் பயம் ஏது? புலிக்கும் பயப்படத் தேவையில்லை.  பாம்பிற்கும் பயப்படத் தேவையில்லை.  Anxiety மற்றும் நிலையற்ற உலகியல் வாழ்க்கையில் பற்று (bondage) இருந்தால்தானே ‘என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ’ என்கின்ற பயம் இருக்கும்.  

    இருந்தாலும் மனிதனுக்கு அச்சம் வேண்டும். எதற்கு அச்சம் தேவை?  ஆன்மா தீய செயல்களை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும். இந்த அஞ்சுதல் கூட வாழ்நாள் முழுவதும் இராது.  இயல்பான ஒழுக்க வாழ்விற்கு மாற்றம் (switch over) ஏற்படும் வரை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல் இருக்கும். ஆகவே ஆன்மா அயராவிழிப்புடன் இருக்க வேண்டும்.  ஒழுக்க வாழ்வு இயல்பான பிறகு அச்சம் என்பதற்கே இடமில்லை.     

    முறையான தவம் மற்றும் அறம் இறைஉணர்வு பெறுவதில் முடியும்.

    ஒழுக்க வாழ்வின் உச்சகட்டநிலை, இறைஉணர்வை பெறச்செய்யும்.   

    எவ்வாறு?

    தவமின்றி ஒழுக்கமில்லை. ஏனெனில் தவத்தாலான்றி மனஅலைச்சுழலை நுண்ணிய நிலைக்கு கொண்டு வரமுடியாது.  மனஅலை நுண்ணிய நிலைக்கு வரவில்லையெனில், மனம் உணர்ச்சிவயத்தில்(14 – 40cps பீட்டாஅலை) இயங்கும்.  உணர்ச்சிவயத்தில் உள்ள மனிதனிடம் ஒழுங்கு எவ்வாறு நிலைக்கும்?     ஒழுக்கமின்றி அறமும்  இல்லை.  ஒழுக்கத்தில் எவ்வாறு அறம் இருக்கின்றது என்கின்ற ஐயம் எழலாம்.  ஒழுக்கத்தில் அறம் இருப்பதால்தான்,  அறத்தில் ஒழுக்கத்தை முதல் நிலையில் வைத்து, இரண்டாவதாக கடமையையும், மூன்றாவதாக ஈகையையும் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

   கடமையின்றி ஒழுக்கம் எவ்வாறு சிறக்க  முடியும்?

   ஈகையில்தான் வேதாத்திரிய ஒழுக்க வரையறை(Simple Definition for Discipline as per Vethathriam) செயலுக்கு வரும்;  நிரூபணமாகும்.

   அன்பிலும் கருணையிலும் தான்  ஒழுக்கம் சிறப்பு பெறமுடியும்.

   ஒழுக்க வாழ்வே அறவாழ்வாகும். 

   தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பத்தை இயற்றச் சொல்கிறார்  மகரிஷி அவா்கள்.   எதற்காக? ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அன்பும் கருணையும் மலர வேண்டும் என்பதற்காகவே.  இயற்கை இந்த சூரிய குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,  இப்பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்பதால்தான்.  ஆனால் மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்.  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக உள்ளது. 

