61-ஏன், ‘அறிவே’, தெய்வம் எனப்படுகின்றது?

 

வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

 ஏன், ‘அறிவே’, தெய்வம் எனப்படுகின்றது?

அ.வி.எண்.61—(6/6)

01-03-2015 – ஞாயிறு

 

சென்ற அறிவிற்கு விருந்தில் வெளியிலிருந்து நொறுங்கியத் துகள்கள், ஒழுங்குடன் விண்களாகி, அந்த விண்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகி பின்னர் அணுவாகியதற்கான(chemical atom) காரணம் அறிவாகிய ஒழுங்காற்றல் என்று அறிந்தோம். இன்றைய விருந்தில் “தெய்வம் தூணிலும் இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது”, என்பது எவ்வாறு சாத்தியம் என அறிய இருக்கிறோம்.

மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு எனும் இயற்கைநீதி கூட, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. இறை எல்லாவற்றையும் அறியக்கூடியது என்பதுகூட, இறையாக அறிவே உள்ளதால்தான் சாத்தியம். அதனால்தான் இறைக்கு ‘பேரறிவாளன்’ என்கின்ற பெயரும் உண்டு. மனிதன் செய்கின்ற ஒருசில செயல்களுக்குரிய விளைவுகள் உடனே வரலாம். உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தைத் தொட்டால், தொட்ட விரல் உடனே புண்ணாகிவிடும். இங்கே விளைவு உடனே வருகின்றது. விளைவுகள் உடனேதான் வரவேண்டும் என்பதில்ல; சூடான பாத்திரத்தைத் தொட்டதற்கு வரும் உடன்-விளைவு போல் அல்லாமல் சில மணிநேரங்கள் கழித்தோ, சில நாட்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தோ, ஏன் இந்த தலைமுறையில் வராமல் வம்சாவளிக்கு கூட வரலாம். செயலுக்குரிய விளைவு வருவதற்கு, தக்க சூழ்நிலைகளும், உகந்த காலமும், வேறு மனிதர்களும் தேவைப்படுவதால் விளைவு உடனே வருவதில்லை. விளைவைத் தருவதற்கு உகந்த நேரத்தையும், சூழ்நிலையையும். தக்க மனிதஅறிவையும், அதாவது தக்க மனிதரையும் தேர்ந்தெடுப்பது, எங்கும் எதிலும் அறிவு இருப்பதால்தான் சாத்தியமாகின்றது. ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அறிவு எங்கும், எதிலும் இருப்பதால்தான் எந்த செயலும் அதற்குரிய விளைவைத் தராமல் இருப்பதில்லை. அல்லது வீணாவதில்லை.

மின்சாரம் ஒரு வகையான ஆற்றல். மின்சாரம் ஆற்றலாக இருந்தாலும், அதுவே தானாகவே செயல்படாது. அதனை சரியாக இயக்க மனித அறிவு தேவைப்படுகின்றது. ஆயிரம் பேர் பணிபுரியும் தொழிற்சாலையில், பணிகளைக் கண்காணிக்க எத்தனை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகின்றனா்? அங்கேயும் கண்காணிப்பாளர்களின் அறிவுதான் கண்காணிக்கும் பணியைச் செய்கின்றது.

அது போல், பூமியில் மக்களாட்சியில் ஆட்சி நடப்பது போல், ஆட்சி ஏதும் இல்லாமல், ஆளுகின்ற ஐயன், எங்கும் அறிவாக இருப்பதால்தான் அவன், சம்பிரதாய முறைப்படி ஆட்சி இல்லாமலேயே இப்பிரபஞ்சத்தை எந்தவித ஆரவாரமில்லாது ஒழுங்குடன் இயக்கி வருகிறான்.

‘பேரின்பக் களிப்பு’ என்கின்ற பாடலில் மகரிஷி அவர்கள் கூறும் ஒரு வரியினைக் கவனிப்போம். கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டம் இயங்கி வருவதை,

“ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன் திருவருளால்” என்று

இறையின் இயக்கத்தை புகழ்ந்து பாடுகிறார்.

ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக இருப்பதால் மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கின்ற இயற்கை நீதியும் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது மனிதனுக்கு அவனுடைய முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கம் மிக மிக அவசியமாகின்றது. இல்லையெனில் மனிதனின் நடவடிக்கைகளுக்கேற்றபடி விளைவுகள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ வரும்.
எல்லாமே தெய்வமாக இருந்தாலும், ஆதிநிலையில் வெறும் ஆற்றலுடன் அறிவு எனும் சிறப்பு இல்லாமல் இருந்திருந்தால், வெளியாகிய தெய்வம் எல்லாமாகவும் ஆகியிருக்க முடியாது. வெளியின் தன்மைகளை பிரித்துப் பார்க்காமல், ஒரே பொருளாகப் பார்க்கும்போது, அறிவின் பணி மேலோங்கி நிற்பதால் அறிவையே தெய்வம் என்கின்றனர். அவ்வாறில்லாமல், வெளியே எல்லாத் தோற்றங்களாகி உள்ளது என்பதால்,
‘வெளியே தெய்வம்’ என்பதற்கும்,
‘எல்லாமே தெய்வம்’ என்பதற்கும்

அல்லது
இறைவெளியின் மற்ற தன்மைகளைக் கொண்டு.
‘வற்றாயிருப்பே தெய்வம்’ என்பதற்கும்,
‘பேராற்றலே தெய்வம்’ என்பதற்கும்,
‘காலமே தெய்வம்’ என்பதற்கும்,

இறைவெளியின் தன்மை பேரறிவு என்பதாலும், மற்றும் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை ‘அறிவே நான்’ என்பதால்,
‘அறிவே தெய்வம்’ என்பதற்கும்,

உணர்வில் ஏற்படும் வித்தியாசங்களைக் கவனிக்க வேண்டும்.

‘பேராற்றலே தெய்வம்’ என்று கூறுவதால் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மறந்து போகின்றது. தெய்வம் அன்னியமாகிவிடுகின்றது.
அறிவே தெய்வம் என்கின்றபோது, நம்மிடமுள்ள அறிவும், மற்றவர்களிடமுள்ள அறிவும் ஒன்றாகிவிடுவதாலும், உலக மக்கள் அனைவருக்கும் ஆதிநிலையே மூலம் என்பதாலும் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது.

எவ்வாறு?

அறிவு அரூபமாக உள்ளதால் எல்லோருடைய அறிவும் ஒன்று என்றாகிவிடுகின்றது. எவ்வாறு எனில், அரூபத்தில் ஒன்றிற்கு மேல் இருக்க முடியாது. அரூபத்தில் வெவ்வேறு அரூபங்கள் இருக்க முடியுமா? உருவம் ஒன்றிற்கு மேல் இருக்க முடியும். ஆனால் அரூபமாக உள்ள அறிவில் வேறுபாடுகள் கிடையாது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய மெய்விளக்கம் என்கின்ற தலைப்பின் கீழ் வரும் பாடலின் முதல் இரண்டு வரிகள் சத்தியத்தை உறுதி படுத்துகின்றன.

“நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.” …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஆகவே அறிவு ஒன்றாகிவிடுவதால் உலகசகோதரத்துவம் (universal brotherhood) என்பது நிதர்சனமாகின்றது. மேலும் தனிமனித மனித அறிவுகள் எல்லாம் (மக்கள்) ஒன்று என்பதாலும், அறிவே தெய்வம் என்பதாலும் தெய்வமும் ஒன்றுதான் என்றாகிவிடுகின்றது. தெய்வமே எல்லோருமாக – எல்லா உயிர்களாகவும் இருக்கின்றதை அறிந்து கொள்ளமுடிகின்றது. திருமூலர் வாக்கு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எவ்வாறு என்பது என மீண்டும் உறுதி படுத்துகின்றது.

