ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? – 7/?

 வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

FFC_185-திருவள்ளுவர் படம்-Untitled

            “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்

தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

FEAST FOR CONSCIOUSNESS – FFC –  191
அறிவிற்கு விருந்து – அ.வி. – 191

 22-05-2016—ஞாயிறு

வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

     தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அறிஞர் திருவள்ளுவர். இதுவரை ஒழுக்கம் உடமை அதிகாரத்தில் 131, 132, 136, 137,138 ஆகிய ஐந்து குறட்பாக்களை நினைவு படுத்திக் கொண்டோம். இன்று குறள் எண் 132-ஐ மீண்டும் எடுத்திக் கொண்டு, விரிவாக அதன் உட்பொருளை அறிவோம்.

“பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

பொருள்: வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்; அறங்கள் பலவற்றையும்(32 அறங்கள்) ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும் ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே தெரிகின்றது.

ஒழுக்கம் பற்றிய கண்டுபிடிப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒழுக்கம், ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற ஐந்தெழுத்தைக் கொண்டதாகவே மட்டும் உள்ளது. இந்த ஒழுக்கத்திலிருந்து சிறிதளவில் கூடத் (‘நூல் பிடித்துப் பார்க்க வேண்டுமா?) தவறிவிடக்கூடாதா என ஐயம் எழலாம்? நடைமுறையில் சாத்தியமா என்றும் மேலும் ஒரு ஐயமும் இருக்கலாம்! ஒழுக்கம் அவ்வளவு அவசியமா? இந்த ‘ஒழுக்கம்’ என்பது என்பது என்ன?
    ஒழுக்கம் என்பது வேறு ஒன்று அல்ல; மனிதனுக்கு அது புதிதும் அல்ல. ஒழுங்காற்றலாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற இயற்கையின்/இறையின் அம்சமாகவே மனிதன் இருப்பதால், இயற்கையின்/இறையின் நீதியை மதித்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்.

     இயற்கையின்/இறையின் தன்மாற்ற பூங்காவிலே கடைசியாக மலர்ந்த ‘பூ’ தான் மனிதன். இனிமேல் வேறு எந்தப் பூவும் மலர்வதற்கில்லை. எனவே எந்தப்பொருளிலிருந்து வந்தானோ மனிதன் அந்தப் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதுதானே சரியாக இருக்கும்! இல்லை எனில் அது குறைதானே!

     ஒழுங்காற்றலாய் திகழ்கின்ற .இயற்கையின்/இறையின் கடைசி அம்சமான மனிதனிடம் ஒழுக்கம் வெளிப்படவில்லை எனில் இயற்கையின்/இறையின் தன்மாற்ற சுழற்சி முடிவுபெறாமல் தேக்கம்தான் ஏற்படும். அந்த தேக்கமேதான் இன்று உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் அமைதியற்ற நிலை.

செயலுக்கேற்ற விளைவு உண்டு என்பது இயற்கை/இறை நீதி. எனவே சிறிதளவு ஒழுக்கம் தவறிவிட்டால் கூட அதற்கேற்ற விளைவு துன்பமாக வரத்தானே செய்யும்! இந்த சிறிதளவு துன்பத்தையும் ஏற்கத் தயாரா மனிதன்? சில நேரங்களில் இப்போது செய்யும் சிறு தவறுகூட பெரிய விளைவுகளைத் தந்துவிடுகின்றது. ஏற்கனவே மனிதனுக்குத் தெரியாமல், அறியாமையிலோ, உணர்ச்சிவசத்தாலோ, அலட்சியத்தாலோ பல்வேறு சமயங்களில் இந்தப் பிறவியிலோ முற்பிறவிகளிலோ செய்துள்ள சிறு சிறு தவறுகளுக்கு, ஒட்டுமொத்தமாக விளைவைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்ற தீயவினைப்பதிவுகள், இப்போது செய்யும் சிறு தவற்றால் அப்பதிவு தூண்டப்பட்டு(trigger) வாழ்க்கையையே பாதிக்கக் கூடிய பெரிய விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் வாழ்க்கை முழுவதுமே பாதிப்பு நீடிப்பதாகக் கூட இருக்கலாம். எனவே  வாழ்க்கைப் பயணம் எனும் தொடர்வண்டி(Rail-–Life train) தடத்தைவிட்டு புரண்டு விடாமல் சீராக ஓடுவதற்கு ஒழுக்கம் எனும் தண்டவாளம்(rail track) எப்போதும் அவசியமே.

வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள். மேலும் அறங்கள் பலவற்றுள்ளும் இருமைக்குந் துணையாவது ஒழுக்கமே என்பதால், அவ்வொழுக்கத்தை விருப்பம் கொண்டு வருந்தியுங் காக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள்.
‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது? ‘அறங்கள் பலவற்றுள்’ என்றால் என்னென்ன அவை என்கின்ற அவா எழுகின்றது. அறம் மனித வாழ்க்கைக்கு அவசியமாக உள்ளது என்றாலும், அறம் இதுவரை என்ன என்பதனை திட்டவட்டமாக சுருக்கமாக மனதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையாக வரையறுக்கப்படவில்லை என்பதால் ‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது.

ஆனால் ஆதிமனிதனிலிருந்து வளர்ந்து வருகின்ற மனிதஇனப் பரிணாமத்தில், முதன்முதலில் அறம் தோன்றிய அந்த நாளில், தான் அந்நிகழ்ச்சியினை நேரில் கண்டதுபோல் மனக்கண்களால் கண்டு அதனை வெளிப்படுத்த ஒரு கவியையே (ஞா.க. பாடல் எண். 494) இயற்றியுள்ளார் அருட்பாகவிஞரும் நமது அருட்குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதோடு அறத்தைப்பற்றித் தெரிவிப்பதனை நிறுத்திவிடவில்லை. மேலும் உரைநடையில் தொடர்கிறார். அறம் என்பதனை உரைநடையில் இறை உணர்வுடன் இணைத்து வரையறுக்கிறார். “அறத்தின் மாண்பு உணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு” என்கிறார். அறம் ஒழுகுதல் என்பது மனிதனுக்கு அவசியமாகின்றது. பிறஉயிர் படும் இன்பதுன்ப உணர்வுகளை தன்னுணர்வுபோல் உணர்ந்து இரக்கத்தோடு உதவி செய்தலே அறம் என்கிறார் வேதாத்திரிய அறவியல் ஏற்படுத்திய மகரிஷி அவர்கள்.

அவ்வாறிருக்கும் போது அவ் இரக்கச்செயலில் என்னென்ன அடங்கியுள்ளன?
அன்பும் கருணையும் அடங்கியுள்ளது.
அன்பும், கருணையும் என்பவை எதனைச்சார்ந்தது? ஒழுக்கத்தைச் சார்ந்தது.
மேலும் உதவி செய்வது எதனைச் சார்ந்தது? ஈகையை சார்ந்தது.
அவ்வாறு ஈகை புரிவது எதனைச் சார்ந்தது? கடமையைச் சார்ந்தது.

மனிதஇன அறம்தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்து, பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சியினை. நம்மையும் மனக்கண்களால் பார்க்கச் செய்த அறவியலாளர் எம்பெருமான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறத்தை வரையறுத்தபோது, ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று செம்மைகளையும் இணைத்து அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

ஒழுக்கமே கடமையாகவும், ஈகையாகவும் மலர்கின்றதைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கமில்லையானால் கடமையும் மலராது. ஈகையும் மலராது.

மனிதகுலத்தில் அறம் தழைக்க வேண்டும். அதற்கு இறைஉணர்வு அவசியம். இறை உணர்வு என்பது ஆறாம் அறிவின் பேறு. எனவே இறை உணர்வு பேற்றினை விளக்குவதற்காக இறைஉணர்வும் அறநெறியும் என்கின்ற நூலை இயற்றியுள்ளார். இப்போது இன்றைய தலைப்பிற்குள் செல்வோம்.

‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் இருப்பதில் உள்ள அறிவியல் உண்மையை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து சிந்திப்போம்.
மகரிஷி அவர்கள் நவம்பா்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதகாலம் அறிவுத்திருக்கோயில் ஆழியாரில் மௌன விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அப்போது அவரது சீடர்களும் அதில் பங்கு கொள்ளலாம். மகரிஷி அவர்கள், மௌன நோன்பு ஏற்றுக்கொண்ட சீடர்களின் நன்மையைக் கருதி, தினந்தோறும் சிந்தனை விருந்திற்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு பக்க அளவிலே, சிந்திக்க வேண்டியதை எழுதி, அதனை சீடர்களிடம் வழங்குவது வழக்கம். அவ்வாறாக தந்த ஞானமுத்துக்களில் ஒன்றுதான் 21-12-1988 அன்று (21-12-03 –உ.ச.ஆ) அருளிய “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?” என்பது.
இதனைக் கூறுவதற்கானக் காரணம் இந்த தலைப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மற்றும் மௌன காலத்தில் சிந்திப்பதற்கு மகரிஷி அவர்கள் அத்தகையதொரு தலைப்பை சிந்திக்க அருளியதுமாகும். ஆன்மீக சாதனையாளர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடத்தைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அதே நேரத்தில், சங்கடமாக வரும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான உறுதியையும் அளிக்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வுறுதி யாதெனில்—

வெற்றி பெறுவதற்கான மூன்று உறுதிகள்

“உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

“பல ஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி   காலத்திலே மாற்றலாம், நலமடைந்து மனிதனாகி தெய்வமாக  உயரலாம்.”                                                             .  . .   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

“எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்”                          . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

என்பதேயாகும்.

“பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன்” என்கின்ற ஆய்விற்கு, மனம் போராட்டம் செய்வதால் மனதை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள உண்மையினை நினைவு படுத்திக் கொள்வோம். மனம் என்பது என்ன? மனம் என்பதனை உயிரின் படர்க்கை நிலை-–mind is the extended activity of life force என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே மனதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால். உயிரைப்பற்றியும், அது படர்க்கை(extended activity) எய்துதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

மனம் என்பது என்ன? படர்க்கைநிலை என்றால் என்ன?

மனதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் உயிரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிருடன் மனம் தொடர்புடையது. உயிர் இருக்கும் வரைதான் மனம் இயங்கும். உயிர் என்பது என்ன? உயிர் என்பது, உடலில், நுண்ணிய துகள்களான விண்கள் சுழன்று ஓடிக் கொண்டிருப்பதேயாகும். சுழன்று கொண்டிருக்கின்ற துகளின் மையத்தில் சுழலா நிலை உள்ளது. அந்த சுழலாநிலையாகிய இருப்பு நிலைதான் அறிவு. அதாவது உயிர்த்துகளின் மையத்தில் இருப்பது அறிவு. உயிர்த்துகள்கள் சுழல்வதால் விரிவலை உருவாகின்றது. அந்த விரிவலைதான் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவனிலிருந்து காந்தம் உருவாவதால் அது சீவகாந்தம் எனப்படுகின்றது.

    ஆகவே உயிர்த்துகளின் மையத்தில் இருக்கின்ற அறிவு. உயிர்த்துகளிலிருந்து எழும், விரிகின்ற அலையாகிய சீவகாந்தத்தின் வழியாக, (அவரைச் செடியில், தண்டிலிருந்து கொடி படர்வதுபோல்) படர்க்கைநிலை எய்தி உடலுக்குள்ளாகவும் புலன்களுக்கு வெளியேயும் விரிந்து இயங்கும் நிலையான படர்க்கைநிலையை மனம் என்கிறார் மகரிஷி அவா்கள்.
இப்படியான மனம் பத்து படிநிலைகளில் இயங்குகின்றது. அவற்றினை அடுத்த அறிவிற்கு விருந்தில்(25-05-2016-புதன்) அறிவோம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவச் செல்வம்.