   ஆனால் மனிதன் என்கின்ற உயிரினம் பிறப்பதற்கு மட்டுமே சீதோஷ்ணநிலை மிக மிகபொருத்தமாக இருக்கின்றது.  ஏன் அவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது?  மனிதப்பிறப்பதற்கான சூழல் சரியாக உள்ளது என்பதால்தான் இப்பூமியில் உயிரினத்தின் கடைசி இனமான மனிதன் தோன்றியுள்ளான்.  எனினும் பிறப்பின் தொடர் நிகழ்ச்சியான வாழ்க்கைக்கு ஏற்ற சீதோஷ்ணம் (living climate)நிலவவில்லை அன்றிலிருந்து இன்று வரை? அந்த ஏற்ற சீதோஷ்ண சூழல்தான் அன்பும் கருணையும்(Climate of Love and Compassion). இது யாருடைய தவறு?  இயற்கையின் தவறா?  இயற்கையில் தவறு இருக்க முடியுமா? ஒருகாலும் இருக்க முடியாது?  இயற்கையில் குறை இருந்தால் யாரிடம் சென்று முறையிடுவது?  அப்படியே இயற்கையில் குறையுடையதாக குறையுடைய மனிதர்கள் யாரோ ஒரு சிலர், ஒருவேளை கருதினாலும், அது இயற்கைக்கு ஒத்த முறையில், இயற்கையின் இசைவிற்கு ஏற்ப இயற்கையின் இனிமை கெடாமல் வாழத் தெரியாமையையே காட்டுகின்றது.   

இப்பூமியில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறையின்படி,

    அமைதி நிரந்தரமாக  நிலவி,

   அதனை, மனிதன் ஏற்படுத்திக் கொண்ட, சொத்துக்களில், பூர்வீகச் சொத்தை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க உரிமை இருப்பதுபோல்,

   அவ்வமைதியினை அனுபவிப்பதற்கான சீதோஷ்ண சூழல் நிலவவில்லை.

   அதனை மனிதன் தான் வேதாத்திரிய உலகசமாதான திட்டங்களின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாழ்க உலக அமைதி.  வரட்டும் விரைவில் உலக அமைதி.

    ஒழுக்கம் இல்லாதவனிடம் அன்பும், கருணையும் இல்லை.  அப்படியிருக்க பிறரிடமிருந்தும் அன்பும் கருணையையும் எதிர்பார்க்க முடியாது.  ஒழுக்கமில்லாதவனின் செயலுக்கு வருகின்ற விளைவும், ஒழுக்கமில்லாத மற்றொருவரின் செயலிருந்துதானே வரும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதால் மனித மனம் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டும். 

    ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்று அறிஞர்களே சொல்வதால், போராடி ஒழுக்கத்திற்கு வரவில்லையானால், ஒழுக்கமில்லா வாழ்விற்கான கடும்விளைவுகளை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்குமே!  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் நம்மனதுடன்தான்.  இது எளிது, சுலபம். தன்னைத்திருத்திக் கொள்வதில் அக்கறையில்லாமல் வாழ்வது எவ்வாறு  சரியாக இருக்கும்? ஒழுக்கமின்மையால் வரும் விளைவுகளிடம் போராடுவது என்பது ஒழுக்கத்திற்காக மனதுடன் போராடுவதைவிட கடினமாக இருக்கும்.  ஒழுக்க வாழ்வு எதற்காக? இறைஉணர்வு பெறுவதற்கே! ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்றிருந்தாலும்,  இப்பிறவியிலேயே ஒழுக்க வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவுகூர்வோம்.

this_birth_is_enough_for_liberation

    ஒழுக்கமில்லாத போது  தீயவினைகள் செய்யப்பட்டன.  ஒழுக்கத்திற்கு வரும் போது நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே வினைத்தூய்மை என்பதே  ஒழுக்கத்திற்கு வருவதுதான்.     