மேலும் மானுட அறிவும், மானுடத்தைத் தவிர மற்ற உயிர்களிடத்திலும் உள்ள அறிவும் ஒன்று என்பதால் ஒருமை உணர்வே, மேலோங்கி நிற்கின்றது.

“தெய்வம் தூணிலும் இருக்கிறது, துரும்பிலும் இருக்கின்றது” என்றால் உருவமுள்ள தெய்வமா தூணிலும் துரும்பிலும் இருக்க முடியும்?

உருவமுள்ள தெய்வம் எவ்வாறு தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமான தெய்வம், தூணிலும் துரும்பிலும் இருக்க முடியாது என்பது சரி. பின்னா் தெய்வம் தூணிலும் துரும்பிலும் எவ்வாறு இருக்கின்றது? எல்லாமே தெய்வம் என்கின்றபோது தூணிலும், துரும்பிலும் தெய்வம் இருந்தாக வேண்டும். தெய்வத்திற்கு உருவமில்லை என்கின்றபோது தெய்வம் அரூபமாக இருக்கின்றது என்று பொருள்.

ஆனால் உருவமில்லா(அரூபமான) தெய்வம் எவ்வாறு உருவமுள்ள தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும்? உருவமில்லா(அரூபமான) தெய்வம் உருவமில்லா(அரூபமான) அறிவாக இருந்தால்தான், தூணிலும், துரும்பிலும் இருக்க முடியும். ஆகவே “தூணிலும், இருக்கின்றது, துரும்பிலும் இருக்கின்றது தெய்வம்” என்பது, அரூபமாகிய தெய்வம் அரூப ஆற்றலான அறிவாக, ஒழுங்காற்றலாக உயிரற்ற சடப்பொருட்களில் இருப்பதைத்தான் குறிக்கின்றது. தூணிலும், துரும்பிலும் இருக்கின்ற அணுவும் தெய்வம்தானே. அந்த அணுவை நிர்வாகம் செய்து கொண்டிருப்பதும் அறிவாகிய ஒழுங்காற்றல் தானே. ‘அறிவே தெய்வம்’ என்பது சரியாக உள்ளது என்பதனை மேலும் ஒர் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.

ஒரு குடும்பத்தில் கொள்ளு தாத்தாவிலிருந்து கொள்ளுப் பேரன் வரையில் நான்கு தலைமுறைகள் வசிப்பதாகக் கொள்வோம். நால்வருமே ஒரே வம்சாவளிதான். முருகனின் மகன் கந்தசாமி. கந்தசாமியின் மகன் கோவிந்தன். கோவிந்தனின் மகன் கண்ணன். கண்ணனை ‘நீ யார்?’ என்று கேட்டால் கண்ணன் என்ன பதில் சொல்வார்?
“கோவிந்தனின் மகன்” என்று சொல்வார். அவ்வாறில்லாமல் முருகனின் கொள்ளுப் பேரன் என்றா சொல்வார்?
கண்ணன், மற்ற உறவுகளைவிட, தந்தையிடம் நெருக்கமாகவும், பிரியமாகவும் இருப்பதால், கண்களால் தந்தையைப் பார்த்துக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் தந்தையின் மடியில் படுத்து உறங்கிய இன்ப நினைவெல்லாம் இருக்கும் போது, நெருக்கமாக உள்ள தந்தையின் பெயரைச் சொல்லி “கோவிந்தனின் மகன்” என்றுதான் சொல்வார். அதாவது இந்த உறவு முறையில் கண்ணனுக்கு அருகிலும், பிரியமானவருமாக இருப்பவர் அவரது தந்தைதான் என்பதால், தந்தையின் பெயரைச் சொல்லி அவருடைய மகன் என்பார். அதேபோல், எல்லாமே தெய்வம் என்பதில் நமது அறிவும் உள்ளடங்கி இருப்பதாலும், அறிவே நம்மை ஆட்சி செய்வதாலும், அறிவை பிரதானப்படுத்தி ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வளவு பொருத்தமுடையதாக உள்ளது?

