ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

 

வாழ்க மனித அறிவு                                         வளர்க மனித அறிவு

FEAST FOR CONSCIOUSNESS – FFC –  189
அறிவிற்கு விருந்து – அ.வி. –  189
 
                                                                                                        15-05-2016—ஞாயிறு

      தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அந்த வகையில் இன்று குறள் எண்.136 ஐ நினைவு கூர்வோம்.

FFC-189-குறள்-ஒழுக்கத்தின் ஒல்கார்-

பொருள்: அறிஞர் ஒழுக்கக் குறைவினால் துன்பம் வருவதை அறிந்து, செய்யுங் கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்.

இக்குறள் என்ன தெரிவிக்கின்றது? இது ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் 136 வது குறள். ஒவ்வொரு பொருள் பற்றி கூறும்போதும், அதனை பத்துக் கோணங்களில் கூறுவதனை வழக்கமாகக் கொண்ட திருவள்ளுவர், ஒழுக்கத்தை ஆறாவது கோணத்தில் விளக்குகிறார். ஒழுக்கம் என்பது வெறும் நடத்தையில் மட்டும்(conduct and character) நடந்து கொள்வதல்ல.  ஒரு பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்வதும், நடத்தையில் சேர்ந்ததே.  எனவே பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்யவில்லை என்றாலும் அது ஒழுக்கமின்மையையேச் சாரும்.

முறையாக, சரியாகச் செய்யவில்லை எனில் விளைவு இடராகத்தானே இருக்கும். எப்போது விளைவு இடராக வருகின்றதோ விளைவின் செயல் தவறானதாக இருக்கும். செயல் தவறானதாக இருக்குமானால் அங்கே ஒழுங்கில்லை என்றுதானே பொருள். எங்கும் ஒழுங்காற்றலாய் திகழும் பேரறிவின் ஆட்சியில் மனிதனுடைய செயலில் ஒழுங்கில்லையானால் அங்கே இடர்தான் வரும்.  செய்யும் கடமை அரிதாயினும் அதனை சுருக்கி சீர்மையின்றி செய்யமாட்டார்கள் அறிஞர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

ஏன்?

அறிஞர்கள் யார்? எந்த ஒரு கலையிலும் மிகச் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அக்கலையின் கலைஞராகிறார். அக்கலையின் பெயரைச் சொல்லி அக்கலையின் கலைஞர் என்போம். ஆகவே அறிவை அறியும் கலையில் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அறிவை அறியும் கலையில் கலைஞராகிறார். எனவே ‘அறிவை அறியும் கலை’ மற்றும் அதில் அவர் கலைஞரானதால், ‘கலைஞர்’ ஆகிய இரண்டையும் சேர்த்து சுருக்கி, ‘அறிஞர்’ என்கிறோம். எனவே ஒவ்வொரு பிரம்ம ஞானியும் அறிவை அறிந்த அறிஞரே.
அறிவை அறியும் கலையில் வெற்றி பெற்றவர்கள், ஒழுங்காற்றலாக திகழும் அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம் அறிந்து ஒழுகுபவர்களான அறிஞர்கள்! இப்போது அறிஞர்கள் பற்றி திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்ட மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

            அறிஞர்(17-12-1953)

 அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்.
                             …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மேலும் மகரிஷி அவர்கள் கடவுளையும், கடமையையும் இணைத்துச் சொல்வதனை நினைவு கூர்வோம். ஏன் இரண்டையும் இணைத்துச் சொல்கிறார்? இரண்டும் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், கடமையைச் செய்வது மனிதனின் கடமை என்பதனையும், அதனையும் ஒழுங்குடன் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் என அறிவுருத்த விரும்பி கடவுளையும், கடைமையையும் சமன்பாடாக இணைக்கிறார் அறிவை அறிந்த அறிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எவ்வாறு இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டுள்ளது? கடவுள் ஒழுங்காற்றலாய் திகழ்பவர். ஒழுங்குடன், ஒழுக்கத்தோடு மனிதன் ஆற்ற வேண்டிய செயல்களே கடமை ஆவதால், இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்கிறோம்.

மேலும் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் இறை உணர்வும் அற உணர்வும் ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்துள்ளது. இறை உணர்வில்லாமல் அற உணர்வு இல்லை, அற உணர்வு இல்லாமல் இறை உணர்வில்லை என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களில் ஒன்றான கடமையைப் பொறுப்புடனும் தன்முனைப்பின்றியும்மிகச்சிறப்பாகப் செய்வது இறைஉணர்வு ஓங்கி ஒளிதர்லாகவேக் கொள்ள வேண்டும். அதுவே மிகச்சிறப்பு.