   ஒவ்வொரு அதிகாரத்திலும், ஒவ்வொரு பொருள்பற்றி கூற விரும்பிய திருவள்ளுவர் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். இதனை 133 அதிகாரங்களிலும் பின்பற்றியுள்ளார்.   என்ன காரணம்?  திருவள்ளுவர், தான் கூற வந்த பொருளை எளிமையாகத் தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகிறார். மேலும் மனிதகுலத்தைப்பற்றியது அவர் கூறுகின்ற 133 பொருட்களும்.  அவர்காலத்திலேயே மனிதகுலம் எவ்வாறு மனிதன் வாழவேண்டுமோ அந்நிலையில் வாழாமையால், மேலும் பல்வேறு அறிவுநிலையில் வாழும் மனிதர்களைக் கொண்ட சமுதாயத்திற்கு மனம், குணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விளங்க வைக்க ஒவ்வொரு பொருள்பற்றியும் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார்.  இதனை பத்து கோணங்களில் விளக்கியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 நேரிடையாக விளக்கி, நேரிடையாக கேட்டு  விளங்கிக் கொள்வதும்  எளிது என்றிருந்தாலும்,  திருவள்ளுவர் அப்போது வாழ்ந்த சமுதாயத்திற்கும், அவருக்கு பின்னர் வந்த சமுதாயத்திற்கும் நேரிடையாக ஒவ்வொருவருக்கும் விளக்க முடியாது என்பதால்,  ஏதாவது ஒரு கோணத்திலாவது விளங்கிக் கொள்ளவேண்டும் என எண்ணி பத்து கோணங்களில் ஒரு பொருள் பற்றி கூறியுள்ளார்.  திருவள்ளுவர் பத்து குறட்பாக்களை அருளியதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும், ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களை அருளியுள்ளதை  வேறொரு பார்வையில் 2 புரிந்து கொள்கிறோம்.

  எல்லா அதிகாரங்களிலும் பத்து குறட்பாக்களை அருளியதுபோல் ஒழுக்கம்உடைமை அதிகாரத்திலும் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார்.  மூலஆற்றலாகிய ஒழுங்காற்றலான பேரறிவே மனித அறிவாக இருந்தாலும், அறியாமையால், மூலஆற்றலின்  தன்மையான ஒழுங்கை பிரதிபலிக்கும் வகையில் ஒழுக்கமாக வாழத் தெரியாமல் அது ஒழுங்கின்றி (ஒழுக்கமின்மை) வாழ்ந்து வந்ததால், ஒழுக்கம் பற்றி கூற ஒழுக்கம் உடைமை அதிகாரத்திற்கும் பத்து குறட்பாக்களை ஒதுக்கியுள்ளார்.  2அதில் ஒன்பது குறட்பாக்கள் எவையெல்லாம் ஒழுக்கம் என்று கூறுகின்றது.   ஏனெனில் எது ஒழுக்கம், எவ்வாறு ஒழுக்கம்  மனிதகுலத்திற்கு இன்றியமையாததாக உள்ளது என்பதனை உணர்த்த வேண்டிய கடமையும், கட்டாயமும் திருவள்ளுவருக்கு அன்றைய நிலையில் இருந்தது.  

2ஒன்பது குறளில் எவையெல்லாம் ஒழுக்கம் என்று கூறிவிட்டு, அதனை அடைவதற்கான ஒரே வழிதான் உள்ளது  என்பதால் கடைசிக் குறளில் முத்தாய்ப்பாக ஒழுக்கம் வளர்ந்து மலர, உயர்ந்தோர் கருத்துக்கிணங்க ஒழுகு முறையினைக் கையாள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  ஒழுக்கம் என்கின்ற பொருள் பற்றி பத்தொன்பது நூற்றாண்டுகள் கழித்து அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாகக் கொண்டதால். அகமே மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டப்பட்டு, அதுவே அறிவு என்று திருவள்ளுவரால் அறிவிக்கப்பட்டவர் மகரிஷி அவர்கள்.

     எனவேதான் மகரிஷி அவர்கள் திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்கின்ற நூலை அருளி,  திருவள்ளுவர் இப்போது நேரிடையாக வரமுடியுமானால், வந்து நமக்கெல்லாம் என்ன விளக்கம் கொடுத்திருப்பாரோ, அந்த விளக்கத்தினை மகரிஷி அவர்கள் நமக்குக் கூடுதலாகவே இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தி கொடுத்து நம்மையெல்லாம் திருவள்ளுவரை நேரிடையாக தரிசித்த அனுபவத்தை நல்கிவிட்டார்.