அறிவு மனிதனிடமும் உள்ளதால், அறிவே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்திற்கும் மனிதனுக்கும் நெருக்கமும், பிணைப்பும் அதிகமாகி, மனிதனாக திருந்த வேண்டிய பொறுப்பும் அதிகமாகின்றது. மனிதனிடம் உள்ள அறிவு தெய்வம் என்கின்றபோது, உயிரில்லாமல் அறிவு இல்லை என்பதாலும், மனம் இல்லாமல் அறிவு எதனையும் உணர முடியாது என்பதாலும், உயிர், மனம், அறிவு ஆகிய முன்றுமே தெய்வத்தின் அம்சம் என்றாகின்றது. அப்படியிருப்பதால்தான் திருமூலர் கூறும் “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்பது மனிதனுக்கு எப்போதும் நினைப்பில் இருந்து கொண்டு, தற்சோதனை இயல்பாகி, மனத்தூய்மை கைவரப்பெறும்.

அதுபோல், ‘எல்லாமே தெய்வம்’ என்பதில் அறிவும் ஒன்றாகவும், அதுவே தானாகவும், பிறராகவும், எல்லா உயிர்களாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்று தெய்வத்தைச் சுட்டிக் காட்டுவதே மிகச்சிறப்புடையதாக உள்ளது. தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த நிலைமாறி, ‘அறிவே தெய்வம்’ என்கின்ற போது இதுவரை இல்லாதது போல் இருந்து வந்த உறவு நெருங்கி வருவதை அனுபவிக்க முடிகின்றது.
மேலும் ஒரு உதாரணம். இட்லி, தோசை, ஊத்தப்பம் ஆகிய பலகாரங்களுக்கு எது மூலப்பொருள் அல்லது எதிலிருந்து இட்லி செய்யப்படுகின்றது என்று கேட்டால், என்ன சொல்வோம்? அரிசியினால் ஆனது இட்லி என்போம். ஆனால் உண்மையில் இட்லி வெறும் அரிசியினால் மட்டுமே ஆனது இல்லை. இட்லி மாவில் உளுந்தம் பருப்பும், சிறிதளவு வெந்தயமும் உள்ளது. ஆனால் இட்லி மாவில் அரிசியே பிரதானமாக உள்ளதால், இட்லி, அரிசியினால் ஆனது என்கிறோம். அதுபோல் எல்லாமே தெய்வமாக இருந்தாலும், தெய்வம் பிரதானமாக அறிவாகவும் உள்ளதால் ‘அறிவே தெய்வம்’ என்கிறோம். நமது அறிவும், ‘எல்லாம் தெய்வம்’ என்பதில் ஒன்றாகவும், அந்த அறிவுதானே இந்த கேள்வியினைக் கேட்கின்றதாகவும் இருப்பதால் ‘அறிவே தெய்வம்’ என்பது மிக மிகப் பொருத்தம்.

இந்த உணருகின்ற அறிவில்லாமல் தூயவெளி இருந்திருந்தால் உயிரினம் ஏது? பிரபஞ்சம் தோன்றி அதனால் விளைந்த காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒளி, ஒலி, சுவை மற்றும் மணம் உணா்வதற்காகவேதான் உயிரினங்கள் தோன்றின. ஆதிநிலையில் அறிவே இல்லாதிருந்தால், உயிரினங்களே இல்லாமல் கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அதில் என்ன சிறப்பு உள்ளது? ஆகவே அறிவுதானே சிறப்புடையது.

