ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

1-FFC-NEW-8

 

 03-11-2014

வேதங்கள் ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?“ என்கின்ற ஒரு கேள்வி அமைந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதையே அறிவு இன்பமாக உணர்கின்றது. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.
அப்படி ஒரு ‘ஐவகை மயக்கம்’ உள்ளதா உண்மையில்? இது ஒரு அச்சுறுத்தலா? வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களால். கோழைகளால் கூறப்படும் தவறான செய்தியா? அறிஞரான திருவள்ளுவர் ஐவகை மயக்கம் பற்றி கூறியுள்ளாரே! ஆகவே, வாசுகி என்கின்ற மாதர்குல மாணிக்கத்தை வாழ்க்கைத் துணைவியாகப்; பெற்ற திருவள்ளுவரா வாழ்க்கையில் விரக்தி அடைந்தவராக இருக்க முடியும்? திருவள்ளுவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவரல்லர். விரக்தி அடைந்தவரா இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் நம்மிடமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்குமே வாழ்க்கையே மயக்கத்தில்;தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்கள் வரையிலும், புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக
“ பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. என்று கூறுகிறார்.
இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும். அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்;க வேண்டும். இக்குறளில் உள்ள பொறி, அவித்தான், ஒழுக்க நெறி மற்றும் நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும். வெவ்;வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.
1) “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்;கை வாழ்வர்.” என்பது ஒருபொருள். மற்றொரு பொருள்
2) “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர். மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.
3) இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.
ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.
அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.
”நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.
ஆகவே கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டு கடவுள் வணக்கம் செய்பவர்களுக்கு மட்டுமே இக்குறளில்; திருவள்ளுவர் கூறிய உண்மை பொருந்துமா? கடவுள் வணக்கம் செய்யாத கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு இது பொருந்தாதா? கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு புலன்கள் இல்லையா? புலன் ஒழுக்கம் என்பது எல்லோருக்குமே பொருந்தும். எந்த மதத்தினருக்குப் பொருந்தும்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதால் எழுநூற்று இருபது கோடி உலகமக்கள் அனைவருக்குமே புலன் ஒழுக்கம் பொருந்தும்.
*****