   மேலும்  மகரிஷி அவர்கள் திருவள்ளுவர்  எவையெல்லாம் ஒழுக்கம் என்பதனை ஒன்பது குறட்பாக்களில் கூறியுள்ளாரோ அதனை மகரிஷி அவர்கள் ஒழுக்கம் என்பதனை வரையறுத்து ஒரே வாக்கியத்தில் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுமாறு ஒழுக்கம் என்ன என்பதனை வகுத்துக் கொடுத்துள்ளார்.

 எனவே வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஒழுக்கவாழ்வின் மூலம் உலகம் உய்வதற்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதை அறியும்போது உள்ளம் பூரித்து மகிழ்கின்றது.

   இந்த ஒழுக்கத்திற்கான வரையறையை, ஒழுக்கவாழ்வை அளக்கும் கஜக்கோலாக  (Yardstick for gauging discipline, moment to moment in day to day life-)கொள்ளலாம்  மனிதகுலம்.

    அதிலும் குறிப்பாக இறை உணர் ஆன்மீக சாதகர்கள்,  ஒழுக்க வாழ்விற்கு மாறுவதற்கான ஆரம்பகால பயிற்சியின் போது ஒழுக்கத்தின் கஜக்கோலை மனதில் இருத்தி, விழிப்போடு, நுண்மாண் நுழைவுத்திறனோடு, பொறுப்புணர்ந்து, எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்கள் மூன்றிலுமே, அவை நடப்பதற்கு முன்னரே அவற்றை ஒழுக்க கஜக்கோலால் அளந்து செயலாற்றி வெற்றி பெற்று இன்ப வாழ்வு வாழலாம்.

   ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறட்பாக்கள் அருளப்படுகின்ற நிலையில் ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தில் பத்தாவது குறளில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதற்கான வழியை கூறியுள்ளதை மகரிஷி அவர்கள் தற்சோதனை எனும் பயிற்சியாகவும், மேலும்  இயல்பூக்க நியதியினை பயன் படுத்திக் கொள்ளுமாறும் கூறியுள்ளது இயற்கை/இறை தனது மக்களுக்கு (சுத்த அத்வைதத்தில்—தனக்கே) காலத்திற்கேற்ப கருணையோடு கொடுத்த கொடைதானே?!

     பல்லாயிரம் பிறவிகளாக, ஒழுக்கமின்மையால் செய்துள்ள  பழச்செயல்பதிவுகளை ஒழுக்கத்திற்கு வந்து ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம் என மேலும்உத்திரவாதம் அளிக்கிறார்.  மாற்றி நலமடையலாம் என்கிறார். நலமடையலாம் என்பது, அதுவரை விலங்கினப்பதிவில் செயல்பட்டதெல்லாம் அன்பும் கருணையுமாக மாறி மனிதனாகலாம் என்கிறார்.  மனிதனாகி தெய்வமாக உயரலாம் என்கிறார். தெய்வமாக உயர்வதற்காக ஒழுக்கம் வேண்டாமா?  மனிதன் தெய்வமாக வேண்டாமா?

   சின்னம்மாள்-வரதப்பா் என்கின்ற அருட் தம்பதியினருக்கு ஏழாவதாக பிறந்த குழந்தை தெய்வமாகாதிருந்தால் திருவேதாத்திரியம் என்கின்ற அருமருந்து உலகிற்கு கிடைத்திருக்குமா? 

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்றுரைத்த மகரிஷி அவர்களே இதற்கு தீர்வாக வழியினையும் கூறுகிறார்.

    நெடுங்காலமாக ஆதிமனிதனிலிருந்து கருமையம்  தொடர்புடையதாக இருந்தாலும்,  எப்படி போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது,

    அக்கருமையத்தை அகத்தவத்தாலும், அகத்தாய்வினாலும், தூய்மை செய்து,

    இறைஉணர் பாதையிலே விழிப்புடனே ஒழுக்கவழி வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

 ‘ உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’  எனும் அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்றும் நம்முள் ஒலிக்கட்டும்.