ஆகவே அறிவே தெய்வம் என்பது சரி என்கின்ற முடிவுக்கு வருகின்றது அறிவு. வேதாத்திரிய ஆன்மீகத்தின் பல சிறப்புகளில் ஒன்று அறிவைப் பற்றிய இந்த தெளிவு. கி.பி.1911 க்கு முன்னர் அறிவே தெய்வம் என்று வேதங்கள், ஆன்மீக நூல்கள் மற்றும் பல ஆன்றோர் பெருமக்கள் கூறியிருந்தாலும் அறிவு எவ்வாறு தெய்வமாகின்றது என்பது விளங்காமலேதான் இருந்து வந்தது. வேதாத்திரியமும் அறிவைப் பற்றிய இத்துணை விளக்கம் கூறாமல், ‘அறிவே தெய்வம்’ என்று மட்டும் கூறியிருந்தால் வேதாத்திரியமும், நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ளாப்படாமலேயே இருந்திருக்கும்.

விஞ்ஞானத்தில், பிரபஞ்ச மூலத்தில், அறிவை எடுத்துக் கொள்ளப்படாத குறையை, வேதாத்திரியம், அறிவை, பிரபஞ்ச மூலத்தில் சேர்த்துக் கொண்டதால் தான் அந்தக் குறை சரிசெய்யப்பட்டு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தரும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டினும் எண்ணியதை, கி.பி.1911 க்குப் பிறகு இயற்கை ஈடேற்றியுள்ளது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அஞ்சுவதேன் துணிந்துரைப்போம். அறிவே தெய்வம்” என்று, பன்மையில், நம்மையும் சோ்த்துச் சொல்வது, மகரிஷி அவர்கள் நமக்கு அளித்துள்ள அறிவின் விளக்கத்தின் எளிமையேதான் காரணம். ஆகவேதான் நாமும் அவருடன் சேர்ந்து, அறிவே தெய்வம் என்பதனை ஏற்றுக்கொள்வோம் என்று அவா் எண்ணி, நம்மையும் சோ்த்து, உறுதியாக அவ்வாறு கூறியிருக்கிறார். ‘தெய்வம், உயிர், அறிவு, மனம்’ என்கின்ற தலைப்பில் இயற்றியுள்ள மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூர்வோம்.

FFC-61-PNG-2-1-3-15

       எனவே ஆன்மீகத்தில் இருந்த அச்சத்தை நீக்கி, வாழ்க்கையோடு ஆன்மீகத்தை இணைத்து, வாழ்வியல் ஒழுக்கமாக விளக்கியுள்ளது வேதாத்திரியம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், வாழும் மனிதன் வாழ்வியல் ஒழுக்கத்தை கடைபிடித்துத் தானே வாழ்ந்தாக வேண்டும்.

எனவே உலகப் பொதுமறையான திருக்குறளை தந்தருளிய திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்டு, ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்று கண்டுபிடித்து, ஆன்மீகத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்ட வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள

                 மற்றொரு உலகப் பொதுமறையான ‘வேதாத்திரியத்தை’  

                   வாழ்த்துவோம்.      வளர்ப்போம் வேதாத்திரியத்தை.

                    வாழ்க வேதாத்திரியம்,  வளர்க வேதாத்திரியம்.

 
‘வாழ்க வேதாத்திரியம்’ என்பது, உலக மக்கள் அனைவருக்கும் வேதாத்திரியம் சென்று சேரவேண்டும் என்கின்ற எண்ண அலைகளை பரப்புவது. வளர்க வேதாத்திரியம் என்பது வேதாத்திரியத்தை இன்னும் எளிமையாக்கி, விரிவாக்கி, விளக்கி, சுருக்கிப் பாடமாக்கி பள்ளிக் கல்வியோடு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்கின்ற எண்ண அலைகளைப் பரப்புவது. இத்துடன் இச்சிந்தனையை தற்சமயம் முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.
.
அடுத்த அறிவிற்கு விருந்தில், ஓர் அன்பர் அனுப்பிய ‘கருத்துரைக்க பகுதியில்’  கேட்கப்பட்ட, ஆழ்ந்த சிந்தனையுடைய வினாவிற்கான விடையை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்.         வாழ்க வளமுடன்.