ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?   9/?

வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

FEAST FOR CONSCIOUSNESS – FFC –  193

அறிவிற்கு விருந்து – அ.வி. –  193

 29-05-2016—ஞாயிறு

 நல்லோர் இணக்கத்தை  இளம் பருவத்திலேயே பெற்றிடல் வேண்டும்.
Thanks: SKY-Villivakkam

Thanks: SKY-Villivakkam

    கடந்த அறிவிற்கு விருந்துகளில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்திலுள்ள அறிவியல் காரணங்களைப் பார்த்தோம்.  ஆதிமனிதனிலிருந்து பல்லாயிரம் தலைமுறைகளாக கருமையத்தொடர்பால் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள பழக்கப்பதிவுகள் வலிமை   உடையதாக இருப்பதால், அவைகள் இப்பிறவியில் மட்டுமே பதிந்துள்ள விளக்கப்பதிவை எளிதாக வெற்றி கொள்கின்றன என்று பார்த்தோம். அப்பல்லாயிரம் பிறவிகளில் குறைந்தது மனிதனுக்கு தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில் அவனுடன் எத்தனை  பிறவிகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதனை விவர ஓட்டப்படம்(flowchart) வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.

      ஒரு மனிதனுக்கு இப்பிறவியில் பழக்கப்பதிவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதனை  அறிந்து கொள்ள கீழே உள்ள விவர ஓட்டப்படம்(flowchart) தயாரிக்கப்பட்டுள்ளது.     மனிதனாக உரு எடுத்த ஆன்மா, இறை உணர்வு பெறுகின்ற வரை, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம் தலைமுறைகள் கடக்க வேண்டியுள்ளது .  பல லட்சம் தலைமுறைகள் கடந்து வந்தாலும், இந்த விவர ஓட்டப்படம்(flowchart) ஏழு தலைமுறைகள் (பிறவி) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

      உதாரணத்திற்கு ஒரு மனிதனின் ஆன்மா, இதுவரை அதன் முந்தைய ஏழு தலைமுறைகளில் செய்யாத ஒரு செயலை இப்போது புதியதாக செய்வதாக வைத்துக் கொள்வோம்.

     புதியதாக இந்தப் பிறவியில் செய்து, அதனால்   ஏற்படும் கருமையப்பதிவு, இனிவரும்

    ஏழு பிறவிகளுக்கும் விளைவைக் கொடுக்கும் வலிமை உடையது என்பதால்,

    அவனுக்கும், அவனுக்குப் பிறகு வருகின்ற ஆறு தலைமுறைகளுக்கும் விளைவைக் கொடுக்கும் எனலாம்.

    ஒரு வேளை அந்த ஆன்மா அடுத்த  ஆறுபிறவிகளில் அச்செயலை செய்யாமல் இருந்தால் அவனுக்கு பிறகு வருகின்ற  ஏழாவது பிறவியில் அவன்  செய்துள்ள அந்த செயல்பதிவு ஊக்குவிடப்படாமல் (not activated) இருந்தால், அக்கருமையப் பதிவு செயலிழந்து விடும் என ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது.  ஆகவே ஏழு தலைமுறைகள் மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கருமையப்பதிவு மீண்டும் அடுத்த ஏழு பிறவிகளில் ஊக்குவிடப்படாமல் இருந்தால் செயலிழந்து விடும் என்பதனை அவ்வையார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய அறிஞர்களின்  பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது.  அப்பாடல்களாவன–

 நல்வழி – பாடல் எண் 25

     “ஆன முதலில் அதிகம் செலவானால்

    மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை

    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்

    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”               …..அவ்வையார்.

 

    அதிகாரம் 13- அடக்க உடைமை 

     “ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,

    எழுமையும் ஏமாப்பு உடைத்து,”                குறள் எண். 126

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவ்வையாரின் பாடலில், ஒரு தீயசெயலின் விளைவு ஏழ்பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். 

     அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள குறளில்  ‘எழுமையும்’ என்பது ஏழு பிறப்புகள் என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகரால்.

Thanks_mdu-atkoil_facebook

     ஆகவே ஒரு மனிதன் ஏற்படுத்தும் ஒரு பதிவு, அவனையும் சேர்த்து ஏழு பிறவிகளுக்கு விளைவைக் கொடுக்க வல்லது என அறிகிறோம்.  தொடக்கத்திலிருந்து, அதாவது ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனை தலைமுறைகள் ஒரு மனிதனின் ஆன்மா பிறவிச்சுழற்சிப் பயணம் செய்துள்ளது என அறிவது இயலாது. 