“நல்ல பயனுள்ள அறச்செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் அனுபவத்தைக்கண்டு இன்புறுவீர்களாக” என்கிறார் மகரிஷி அவர்கள்.

    சிந்தனையின் ஆரம்பத்தில் ஒழக்கம் உடைமை என்கின்ற அதிகாரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி ஒன்பது கோணங்களில் கூறிவிட்டு திருவள்ளுவர், முடிவாக,  அவ்வொழுக்கத்தைப் பழக ஆரம்பிப்பது எவ்வாறு எனக் கூறியுள்ள குறளை நினைவு படுத்திக் கொண்டோம். அதன் பொருளை இப்போது அறிவோம்.

              “உலகத்தோ1 டொட்ட ஒழுகல் பலகற்றுங்

               கல்லார் அறிவிலாதார்.”   குறள் எண். 140.

1  ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்பது எதனைக்  குறிக்கின்றது?

 பொருள்:உயர்ந்தோர் கருத்திற்கு இணங்க ஒழுகு முறையினை அறியாதவர்கள் பல நூல்களையும் கற்றிருப்பினும் அறிவில்லாதவரே ஆவர்.

     திருவள்ளுவரின் சகோதரியான அவ்வைத்தாய் கூறுவதனைக் கவனிப்போம். ஆத்திச் சூடியில்

    44 — சான்றோர் இனத்திரு

   • அறிவிற் சிறந்த ஆன்றோருடன் சேர்ந்திரு.

   82 – பெரியாரைத் துணைக் கொள்

   • அறிவிற் சிறந்த சான்றோரை நட்பாகப்பெறு வாயாக!

   94 – மேன்மக்கள் சொல் கேள்

   • பண்புடைய மேலோரின் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்.

 மூதுரையில்

8 – “ நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

   நல்லார் சொல் கேட்பதுவும் நன்றேநல்லார்

   குணங்கள் உரைப்பதுவும் நன்றே;   அவரோடு

   இணங்கி இருப்பதுவும் நன்று”

                                                                   … அவ்வையார்

 

பொருள்:  நல்ல பண்புகள் உள்ளவர்களைக் காண்பது, அவர் கூறும் பயன் மிகுந்த சொற்களைக் கேட்பது,

அவரது சிறப்புகளை எடுத்துக் கூறுவது,

அத்தகைய ஆன்றோருடன் சேர்ந்து இருப்பது ஆகிய அனைத்தும் சிறந்த நன்மைகளான பண்பேற்றம், வழிகாட்டுதல், காப்பு மற்றும் பிறவிப்பயனை அடைவதையும் நல்கும். 

 இனியது எது என அவ்வைத்தாய் கூறுவதனை அறிந்து இனியதை அனுபவிப்போம்.

 FFC-127-அவ்வையார்- இனிது

      பண்பேற்றத்திற்கு மகரிஷி அவர்கள்  இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய பிறகு, “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாமல் பிறவிப்பயனை அடைவர்” என உறுதியும் அளிக்கின்றார். 

பிறவிப் பயன்? 

பிறவிப்பயன் என்பது என்ன?  எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அது தான் மனம்’ என ஆதங்கப்படுகிறார்  மகான் ஒருவர்.  ஒரு பொருள் எந்தப் பொருளிலிருந்து ஆனதோ அந்தப் பொருளின் தன்மையாக இருப்பதுதானே இயல்பு.  தங்கக் கட்டியிலிருந்து செய்யப்பட்ட நகை அந்த தங்கக்கட்டியின் தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது.  ஆனால் இது மனிதனிடம் பொய்யாகின்றது.  எவ்வாறு பொய்யெனச் சொல்ல முடியும்?

      ஒழுங்காற்றலிருந்து(இயற்கை/இறை) வந்துள்ள மனிதனிடம் ஒழுக்கம் வெளிப்படவில்லை. அதாவது ஒழுங்கு/ஒழுக்கம் மறைந்துகிடக்கின்றது.