ஆகவே

ஒழுக்கமே  எங்கும் எப்போதும் காப்பாக அமையும்.
ஒழுக்கமே மனிதனையும் இறையையும் இணைக்கும் பாலம்.

ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற நியதியே கடவுளாக இருக்கும்போது, அந்தக் கடவுளிடமிருந்து விலகிச் செல்கிறோம் என்று பொருள். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

   ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, கடவுள் நம் உள்ளத்திலேயே வீற்றிருந்தாலும், கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அதிகரிகத்துக் கொண்டிருக்கின்ற விந்தையான ஆபத்தினை, ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதனையாளர்கள் அவசியமாகக் கவனிக்க வேண்டும்.

எனவே அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அயரா விழிப்பாகிய பேரறிவு(Awareness) அறிய இருக்கின்ற பயிற்சியில் சாதனை செய்கின்றவரும் அயரா விழிப்போடுதான் இருக்கப் பழக வேண்டும். அயரா விழிப்போடு இருக்கும்போது ஒழுக்கமின்மைக்கே இடமே இல்லை.

கடவுளும் கடமையும்(17-12-1954)

கடவுளை உணர்ந்தோர்,
கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தோர்
கடமையில் வாழுவார்.

… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவதுபோல, கடவுளை அறிந்த அறிஞர்(அறிவின் இருப்பிடம்) கடமையில் வாழ்வார் என்பதால், அவர்கள் கடமையைச் செவ்வனே செய்வர்.  அறஉணர்வை வரையறுக்கும்போது இறைஉணர்வின் மலர்ச்சியின் வெளிப்பாடாக விளங்குகின்ற  அறஉணர்வில் ஒழுக்கத்திற்கு, அடுத்ததாக கடமைக்கு இரண்டாவது இடம் வழங்கியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எனவே ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில், ஆறாவது கோணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி கூறிய திருவள்ளுவர் கடவுளை(அறிவு) அறிவது மற்றும் அறிவை(கடவுளை) அறிந்த அறிஞரைப்பற்றியும், கூறியுள்ளதனையும் அறிந்து மகிழ்வோம்.

‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை கடந்த அத்தியாயங்களில் சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.
1) ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு வழிவிட வேண்டும் என்பது பற்றியும்,
2) வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும் மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

3) எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும் என்றும் அறிந்தோம்.

4) கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டியிருக்கின்றது,

என்றும் அறிந்து கொண்டோம். மேலும் சிந்திப்போம்.

ஔவையார், மூதுரையில் நான்கு நல்லவைகளைக் கூறுவதனைக் கவனிப்போம். மற்றும் கல்வியின் நான்கு அங்கங்களையும், நம் கருமையத்தின் அறிவியலையும் அறிவோம்.
ஒழுக்கமின்மையில் பல காலம் பழகிவிட்டு, ஒழுக்கம் கடைபிடிப்பிடிக்கும் மாற்றத்திற்கு திடீரென வருவதென்பது போராட்டமாக இருக்கும் என்பதால், ஒழுக்கம் கடைபிடிப்பதை விட்டுவிடலாம் என்று சௌகரியமாக எடுத்துக் எடுத்துக்கொள்ளமுடியாது. ஒழுக்கமற்ற வாழ்க்கை ஒரு வேளை, ஆரம்பத்தில் சுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முடிவில் துன்பத்தையே நிச்சயமாக, தனக்கோ, அல்லது தன் வம்சாவளிக்கோ கொடுக்கும். அப்போது யார் அந்த துன்பத்தை அனுபவிப்பது? முதலில் இன்பம் அனுபவித்த அறிவுதான் அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது தனது வம்சாவளியான மகனோ அல்லது மகளோ, அல்லது அவர்களையும் கடந்து, பேரனோ, பேத்தியோ அனுபவிக்க வேண்டியிருக்கும். அல்லது அவரது ஏழாவது தலைமுறையிலும் அனுபவிக்கலாம்.
ஒழுக்கமின்மையின் விளைவாகத் துன்பம் வரும்போது ‘ஒழுக்க வாழ்வில் இருந்து பிறழாமல் இருந்திருந்திருந்தால் இப்போது இத்துன்பம் வந்திருக்காதே’ என்று வருந்தி என்ன பயன்? ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்’ என்பது போல்தான் அது. நல்லொழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள எதார்த்த–சிரமத்தை எடுத்துக் கூறுவது எதற்காகவெனில்,
1) உலகநாதர் உலக நீதியில் அறிவுறுத்தியதுபோல் மனம் போன போக்கெல்லாம் போகாமல் இருக்கவும்,
2) ஒழுக்கம் கெட்ட பிறகு திருந்துவதற்கு முயற்சி செய்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கவும்,
3) மனிதன் ஒழுக்கம் கடைபிடிப்பதில் ஓயாது, தளரா விடா முயற்சியுடன் தற்சோதனைப் பயிற்சியினை செய்து வருவதற்கும்,
4) ஒழுக்கத்தின் அவசியம் மனப்பூர்வமாக அறிந்து. அதனை கடைபிடித்து வரும் வேளையில் எதிர்பாராமல் வரும் சிரமங்களை கையாள்வதற்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து மனம் தளராமல் இருந்து பிறவிப்பயனை எய்துவதற்காகவும்,
5) ஒழுக்கம் என்பது உயிரைவிட சிறந்தது என்பதால், உயிர் வாழ்வதற்கு, மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல், ஒழுக்கம் என்கின்ற காற்றினை, எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்க, நல்லோர்களின் இணைப்பைத் தேடி அவா்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.
என்று அறிவுறுத்துவதற்காகவேதான்.
இப்போதும் ஔவையார் கூறும் மூதுரையைக் கவனத்தில் கொள்வோம்.