     இருந்தாலும் முடிந்தவரை, கணக்கெடுக்கும் வரையிலாவது எத்தனை தலைமுறைகள் என கணக்கெடுக்கலாமே என எண்ணி ஏழு தலைமுறைகளுக்கான விவர ஓட்டப்படம்(flowchart) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

7-chart_new

     பல லட்சம் தலைமுறைகளில், ஏழு தலைமுறைகளில் மட்டும் அவனுடன் கருமையத்துடன்   தொடர்புள்ள குறைந்தபட்ச ஆன்மாக்களின்  எண்ணிக்கை மொத்தம் 126 (127-1=126) அதாவது  இன்று பிறக்கின்ற குழந்தை தனது வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப இருப்பாக(opening balance) கொண்டு வந்தது தனது பூர்வீகசொத்தான(சொத்து மூட்டையாக) 126 சஞ்சிதகர்மாக்களை (சஞ்சி என்றால்  பை அல்லது மூட்டை என்று பொருள்)  அதாவது 126 வினைமூட்டைகளை கொண்டுவந்துள்ளது.  அதனை வைத்து வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பித்து அதில் லாபம் என்கின்ற இன்பத்தையும், நஷ்டம் என்கின்ற துன்பத்தையும் அனுபவிக்கின்றது. 

      பொருள் வியாபாரம் என்றால் அதில் லாபமும் இருக்கும்; நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு பொருள் வியாபாரம் லாபத்துடன் நடந்திட வேண்டும் என்றே வியாபாரி விரும்புவார். அதாவது  லாபத்தையும் (plus Quantity) நஷ்டத்தையும் (minus Quantity) கூட்டினால் வருவது (plus Quantity) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரின் பதில் என்னவாக இருக்கும்?  விழிப்பதுதான் நம்முடைய பதிலாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்று எண்ணம்கூட எழலாம். 

     பொருள் வியாபாரத்தில் plus Quantity ஐயும் minus Quantity ஐயும் கூட்டி லாபம் கணக்கிடுவதுபோல்  வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?  இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டி வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது?  லாபத்தினை கண்டுபிடிக்க முடியாது என்றால் வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டிருக்கக் கூடாதோ? வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டது சரிதான்.  வாழ்க்கை எனும் வியாபரத்தில் வரும் இன்ப-லாபத்தினையும், துன்ப-நஷ்டத்தையும் அனுபவிப்பது எது?  மனம்.  மனது நான்கு நிலைகளில் இயங்க வல்லது.  அதாவது இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் ஆகிய நான்காகும்.  ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம், அதிக லாபம் என்பது முறையே அமைதி, பேரின்பமாகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் மற்றும் அதிக லாபத்தினை ஈட்ட வழிகளை சொல்வதுதான் மனவளக்கலை எனும் அருமருந்தாகும்.

     7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்–விவர ஓட்டப்படம்(flowchart) எதற்காக?  கருவில் திரு உடையவர்களுக்காக அல்ல இந்த விவர ஓட்டப்படம்(flowchart).  கருவில் திருவை அடையப்போகின்ற —  கருவில் திருவைப்பெற்று,  இப்பிறவியிலேயே பிறவிப்பயனை பெறுவதற்காக, ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு இந்த விவர ஓட்டப்படம்(flowchart) உதவும் என்பதற்காக தரப்பட்டுள்ளது.

      ஏன் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்?  விவேகானந்தர் கூறுவதுபோல்,

          விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய கலவைகளால் ஆன மனிதன்,   தெய்வீக பண்பிற்கு உயர்வதுதான்  ஒழுக்கம் என்பதால், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதாலும்,

              மற்றும் ‘வினைப்பதிவால் உடல் எடுத்து மனிதனாக வந்துள்ளதால், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே ஆக வேண்டும்’ –  (புண்ணியம்=ஒழுக்கம் என்கின்ற சமன்பாட்டின் படி ஒழுக்கமுடன் வாழ்ந்தே ஆக வேண்டும்) என்று மகரிஷி அவர்கள் பகர்ந்துள்ளதாலும், ஒழுக்கப்பாதைக்கு திரும்புவதில் வினைப்பதிவால் ஏற்படும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில்