     மனிதன் எதிலிருந்து வந்திருக்கிறான்?    எது/யார் மனிதனாக வந்துள்ளது?  இயற்கையே/இறையேதான் மனிதனாக வந்துள்ளது?  இயற்கை/இறை எத்தகையது?  ஒழுங்காற்றலாக உள்ளதே தான் இயற்கை/இறை. எல்லா நிகழ்ச்சிகளையும் ஒழுங்குடன் நடத்தி வருகின்றது.இல்லை எனில் இப்பிரபஞ்சத்தை,  கண்களுக்குத் தெரிகின்ற முறைப்படியான ஆட்சி ஏதுமின்றி அரசாட்சி செய்ய முடியுமா இயற்கையால்/இறையால்? இயற்கை/இறை அரூப ஆட்சி நடத்துகின்றது. எல்லா உயிரினங்கள் உள்பட அண்டசராசரங்களையும், தனது அரூப ஆற்றலால் எங்கும் நீக்கமற அறிவாக நிறைந்துள்ளதால் அரூப ஆட்சி நடத்துகின்றது என்பதனை தெளிவாக அறிந்து மகிழ்வோம். எனவேதான் எல்லா நாடுகளிலும், மனிதகுலம்   ஏற்படுத்திக் கொள்வதுபோன்ற ஆட்சி முறை அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது.    

     எனவே தான் மகரிஷி அவர்கள் பேரின்பப் களிப்பு(1984) என்கின்ற தலைப்பில் அருளியுள்ள  கவியில் ‘ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்’ என இயற்கையை/இறையை வர்ணிக்கின்றார்.  ஆகவே ஒழுங்காற்றலில் இருந்து வந்துள்ள மனிதன்தான்  இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்றான தனது ‘வாழ்க்கை’யை ஆறாவது அறிவைக் கொண்டு ஒழுங்குடன் நடத்தி பிறவிப் பயனை அடைதல் வேண்டும். 

     பிறவிப்பயனை அடைதல் என்றால் என்ன?  வீடுபேற்றினைப் பெறுதல் பிறவிப்பயன்.  அதாவது இறை உணர்வு பெறுதல் பிறவிப்பயனாகும்.  மேலும் கூறுவதென்றால் பிறவித் தொடர் அற்றுவிடும்.  மீண்டும் பிறக்க வேண்டிய அவசியமில்லை. மறுபிறவி கிடையாது.  அதனால்தான் பக்திமார்க்கத்தில் திளைத்த மகான்கள் ‘மீண்டும் பிறவாவரம் வேண்டும்’ என இறையை இறைஞ்சியுள்ளனர்.  ஒரு பக்திப்பாடலில் “மீ்ண்டும் கருவடையும் குழியில் தள்ளி என்னை வருத்தப்படுத்த வேண்டாம்” என்று இறையை இறைஞ்சுகின்ற வரியினைக் காண முடிகின்றது.

    மறுபிறவி இல்லை என்பதால் வம்சாவளியே இல்லாமல் ஆகிவிடுமோ என்கின்ற மாயைக்கருத்து இருக்கலாமோ?

 மறுபிறவியில்லாத பிறவிப்பயனை அடைவதால் என்ன பயன் இந்தக் கடைசி வாழ்க்கையில் என ஐயம் எழலாம்!

 1)    இதுவரை பல லட்சம் பிறவிகளில் அனுபவித்திராத பேரின்பத்தை அனுபவிக்கலாம்.

2)   மறுபிறவி இல்லை.  இதனால் என்ன ஆதாயம் எனவும் ஐயம் எழலாம்.  மறுபிறவி இருந்தால் மீண்டும் இன்னொரு முறை (another term of life) இன்பங்களையெல்லாம்(enjoyment) அனுபவிக்கலாமே என அறிவு நினைக்கலாம்.

 மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளிலும் இயங்கவல்லது. எத்தனை பிறவிகளாக, எப்போதும் ஆதாயம் தேடக்கூடிய மனம் (Mind is always so calculative), இன்பத்தைவிட ஆதாயமான பேரின்பத்தை அனுபவிக்கமால் தன்னை மாயையில் ஆழ்த்திக் கொள்ள நேரிடும். அது தன்னையே  ஏமாற்றிக் கொண்டிருப்பதற்கு ஒப்பாகும். 

 இவ்வாறு ஏமாற்றம் அடைந்த வாழ்க்கை நடத்துவதிலிருந்து உலக மக்களை விழித்திருக்கச்(awareness) செய்வதற்காகத்தான் உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவி பன்னிரண்டு வருடங்கள் கழித்த பிறகு அழைப்புக்கவியினை அருளி உலக சகோதர சகோதரிகளை மன்றத்திற்கு அழைக்கிறார். அக்கவியின் ஆரம்ப வரிகளைக் கவனிக்க வேண்டும்.

 anbargale vaareer-THAI

3)    ஆன்மாவிற்கு பிறவித்துன்பம் இல்லை. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் அறிவைத்தூண்டுகின்ற அருளாளர் ஒருவர். 

 • பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்காமலும்,
 • பேரின்பத்தை தவிர்த்த இன்பம்-துன்பக் கலவையை மட்டுமே அனுபவித்தல்,
 • இன்பம் அனுபவிக்கையில் புலன்களின் வலையில் சிக்கிக் கொள்ளுதல்,
 • அறிவுக் கூர்மையில்லாமை,
 • மேலும் துன்பத்தை எதிர்கொள்ளத் தெரியாமை

     ஆகியவற்றவைகளை மட்டுமே கொண்டுள்ள இந்த சாதாரண பிறவிக்காகவா மீண்டும் மறுபிறவித் தேவை?! சிந்திக்க வேண்டும்.  மீண்டும், மீண்டும் பிறவி என்கின்ற பிறவிச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறவேண்டாமா?  ஆன்மா விடுதலை வேண்டாமா?!

பூதவுடலை உதரிய பிறகு ‘இனி மறுபிறவி இல்லை’ என்கின்ற நல்நிலையில் இப்பிறவியில் வாழும் போதும், மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மறுபிறவி என்பது   வாரிசுகளே என்பதால் அவர்களுக்கும் பயன் கிடைக்குமல்லவா?

    இத்துடன் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்கின்ற சிந்தனையை முடித்துக் கொள்வோம்.  மனித குலத்தில் ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் விரைவில் முடிவிற்கு வரட்டும். மனித குலத்தின் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும். ஒழுக்கத்தின் மேன்மையில் மேன்மக்களாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம். உலகெங்கும் மூலை முடுக்குகளிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்.

   ஒரு அன்பு வேண்டுகோள்.  ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்பது பற்றி  பத்து  அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து  வருகிறோம்.  ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் இருந்தாலும்,   அனைத்து குறட்பாக்களையும் நினைவு கூற முடியவில்லை.  விடுபட்டு போன குறட்பாக்களை நீங்கள் நினைவுகூர்ந்து கொண்டு பயன் பெற வேண்டப்படுகின்றது.

அடுத்த அறிவிற்கு விருந்திற்காக05-06-2016 ஞாயிறன்று சத்சங்கத்தில் சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

     எனவே மனித வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக பூத்துக் குலுங்க,  பள்ளிக்கல்வியில் மற்ற பாடங்கள் உள்ளதுபோல், ஒழுக்கவியல் பாடம் விரைவில்  கட்டயாமாக்கப்பட வேண்டும்.  எனவே எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்புவோம்; நிரப்புவோம். வாழ்க ஒழுக்கவியல். வளர்க ஒழுக்கவியல்.

Don’t delay Enlightenment

 வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.