moodhurai-ovvaiyar

 நான்கு ‘நன்றுகளை’க் கூறுகிறார் அவ்வையார். ‘நன்று’ என்பது என்ன?
 நல்லது என்று பொருள். பாராட்டைத் தெரிவிக்கும் சொல்.
 எது நல்லதாக அமையும்? எதற்காக நல்லோரைக் காண விழைகிறோமே அது நல்லதாக அமையும் என்று பொருள்.
 அதாவது அடிப்படையில் நல்லொழுக்கத்தை கற்று அதன் வழி நிற்பதற்காகவே நல்லாரைக் காண விழைவதால் அது நல்லதாகவே அமையும் என்று பொருள்.
 ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ என்பது எதற்காக?
 நல்லார் குணங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே!
 எப்போது நல்லவருடைய குணங்களை ஒரு மனிதன் பாராட்டுவான்? எடுத்துரைப்பான்?
 அவனுக்கு நல்லாரின் குணங்கள் மிகவும் பிடித்திருந்தால் அக்குணங்களின் தன்மை தானாகவே, மீண்டும், மீண்டும் நினைவிற்கு அடிக்கடி வந்துபோகும். இவனும் விரும்பி நினைவிற்கு கொண்டு வருவதோடு, அதனை பிறர்க்கும் எடுத்துச் சொல்வான்.
 அவ்வையார் கூறுவதில் உள்ள அறிவியல் என்ன?
 திருவேதாத்திரிய மந்திரம் 10 உரைப்பதுபோல், இயல்பூக்க நியதிதான் அந்த அறிவியல்.
 ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பது இயல்பூக்கத் தேற்றத்தின்(theorem) கிளைத்தேற்றம்(Corollary). என்பதால், நல்லாரின் குணத்தைப் பெறுவதற்காக, நல்லாரைச்சந்தித்து அவரது குணங்களில் உயர்ந்து வருகிறான் என்று பொருள்.
 ஆகவே ‘நன்று’ என்று அவ்வையார் கூறுவது, நல்லொழுக்கனாக மாறுவதேயாகும்.

சிறப்புக்களையும், பெருமையையும் உடைய ஒழுக்கம் கடைபிடிப்பதை மனிதன் ஏன் விரும்புவதில்லை? பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதேயாகும். அதாவது நல்லொழுக்க விளக்கப்பதிவு, நல்லொழுக்கமில்லாப் பழக்கப்பதிவிடம்(தீயொழுக்கப்பதிவு), தோற்கின்றது. இந்நிகழ்விற்குப் பின்னால் உள்ள அறிவியலை(Science hidden in the defeat of Wisdom by the habits) ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற பொன் மொழியை உதிர்த்து, அதற்கான அறிவியல் விளக்கமும் அளித்துள்ளார் முதன் அறிவியல்-அறிவியலாளர். அதுதான் திருவேதாத்திரியத்தின் மகிமையிலும் மகிமை. நேர சுருக்கம் கருதி இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம்.

அடுத்த அறிவிற்கு விருந்தில்18-05-2016 புதன்கிழமையன்று தொடர்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளர்க அறிவுச் செல்வம்.