               முழுநம்பிக்கையும்,

               தொடர் ஊக்கமும்,

               தளராவிடாமுயற்சியும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த விவர ஓட்டப்படம்(flowchart) உதவியாக இருக்கும் என்பதால்,  விவர ஓட்டப்படம்(flowchart)   தரப்பட்டுள்ளது. விவர ஓட்டப்படம்(flowchart)  உள்ள தகவல்களை(data) அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்பர்களும் தாங்களாகவே சிந்தித்து  இந்த கணித ஆராய்ச்சியின் தகவல்களை சரிபார்த்து விட்டு முடிவினை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்

 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்.  எவ்வாறு?

     முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மா இன்றைய தலைமுறையின் சஞ்சித கா்மாவாகின்றது.

    முந்தைய தலைமுறையின் சஞ்சித கர்மா அவர்களின் முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மாவைப் பொறுத்துள்ளது 

    எனவே 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள் என்பது முதல் ஆன்மாவின்  முந்தைய தலைமுறைகளான தந்தை-தாய்,  பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி,ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரை ஆகியவர்களின்  வினை மூட்டைகளை  கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகும்.

    ஆகவே  இப்போது வாழ்கின்ற ஆன்மா குறைந்த பட்சமாக  முந்தைய ஆறு  தலைமுறைகளின் 126 வினை மூட்டைகளின் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது,    

    இந்த  126  வினை மூட்டைகளின் தாக்கம் இந்த ஆன்மாவிற்கு இப்பிறவியில் விளைவுகளாக வருகின்றது,  இது மட்டுமல்ல;     முந்தைய ஏழு தலைமுறைகளுக்கு  முன்னரும், பல்லாயிரக் கணக்கில் தலைமுறைகள் உள்ளதை மறந்து விடக்கூடாது.  ஒரு ஆன்மாவிற்கு ஆதிமனிதனிலிருந்தே கருத்தொடராக தொடர்பு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      126 வினை மூட்டைகளில்  விலங்கினப்பதிவும், அதனை ஒட்டிய பிறர்வளம் பறித்தலும், அது ஒழுங்கின்மைக்கு காரணமாக இருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

    ஒரு ஆன்மா, இதுவரை முந்தைய ஏழு பிறவிகளில் செய்யாத தவற்றை இந்தப் பிறவியில் செய்வதாக வைத்துக் கொள்வோம்.   ஆனால் இப்பிறவியில் நல்லோர் இணக்கத்தால் அந்த தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தால் அதனை திருத்திக் கொள்வது எளிது.  ஏனெனில் அந்த தவறான செயலின் பதிவு ஏழு தலைமுறைப்பதிவுகளின் அழுத்தத்தைவிட வலிவு குறைந்தது.

   ஒருவேளை இந்தப்பிறவியிலேயே முதன் முதலாக செய்த தவறான செயல்கள் கூட தன் வாழ்நாளில் அதிக நாள் (say 10 years)  செய்து பழகியிருந்தால், நல்லோர் இணக்கம் ஏற்பட்டாலும்  உடனே திருத்தம் பெறமுடியாமல் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டும். ஆகவே நல்லோர் இணக்கத்தை தன் வாழ்நாளில் இளம் பருவத்திலேயே பெற்றிட வேண்டும்.  அதுதான் சிறுவர் பருவம்.  குழந்தைகளுக்கு பெற்றோர்களைவிட, உடனே தரிசிக்கக் கூடிய நல்லோர்கள் யார் உள்ளனர்?  வேறு யாருமில்லை பெற்றோர்களேதான்!

Thanks: SKY -Villivakkam

Thanks: SKY -Villivakkam

‘வருங்காலத்தில் நல்லோர் இணக்கத்திற்கு பாத்திரமான’   பெற்றோர்களை உருவாக்க வல்லது அருங்கலையாகிய மனவளக்கலை என்னும் வாழ்க்கைக் கலை.  இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொண்டு. அடுத்த அறிவிற்கு விருந்தில் (01-06-2016 புதனன்று) ஒழுக்கம் கடைபிடிப்பதற்கான வழியைக் கூறும் குறளுடன்  சிந்தனையைத் தொடர்வோம்.  வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                              வளர்க அறிவுச் செல்வம்.